தேர் செல்லும் திசை- நிர்மல்

காண்டீபம் மின்னூல் வாங்க

காண்டீபம் வாங்க


காண்டீபனை கைது செய்த காதலி- நிர்மல்
வில்லின் கதை
சித்ரரதன் கதை- நிர்மல்

முதல் நடம்

காண்டீபத்தின் தேரோட்டி அத்தியாயம் சுபத்திரை கல்யாணத்தினை பேசுகின்றது. வசுதேவர்-ரோகினி தேவியின் மகளான சுபத்திரையை அர்ஜுனன் மணந்த கதை.

தேரோட்டி என்ற தலைப்புக்கு பொருத்தமாக இக்கதையின் தேரான கல்யாணத்தினை நடத்தும்  கண்ணன் இருக்கின்றானா, தேரோட்டியாக இருந்து காதலனுடன் தப்பும் சுபத்திரையை இருக்கின்றாளா என வாசிக்கும் வாசகருக்கு இரண்டு வேறு கருத்துகள் உருவாகலாம். அண்ணனும், தங்கையும் தேரோட்டிகள்தான்.

ஊர் மக்கள் ஆர்ப்பரித்து ஆதரிக்க, சிறைபிடிக்க காவலர் துரத்த, தேரோட்டும் காதலியுடன் காதலன் ஆயுதம் ஏந்தி தற்காக்க துவாரகையின் வீதியில் சாகசமும், காதலும் ததும்பும் காட்சி உடையதாக சுபத்திரை கல்யாணம் காண்டீபத்தில் வருகின்றது.

சிறுவயது முதலே அர்ஜுனன் பெயர் கேட்டு உள்ளத்தில் அபிமானம் உடையவளாக சுபத்திரை வளர்கின்றாள். இளவயதில் மொட்டாக தோன்றும் விருப்பம் அப்படியே இருக்கின்றது. பின்னர் யாரோ ஒரு சிவயோகியை கோவிலில் காண்கையில் காதலில் விழுகின்றாள். கதையாக அறிந்தமையால் விருப்பம் தூண்டியவன் ஒருவன், கண்ணால் கண்டதும் உள்ளம் கொண்டது ஒருவன். குழப்பமும், முரணும் நமக்கும் வயதில் வருவது போல சுபத்திரைக்கும் வருகின்றது.  கதையில் கேட்ட அர்ஜுனனும், சிவயோகி காட்சியின் நாயகனும் ஓன்றே என அவளுக்கு தெரிவதில்லை.

அர்ஜுனன் இக்கதையில் சுபத்திரை காதலில் அடிபணிபவனாக வருகின்றான். முற்றிலும் பணிந்து வணங்கி காதல் கோரும் அர்ஜுனன்.  வில்லேந்தி வெல்லும் விஜயன், மிச்சமின்றி வணங்கி நிற்கின்றான். சுபத்திரையையின் காதல் அத்தனை வலியது. அதை காண்டீபம் இவ்வாறு சொல்கின்றது.

““என்னால் உன்னை விட்டு விலக முடியாது சுபத்திரை. என் தலை கொய்து இக்கால்களில் வைக்க வேண்டுமென்று கோரினால் கணம் கூட தயங்காமல் அதை செய்வேன். எங்கும் பெண் முன்னால் நான் முழுதும் தலை பணிந்ததில்லை. இங்கு ஏதும் மிச்சமின்றி வணங்குகிறேன். எனக்கு அருள்க!” என்றான். அவள் கைகளைத் தூக்கி அவற்றில் தன் கைகளை வைத்தான்.”

 “என்னை ஒரு விளையாட்டுப் பாவையாக அரண்மனை விலங்காக உன் மஞ்சத்தருகே வைக்கும் எளிய கோளாம்பியாக ஏற்றுக்கொள்.”   என அர்ஜுனன் கெஞ்சுகின்றான்.

சுபத்திரை காதலின் செல்ல சீண்டல்கள், முரண்கள், ஊடல்கள் என அத்தனையும் காட்டி அர்ஜுனனை அணைத்துக் கொள்கின்றாள். அர்ஜுனன் மீது அத்தனை அஸ்திரங்களையும் ஒரே நேரத்தில் எய்கின்றாள். பணியவும் வைத்தாள்.

சுபத்திரையின் சீண்டல்களில் ஒன்றாக கீழ் கண்டது வரும்

வீரராகிய பார்த்தரை நான் வெறுத்தேன். யோகியாகிய உங்களை விழைந்தேன். என் வயிற்றுள் உறையும் விழைவு அது.” என்றாள்.

பார்த்தன் பல காதலியர் கொண்டவன், யோகி என்னவன் மட்டுமே என்ற சுபத்திரையின் எண்ணத்தில் விளையும் சீண்டல்களில் ஓன்று.  உண்மையில் விழைவது அதுவே. காதலியால் காதலின் காரணமாக ஒரே நேரத்தில் வெறுக்கப்பட்டும்,விரும்பப்பட்டும் அர்ஜுனன்.

இக்கதையில் கண்ணன்,பலராமனின் சொந்தக்காரர்கள் பொறாமை, ஆற்றாமை காரணமாக பஞ்ச பாண்டவர், கண்ணன் நட்பினை குலைக்க எண்ணி வீம்புக்கு சுபத்திரையை துரியோதனனுக்கு  திருமணம் செய்விக்க எண்ணுகின்றார்கள். உலகை உணர்வுகளால் மட்டும் தொடும் பலராமர் அந்த சூது அரசியலில் பகடைகாயாய் ஆகின்றார். நெடுநாள் நோக்கும்,அறவுணர்வும் ஒருங்கிணையாது வெறும் உணர்வுகளால் மட்டும் உலகத்தினை தொடுகையில் அது அன்பால் ஆனதென்றாலும் வெறும் பலவீனமாக கூட மாறக்கூடும் என்பதற்கு பலராமர் உதாரணம். கண்ணன் – பலராமனின் சொந்தங்கள் கண்ணனுக்கு எதிராக பலராமரை பிடிக்கின்றார்கள்.

ஓட்டு மொத்தமாக பார்த்தால் கண்ணன் – பலராமன் ஒத்திசைவு கொண்டால் பாரத வர்ஷமே பலம் பெறும், ஒரு துவாரகை செல்வம் செழிப்பு மட்டுமல்ல, ஒன்பது துவாரகை கொள்ளும் செல்வ செழிப்பினை உருவாக்க கூடும். அது பலம்,செல்வம்,தொழில், அறிவு என எல்லாவற்றையும் ஒன்றிலிருந்து ஒன்பது மடங்கு பெருக்கும். ஆனால் ஓட்டு மொத்த பார்வை இல்லாத துண்டுபட்ட விபரீத அறிவு உண்டு. அறியாமையாகிய மேகம் சூழ்வதால் விளைவது.  உருவான ஒரு ராஜியத்தினை ஓன்பதாக பிரித்து உள்போட்டி, பொறாமை, காழ்ப்பு, ஆற்றாமை கொண்டு கையாள நினைக்கின்றார்கள்.  ஒன்றை ஒன்பதாக மாற்றி வளருவது இன்றி, இருக்கும் ஒன்றை ஒன்பதாக கிழித்து உண்ண செல்வது வீழ்தல்.

சொந்தங்களின் பல பிரிவுகள் ஆளுக்கு ஒரு துவாரகை வேண்டும், இன்னொன்று இன்னொன்று என புது புது  துவாரகை உருவாக்கி அளி என கண்ணனின் சொந்தங்கள் அவனிடம் கேட்பதில்லை. அது வளர்ச்சி. இருக்கும் ராஜியத்தினை கூறு போடுதலில் நேரம் செலவிடுகின்றார்கள். கூறு போடும் புத்தியால் கட்டி எழுப்ப இயலாது.

கண்ணன் அதையும் கனிவுடனே கையாள்கின்றான். சொந்தங்களின் அறியாமையை பொறுத்து செல்கின்றான். சொந்தங்கள், பஞ்ச பாண்டவர் நட்பு என அனைத்தையும் அணைத்துச் செல்லவே எண்ணுகின்றான். முறைப்படி சுபத்திரை-துரியோதனன்  திருமண அறிவிப்பு வந்த பின் எப்படி அர்ஜுனன் – சுபத்திரை சந்திப்பு நிகழும் என வாசிக்கும் நமக்கே ஒரு பதட்டம் வருகின்றது.

அந்த திருமண அறிவிப்பினை விட பல மடங்கு பெரிய நிகழ்வு ஒன்று நிகழ்ந்தால்தான் அர்ஜுனன் – சுபத்திரை சந்திப்பு நிகழும் என்பதால் தங்கள் குல மூத்தாராகிய அரிஷ்ட நேமியை துவாரகைக்கு அழைத்து திருமண நிகழ்வொன்றுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது. கண்ணன் அரிஷ்ட நேமியை அழைத்து வருகின்றான். இன்னோரு பெரிய நிகழ்வொன்று நடக்கின்றது.

அரசியல் சதுரங்கமாகவே நடக்கின்றது. பாரத வர்ஷத்துக்கும், தன் சொந்தங்களுக்கும் நீண்ட நாள் நோக்கில் நலம் தரும் விஷயங்களில் கவனம் செலுத்தும் கண்ணன் தரப்பு ஒருபுறம், அன்றாடத்தனத்தில் கூறு போடும் தன்மையுடைய அவனுடைய அன்பு சொந்தங்கள் ஒருபுறம். எதிரியை வீழ்த்துவது எளிது, அன்பு கொண்டார் கொள்ளும் ஆற்றாமை,பொறாமை என்ன செய்வது, அதை எதிர்க் கொள்வது கடினத்திலும் கடினம்.

அரிஷ்ட நேமி திருமணம் மறுத்து துறவியாக வனம் செல்கின்றார். அன்றாடத்தனத்தினையே மீறிய பிரமாண்டமாக வெளிப்படுகின்றார். அதை கண்ணன் மொத்த துவாரகையின் முன் காவியமாக நிகழ்த்துகின்றான். அது ஒரு அற்புதமாக வெளிப்படுகின்றது. மக்கள் மனதில் ரச மாற்றம் நிகழ்கின்றது. எந்த ரசமும் காண்போர் உள்ளத்தில் விளைவுகளை உருவாக்கும். அற்புத காட்சிகள் உருவாக்கும் அனுபவங்கள், உணர்வெழுச்சிகள், அக மாற்றங்கள் தனித்துவம் உள்ளவை.

கண்ணன் அரிஷ்ட நேமி நேமிநாதர் ஆகியதால் உருவான நேர்மறை மனநிலையில் சுபத்திரை-அர்ஜுனன் நிகழ்வினை கொண்டு வருகின்றான். பூசல் மனநிலை மறைந்து மொத்த நகரமும் அற்புதம் கண்டு ஒன்றாகி அகம் மலரும் நேரத்தில் அந்த நிகழ்வினை நிகழ்த்துகின்றான். மொத்த துவாரகையும் ஒன்றாக நிற்கின்றது. வாழ்த்துகின்றது. அற்புத ரசத்துக்கு ஒரு ஆற்றலுண்டு. அதை கண்ணன் தன் மக்களின் நலனுக்காக, தங்கையின் காதலுக்காக, நண்பனின் அன்புக்காக, சொந்தங்களின் சுபத்துக்காக உபாயமாக கையாள்கின்றான். மக்கள் உணர்வுகளை காண்டீபம் இவ்வாறு சொல்கின்றது.

தோரண வாயிலுக்கு அப்பால் கூடி நின்றிருந்த துவாரகையின் மக்கள் உரத்த குரலில்இளைய பாண்டவர் வாழ்க! மதுராபுரியின் அரசி சுபத்திரை வாழ்க!” என்று கூச்சலிட்டனர்.”

வாழ்க! வாழ்க!” என்று துவாரகையின் மக்கள் கூவினர்.

அக்கூட்டத்தின் நடுவே இருந்த பாலைவனப் பாதையினூடாக செம்புழுதி பறக்க புரவியில் சென்றனர். அவர்களுக்குப் பின்னால் வாழ்த்தொலிகளுடன் கூட்டம் ஆரவாரமிட்டது.”

இக்கதையில் நேமிநாதர் மிக முக்கிய பாத்திரமாக வருகின்றார். நேமிநாதர் உருவத்தில், உள்ளத்தில் என முற்றிலும் நேர் நிலை கொண்டவர். காண்பவர் கண்ணில் எல்லாம் பேருரு கொண்ட தெய்வமாக மிளிருபவர். வாழ்வில் சன்யாசம் வேண்டி சென்றவர், குடும்ப அழைப்பினை ஏற்று திரும்ப வருகின்றார், அது அவருக்கு உகக்காமல் போகவே மீண்டும் துறவறம் செல்கின்றார்.

தேராட்டியில் அர்ஜுனன் அரிஷ்ட நேமியை துவாரகைக்கு அழைத்து செல்ல அவர் இருக்கும் குகைக்கு வருகின்றான். அங்கிருந்து துவாரகைக்கு திருமணத்துக்கு கிளம்பும் அரிஷ்ட நேமி கையில் ஒரு மரவுரி மூட்டையுடன் வருகின்றார். நாடாள செல்பவர் கையில் மரவுரி மூட்டை.  அதன் அபத்தம் உணர்ந்து அவரே சொல்வார்.

““எத்தனை எளிய உயிர்கள் மனிதர்கள்! நான் நாடாளச் செல்கிறேன். இக்குகையிலிருந்து இந்த மரவுரியையும் திருவோட்டையும் கொப்பரையையும் கொண்டு செல்வதனால் என்ன பொருள்?” என்றார்.”

பின்னர் உள்ளே சென்று அரிஷ்ட நேமி ஒரு கூழாங்கல்லை எடுத்து வருவார். அதை ஒட்டி அர்ஜுனனுடன் நடக்கும் பேச்சு சுவையானது.

அது எதற்கு உங்களுடன் மூத்தவரே?” என்றான் அர்ஜுனன். “நான் இங்கிருந்த இந்நாட்களின் நினைவாகஎன்றார் அரிஷ்டநேமி. “அந்நினைவு தங்களுக்கு தேவையில்லை என்றீர்கள்?” என்றான் அர்ஜுனன். “ஆம், இந்நினைவு முற்றிலும் அழிந்தால் செல்லும் இடத்தில் நான் முழுநிறைவடையக்கூடும். ஆனால் அதைச் சொன்னதுமே நான் பேரச்சம் கொண்டேன். முழுமையாக என்னை அதில் இழந்து விடக்கூடாதென்று எண்ணிக் கொண்டேன். அறியாத ஆழத்தில் இறங்குபவன் பிடித்துக் கொள்ள சரடொன்றை வைத்துக் கொள்வது போல் இதை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றியதுஎன்றார்.

பின்னர் அவர் பூரண துறவு கொண்டு நீங்குகையில் அவர் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. பேரச்சம் இல்லை. சரடோன்று தேவையில்லை என ஆனது. ஒரு வேளை அந்த முகூர்த்தம் நிகழத்தான் துவாரகையில் பொற்தேரிலும் பின்பு சுப்ரதீபத்திலும் ஏறும் தருணங்கள் அவருக்கு அமைந்ததோ.

இக்கதைப்படி அரிஷ்டநேமியின் பூரண துறவறத்தில் ஒரு சிறிய தடைக்கல் இருந்துள்ளதாக தெரிகின்றது.  அதை உணர்ந்த கண்ணன் அவரை ஆற்றுப்படுத்தி அவருடைய முழு உருவம் வெளிப்பட உதவுகின்றான். அதற்கு மணநிகழ்வு, சுப்ரதீபம் என பல கருவிகள் பயன்படுகின்றது. ரைவத மலையில் இருந்து கிளம்புகையில் கூழாங்கல்லுடன் கிரகஸ்த வாழ்வினை நோக்கிய ஒரு ஐயத்துடனே வருகின்றார்.ஐயம் உள்ளது. ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒரு கால் என ஒரு நிலை. அவர் இன்னமும் காண வேண்டிய மிச்சம் நகர வாழ்வில் உண்டு. அவர் காண வேண்டிய விஷயங்களை கண்ணன் காண வைக்கின்றான்.

அரிஷ்ட நேமி செல்ல நினைத்த இடம் துறந்து துறந்து சென்று துறக்க ஒண்ணாததென எஞ்சுவதே தங்கள் இருப்பென்றும் அதை நிறைவழியச்செய்யும் முறைமையே ஊழ்கமென்றும் இவர்களின் நெறிவழி வகுத்துள்ளதுஎன்றார் இளைய யாதவர்.”   என கதையில் கண்ணன் சொல்கின்றான்.

அரிஷ்டநேமியின் நெறியின் இயல்பென்பது முற்றும் துறப்பது. ஆனால் அதற்கு அவர் தயாராக இருந்தாரா? கண்ணன் அழைத்தப்பொழுது அரிஷ்ட நேமி ரைவத மலையில் சொன்ன பதிலை கீழே பாருங்கள்.

நான் எளிய மனிதன், வெறும் ஊன்தடி. ஒன்றிலிருந்து ஒன்றென தன்னை பெருக்கி இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் முடிவிலா ஊன்சரடின் ஒரு கண்ணி. பிற அனைத்தும் என் வெறும் ஆணவங்கள். அவற்றைத் துரத்தாமல் என்னை நான் உணர்வதற்கில்லை. யாதவனே, நீ கொண்டுவந்த செய்திக்கு உடன்படுகிறேன். என் மூதாதையர் எழட்டும். பிறந்து பிறப்பித்து மடிவதற்கப்பால் மானுடர்க்கு ஆவதொன்றும் இல்லையென்றால் அதுவே ஆகட்டும்என்றார் அரிஷ்டநேமி.

இதுதான் அவரது பதில் எனில் ரைவத மலை சந்திப்பின் பொழுது அவர் தன்னுடைய நெறி இட்டு  செல்ல நினைத்த இடத்துக்கு சென்று விட்டாரா? இல்லை. ஒரு தடைக்கல் உள்ளது.

மாறாக சுப்ரதீபத்தின் மீது ஏறி நகர் நீங்குகையில் அவருடைய தெளிவு பூரணமானது

தன்னை ஊன்தடி என சொன்ன அரிஷ்டநேமி, நேமிநாதர் ஆகுகையில் அவர் செல்ல நினைத்த நெறிவழியே ஐயம் இன்றி தெளிவுடன் செல்வதை காணலாம். அந்த ஆற்றுபடுத்துதலை கண்ணன் செய்கின்றான்.

இக்கதையை கேட்ட சுஜயன் நேமி நாதரின் நிமிர்வில் கவரப்பட்டான். அவர் மேல் உளம் கொண்டான். அவன் கனவுலகில் உளம் நொய்வதில் இருந்து விடுபட்டு நிமிர் கொண்ட குழந்தையாக அர்ஜுனனை இந்திர பிரஸ்தத்தில் சந்திக்கின்றான். காண்டீபம் காண விஜயன் குழந்தைகளை கூட்டி செல்கின்றான் அப்பொழுது நேமிநாதரின் விக்ரஹம் சுஜயனிடம் உள்ளது.அறம் நோக்கி நேசம் கொள்ளும் குழந்தை மனது.

பின்பு திசைத்தேர் வெள்ளத்தில் சுஜயனை வில் வீரனாக சந்திக்கின்றோம். குழந்தை வளர்ந்து வீரனானது. தனது கடமைக்கென களம் கண்ட வீரனாக நிமிர்வுடன் , புன்னகையுடன் சுஜயனை பார்க்கின்றோம்.  வளரும் சுஜயன் விஜயனாகவே விழைகின்றான். விஜயனை போலவே களத்தில் நிற்கின்றான். மாரில் அம்பு பாய்கையில் அதை தொட்டு அர்ஜுனன் அம்பா என உறுதி செய்கின்றான். கலங்காத, அஞ்சாத,கடமையே ஆன, இனிமையும், காதலும் கொண்ட பாரதன் எல்லாம் அர்ஜுனன்தானே. சுஜயனும் அதேதான்.

வெண்முரசு மின்னூல்கள் வாங்க

வெண்முரசு நூல்கள் வாங்க

முந்தைய கட்டுரைகவிஞனுடன் இருத்தல்
அடுத்த கட்டுரைதீராத அன்புடன்- கடலூர் சீனு