நன்னிலம்- லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

கடந்த வாரம் திரு.அரங்கசாமி, ஏற்காட்டில் இருக்கும் ஒரு எஸ்டேட்டுக்கு சென்று வரும்படியும் அது தாவரவியலாளராக எனக்கு மகிழ்வளிக்கும் என்றும் சொன்னார். அவரும் அங்கு வரவிருப்பதாக சொன்னதாலும், எனக்கு இப்போது கல்லூரி விடுமுறைக்காலம் என்பதாலும் செல்ல நினைத்தேன், மேலும் அங்கு ஒரு எஸ்டேட்டில் கட்டுமான பொறியாளராக பணிபுரியும் நினேஷ் என்னும் நம் விஷ்ணுபுர குழும நண்பரொருவரும் என்னை அவர் பணிபுரியும் அந்த எஸ்டேட்டுக்கு வரசொல்லி சில ஆண்டுகளாகவே அழைத்துக்கொண்டிருந்தார். எனவே இரண்டையும் பார்த்துவிடலாம் என்று நினைத்து சனிக்கிழமை பயணப்பட்டேன். புறப்படுகையில்தான் தெரிந்தது நினேஷ் பணிபுரிவதும் அரங்கசாமி சொன்னதும் ஒரே எஸ்டேட் தான் என்பது. அரங்கசாமியும் அவரது சகோதரர்களும் ஏற்காடு வந்திருந்தனர்,

சருமத்தை எரித்து மண்டையை பிளக்கும் சேலம் வெயிலுக்கு மாற்றாக ஏற்காட்டில் நல்ல காலநிலை. மிதமான குளிர். ஊட்டியைபோல ஸ்வெட்டெர் போட்டுக் கொண்டிருப்பவர்கள் ஒருவர் கூட இல்லை. தாவரவியல் பூங்காவிலும் ஏரியிலும் மக்கள் கூட்டம் நெரிந்தது. நல்லவேளை இவர்களுக்கு இன்னும் பத்து கிமீ தூரத்தில் இருக்கும் தாவரவியல் ஆய்வு பூங்காவை குறித்து தெரிந்திருக்கவில்லை. பிரிட்டிஷாரின் காலத்தில் அமைக்கப்பட்ட அப்பூங்கா பல ஏக்கர் விரிவுள்ளது அங்கு ஊணுண்ணித் தாவரமான நெஃபெந்தெஸிலிருந்து ஏராளமான அரிய வகை தாவரங்கள் இருக்கின்றன. நான் ஒவ்வொரு வருடமும் அங்கு மாணவர்களை அழைத்துச்செல்வது வழக்கம். தாவரங்கள் மீது அபிமானம் இல்லாத மக்கள் திரள் அங்கு செல்லாமல் இருப்பதே நல்லது . நிறைய புதுமண தம்பதிகள் படகுச்சவாரியில் இருந்தார்கள். சுஜாதாவின் ’தேனிலவு’ கதை நினைவுக்கு வந்தது.

ஏற்காட்டிலிருந்து மேலே பத்து கிமீ தொலைவில் அமைந்திருந்தது அந்த 160 ஏக்கர் விரிவுள்ள மாபெரும் ப்ரூக்ஸ் வுட் எஸ்டேட்.  போராளிகளோ என்று எண்ணத்தோன்றும் பச்சை நிற சீருடையில் துடிப்பான பல இளைஞர்கள் அங்கு நினேஷுடன்  பணிபுரிகிறார்கள்.இணைய வசதியிலிருந்து தேவையான எல்லா செளகரியங்களுமே அங்கிருந்தது. நினேஷ் அந்த பிரதேசத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டிருக்கிறார்.

அந்த எஸ்டேட்டின் பங்குதாரரும் நிர்வாக இயக்குனருமான திரு ராஜேஷ் என்பவரை சந்தித்தேன். உற்சாகமே உருவானவர். தாவரங்கள் மீது அத்தனை பிரியம் கொண்டிருப்பவரும் கூட. அலுவலக அறையில் அந்த எஸ்டேட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளையும் இனி அங்கு செயல்படுத்தப்படவிருக்கும் திட்டங்களையும் ஒரு பொறியாளர் விளக்கினார். குதிரை லாயங்கள், மாட்டு தொழுவங்கள், வீழ்ந்த மரங்களின் வட்ட வட்ட கட்டைகளையே தரைத்தளமாக்கி சில்வர் ஓக் மரப்பட்டை சீவல்களை கூரையாக்கி உருவாகிக்கொண்டிருக்கும் கட்டிடங்கள், காட்டுமரங்களை அப்படி அப்படியே விட்டுவைத்து அவற்றை சுற்றிலும் கட்டப்படும் வசிப்பிடங்கள் என்று வசீகரமான திட்டம். ஒரு அருமையான காபிக்கு பிறகு  அரங்கசாமியும் பிறரும் வருவதற்கு தாமதமாகுமென்றதால் நினேஷுடன் பேட்டரி காரில் அந்த எஸ்டேட்டை சுற்றிப்பார்த்தேன்.

பல ஆண்டுகளாக காடுகளுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இக்காடு அளவற்ற மகிழ்ச்சி அளித்தது. பழமையான பல பெரிய மரங்கள் இருந்தன. மழைக்காட்டுமரங்களைபோல் மேல்மண்ணில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சி எடுத்துக்கொள்ள சிறப்பாக உருவாகும் பலகை வேர்கள் என்னும் root buttresses பல மரங்களில் இருந்தன. அவற்றைக் காட்டி உடன் வந்தவர்களுக்கு விளக்கினேன்.

400 ஆண்டுகளுக்கு மேலான ஒரு கல்லத்தி மரத்திடம் அழைத்து சென்றார்கள். அன்னை பெருமரமது. அகரமுதல்வனின் மாபெரும் தாய் என்னும் பெயர் மனதில் எழுந்தது. பேரன்னையாய் பல தலைமுறைகள் கடந்து விண்ணோக்கி கிளைவிரித்து நின்றிருந்தது, அதன் வேர்களில் சிக்கியபடி வளர்ந்திருந்தன பம்ப்ளிமாஸ் பழமரமொன்றும் கூந்தல்பனை ஒன்றும். அக்காட்டில் அதன் சந்ததிகள் பல ஏக்கர்களில் பரந்து விரிந்து  காட்டை நிறைத்திருக்கும்.  அம்மரத்தை காட்டிலும் கண் எதிரே தோன்றி  நிற்கும் தெய்வமேதும் இல்லையென்று கண் நிறைந்தது.

அதிநவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் அங்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.  மண்பரிசோதனை, காட்டுமரங்களின் விதை சேகரிப்பு அவற்றை பசுங்குடில்களில்  நாற்றுக்களாக வளர்ப்பது என்று சூழல் நலனுக்குகந்த பல முக்கியப்பணிகளும் கட்டுமானப்பணிகளுடன் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அத்யாவஸ்யமென்றால் மட்டுமே கட்டுமானப் பணிகளுக்கிடைஞ்சலாக இருக்கும் மரங்கள் அகற்றப்படுகின்றன. அப்படி ஒரு அடர் கானக வசிப்பிடத்தின் அருமை தெரிந்தவர்கள் மட்டும் வீடுவாங்கி அங்கு வரட்டும் என எண்ணிக்கொண்டேன்.

நூற்றாண்டுகளை கடந்த ஒரு வேங்கைமரம் காட்டின் நடுவில் நின்றிருந்தது இலைகளையோ கனிகளையோ அடையாளம்  காணமுடியாத உயரத்திற்கு சென்றிருந்தன கிளைகள். பல வெடிப்புக்களும் பொந்துகளுமாயிருந்த மரப்பட்டையில் கசிந்து விரிசல்களின் குழிவுகளில் தேங்கி நின்றது கருங்குழம்பாக வேங்கைப்பால். தொட்டெடுத்து நெற்றிக்கிட்டுக்கொண்டேன். அத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து கனிந்து  பால்சுரந்துகொண்டே நின்றுகொண்டிருக்கும் மற்றுமோர் அன்னை அது.

ஒரு குறிப்பிட்ட  உயரமான இடத்தில் நின்று தொலைவில் ஒன்றையொன்று அணைத்துக் கொண்டிருந்த மலைமுகடுகளையும் அங்கிருந்தே தெரிந்த தர்மபுரியையும் காட்டினார்கள். கோவில் கருவறைகளின் முன்புகூட அத்தனை மனம் உருகி நின்றதில்லை நான். தெய்வீக தரிசனம் அது எனக்கு. நினேஷ் இத்தனை இளம்வயதில் அப்படியான ஒரு இயற்கைக்கு மிக அண்மையிலான சூழலில் பணிசெய்ய அருளப்பட்டிருக்கிறார்.

அங்கு ஒரு இத்தாலிய பெண்மணியால் நட்டுவைக்கப்பட்டதென உள்ளூர் மக்கள் சுட்டிக்காட்டிய ஜப்பான் பீன்ஸ் மரங்கள் சில இருந்தன. மிக தொலைவிலிருந்த அவற்றில் மலர்கள் இல்லாவிட்டாலும்  பீன்ஸைக்காட்டிலும் நீளமான காய்கள் இருந்தன, அவற்றை பார்க்கையில் அவை Styphnolobium japonicum என்னும் அறிவியல் பெயர் கொண்ட பகோடா மரங்கள் என்று தெரியவந்தது

இம்மரங்களில் ஒன்று சீன வரலாற்றில்’ கில்டி பகோடா மரம்’ என பெயர் பெற்று சீனா வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் காணும் ஒன்றாக பீஜிங்கின் ஜிங் ஷான் பூங்காவில் ஜூஹாய் என்னும் பெயருடன் நிற்கிறது.(Guilty Chinese Scholar tree,-https://en.wikipedia.org/wiki/Zuihuai).

மிங்  வம்சத்தின் கடைசி பேரரசர் சோங்ஜென், 1644ல் பீஜிங் நகரம் புரட்சியாளர்களிடம் வீழ்ந்த போது, குற்றவுணர்வில் இந்த மரத்தில்தான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பலமுறை இம்மரம் அதே மரத்தின் கிளைகளை கொண்டு புதிதாக தோற்றுவிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்போது இருக்கும் ஜுஹாய் மரம் 150 வருட பழமை கொண்டது.  எதிர்பாரா இப்பயணத்தில் ,அக்காட்டின் ஒரு பகுதியில்  இருந்து எனக்கு பல நூறு வருட சீன வரலாற்றை நினைவூட்டியது அம்மரம்.

லண்டானாக்களும் பார்த்தினியங்களும் காடெங்கும் போட்டி போட்டுக்கொண்டு ஆக்கிரமித்திருந்தன. உலகெங்கும் இந்த அயல் ஆக்கிரமிப்பு களைகளால் பெரும் அச்சுறுத்தல் உருவாகி இருக்கிறது.தீவிர  கட்டுப்படுத்தல் நடவடிக்கை கோரும் இவற்றை ஒரு சிலவற்றைத் தவிர பிற நாடுகள்  அத்தனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இன்னும். அங்கிருந்து Wild orchid எனப்படும் வசிப்பிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

இதை உங்களுக்கு எழுதுவதன் முதன்மை நோக்கமே நீங்கள் அவசியம் அங்கு செல்லவேண்டும் என கேட்டுக் கொள்ளத்தான். வாழ்க்கையில் தவறவே விடக்கூடாத ஒரு தங்குமிடம் என்றால் (Wild orchid) அதுதான். 70 ஏக்கர்களில் பரந்துவிரிந்த பெருங்காட்டிற்குள்  வசிப்பிடங்கள். 180 மனைகளும் 140 உரிமையாளர்களுமாக அற்புதமான இடம். முழுக்க மிக கவனமாக மிக ரசனையுடன் பேரழகுடன் பராமரிக்கப்பட்டிருக்கும் இடமது. பொதுவாக வெளியாட்களுக்கு அங்கு தங்க அனுமதி இல்லை.

ஒவ்வொரு வீட்டையும் பார்த்து பார்த்து ஒவ்வொரு கல்லாக ரசனையுடன் கட்டியிருக்கிறார்கள் பல அரிய தாவரங்கள் அங்கிருக்கிறன. திரு ராஜேஷ் அந்த இடத்துக்கும் நிர்வாக இயக்குநர், கடந்த 12 ஆண்டுகளாக அவரைப்போல ஒருவரால்  கவனமாக பராமரிக்கப்படுகிறது. அங்கிருக்கும் கருப்பு மூங்கில், பாபிரஸ் போன்ற அரிய வகை உயிரினம் தான் ராஜேஷ் அவர்களும்.

காலை நடையின் போது பாசிபிடித்திருந்த ஒரு பெருங்கல் ஒன்று லேசாக பெயர்ந்திருந்தது. உடனே ராஜேஷ் அதை அருகிலிருந்த ஒரு பணியாளரிடம் சுட்டிக்காட்டி ’’அதை சரிபண்ணுப்பா’’ என்றார். நடக்கையில் இடைபட்ட  காய்ந்த குச்சிகளையும் அவரே எடுத்து ஓரமாக வைக்கிறார். அந்த இடம் அவரது வீட்டுக்கூடமென்பதுபோல கவனமாக பராமரிக்கிறார். ஒவ்வொரு செடியையும் அவரது குழந்தையை போல் அறிமுகம் செய்து மகிழ்ந்தார்.இத்தனை நுண்மையாக அத்தனை பரந்த ஓரிடத்தை அவர் கவனிப்பதும் பராமரிப்பதும் வியப்பளித்தது.

நான் இந்தோனேஷியாவில் எகிப்தில் சென்று பார்க்க நினைத்திருந்த தாவரங்களை அங்கு பார்த்தேன்.ஏலம் விடப்பட்டிருந்த ரயில்பாதையில் பயன்பட்ட யூகலிப்டஸ் மரக்கட்டைகளை வாங்கிவந்து ஒரு ஓடையின் மீது நடைப்பாலம் கட்டியிருக்கிறார். ராஜேஷ் அவருடன் பேசிக் கொண்டிருக்கையில் அவரது தாவரவியல் ஆர்வமும் அறிவும் ரசனையும் எனக்கு உண்மையிலேயே திகைப்பூட்டியது.

திரும்பத் திரும்ப மனம்தளராமல் மூன்று வருடங்கள்  சொல்லிக்கொடுத்தாலும் இறுதிப்பருவதேர்வில் வெற்றுதாள்களையும், ஹால்டிக்கட்டின் பின்னால் இருக்கும் தேர்வு விதிகளையும் வினாத்தாளையும் திரும்ப எழுதி தாள்களை அளிக்கும் மாணவர்களின் ஆசிரியையாக , ராஜேஷின்மீது எனக்கு அபாரமான மரியாதை உண்டாகியது. கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பதற்கேற்ப அவரும் என்னிடம் பலவறறை கேட்டுக்கொண்டு எனக்குள் இருந்த ஒரு தாவரவியலாளரை இனம் கண்டுகொண்டார்

அங்கிருக்கும் அனைத்து வசிப்பிடங்களுமே இந்தியாவின் பெரும்செல்வந்தர்களால்  கட்டப்பட்டிருக்கிறது. அவ்வப்போது வேண்டிய விருந்தினர்களுக்கு இப்படி தரப்படுகிறது. மிக அழகிய ஒரு வீட்டில் எங்களுக்கு  தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரங்கசாமி அவரது சகோதரர்கள் அனைவரும் அங்கிருந்தோம் ஒவ்வொரு சதுர அடியிலும் இயற்கை அழகு மிளிரும் இடமது. அங்கு பல்வேறு கலைஞர்கள் பணியில் இருந்திருக்ககூடும் அனைவரையும் மானசீகமாக கைகுலுக்கி பாராட்டினேன்

ஏராளமான கல்சிற்பங்கள், மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கும் மரங்கள். அழகிய சிற்பங்கள் அமைந்திருக்கும் நடைபாதைகள், மலர்களை தலையில் பொழியும் அலங்கார வளைவுகளில் படர்ந்திருக்கும் பூங்கொடிகள், மரங்களில் இருந்த ஆயிரக்கணக்கான பறவைகள் என  ஒவ்வொரு வீடும் ஒரு கவிதை போல கனவைப்போல அமைந்திருந்தது.

பொதுவாக நடக்க அத்தனை சோம்பல்படும் நான் அன்றிரவும் அதிகாலையும் பல கிமீ ஒரு அசதியுமின்றி நடந்தேன். சலிப்பு சோர்வு அசதி எல்லாம் உடலில் இல்லை மனதில்தான் போலிருக்கிறது.

நடைப்பயணத்தில் உடன் அரங்கசாமி குடும்பத்தினரும் வந்தார்கள். அங்கிருந்த  அரிய தாவர வகைகளை குறித்து எழுதினால் பல பக்கங்கள். வந்துவிடும். விஷ்ணுபுர குழும நண்பர்களில் தாவரவியல் ஆர்வம் உள்ளவர்களுடன் ஒரு பசுமை சுற்றுலா அங்கே போகலாமென்னுமளவுக்கு கொட்டிகிடக்கும் தாவர பொக்கிஷம் அந்த பிரதேசம்.

நான் பல வருடங்களாக பார்க்க நினைத்திருக்கும் அரிய வகை கருமூங்கில் கூட்டமாக ஓரிடத்தில் இருந்ததை பார்த்து ஆர்வத்தில் பேட்டரி காரிலிருந்து குதிக்காத குறையாய் இறங்கி ஓடினேன். அரங்கசாமியிடம் ’’வந்து தொட்டுப்பாருங்க, எத்தனை வழவழன்னு உலோகம் போல’’ என்றேன். வந்து ஒரு முதிர்ந்த கருமூங்கிலை தடவிய அரங்கசாமி  ’’திரெளபதி’’ என்றார் காதல் பொங்க. ’’திரெளபதிங்க, கருப்பா பளபளன்னு திண்மையா’’ என்றார் மீண்டும்

நான் கண்ணில் படும் எல்லாற்றையும் எப்படியோ வெண்முரசுடன் ஒப்பிட்டுக்கொள்பவள் ஆனால் கருமூங்கிலின் தொடுகை அரங்கசாமி என்னும் ஆணுக்குள் விதையென உறங்கிக்கிடந்த திரெளபதியின் பளபளக்கும் கருமையழகை உயிர்த்தெழச்செய்துவிட்டது. வெண்முரசை ஒரு ஆணாக இருந்து நான் வாசித்ததில்லை என்பதும் உரைத்தது.

அதிகாலை நடையினிடையே  ஒரு பேரத்தியின் அடியில் இருந்த கல்மேடையில் சுவையான காபி அருந்தினோம். அந்த அத்தி மரம் முழுவதும் கனிகள் அப்பிக்கிடந்தன. அஸ்டெக்குகளின் மதுவின் தெய்வமான மயாஹுயெல் (Mayahuel) நூற்றுக்கணக்கான முலைகளால் தன் குழந்தைகளுக்கு பாலுட்டினாள் என்னும் தொன்மம் குறித்து டெக்கீலா கட்டுரையில் எழுதியிருந்தேன்.அப்படி ஒரு பெண் தெய்வம் போல முலைகளாக கனிகள் செறிந்து நின்றுகொண்டிருந்தது அத்தி.

அங்கிருந்த மருத்துவர் மகாதேவன் என்பவரின் வீட்டுக்குச் சென்றோம் அவரது வீட்டை நீங்கள் அவசியம் பார்க்கவேண்டும். அவ்வீட்டைக்காட்டிலும் அழகிய வசீரமான செளகரியமான ஆடம்பரமான வீடென்பது உலகின் எந்தமூலையிலும் அமைக்கவே முடியாது

அவ்வீட்டின் வாயில் கதவே மிகக் குறுகியது. பொதுவில் பெரிய வீடுகளின் அடையாளமாக இருப்பதே மாபெரும் கதவுகள்தான். இங்கே அந்த கதவே வீட்டின் உரிமையாளரின் ரசனையை இயல்பை காட்டுகிறது. அந்த சிறு கதவிலும் செங்காந்தள் கொடி பரவி வளர்ந்திருந்தது.

வீட்டை தேட வேண்டும், அப்படி பசுமையால் மூழ்கடித்திருந்தார் .உள்ளும் புறமும் சுவர்களிலும் மட்டுமல்ல வாசற்படிகளில்கூட ஒரு புதுவகை நீலபச்சைப்புல் வளர்ந்திருக்கிறது.

என்னிடம் அவரும் ’’அங்கே ப்ரோமிலினா  பூத்திருக்கு பாருங்க, ஸ்பேத்தோபில்லம் பெரியவகை அங்கிருக்கு, இந்த அடியாண்டம் பாருங்க பெரிய இலைகளுடன் இருக்கு’’ என்று ஒரே தாவரவியலாக பொழிந்துகொண்டிருந்தார் ’’.எங்கே இருந்தீங்க  நீங்கல்லாம் இத்தனை காலம்’’ என்று நினைத்துக்கொண்டேன். செலாஜினெல்லா என்று ஒரு கீழ்நிலை பெரணித்தாவரம், அதன் வாழிடத்தில் அதிகபட்சமாக 50செமீ வரைதான் வளரும் இயல்புடையது ஆனால் அவ்வீட்டில் அது ஒரு அடர்ந்த புதர்போல இருந்தது. தாவரங்கள் நம்மை அறிபவை, அவரது அத்தனை அன்புக்கு பதிலுக்கு அதனால் கனியோ மலரோ அளிக்க முடியாதென்பதால் வெறும் உடல்தான் இருக்கிறது, அதை அவருக்கு பல மடங்கு வளர்த்தித் தந்திருக்கிறது. அன்புடன் அதை பலமுறை தழுவிக்கொண்டேன். ஒவ்வொரு இலையாக பார்த்து பார்த்து ரசிக்கிறார் அவர்

வருடங்களாக நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு, தாங்களும் ஏதும் புதிதாக கற்றுக் கொள்ளாமல் மாணவர்களுக்கும் ஏதும் கற்றுக்கொடுக்காமல் அரைத்த மாவை அரைத்துக்கொண்டு  எந்த தேடலும் இல்லாத பலருடன் பணிபுரிபவளான எனக்கு, வன்பாலையில் மழைபோல இத்தனை வருடம் கழித்து தாவரவியல் துறைசாராத சிலர் அத்துறையில் ஆர்வமும் அறிவுமாக அறிமுகமாகிறார்கள்.

இன்னுமோர் ஓடைக்கரையில் உலகின் முதல் காகிதம் செய்யப்பட்ட தாவரமான  பாபிரஸ் Cyperus papyrus, திமு திமுவென வளர்ந்திருந்தது.  ’’இதை என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்’’ என்று சிறுவனைபோல ராஜேஷ் குதுகலித்து கொண்டு அதை காண்பித்தார். ஏறக்குறைய அழிந்தே விட்ட அவை மீண்டும் 1968ல் தான் சில இடங்களில், கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் வளர்த்து அழிவிலிருந்து காப்பாற்றபட்டது. நான் முதன்முதலாக பார்க்கிறேன்.அதற்கருகில் பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். என் வாழ்வில் மிக அரிய புகைப்டங்களென நான் கருதுவது பாபிரஸ் புல்லுக்கருகிலும், கருமூங்கிலினருகிலும் பல நூறாண்டுகளுக்கு முன்பு தண்டவாளங்களில் போடப்பட்ட யூகலிப்டஸ் கட்டைகளால் ஆன பாலத்திலெடுத்துக்கொண்டவைகளும், ஒரு புத்தகத்தில் கையெழுத்துப்போடும் உங்களருகில் எடுத்துக்கொண்டதும்தான்.

. பறவைக்கு நீரளிக்கும் பாத்திரம்கூட ஒரு சூரிய காந்திப்பூவை போல அமைக்கப்பட்டிருக்கிறது. வீடெங்கும் கலைப்பொருட்களும் செடிகளுமாக இருக்கிறது.

பெரிய  வீடுகள் அளிக்கும் லேசன பொறாமை உணர்வும் விலகலும் எனக்கு இங்கு உருவாகவே இல்லை. இரண்டு காரணங்கள், ஒன்று அங்கு வீடுகளை கட்டியிருப்பவர்கள் யாரும் பெரும்பாலும் அங்கு வந்து தங்குவதில்லை கைவிடப்பட்ட பேரழுகுடன் அவை ஆராதிக்கப்பட காத்திருக்கின்றன இரண்டாவது, அப்படி இயற்கை சூழ்ந்த ஓரழகை  தனிமனிதர்களுக்கு சொந்தமானது என்று என் மனம் நினைப்பது இல்லை, இயற்கை அனைவருக்குமானதல்லவா?

காலை உணவு நல்ல  உயரத்தில் அலங்கார விளக்குகளும் கலைப்பொருட்களும் உன்னதமான மேஜை நாற்காலிகளும் பெரும் பாறையொன்றை குடைந்து உருவாக்கிய கைகழுவும் தொட்டியுமாக மாபெரும் உணவு கூடத்தில். மலைமுகடுகளை பார்த்தபடி அமர்ந்து  விரிவான காலை உணவுண்டோம்.

அந்த இடத்தை பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் இருந்தவர் என்னை மிக மரியாதையுடன் பால்கனிக்கு அழைத்துசென்று கண்ணுக்கு எட்டிய தூரத்தையும் தாண்டி தெரிந்த ஒரு வெண்முகட்டை சுட்டிக்காட்டி ’’அதோ அந்த வெள்ளை கட்டிடடம் வரைக்கும் நம்ம ப்ராப்பர்டி மேடம்’’ என்றார். அந்த ’’நம்ம’’ என்னும் சொல் ஒரு கணம் என்னை பேட்டரி காரில் ஒரு எஸ்டேட்டை சுற்றிப் பார்க்கும் ஒரு   அரசியல் ஆளுமையாக்கிவிட்டதில்  மனம் விம்மியது. திரும்பும் வழியில் அரங்கசாமி’’ என்னடா இப்படி வளர்ந்திருக்கே’’ என்று நலம் விசாரித்தபடி ஒரு குழந்தையின் முகம் போல பெரிதாக மலர்ந்திருந்த ஒரு ஹவாய் செம்பருத்தியை முத்தமிட்டுகொண்டிருந்தார்.

வழியெங்கிலும் இருந்த காட்டுமலர்களை சூடிக்கொண்டேன். பல வயது குறைந்தாற்போல மகிழ்ச்சியும் துள்ளலுமாக இருந்தேன் நாளெல்லாம்.ராஜேஷ் அவர்களின் மற்றொரு திட்டமான நன்னிலத்தை காண அங்கிருந்து கல்வராயன் மலைக்கு வைல் ஆர்கிடின் குடியிருப்பை பிரிய மனமின்றி புறப்பட்டேன்.காருக்காக காத்திருக்கையில் நானும் நினேஷும் நின்றிருந்த மரத்தில் ஜோடியாக இரு பெரிய ஆந்தைகள் இருந்தன. அத்தனை பெரிய, ஒரு சின்னத் தேங்காயைபோல தலையிருக்கும் ஆந்தைகளை முன்பு நான் பார்த்ததேயில்லை.

கல்வராயன் மலையில் ராஜேஷுக்கு சொந்தமான 120 ஏக்கர் நிலப்பரப்பிற்கு கூகிளும் எனது கார் ஓட்டுனரும் குழப்பியடித்ததில் ஒருவழியாக 3 மணி நேரங்கழித்து வந்து சேர்ந்தேன். கூகிள் மனிதர்களிடமிருந்து எளிய விஷயங்களை சிக்கலாக்கிக் கொள்வதை கற்றிருக்கிறது. அந்த எஸ்டேட்டுக்கு செல்லும் வழியில் இருந்த அலுவலகத்தில் எனக்கென  சுதர்சன் என்னும் இளைஞன் காத்திருந்தான்’

கண்ணில் ஒளி நிரம்பிய துடிப்பான இளைஞன். நல்ல அழுத்தமான குரல் அவனுக்கு.  ஆர்வமாக நன்னிலம் திட்டத்தை வரைபடங்கள் கொண்டு விவரித்தான் அப்படியொரு சவாலான சூழலில் இத்தனை இளம் வயதில் ஆர்வத்துடன் அவன் பணியிலிருந்தது எனக்கு பெரும் மகிழ்வமளித்தது.நான் பேசிக்கொண்டிருக்கையில் சில குறிப்புகளையும் எடுத்துக்கொண்டான்

நிதானமாக அங்கு வரவிருக்கும் கட்டிடங்கள், அங்கு செய்யப்படவிருக்கும் பண்ணை பள்ளிக்கூடம் பற்றியெல்லாம் சொன்னவன் மிக இயல்பாக ’’அங்கெ ஒரே பிரச்சனை க்ரோமொலினா ஒடொரட்டா வும் லண்டானா மாதிரியே இன்வேசிவ் ஆக இருக்கறதுதான்’’ என்றான். ’’அடப்பாவிகளா’’ என்று  மனம் மீண்டும் கூவியது.

முன்பே அங்கு சென்று காத்திருந்த ராஜேஷுடன் அந்த 120 ஏக்கர் மாந்தோப்புக்கு ஜீப்பில் சென்றேன். நல்ல வளமான காட்டுமண் என்பதால் மாங்கனிகள் அதற்குமேல் காய்த்து தள்ளவே முடியாது என்னும் அளவில் குலைகளாக காய்த்து எடை தாங்காமல்  நிலத்தில் புரண்டுகொண்டிருந்தன. ஜீப்பின் சக்கரங்களில் மாங்குலைகள் மோதும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. நீலம், செந்தூரம்,  கிளிமூக்கு, நடுச்சோலை என்று எல்லாம் நாடன் பழவகை மரங்கள்.

ராஜேஷும் தூரத்தில் தெரிந்த ஒரு நீர் தொட்டியை காண்பித்து ’’மேடம் அதோ அந்த தொட்டிவரை நம்ம ப்ராப்பர்ட்டி’’ என்றார் மீண்டும் விம்மியது மனம்.

ஒரு நன்னீர் ஓடை முழு எஸ்டேட்டையும் குறுக்கில் கடக்கிறது. நன்னிலத்தில்  என்னால் என்ன பங்களிக்க முடியும் என பேசினோம். எனக்கு வாழ்நாள் விருப்பமாக இருந்த filed botany கனவைத்தான் ராஜேஷ் அங்கு செய்யவிருக்கிறார், தேனீ வளர்ப்பு , காளான் வளர்ப்பு, இயற்கையை அறிதல் ஆகியவற்றை கற்றுக்கொடுக்கும் ஒரு பண்ணைப்பள்ளி, உலக உணவுகள் கிடைக்கும் ஓரு உணவுக்கூடம், பாரம்பரிய உணவு மற்றும் கலாச்சார சுற்றுலா, இயற்கையாக  குளிக்கும் நீர்தேக்கங்கள் அமைப்பது,இயற்கைக்கு வெகு அண்மையில் குடியிருப்பு பகுதிகள் என  கூட்டு கனவொன்றைக்குறித்து பேசுவது போல பேசினோம்.  மகிழ்ந்து விவாதித்தோம்

மதியஉணவுக்கு பின்னர் அரிந்து வைக்கப்பட்ட செந்துர மாங்கனிகளை இரு துண்டுகளுக்கு மேல் சாப்பிட முடியவில்லை, கண்ணில் பார்த்துப்பார்த்து மாம்பழங்களின் காட்சியே திகட்டி விட்டிருந்தது.

ஒரு புதிய வகை கீரையை அவர் எங்கிருந்தோ கொண்டு வந்து வளர்த்தியிருந்தார் ’’மாயன் சாயா’’ என்னும் இப்போதுதான் உலகிற்கு அறிமுகமாயிருக்கும் மிகுந்த சத்துக்கள் அடங்கிய மெக்ஸிகோவில் தோன்றியிருக்கலாம் என யூகிக்கப்படும்  மாயன் மரகீரைச்செடி அது.அதையும் அங்குதான் பார்த்தேன்

மாலைவரை அந்த நன்னிலமென்னும் மிகப்பொருத்தமான பெயர் கொண்டிருக்கும் இடத்தில் இருந்துவிட்டு பின்னர் பொள்ளாச்சி புறப்பட்டேன் மிக அற்புதமான நிறைவான இரு நாட்கள் .மாணவர்களை இங்கெல்லாம் அழைத்து வந்து கற்பித்தால்  தாவரவியல் குறித்த பிரியம்  அவர்களுக்கு நிச்சயம் உண்டாகும். நான் பணியாற்றும் துறையும் நன்னிலமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்டாக்கி கொள்ளலாம் என்றும் முடிவு செய்தோம்.

அங்கிருந்து வெளியே வருகையில் மாம்பழங்களை அறுவடை செய்துகொண்டிருக்கும் பணிப்பெண்களில் சிலர் தலையில் சுற்றிக்கட்டிய துணியுடன் ஓடையின் நடுவில் பாறைகளில் அமர்ந்து கால்களை ஓடைநீரில் வைத்துக்கொண்டு  மதிய உணவை   சாப்பிட்டுக்கொண்டு என்னவோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் மீது கடும் பொறமையுணர்வு எழுந்தது எத்தனை இயற்கையான சூழலில் பணி செய்யும் பேறு பெற்றவர்கள்?

நீங்கள் அவசியம் இந்த இடங்களுக்கு, அருணாவுடன் சென்று வரவேண்டும் என  மீண்டும்  கேட்டுக்கொள்கிறேன்.

ராஜேஷுக்கும், அரங்கசாமிக்கும் நினேஷுக்கும் இவர்களின் அறிமுகமெல்லாம் கிடைக்கச் செய்த விஷ்ணுபுரம் குழுமத்திற்கு காரணமாயிருந்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்

லோகமாதேவி

முந்தைய கட்டுரைகாவு- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
அடுத்த கட்டுரைவில்லியம் பான் ஆடிஸ்