வரலாறு – கடிதம்

நாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை?-2

நாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை?

அன்புள்ள ஜெ,

நான் இளமையிலேயே வெளிநாடு  வந்துவிட்டேன். இங்கே வந்து இங்குள்ள விஷயங்களை நிறைய படித்துவிட்டு இந்தியாவையும் தமிழ்நாட்டையும் கவனிக்கும்போது ஆச்சரியமான விஷயம் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இருக்கும் மிதமிஞ்சிய சரித்திர சர்ச்சைகள். உலகத்தில் எங்குமே இப்படிப்பார்க்கமுடியாது என நினைக்கிறேன். மைய ஆசிய நாடுகளில் மதச்சர்ச்சைகள் இருக்கலாம். சரித்திரம் பற்றி ஓயாமல் எவரும் இப்படிப்பேசுவதில்லை. யூடியூபில் மிக அதிகமாக இருக்கும் பதிவுகள் சரித்திரம்தான்.

நம் மக்களுக்குச் சரித்திர உணர்வு ஜாஸ்தியா என்றால் அதுவுமில்லை. இந்தச் சர்ச்சையெல்லாம் ஒரு சின்ன வட்டத்துக்குள்தான். என்ன காரணம்? எனக்குத்தோன்றும் காரணம் ஒன்றுதான். இந்தியாவில் சரித்திரம் அதிகம். எழுதப்பட்ட சரித்திரம் கம்மி. ஊகம்தான் ஜாஸ்தி. அதைவைத்துச் சண்டைபோடுவது எளிது. நிபுணர்கள் குறைவு. ஒன்றும் தெரியாமல் இஷ்டத்துக்கு ஊகம் பண்ணி எழுதுபவர்கள் பேசுபவர்கள் ஜாஸ்தி. இங்கே ஒருவர் சரித்திரம் பற்றிப்பேசினாலே தன் சாதி, மதம், அரசியலுக்காகத்தான் பேசுகிறார் என்றுதான் பொருள்.

உண்மையான சரித்திரத்தைப் பொதுவெளியிலே பேசமுடியாத அளவுக்கு இந்துத்துவர்கள், திராவிட இயக்கத்தவர்கள் எல்லாருமாகச் சேர்ந்து கடும் நெருக்கடியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்று புரிந்துகொள்கிறேன். மிகச்சோர்வூட்டும் நிலைமை இது. எப்படி நம்மால் இவ்வளவு சரித்திரம் பேசமுடிகிறது என்றால் உண்மையான சரித்திரமே கணிசமான அளவு கற்பனைதான் என்பதனாலேதான்.

நமக்கு நம் போலிப்பெருமிதத்துக்குச் சரித்திரம் தேவைப்படுகிறது. நம்முடைய அரசியலுக்கும் சாதி வெறிக்கும் சரித்திரம் தேவை. ஆகவே இவ்வளவுபேசுகிறோம். போஸ்ட்மாடர்ன் சிந்தனைகள் சரித்திரத்தை சாட்சிக்கு இழுப்பதை கண்டிக்கின்றன. ஹிஸ்டாரிஸிஸம் என்று சொல்கின்றன. எல்லா சரித்திரமும் கற்பனையே என்று நீட்சே சொன்னார். ராஜாக்களின் வம்சவரலாற்றுச் சரித்திரம் மட்டும்தான் தகவல். மற்ற எல்லாமே கதைதான். இந்தியாவில் கொஞ்சநாள் ஹிஸ்டாரிசிசத்தை தடைபண்ணினால்கூட உருப்படும்

 

வெங்கட் நாராயணன்

முந்தைய கட்டுரைஒரு குழந்தையிறப்புப்பாடல்- பதிவு
அடுத்த கட்டுரைசூர்யகாந்தன்