அன்புள்ள ஜெ,
இது சில நிமிடங்களுக்கு முன்பு நடந்தது. நான் தஞ்சாவூர் மைய நூலகத்தில் எப்போதும் போல் படித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது நன்றாக உடையணிந்த, வெள்ளிப் பட்டை கடிகாரம் கட்டிய ஒரு முதியவர் உள்ளே வந்தார். நான் என் கவனம் முழுவதையும் அவர் மேல் குவித்தேன். ஏனென்றால் நான் ஏற்கனவே ஒரு முறை அவர் நூலகத்தில் புத்தகம் திருடுவதை பார்த்துள்ளேன். அப்போதே வாயிலோனிடம் சொல்லலாம் என்று வெளியே சென்று பார்த்தால், வாயிலோன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்ப தோன்றவில்லை. நான் வேறு யாரிடமும் சொல்ல எத்தனிக்கவும் இல்லை. அந்த முதியவரும் திருடிய புத்தகங்களை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
இந்நிகழ்வு என்னை பல நாட்களாகவே நெருடிக்கொண்டே இருந்தது. என் அச்சமும், ஆற்றலின்மையும் என்முன்னே பல்லிளித்துக் கொண்டு நின்றன.
இதோ, இன்று அவர் மீண்டும் வந்தார். நூலக புத்தகங்களை திருடினார். என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் கிளம்பும் போது நான் அவரை நிறுத்திவிட்டேன்.
‘ஏன் புத்தகங்களை சட்டைக்கு உள்ளே வைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அவர் புன்னகைத்தபடி ‘படிக்கிறதுக்குத்தான்’ என்றார். நான் அவரிடம் எடுத்த புத்தகங்களை திரும்ப வைக்கும்படி கூறினேன். அவர் ஒரு புத்தகத்தை மட்டும் வெளியே எடுத்து வைத்தார். என்னை என்னால் இதற்கு மேல் துன்புறுத்த முடியவில்லை. மீதியையும் வைக்கும்படி நான் அவரிடம் சொல்லவில்லை. அவரும் கிளம்பிவிட்டார்.
எனக்கு ஒன்றுமட்டும்தான் புரியவில்லை. நூலக புத்தகங்களை ஏன் திருட வேண்டும்? நூலகம் எப்போதும் அதே இடத்தில்தானே இருக்கிறது, எப்போது வேண்டும் என்றாலும் வந்து படித்துக்கொள்ளலாமே. உறுப்பினர் ஆகிவிட்டால் வீட்டுக்கும் கூட புத்தகங்களை எடுத்துக்கொண்டு போய் படிக்கலாம். நூலக உறுப்பினராக ஓராண்டுக்கு பத்து ரூபாய் தான் என்று நினைக்கிறேன். புத்தகங்களை திருடிவிட்டால் மற்றவர்கள் எப்படி அதை படிக்க முடியும்?. ஐம்பத்தி ஐந்து அகவைக்கு மேல் இருக்கும் அவருக்கு இது எப்படி புரியாமல் போனது?
– மணிமாறன்
புதுச்சேரி
*
அன்புள்ள மணிமாறன்,
குரங்கு ஒன்று ஒரு பாலிதீன் உறையை அரைமணி நேரம் எடுத்துக்கொண்டு துண்டுத்துண்டாக பிய்த்துப்போடுவதை பார்த்துக்கொண்டிருந்தேன் ஒருமுறை. அதன் ‘இடைவெளி’ என்ன, அதை எப்படி அது நிரப்புகிறது என்று யோசித்தேன். யானை இதேபோல கூழாங்கற்களை பொறுக்கி அடுக்கும். நாய்கள் ஒரே டப்பாவை நாள்முழுக்க உருட்டிக்கொண்டிருக்கும்.
என்ன இடைவெளி? இந்த உடலும் உள்ளமும் செயலுக்காக வடிவமைக்கப்பட்டவை. செயலின்மை உருவாக்கும் இடைவெளிதான். ஓர் உயிரினம் அறிவுபூர்வமானதாக ஆகுந்தோறும் அதற்கு இந்த இடைவெளி மிகுதியாகிறது. பறவைகளில் காகங்களுக்கு இச்சிக்கலுண்டு. மயிலோ சிட்டுக்குருவியோ இதைச் செய்து பார்த்ததில்லை.
இருத்தல்தான் பிரச்சினை. வெறுமே இருத்தல் இயல்வதில்லை. எடை தேவைப்படுகிறது. காலத்தில் வெளியில் தன்னை அழுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. எதையாவது செய்து நாட்களை, மணிகளை, நிமிடங்களை நகர்த்தவேண்டியிருக்கிறது. காலமுணரும் இருப்புணரும் இந்த மூளையை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது?
நான் மலைப்பகுதிகளில் கண்டிருக்கிறேன், மனிதர்களால் அமைதியில் வெறுமே இருக்க முடிவதில்லை. ஏதாவது சொல்கிறார்கள். எதையோ தேடுகிறார்கள். பரபரப்பாகவே இருக்கிறார்கள். பரபரப்பு என்பது என்ன? அமைதியான குளத்தின் ஆழம் அச்சுறுத்துகிறது. ஆகவே அதன்மேல் கல்வீசி அலைகிளப்பி அதன் மேற்பரப்பை ஒரு திரையாக ஆக்கிக்கொள்கிறார்கள்.
ஐந்து நிமிடம் காத்திருக்க முடிவதில்லை. ’ரயில் ஐந்து மணிக்கு, நாலரைக்கு கிளம்பினாப்போரும், நாலு ஐம்பத்தஞ்சுக்கு ஸ்டேஷன் போயிடலாம்’ என்பவர்களைக் கண்டிருக்கிறேன். அரைமணி நேரம் ரயில் நிலையத்தில் காத்திருந்தால் என்ன? நிதானமாக செல்லலாம். செல்லும் வழியிலும் அங்கும் பராக்குபார்க்கலாம். ஆனால் “அங்க போயி என்ன பண்றது?” என்பார்கள். செல்வதையே ஒரு சாகசமாக ஆக்கிக் கொள்வார்கள். “சரியா ஸ்டேஷனுக்குள்ள நுழையறேன்… எடுத்திட்டான். பேகோட ஓடி அப்டியே தொத்திக்கிட்டேன்… நல்லவேளை” என பரவசமடைகிறார்கள்.
எவ்வளவு அற்பமான உயிர்கள். எவ்வளவு சிறிய வாழ்க்கை. அந்தச் சிறிய வாழ்க்கையே மிகப்பிரம்மாண்டமான வெற்றிடமாக தெரியுமளவு இவர்கள் மிகவும் சிறியவர்கள். அதை நிரப்ப, செயற்கையாக விசையூட்டிக்கொள்ள என்னென்ன தேவைப்படுகிறது. எவ்வளவு சினிமாக்கள், சீரியல்கள், யூடிபூப் நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், சமூகவலைத்தள வம்புகள், சூதாட்டம், அரசியல், வம்புகள்…
ஆனாலும் போதவில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் பங்குச்சந்தையில் பல லட்சம் இழந்தார். பணம் சேர்க்கும் ஆசையில்லை. பணம் வைத்திருந்தார். “சும்மா இருக்கிறப்ப உள்ள போனேன், வெளியே வர முடியலை… காலையிலே எந்திரிச்சா ஒரே போர். உள்ளபோயி கொஞ்சம் டீல் பண்ணினா ஒரு திரில்” பெரும்பாலான சூதாட்டங்கள் ‘திரில்’லுக்காகத்தான். பெரும்பாலான சினிமாக்களே திரில்லுக்காகத்தான். சினிமா நிதானமாக ஐந்து நிமிடம் ஒரு கதை சொன்னால் அந்நேரத்தில் செல்போனை எடுத்து ஒரு வாட்ஸப் பார்த்துக்கொள்கிறார்கள். ’பத்து நிமிசம் இழுக்குது, கத்திரி போட்டிருக்கலாம்’ என்பதுதான் நம்முடைய சினிமாவிமர்சனம், ஒட்டுமொத்தமாக அவ்வளவுதான்.
இதுதான் அந்தக்கிழவரின் பிரச்சினை. அவருக்கு புத்தகம் தேவையில்லை. அவர் வாசிப்பவராக இருக்க வழியில்லை. நூலகத்தில் திருடுவது அதிக ஆபத்தில்லாத ஒரு குற்றச் செயல். அதன் திரில்லை ரசிக்கிறர். ஓட்டல்களில் இருந்து மெனுகார்டை திருடி வரும் ஒருவரை எனக்குத்தெரியும். வெளிவந்து கொஞ்சம் தாண்டியதும் தூக்கிவீசிவிடுவார்.
சற்றேனும் கற்றல் இல்லாத எந்தச் செயலும் வெறும் திரில்லுக்காகச் செய்யப்படுவன மட்டுமே. இந்தத் திருட்டைப்போல. ஒரு வெறும் திரில்லர் சினிமாவைப் பார்ப்பதும் இந்த திருட்டு போல ஒரு ‘பொழுதுபோக்கு’ மட்டுமே.
சற்றேனும் அறிவியக்கத்தை அறிந்தவன், கலையை உணர்ந்தவன் இந்த திரில் தேவையில்லாதவனாக ஆகிவிடுவான். கி.ராஜநாராயணனுக்கு பிடித்த அவரது பொன்மொழி ’சும்மா இருக்கத் தெரியாதவன் எழுத்தாளன் கெடையாது’. வெறுமே, தன் உள்ளத்துடன் தானே இருக்கத் தெரிந்துகொள்வதே அறிவுத்தளத்தின் முதல் பயிற்சி. தன் உள்ளத்தை அஞ்சாமலிருத்தல், அதை கூர்ந்து பார்த்தல், அதையே ஒரு பெரும் கேளிக்கையாக ஆக்கிக் கொள்ளுதல். கலையும் இலக்கியமும் எல்லாமே அதற்கான பயிற்சிதான்.
உங்களால் மனதளவில் அமர்ந்திருக்க முடியாது, நடக்கக்கூட முடியாது, ஓடியபடியே இருந்தாகவேண்டும் என்றால் ஆன்மிகமாக மிகப்பெரிய பிரச்சினையில் இருக்கிறீர்கள். வெறுமையும் அகச்சோர்வும் கொண்டிருக்கிறீர்கள். உங்களை உங்களிடமிருந்தே மறைத்து அந்தச் சிக்கல்களை பார்க்காமலிருக்கிறீர்கள். எங்கோ எதையோ திருடி அந்த ‘திரில்’லில் மகிழும் கீழ்மையில் இருக்கிறீர்கள்.
ஜெ