சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன?
சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2)
அன்புள்ள ஜெ
நீங்கள் சவார்க்கர் பற்றி எழுதிய கட்டுரை, செங்கோல் பற்றி எழுதிய கட்டுரை ஆகியவற்றை சுட்டிக்காட்டி ‘விலைபோய்விட்டார்’ ‘மாற்றிப்பேசுகிறார்’ என்று சொல்லி பலர் மின்னஞ்சல்கள் அனுப்பினார்கள். நான் ஆச்சரியப்பட்டேன். 2009ல் வெளிவந்த காந்திய தேசியம் என்னும் கட்டுரையின் அதே உள்ளடக்கம் ஏறத்தாழ அப்படியே இருக்கும் கட்டுரை சவார்க்கர் பற்றியது. இப்போது செங்கோல் பற்றிய விமர்சனம் ஏறத்தாழ இப்படியே யோகி ஆதித்யநாத் முதல்வராக ஆனபோதும் உங்களால் சொல்லப்பட்டுள்ளது.
நீங்கள் ஒரு தரிசனத்தை பேசிப்பேசி மேலும் வளர்த்துக்கொண்டே வருகிறீர்கள். அதை நான் inclusive nationalism என புரிந்துகொள்கிறேன். அதை எதிர்கொள்ள இங்கே எவரிடமும் கருவிகள் இல்லை. எதையெதையோ சொல்லி கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆர். சிவராஜ்
அன்புள்ள ஜெ,
செங்கோல் கட்டுரையும் சாவர்க்கர் கட்டுரையும் சிறப்பானவை. நீங்கள் தொடர்ச்சியாக எழுதி வந்தவை. அடிப்படைவாதமும் பழமைவாதமும் வேறுவேறு. நம் சீர்திருத்தவாதிகள் அடிப்படைவாதத்தை எதிர்க்கமுடியாதவர்கள். ஏனென்றால் இவர்களும் மாடர்னிஸ்டுகள்தான். ஆகவே அவர்கள் அடிப்படைவாதத்தை பழமைவாதம் என்று சொல்லி வசைபாடுவார்கள். பழமைவாதத்தையே இவர்களால் எதிர்க்கமுடியும். நீங்கள் சொல்வதுபோல இவர்களின் மேடையிலேயே அடிப்படைவாதிகளான வஹாபிகள் இருக்கிறார்கள்.
உதாரணமாக ஆர்.எஸ்.எஸை நம் முற்போக்குகளும் திராவிடவாதிகளும் பூணூல்கட்சி என்பார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ் பூணூல் போன்ற ஆசாரங்களுக்கு எதிரானது. சபரிமலைக்கு பெண்களும் போகலாம் என்று முதலில் சொன்னவர் ஆர்.எஸ்.எஸ் தலைவர் அரி என்பவர். சாதி, தீண்டாமை ஆகியவற்றை வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் எதிர்க்கிறது. அது உண்மையில் நாத்திகவாதிகளுக்கும் இடம்கொடுக்கிறது. இணையத்திலேயே ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பழமைவாதிகள் இதற்காக நியோக்கள் (நியோ இந்துக்கள்) என்று சொல்லி திட்டுவதை காணலாம்
ஆர்.எஸ்.எஸை பழமைவாத அமைப்பு என்று சொல்லி திட்டினால் அது அதை எந்தவகையிலும் பாதிக்காது. உங்களைவிட நாங்கள் முற்போக்கு என்று சொல்லிவிடுவார்கள். அவர்கள் அடிப்படைவாதிகள் என்பதுதான் பிரச்சினை.பழமைவாதம் என்பது அரசியல் அல்ல. அடிப்படைவாதம் ஓர் அரசியல் சக்தி. அதைத்தான் முன்பு காந்தி டுடேயில் எழுதிய கட்டுரையில் இருந்தே சொல்லிவருகிறீர்கள்
என்.ஜெகன்