துளிகளில் கனவு

துளிக்கனவு வாங்க

துளிக்கனவு மின்னூல் வாங்க

ஜெயமோகனின் எளிய கதைகள்.அனுபவக் கதைகள் என அவர் இக்கதைகளை குறிப்பிட்டுள்ளார். ஒரே மூச்சில் வாசிக்கத் தகுந்த ஈர்ப்புடன் இக்கதைகள் அமைந்துள்ளன. குடும்பம், எழுத்தாளர்கள், நண்பர்கள் என நேரடிப் பின்னணியுடன் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. சுயசரிதைத் தன்மை கொண்ட எழுத்து.

எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்குமென ஒவ்வொரு விதமான பகடி இருக்கிறது. சுந்தர ராமசாமியின் பகடி அவ்வாறு தோன்றாத பகடி. சில சமயம் ஒரு மணிநேரம் கழித்து சிரிக்க வைக்கும். அசோகமித்திரன் வேறு ஒரு வகை. கப்பலை மீன் குஞ்சுகள் சேர்ந்து கவிழ்க்கும் பகடி. ஜெயமோகனின் பகடி மேலான தளங்கள் கொண்டது. இந்த கதைகள் முழுதுமே பகடியால் நிரம்பியவை எனலாம். ஜெயமோகன் எவ்வளவு தீவிரமாக ஒரு விஷயத்தைக் காண்கிறாரோ அதே அளவிற்கு அதே விஷயத்தையே வேடிக்கையாகவும் காணத் தெரிந்தவர். அவருடைய நகைச்சுவை உணர்வை தனிப்பட்ட நண்பர்களும், வாசகர்களும் அறிந்திருப்பார்கள். ஒரு இரவு முழுதும் ஒருவரை தூங்காமல் வெடிக்க வெடிக்க சிரிக்கவைக்கும் நகைச்சுவை அவரிடம் உண்டு. ஆனால் அவரிடம் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் மேலான தளம் சற்றும் நகைச்சுவைகளிலும் அகலுவதில்லை.

இந்த நூலில் அருண்மொழி நங்கையே பிரதான கதாபாத்திரம். பல சம்பவங்களில் அவர் வந்து கொண்டேயிருக்கிறார். பெண் இல்லாத போது வீடு எப்படி சிதறி விடுகிறது என்பது அருண்மொழி பற்றி அவர் பேசும் இடங்களிலெல்லாம் வெளிப்பட்டு விடுகிறது. அஜிக்கு கௌரவ வேடம். “அது ரொம்ப வெட்கமான பறவை அப்பா…” என்ற வாக்கியத்தில் அப்படியே அஜியின் குரல். விக்ரமாதித்யன் அண்ணாச்சி ஒரு கதையில் வந்து செல்கிறார். உடன் பிரயாணம் செய்த பயணிகள் என பிற கதாபாத்திரங்களும் உண்டு. டோராவும் உண்டு.”டோரா கண்டதையும் கொண்டு போட்டு பாராட்டை எதிர்பார்க்கும்”. சு.ரா நண்பருக்காக மீன் சாப்பிட்ட இடம் வருகிறது. அவர் தான் சாப்பிட்டார் என்றாலும் எனக்கு கஷ்டமாக இருந்தது.

பெண்கள் வீட்டுக்கு விடுமுறை எடுத்துக் கொள்வது பற்றி “குடும்பத்தில் இருந்து விடுமுறை” என்கிற தலைப்பில் ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார். “ஓர் கட்டாயம் உருவாகாமல் குடும்பப் பொறுப்பில் இருந்து விடுமுறையை பெண்கள் அடைய முடிவதில்லை, என்னைக் கேட்டால் வேலை பார்க்கும் பெண்களாவது ஏழெட்டுபேர் கூடி ஏதாவது பாதுகாப்பான சிறு பயணங்கள் ஏற்பாடு செய்து கொள்ளலாம். அங்கே கணவன் குழந்தைகள் வீடு எல்லாவற்றையும் மறந்து ஒருவாரம் கல்லூரிப் பெண்ணாக இருந்து விட்டு வரலாம். அவர்களின் மனதுக்கு ஒரு புதுக்குளியல் போல அது புத்துணர்வளிக்கும்.”

குதிரைவால் மரம் நித்யாவும் அஜியும் இணைந்து வரும் கதை.அதில் “இன்றும் என் குழந்தைகளுடன் உற்சாகமான உறவு இருப்பதற்கு காரணம்; குழந்தைகளை நான் செய்யும் எல்லா வேலைகளிலும் ஈடுபடுத்துவேன். பாத்திரம் கழுவினால் இருவரும் எடுத்து அடுக்குவார்கள். துணி துவைத்தால் கிளிப் போடுவார்கள். வேலைப் பகிர்வு மிக ஆழமான ஒரு நட்பை உருவாக்குகிறது. உள்ளார்ந்த சமத்துவ உணர்விலிருந்து உருவாகும் நட்பு அது” என்று எழுதுகிறார்.

ஜெயமோகனை வாசிப்பவர்களுக்கு அனுபவம். அனுபவம் தேவைப்படுவோர் வாசித்து விடுங்கள்

லக்ஷ்மி மணிவண்ணன்

முந்தைய கட்டுரைகடவுளும் ஆட்சியும்
அடுத்த கட்டுரைசெங்கோலும் இந்து விரோதமும் -கடிதம்