இன்று விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா

சென்னையில் இன்று விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருதுவிழா நிகழ்கிறது. சென்ற 6 ஆண்டுகளாக இவ்விருது வழங்கப்படுகிறது. கவிதா சொர்ணவல்லியின் உதவியுடன் தொடங்கப்பட்ட இந்த விருது சென்னை விஷ்ணுபுரம் நண்பர்களின் உதவியுடன் ஒரு முதன்மையான அங்கீகாரமாக ஏற்படைந்துள்ளது.

ஒரு விருதின் முக்கியத்துவம் என்பது அது தொடர்ச்சியாக வழங்கப்படுவதிலுள்ளது. அதைப்பெற்றவர்களின் ஒரு வரிசை உருவாகி வருகிறது. புதியதாக விருதுபெறுபவர் அந்த வரிசையில் வைக்கப்படுகிறார். உண்மையான ஏற்பு அதுதான். அந்த விருதுக்குரியவர்கள் தெளிவான மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள் என்றால் அந்த விருது அம்மதிப்பீடுகளின் அடையாளமாக ஆகிவிடுகிறது. விஷ்ணுபுரம் விருதுகளுக்கு இன்று அத்தகைய கவனமும் இடமும் உண்டு.

இதுவரை விருதுபெற்ற கவிஞர்கள் அனைவருமே ஒரே அளவுகோலில் முன்னிற்பவர்கள். அதை இப்படிச் சொல்லலாம், தங்களுக்கான தனித்த அழகியலை உருவாக்கிக்கொண்டவர்கள், அல்லது அதற்கான முயற்சியில் இருப்பவர்கள்.

இவ்வாண்டு விருதுபெறுபவர் சதீஷ்குமார் சீனிவாசன். 40 வயதுக்குட்பட்ட இளங்கவிஞர்களுக்கான விருது இது. சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகள் அறிவார்ந்த முயற்சி ஏதுமில்லாத உணர்வுகளின் வெளிப்பாடுகள். சமகாலத்தின் தத்தளிப்பும் கசப்பும் நம்பிக்கையும் கொண்டவை. ஆனால் அவை நேரடியான பதிவுகளாக இல்லாமல் தனித்தன்மை கொண்ட மொழிநடையுடன் , தன்க்கேயான அழகியலுடன் வெளிப்படுபவை. நகர்ப்புறம் சார்ந்த படிமங்கள், தொடர்பற்ற சொற்றொடர்களின் மயக்கம் வழியாக நிகழும் ஒரு தனி கவியுலகு சதீஷ்குமார் சீனிவாசனுடையது.

சதீஷ்குமார் சீனிவாசனுக்கு விருது வழங்கும் முடிவை வழக்கம்போல கவிதைக்கான குறைவான, ஆனால் தீவிரமான வாசகர்கள் வரவேற்றனர். கடிதங்களில் கூர்மையான பல வாசிப்புகள் உருவாகி வந்தன.

இவ்வாண்டு விருதுவிழாவில் மனுஷ்யபுத்திரன், கே.சி.நாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கிறார்கள். மனுஷ்யபுத்திரன் சதீஷ்குமார் சீனிவாசனின் ஆதர்சக் கவிஞர். கே.சி.நாராயணன் மலையாள கவிதை விமர்சகர்களில் முக்கியமானவர்.

விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருதுவிழாவை எப்போதுமே புதிய இலக்கியவாதிகளை அறிமுகம் செய்யும் நிகழ்வாகவும் ஒருங்கிணைப்பது எங்கள் வழக்கம். ஆகவே காலைமுதல் கருத்தரங்கு தொடங்குகிறது. புதிய படைப்பாளிகள் மூவரின் படைப்புகள் பற்றி இளம்படைப்பாளிகள் உரையாடுகிறார்கள்.

நண்பர்கள் அனைவரையும் கவிக்கோ அரங்கம் (சிஐடி காலனி மைலாப்பூர் சென்னை) க்கு வரவேற்கிறேன். நான் 10 காலை சென்னை வந்துசேர்கிறேன்.

முந்தைய கட்டுரைந. பாலபாஸ்கரன்
அடுத்த கட்டுரை முதல் நடம் -நிர்மல்