சிவாஜியும் தொடுதிரையும் – கடிதம்

தொடுதிரையின் மேல் விரல்கள்

தொடுதிரை- கல்பற்றா நாராயணன்

அன்புள்ள ஜெ

கல்பற்றா நாராயணனின் தொடுதிரை நான் இதுவரை வாசித்ததிலேயே என்னை கவர்ந்த கவிதை. நான் அதிகமாகக் கவிதைகள் வாசிப்பவன் அல்ல. நவீனக்கவிதைகள் எனக்குப் புரிவதுமில்லை. எனக்கு இன்று வயது 59. இன்னும் ஓராண்டில் அறுபது நிறைவு. அதை நானே கொண்டாடிக்கொண்டால்தான் உண்டு. என்னுடைய வாழ்க்கையை நானே திரும்பிப் பார்ப்பதுண்டு. என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? நான் சின்னவயதில் இரவுபகலாக படித்தேன். போட்டித்தேர்வுக்கும் அதேபோல வெறிகொண்டு படித்து எழுதினேன். பாஸ் ஆகி இபியில் வேலை. அந்த வேலையும் அதேபோலத்தான் நேரம்காலம் இல்லை. மலைப்பகுதிகளில் அணைக்கட்டுகளில் தனி குவார்ட்டஸில் இருந்தேன். வாசிப்பு மட்டும் இல்லை என்றால் செத்திருப்பேன்.

இன்றைக்கு திரும்பிப் பார்க்கையில் அவ்வளவு கவலைப்பட்டிருக்கவேண்டாமோ என்றுதான் நினைக்கிறேன்.அவ்வளவு முன்ஜாக்ரதையாக இருந்தேன். எப்போதுமே எதிர்காலம் பற்றி கவலை. ஐம்பது ரூபாய் தேவை என்றல் நூறுரூபாய்க்கு சேமிப்பு செய்வேன். எல்லாமே ஒரு பதற்றம். ஆனால் எல்லாம் முடிந்து இப்போது எல்லாமே ஒருவகையான ஓவர் அக்டிங் என்று நினைக்கிறேன். என்னை என் மகன் சிவாஜி கணேசன் என்று சொல்வான். எனக்குச் சிவாஜி பிடிக்கும். என்னை அறியாமல் கொஞ்சம் சிவாஜி என்னிடம் இருபபர்போல. நான் என்ன பேசினாலும் என் மகனுக்கெல்லாம் அது நெஞ்சைநக்குத்ல்தான். ஒன்றுமே சொல்லமுடியாது.

ஆனால் அது உண்மை. நான் சிவாஜி ஜெனரேசன். ஓவர் ஆக்டிங் பிடிக்கும். லைபிலும் ஓவர் ஆக்டிங்தான். அஞ்சுரூபாய் சம்பளத்துக்கு அம்பது ரூபாய் நடிப்பு என்று சிவாஜி பற்றி மகன் சொல்வான். நானும் என் டிபாட்மெண்டில் அதைத்தான் செய்தேன். ஓயாமல் மிஷின்ஸ் பற்றி கவலைப்பட்டுக்கொண்டே இருப்பேன். அது நார்மலான பொறுப்புணர்ச்சி என்றுகூட நினைத்திருந்தேன். இன்றைக்கு பிள்ளைகள் அலட்டிக்கொள்வதில்லை. ஜாலியாக இருக்கிறார்கள். நினைத்தால் கிளம்பி ப்ரீக் அவுட் என்று கிளம்பிவிடுகிறார்கள். எனக்கெல்லாமந்த தைரியம் வந்ததே இல்லை.

அந்தப்பிரச்சினையைத்தான் கவிதையில் அற்புதமாக சொல்கிறார். செல்போன் வந்தபோதே எனக்கு நோக்கியாதான் பழக்கம். என்னால் டச் ஸ்கிரீனில் புழங்கவே முடியவில்லை. இப்பவும் நோக்கியாதான். குத்து குத்துன்னு குத்தறே என்று மகள் சொல்வதையே இக்கவிதையும் சொல்கிறது. பலவரிகளை திரும்பத் திரும்ப படித்தேன். மென்மையாக தொடவேண்டியவற்றை ஓங்கிக்குத்தி வீணாய்ப்போன ஜெனரேசனா நான். இதை உறவுகளையும் சேர்த்தேதான் சொல்கிறேன். அந்தக்கவிதையே உறவுகள் பற்றித்தான். நன்றி ஜெ

சி.ராகவன்

தொடுதிரை வாங்க

முந்தைய கட்டுரைகனவும் மொழியும்-கடிதம்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி -தூரன் விருதுவிழா அழைப்பிதழ்