கோவை, உரை -கடிதம்

அன்புள்ள ஜெ

சென்ற ஜூனில் உங்கள் 60 அகவை பாராட்டுவிழாவுக்கு கோவை வந்திருந்தேன். அன்றைக்கு உங்களைச் சந்தித்தேன். கோவையில் நீங்கள் பேசி ஓராண்டுக்குமேல் ஆகியிருக்கிறது என நினைக்கிறேன்.

அன்று கோவையில் கூடியிருந்த பெருங்கூட்டம் திகைப்பை உருவாக்கியது. (நான் சென்னையில் வாழ்கிறேன். சென்னையில் அப்படி ஒரு கூட்டம் உங்களுக்கு ஏற்பாடு செய்ய யாருமில்லாமல் ஆகிவிட்டது என்ற எண்ணமும் வருத்தமும் இன்றைக்கும் உண்டு. நான் அதற்கான ஆற்றல் இல்லாதவன். கேரளத்திலேகூட விழா நடைபெற்றது. தமிழகத்தலைநகரில் ஒன்றும் நடக்கவில்லை. வெண்முரசு நிறைவுக்குக்கூட ஒரு விழா எடுத்திருக்கலாம்)

அன்றைக்கு வந்திருந்த பலர் உங்களைப் பற்றிப்பேசும்போது நீங்கள் அவர்களுக்கு என்ன அளித்தீர்கள் என்பதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். உங்களுடைய புகழின் ஒளியில் அவர்கள் ஒவ்வொருவரையாக பிடித்து நிறுத்தி உலகுக்கு முகம்காட்டச் செய்தீர்கள். இது ஜெயகாந்தன்கூட செய்யாத ஒன்று. எழுத்தாளர்கள் இதைச் செய்வதே இல்லை. ஓர் எழுத்தாளனை இதற்குமுன் இப்படிக் கொண்டாடியதில்லை என்று அன்றைக்குச் சொன்னார்கள். எந்த எழுத்தாளனும் இப்படி மற்றவர்களை முன்னிறுத்தியதில்லை என்று நான் சொன்னேன்.

இன்றைக்கு அந்த உரையை யூடியூபில் கேட்டுக்கொண்டிருந்தேன். அற்புதமான உரை. அனைவரையும் நண்பர்கள் என்றே சொல்கிறீர்கள். வாசகர்கள் என்றுகூட சொல்லவில்லை.

வாழ்த்துக்கள் ஜெ

ஸ்ரீ ஆராவமுதன்

முந்தைய கட்டுரைகதிர் பார்த்தல் – மணிமாறன்
அடுத்த கட்டுரைவல்லினம் மு. இளங்கோவன் பேட்டி