அம்ம நாம் அஞ்சுமாறே!
அன்புள்ள ஜெ,
நீங்கள் விலக்குபவர்களைப் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழ் எழுத்தாளர்களில் மிக மிக விரிவான நட்பு வட்டம் உடையவர் நீங்கள். பல நட்புகள் நாற்பதாண்டுகளாக நீடிப்பவை. நட்புக்கு அல்லது பழக்கத்துக்கு ஏதேனும் நிபந்தனை வைத்துக் கொள்கிறீர்களா? ஓர் எச்சரிக்கைக்காக இதை கேட்டேன்.
எஸ்
*
அன்புள்ள எஸ்,
நம் நட்புக்கு 23 ஆண்டுகள் வயதாகிறது. நிபந்தனைகள் என்ன என்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.
நிபந்தனைகள் என அதைச் சொல்லமாட்டேன். சில தேவைகள். நான் எனக்கான இலக்குகள் கொண்டவன். இலக்கியம் மற்றும் பண்பாட்டுச்செயல்பாடுகள் சார்ந்தவை அந்த இலக்குகள். அவற்றுக்கு தடையாக என் வாழ்க்கையில் எவையும் அமையலாகாது என்பது என் எண்ணம். நான் கொள்வது அந்த எச்சரிக்கையுணர்வை மட்டுமே. என் நண்பர் வட்டம் மிகமிகப்பெரியது. எழுதத் தொடங்கும் இளைஞர்கள் முதல் மூத்த எழுத்தாளர்கள் வரை. வாசகர்கள் பல ஆயிரம். நான் எவரையும் விலக்குபவன் அல்ல. எப்போதுமே நண்பர்களுடன் இருப்பவனும்கூட. ஆகவே என் நேரத்தை நான் பேணிக்கொள்ளவேண்டும்.
என் நேரக்க்காப்பு நிபந்தனைகள் சில உண்டு. சம்பந்தப்பட்டவர்களுக்கு ‘இது எனக்கு உகந்தது அல்ல’ என தெரிவிப்பேன். அதன்பிறகும் தொடர்கையில் விலகிக்கொள்வேன்.
*
என் தொலைபேசித் தொடர்புகளை நான் என் கட்டுப்பாட்டுக்குள் வைத்தாகவேண்டும். இல்லையேல் என் நேரம் என்னுடையதாக இருக்காது. தொலைபேசி அழைப்புகள், வாட்ஸப்கள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகளில் ’ஸ்பாம்’ பரப்புபவர்கள் என் நேரத்தை வீணடிப்பவர்கள். தேவை என்றாலொழிய நான் செல்பேசி பயன்படுத்துவதில்லை.வெறும் செய்திகளை அனுப்புவது, கிடைத்தவற்றை எல்லாம் இஷ்டத்துக்கு ’ஃபார்வேட்’ செய்வது பலருடைய பழக்கம். அவர்களே நான் முதன்மையாகத் தவிர்ப்பவர்கள்.
என் தொடர்புவலை மிகப்பெரியது. அதில் இவர்கள் குப்பையை கொண்டுவந்து கொட்டுகிறார்கள். தேவையற்ற செய்திகள் செய்திபார்ப்பதில் ஆர்வமின்மையை உருவாக்கி, செய்தித்தொடர்பையே அழித்துவிடும். உதாரணமாக இப்போது பலர் குறுஞ்செய்திகளையே பார்ப்பதில்லை – ஏனென்றால் அவை பெரும்பாலும் ஸ்பாம் ஆகிவிட்டன.
நேற்றுகூட ஒருவர் அறிமுகமானார். இன்னொருவரிடமிருந்து என் எண்ணை பெற்றுக்கொண்டு பேசினார். ஒரு சம்பிரதாய அறிமுகம். ஆனால் அடுத்த ஒரு மணிநேரத்தில் 230 வாட்ஸப் செய்திகள். அவர் எழுதிய கட்டுரைகளின் இணைப்புகள். ஏராளமான புகைப்படங்கள். நாளிதழ் வெட்டுச்செய்திகள். அவருக்கு வந்த குறுஞ்செய்திகள், வாட்ஸப் செய்திகள். வந்துகொண்டே இருந்தன. இத்தனையையும் நான் அமர்ந்து படித்து அவர்மேல் பெருமதிப்பு கொள்வேன் என உண்மையாகவே நம்புகிறாரா? என் செல்பேசிக்கு ஏதோ ஆகிவிட்டது என்று எண்ணித்தான் எடுத்துப் பார்த்தேன். எல்லா தொடர்புகளையும் வெட்டி அவரை விலக்கிவிட்டேன்.
தொடர்புகொள்ளும் சிலரின் நல்லெண்ணத்தை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் விளைவு என்பது தொந்தரவுதான். ஒவ்வொரு நாள் காலையிலும் குட்மார்னிங் அனுப்புபவர்கள் உண்டு. எனக்கு நூற்றுக்கணக்கான வாசகர்கள் உண்டு. அத்தனைபேரும் காலையில் எனக்கு குட்மார்னிங் அனுப்பினால் நான் வாட்ஸப்பை பயன்படுத்தவே முடியாத நிலை உருவாகும். காலைவணக்கத்துடன் நற்செய்திகளை அனுப்புவது, மதச்செய்திகளை அனுப்புவது, படங்களை அனுப்புவது எல்லாம் தனிப்பட்ட தொடர்புகளில் வைத்துக்கொள்ளலாம். பொது ஆளுமைகளிடம் அதைச் செய்யக்கூடாது. அது பலருக்குத் தெரிவதில்லை.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் போன்றவற்றை நான் அனுப்புவதில்லை. எவருக்கும் அனுப்புவதில்லை என்பதனால் மதிப்புக்குரியவர்களுக்கே அனுப்புவதில்லை. அருண்மொழிக்கும் சைதன்யாவுக்கும்கூட அனுப்புவதில்லை. ஆகவே ஒரு வாசகர் அவ்வாறு என் வாழ்த்தை எதிர்பார்க்கலாகாது. அவ்வாறு நான் வாழ்த்துவதென்றால் ஒவ்வொருநாளும் காலையில் ஒரு மணிநேரத்தை அதற்கே செலவழிக்கவேண்டும்.
நினைவுநாட்களைக்கூட நான் கொண்டாடுவதில்லை என்பதை காணலாம். என் ஆசிரியர் நித்ய சைதன்ய யதியின் நினைவைக்கூட. ஏனென்றால் அப்படியென்றால் ஏராளமான நாட்கள் உள்ளன. என் நாட்கள் அதற்கே சரியாகப்போகும். ஃபோனில் சொல்லவேண்டியவற்றை மட்டுமே சொல்வது என் வழக்கம். தேவையில்லாத நீண்ட அரட்டைகளை செய்வதில்லை. அவற்றை விரும்புபவர்களை தவிர்த்துவிடுவேன்.
சிலர் வாசகர்கள் அல்ல, அவர்களுக்கு எழுத்தாளன் என்பவன் முக்கியமானவன் என்றே தெரிவதில்லை. உதாரணமாக, தங்கள் கணவர் அல்லது மனைவி என் வாசகர் என்றும், அவருக்கு ஒரு வாழ்த்து தெரிவிக்கமுடியுமா என்றும், அவருக்கான ஒரு ’சர்ப்ரைஸ்’ பரிசாக அதை அளிப்பதாகவும் சிலர் சொன்னதுண்டு. அதிலுள்ள பிரியம் எனக்கு பிடித்திருந்தமையால் ஓரிருமுறை அப்படிச் செய்தேன். ஆனால் அடுத்த ஆண்டு அவர்களே “அடுத்தவாரம் அவருக்கு பர்த்டே… வாழ்த்து மறக்காதீங்க” என்று சொல்ல ஆரம்பித்தார்கள். இது ஒரு வழக்கமாக ஆகி நான் அதில் நிரந்தரமாகச் சிக்கிக்கொள்ளும் நிலை.
எனக்கு தேவையற்ற, எனக்கு தடையாக ஆகக்கூடிய எல்லாவகை தொடர்புகளையும் உடனே ‘பிளாக்’ செய்துவிடுவது என் வழக்கம். மின்னஞ்சல்கள், வாட்ஸப்கள், எண்களில் அப்படி பலநூறுபேர் தடைசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எளிமையானவர்களாக இருக்கலாம். நல்லவர்களாக இருக்கலாம். ஆனால் எனக்கு நேரமில்லை.
*
வாசகர்களாக அறிமுகமாகி, அங்கிருந்து ஏதேனும் தொழில், வணிகம் சார்ந்த விஷயங்களுக்கு என்னை இழுத்துச் செல்பவர்களை உடனே தவிர்ப்பேன். அதை பலகாலமாகச் செய்துவருபவர்களுக்கு அதன் இங்கிதமின்மை புரிவதில்லை. காப்பீட்டு கணக்கு தொடங்க, பல்லடுக்கு வணிகத் தொடர்பு வலையில் சேர்த்துவிட முயல்பவர்கள் உண்டு. சிலர் தகவல்களை விசாரித்துச் சொல்ல கேட்பார்கள். (நாகர்கோயிலிலே ரத்தினம் ஆசான் கடையிலே அதிமதுரம் கிடைக்குமா சார், கொஞ்சம் பாத்துச் சொல்லமுடியுமா?) பெண்பார்க்கும்படி, பையனின் நடத்தையை கண்காணிக்கும்படியெல்லாம் கேட்பவர்கள் உண்டு. எந்த எழுத்தாளனாவது இதையெல்லாம் செய்துகொண்டிருப்பானா என்ன?
நான் வெறுப்பவர்கள் வட்டிக்காரர்கள். நமக்குத் தெரிந்த எவருக்காவது வட்டிக்கு பணம் கொடுத்திருப்பார்கள். அதை வசூலிக்க நம்மை பயன்படுத்திக்கொள்வார்கள். “உங்க ஃப்ரண்டு நம்மகிட்ட பணம் வாங்கியிருக்காரு சார். வட்டி ரெண்டுமாசம் பாக்கி. கொஞ்சம் சொல்லுங்க சார்”. மிதமாக இனிமையாகச் சொல்வார்கள். அதாவது நம்மை அவர்களின் வசூல் ஏஜெண்டுகளாக ஆக்குகிறார்கள். கடன் வாங்கியவர்களுக்கு அனுப்பும் செய்திகளில் நமக்கு ஒரு நகல் போடுபவர்கள் உண்டு. இது ஓர் உத்தி. பணம் வாங்கியவரை பற்றி நமக்கு செய்தி சொல்லி அவரை அவமானப்படுத்துவது.
”நான் ஏன் உங்க தொழிலை செய்யணும்?” என்று நான் கேட்டால் “உங்க வழியாத்தான் அவரு அறிமுகம்” என்பார்கள். பணம் கொடுக்கலின்போதெல்லாம் நமக்கு ஏதும் தெரிவிப்பதில்லை. பிரச்சினை வந்தால் நாம் தலையிடவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். நான் மறுகணமே விலகி, எஞ்சிய வாழ்நாள் முழுக்க பார்ப்பதை தவிர்க்கும் ஆளுமைகள் இவர்கள்.
*
நான் பணச்செயல்பாடுகளை மண்டைக்குள் வைத்துக்கொள்வதே இல்லை. ஆகவே என்னைப் பொறுத்தவரை கடன் கொடுப்பது, கடன் வாங்குவது இரண்டுமே அறவே இல்லை. என்னால் கணக்குகளை பேணமுடியாது. வசூல் ஞாபகமாகவே இருக்க முடியாது.
ஆனால் கடன் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பலர் உண்மையிலேயே சிக்கலில் இருப்பதும் தெரிகிறது. ஆனால் நான் ஒருவருக்கு மட்டும் கடன் அளிக்கமுடியாது. ஒருவருக்கு அளிக்கும் கடன் என்பது அனைவருக்கும் அளித்தாகவேண்டும் என்னும் கட்டாயமாக ஆகும். கொடுக்காவிட்டால் மனவருத்தம். கொடுத்தால் நான் என் மனநிலையை இழந்து பணத்தை கண்காணிப்பவனாக ஆகிவிடுவேன். எவர் உண்மையானவர், எவர் அப்படியல்ல என்று கணிக்கும் மனமோ அமைப்போ என்னிடமில்லை. விஷ்ணுபுரம் போன்ற ஓர் அமைப்பை வெற்றிகரமாக கலைக்க வேண்டுமென்றால் அதில் ஒரே ஒருவருக்கு கடன் கொடுத்தால் மட்டும் போதும்.
ஒருவரிடம் உங்களுக்கு மெய்யான மதிப்பு இருந்து, அவர் நட்பு நீண்டநாள் நீடிக்கவேண்டுமென விரும்பினால் எந்நிலையிலும் கடன் கேட்காதீர்கள் என்றே சொல்வேன். கடன் கேட்பது, கொடுப்பது இரண்டையும் எளிய உலகியல் நட்புகளிடம் மட்டுமே வைத்துக்கொள்ளுங்கள். உறவுகளிடம்கூட கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது. கடன் கேட்ட கணமே, (வாங்காவிட்டாலும்கூட) நீங்கள் அவருடன் கொண்டிருக்கும் உறவு வணிக உறவாக ஆகிவிடும். அதில் அதன்பின் நட்பு இல்லை, கற்றல் இல்லை, பரஸ்பர மதிப்புகூட உடனே குறைய ஆரம்பிக்கும். இதைப் புரிந்து கொள்ளாதவர்களை தவிர்ப்பது என் வழக்கம்.
*
நான் என்னால் முடிந்தவரை உதவிகள் செய்து வருபவன். எல்லா வகை உதவிகளையும். ஆனால் உதவிசெய்ய நிபந்தனை உண்டு. வெற்றுக்குடிகாரர்கள், சோம்பேறிகளை நான் பேணுவதில்லை. ஒரு முக்கியமான எழுத்தாளர் குடிப்பழக்கம் கொண்டவர், நிதிச்சிக்கல் கொண்டவர் என்றால் அவருக்கு உதவுவது நியாயம். எழுத்தாளன் நம்மால் ஊகிக்கமுடியாத மனநிலைச்சிக்கல்கள் கொண்டவன். நாம் உதவாமல் அவருக்கு இங்கே எவர் உதவப்போகிறார்கள்?
ஆனால் இலக்கியத்தில் நாலைந்து புத்தகங்களையும், நபர்களையும் தெரிந்துவைத்துக்கொண்டு அதை குடிக்கு காசு வசூல் செய்வதற்கான சாக்காக பயன்படுத்தும் உதிரிகள் எனக்கு கடும் ஒவ்வாமையை உருவாக்குபவர்கள். அவர்கள் இலக்கியவாதியின் இடத்தை அவமதிப்பவர்கள். நான் குடிக்கு காசு கொடுப்பதில்லை. விக்கியண்ணாச்சிக்கு கொடுப்பேன். அது என் காணிக்கை.
காசு கேட்பவரிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி “நீ யார், என்ன எழுதியிருக்கிறாய்?” என்பதே. மற்ற வெறும் குடிகாரர்கள் எழுத்தாளனையோ இலக்கியவாசகனையோ தேடிச்செல்லக்கூடாது. இலக்கியப் பாவனைகள் போடக்கூடாது.
*
பொதுவாக இன்னொருவரின் வாழ்க்கையை உறிஞ்சி வாழ்பவர்களை suckers என்பார்கள். இன்னொருவரின் பணத்தை மட்டுமல்ல, நேரம், உணர்ச்சிகள் ஆகியவற்றை உறிஞ்சி வாழ்பவர்களும் ஒருவகை கொசுக்கள்தான். நம் பணம் அளவுக்கே நேரம், மனம் இரண்டையும் நாம்தான் காத்துக்கொள்ளவேண்டும்.
ஜெ