இந்து மூலநூல்கள் மட்டுமே சாதியை முன்வைக்கின்றனவா?

இந்துமதம் – தொகுப்பு

இந்து மதமும் சாதியும் என்னும் விவாதத்தில் ஒருவர் இரு கேள்விகளை அனுப்பியிருந்தார். அவருடைய ’நாத்திக’ நண்பர் அதைக் கேட்டதாகச் சொன்னார். நாத்திகர்கள் வெறும் மறுப்பாளர்கள், அவர்கள் எதையுமே தெரிந்துகொண்டு மறுப்பதில்லை. அது ஒரு நிலைபாடு, அவ்வளவுதான்.  நாம் என்ன சொன்னாலும் அவர்கள் புரிந்துகொள்வதுமில்லை.

முதல் கேள்வி, இந்திய மதங்களில் பிறப்புசார்ந்த பிரிவினையை இந்து மதம் மட்டும்தான் கொண்டிருக்கிறதா?

இரண்டாம் கேள்வி, உலகிலேயே இந்துமத நூல்களில் மட்டும்தான் பிறப்பு சார்ந்த பிரிவினை உள்ளதா?

இரண்டுமே அடிப்படைப் புரிதலற்ற கேள்விகள். இந்திய மதங்களான சமணம், பௌத்தம், சீக்கியம் ஆகிய அனைத்திலுமே சாதிமுறையும் வர்ணாசிரம அமைப்பும் உண்டு. அவற்றின் நூல்களிலேயே சொல்லப்பட்டுள்ளன. மேடைப்பேச்சாளர்களின் கொக்கரிப்புகள் வழியாக மதம், வரலாற்றை தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்காது.

சமண மதம் வர்ணாசிரமத்தை திட்டவட்டமாக வலியுறுத்துவது. சமண தீர்த்தங்காரர்கள் 24 பேருமே ஷத்ரியர்கள் என அவர்களின் நூல்கள் சொல்கின்றன. அவர்களால் மட்டுமே அருகநிலையை அடையமுடியும் என்கின்றன. சூத்திரர்களும் பெண்களும் இப்பிறப்பில் முக்தி அடையமுடியாதென்றே பழைய சமணநூல்கள் சொல்கின்றன. இப்போதுகூட சமணர்கள் தங்களுக்குள் திட்டவட்டமான நால்வர்ணப் பாகுபாடும், சாதிப்பிரிவினையும் கொண்டவர்கள்.

பௌத்த நூல்கள் சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் துறவுகொள்ள உரிமை இல்லை என்று புத்தர் சொன்னதாக குறிப்பிடுகின்றன. ஏனென்றால் சூத்திரர்கள் சுதந்திரமானவர்கள் அல்ல. தோல்தொழில், மயிருடன் தொடர்பான தொழில் செய்பவர்களை இழிந்தவர்கள் என்று சொல்லி தீண்டாமையை முன்வைக்கும் பௌத்த மூலநூல்கள் பல உள்ளன. பௌத்த சூத்திரங்களான மதுர சூக்தம், மஜ்ஜிமநிகாயம், வினயபிடகம் போன்ற ஏராளமான நூல்களில் நால்வருணக் கோட்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. சொல்லப்போனால் பௌத்த மூலநூல்களில் உள்ள அளவு திட்டவட்டமாக இந்து மூலநூல்களில் வர்ணமும் சாதியும் வலியுறுத்திச் சொல்லப்பட்டதில்லை.

புரிந்துகொள்ள எளிதான விஷயம் இது. சூத்திரர்கள் துறவுபூணலாம் என ஜைனம் அல்லது பௌத்தம் சொல்லியிருந்தால் எந்த அரசரும் அவற்றை ஆதரித்திருக்க மாட்டார். அது அன்றைய பொருளியலமைப்பே அழித்திருக்கும். அந்த மதங்கள் அரச ஆதரவால் வளர்ந்தவை. ஏனென்றால் அவை ஷத்ரியர்களின் ஆதிக்கத்தை ஏற்றவை. வைசியர்களுக்குச் சாதகமானவை. அதன் வழியாக வணிகத்தின் வளர்ச்சிக்கு உதவியவை.

இதைப் புரிந்துகொள்ள நமக்கு ஒரு தெளிவு தேவை. திரும்பத் திரும்ப சாதி, வர்ணம் ஆகியவை மதங்களால் உருவாக்கப்பட்டவை என மூடத்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறோம். சாதி, வர்ணம் ஆகியவை மதங்களைச் சார்ந்தவை அல்ல. அன்றைய சமூகம் உருவானபோது அதன் கட்டமைப்பாக இயல்பாக உருவாகிவந்த மேல்கீழ் அடுக்குமுறை அது. அதைச் சார்ந்தே அந்த காலச் சமூக அமைப்பும் பொருளியலமைப்பும் இருந்தது. அவற்றை ஒட்டியே அரசு அமைந்திருந்தது. மதங்கள் சாதியையும் வர்ணத்தையும் உருவாக்கவில்லை. மதங்கள் அவற்றை மறுக்கவும் முடியாது.

மதங்கள் அவற்றை ஆதரித்தேயாகவேண்டும். இல்லையேல் அவை பரவ முடியாது. இதை இன்றைய சூழலை வைத்தே பார்க்கலாம். இன்றும் இந்தியச் சமூகத்தின் சமூக அமைப்பும் பொருளியலமைப்பும் சாதியைச் சார்ந்தே பெருமளவு உள்ளது. இங்கே புரட்சி பேசும் கட்சிகளும், நாத்திகம் பேசும் கட்சிகளும் அந்த சாதியமைப்புடன் சமரசம் செய்துகொண்டுதான் செயல்படுகின்றன. அந்த அமைப்புகளுக்குள் சாதியவாதிகளும் சாதிக்குழுக்களும் உள்ளனர். சாதி பார்க்காமல் தேர்தலில் எவரும் நிற்க முடியாது.  அதுதான் அன்றும் நடைபெற்றது.

ஆனால் அந்த அமைப்புக்குள் ஒவ்வொரு மதமும் தனக்கான அறம்சார்ந்த பங்களிப்பை ஆற்றியது. இந்திய சமூகம் தொல்காலத்தில் பல்லாயிரம் பழங்குடிகளாலானதாக இருந்து. பழங்குடிச் சமூகங்கள் ஒன்றுடனொன்று கடுமையான மோதல்களில் இருந்திருக்கும். சங்ககாலப் பாடல்கள் நமக்குக் காட்டுவதே வன்முறை நிறைந்த ஒரு சமூகச்சித்திரத்தைத் தான். கொல்லாமையை வலியுறுத்திய சமண, பௌத்த மதங்கள் இந்தியாவில் வன்முறையை இல்லாமலாக்கி அமைதியை உருவாக்கின. விளைவாக வணிகம் செழித்தது. ஆகவே வணிகரும் அரசரும் அதை ஆதரித்தனர்.

அடுத்த வினா. இந்து மூலநூல்களில் மட்டும்தான் சாதிசார்ந்த பிரிவினை உள்ளதா? அதுவும் ஒரு அரைகுறைப் புரிதல். இந்து மத மூலநூல்கள் இரண்டு வகை. தத்துவம் மற்றும் தரிசனங்களைச் சொல்பவை சுருதிகள். நெறிமுறைகளைச் சொல்பவை ஸ்மிருதிகள். உபநிடதங்கள் போன்றவை சுருதிகள். நாரத ஸ்மிருதி, யம ஸ்மிருதி போன்ற பல ஸ்மிருதி நூல்கள் இருந்துள்ளன. மனு ஸ்மிருதி அவற்றில் ஒன்று மட்டுமே. அவைதான் நெறிகளைச் சொல்கின்றன.

காந்தி நாராயண குருவை சந்தித்துக் கேட்ட கேள்வி, ’இந்து மதத்தின் மூலநூல்களில் சாதியும் வர்ணமும் வலியுறுத்தப்படுகின்றனவா?’ என்றுதான். அதற்கு நாராயண குரு சொன்ன பதில் இது:

இந்து மதத்தின் தத்துவப் பார்வையை தீர்மானிப்பவை சுருதிகளே. அவை சாதியை அல்லது வர்ணத்தை முன்வைப்பதில்லை. மேலும் சுருதிகளேகூட சிந்திப்பதற்கான வழிகாட்டுதல்களே ஒழிய கடைப்பிடித்தே ஆகவேண்டிய தெய்வ ஆணைகள் அல்ல.

ஸ்மிருதிகள் வர்ணம், சாதி ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. ஆனால் அவை காலந்தோறும் மாறிக்கொண்டிருப்பவை. மனுஸ்மிருதிக்கு முந்தைய ஸ்மிருதியான யம ஸ்மிருதி போன்றவை நான்கு வர்ணங்களும் வேதம் ஓதி வேள்வி செய்யவேண்டும் என்று வரையறை செய்கின்றன. ஸ்மிருதிகளை தேவைக்கேற்ப மாற்றலாம். ஆகவே இந்து மூல நூல்களில் வர்ணமும் சாதியும் வலியுறுத்திச் சொல்லப்படவில்லை.

காந்தி நாராயண குருவை சந்தித்து உரையாடியதை பதிவு செய்துள்ளார். நாராயணகுரு சொன்ன அடிப்படையிலேயே காந்தி வர்ணாசிரம தர்மம் இந்துமதத்தின் அடிப்படைக் கொள்கை என்னும் தன் கருத்தை மாற்றிக்கொண்டார். ஆலயப்பிரவேச இயக்கத்தை நாடெங்கும் கொண்டுசென்றார். தன்னை வந்து சந்தித்த பழைமைவாத நம்பிக்கை கொண்டவர்களிடம் சாதியை இந்து மூலநூல்களான சுருதிகள் மீறமுடியாத ஆணையாகச் சொல்கின்றன என்பதற்கு ஒரு சான்றாவது காட்டும்படி கோரினார்.

காந்தி பின்னர் சாதிமுறைக்கே எதிராக ஆனார். தன்னை ஒரு சனாதன ஹிந்து என அழுத்தமாகச் சொல்லிக்கொண்ட அவர் திருமணம் செய்துகொள்ளும் ஜோடியில் ஒருவர் தலித் என்றால் மட்டுமே அதை நடத்திவைப்பேன் என உறுதி கொண்டார். தமிழக காந்தியர்களான ஜகன்னாந்தன் – கிருஷ்ணம்மாள் திருமணத்தை அவர்தான் நடத்திவைத்தார்.

இதெல்லாம் பலநூறு முறை சொல்லப்பட்ட வரலாற்றுச் செய்திகள். எத்தனை முறை சொன்னாலும், என்னென்ன ஆதாரம் காட்டினாலும், நாத்திகர்கள் ஏற்பதில்லை. இந்து மதத்தின் மூலநூல்கள் சாதிப்பிரிவினையை முன்வைப்பவை என்பார்கள். நாம் இல்லை என மறுத்தால் எந்த நூல் சாதிப்பிரிவினை சொல்கிறதோ அதுதான் இந்துமதத்தின் மூலநூல் என மாற்றிக்கொள்வார்கள். வெறிகொண்ட பழமைவாதிகளை விட தீவிரமாக மனுஸ்மிருதியே இந்துமதத்தின் மூலநூல் என்பவர்கள் இந்த நாத்திகர்கள்தான்.

இவர்களுக்கு உண்மை ஏன் முக்கியமாக இல்லை? ஏனென்றால் அவர்கள் உண்மையைத் தேடவில்லை. அவர்களுடையது உண்மையில் மதமாற்றத் தரப்பின் குரல். அன்னியர்கள் இங்கே நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய அதே தரப்பைத்தான் இவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் நாத்திக முகமூடி போட்ட மாற்று மதத்தவர் என்பதும் ஓர் உண்மை.

இந்துமதம் – தொகுப்பு

முந்தைய கட்டுரைமர்ரே ராஜம்
அடுத்த கட்டுரைசென்னையில் ஒரு கூட்டம்