அன்புள்ள ஜெ,
தொடர்ச்சியாக நீங்கள் நிகழ்த்திவரும் கட்டண உரைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். இவை ஒரு சீரான சிந்தனை வளர்ச்சியை காட்டுகின்றன. (நெல்லை உரை மட்டும் கேட்கக் கிடைக்கவில்லை) பண்பாடு, மரபு என்றால் என்ன என்ற வினாவுடன் தொடங்குகிறது இந்த தேடல். அதிலுள்ள ப்ன்மைத்தன்மை என்ன? அதில் எதை ஏற்கவேண்டும் எதை கடந்துசெல்லவேண்டும் ? இந்த உரையில் அதைச் சொல்லுமிடத்தில் தேடல் ஒருமுனைப்படுகிறது. அதற்குப்பிறகு வந்த உரைகளில் படிப்படியாக மேலும் தெளிவு உள்ளது. விடுதலை என்றால் என்ன? மரபில் இருந்து விடுதலைக் கருத்துக்களை பெற்றுக்கொண்டு எப்படி தன்வயமாக்குவது என்றெல்லாம் உரைகள் சொல்கின்றன.
இந்த உரைகளை எழுதி நல்ல சீர்நடைக்கு கொண்டுவந்து நூலாகவும் பிரசுரிக்கலாம். இந்த உரைகளை அந்த நூலின் உதவியுடன் இன்னும் ஆழமாகப்புரிந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்
செல்வநாயகம்