பொருநைத் துறைவி

குமரித்துறைவி நூல் வாங்க 

குமரித்துறைவி மின்னூல் வாங்க 

அன்பிற்கினிய ஜெ,

புள்ளுறை பூம்பொழின் மதுரைத் துரைமகள்புதுநீரா டுகவே

பொருநைத் துறையொடு குமரித்துறையவள்புதுநீ ராடுகவே.

(மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்.  குமரகுருபரர்)

குமரித்துறைவி நாவலுக்கு தலைப்பை குமரகுருபரர் அளித்திருக்கும் செய்தி பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த பாட்டிலேயே பொருநைத் துறையொடு என வருகிறது. மேலும் பொருநைத் துறைவன் பொற்பாவாய் என்கிறார் குமரகுருபரர்.

குமரித் துறையிற் படுமுத்தும்

கொற்கைத் துறையிற் றுறைவாணர்

குளிக்குஞ் சலாபக் குவான்முத்தும்

ஆடும் பெருந்தண் டுறைப்பொருநையாற்றிற்

படுதெண் ணிலாமுத்தும்

என குமரகுருபரர் ஆத்தா மீனாட்சியை பாடுகையில், பொருநை அதன் கரைப்பகுதியையும் குறிப்பிட்டதற்கு, அவர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே காரணம் என நான் நம்பவில்லை.

ஆகவே ஆத்தா மீனாட்சியுடன் பொருநை கொண்டிருக்கும் உறவு பற்றி வரலாற்றில் ஏதேனும் பதிவுகள், குறிப்புகள் இருக்கின்றனவா?

மலைச்சாமி அழகர்

*

அன்புள்ள மலைச்சாமி,

இதற்கு நூலாதாரங்கள் என்ன என்று ஆய்வாளர்கள்தான் சொல்லவேண்டும். நான் சொற்கள் வழியாகச் செல்லும் என் கற்பனையைக்கொண்டு கொற்றவையில் இப்படி ஓர் ஊகத்தை நிகழ்த்தியுள்ளேன்.

திருச்செந்தூருக்கு ஒரு பெயர் அலைவாய். திருச்சீரலைவாய் என்று நூல்களில் உள்ளது. (அலைவாசல்)

மதுரைக்கு ஆலவாய் என்று பெயருண்டு. அது சிவன் நஞ்சுண்ட கதையுடன் இன்று பொருத்திக்கொள்ளப்பட்டாலும் சிவனின் வாயில் நஞ்சு என்பது எங்கும் சொல்லப்படுவதில்லை – கழுத்திலேயே நஞ்சு உள்ளது. அலைவாய் என்பதே ஆலவாய் என ஆகியிருக்கும் என்பது என் ஊகம்.

மதுரைப்பாண்டியர்கள் தென்மதுரை, கபாடபுரம் வழியாக மேலேறி வந்த பயணத்தில் ஏதோ ஒரு காலகட்டத்தில் திருச்செந்தூரில் இருந்திருக்கலாம். பொருநைத்துறை எனப்படுவது இன்றைய திருச்செந்தூர் மற்றும் புன்னைக்காயல், கொற்கை பகுதிகளே.அங்கிருந்து வடக்கே நகர்ந்து இன்றுள்ள மதுரையில் அமைந்திருக்கலாம். இரண்டுமே அலைவாய் (அலைகளின் வாசல்) என பெயர் பெற்றிருக்கலாம்.

ஆகவே பாண்டியர்களின் குலதெய்வம் மீன்விழியும் திருச்செந்தூரில் சிலகாலம் இருந்திருக்கலாம். பொருநை நிலம் என்றுதான் தாமிரவருணி ஓடும் எல்லா பகுதிகளுக்கும் இருந்த பெயர். ஆகவே மீனாட்சி பொருநையின் தேவியாக இருந்திருக்கலாம். மதுரைக்குச் சென்றாலும் அவள் குமரி, பொருநைத்துறைகளின் அரசியே

ஜெ

முந்தைய கட்டுரைஇந்து மதத்தை பாரசீகர்கள் உருவாக்கினார்களா?
அடுத்த கட்டுரைவரலாறு, கடிதங்கள்