குமரகுருபரன் விழா, மனுஷ்யபுத்திரன்

தமிழிலக்கியத்தில், குறிப்பாக கவிதையில் தெளிவான ஒரு மரபுத்தொடர்ச்சி உண்டு. ஓர் இளங்கவிஞர் பெரும்பாலும் இன்னொரு மூத்த கவிஞரின் வாரிசு போல உருவாகி வருகிறார்.அவர் மேல் பெரும் வழிபாட்டுணர்வு கொண்டிருக்கிறார். அந்த வழிபாட்டுணர்வு என்பது ஓர் ஆழமான அகத்தொடர்பு – நமக்கு அது வழிபாட்டுணர்வாகத் தெரிகிறது. அந்த தொடர்பினூடாக அவர் அந்த மூத்த கவிஞரை மிக அணுக்கமாக அறிகிறார். அவருடைய ஒவ்வொரு சொல்லும் முளைத்தெழும் உள்ளம் கொள்கிறார்.

லக்ஷ்மி மணிவண்ணனுக்கும் விக்ரமாதித்யனுக்கும் அவ்வாறு ஓர் அகத்தொடர்பு உண்டு. விக்ரமாதித்யனுகும் நகுலனுக்கும் அவ்வாறு ஒரு தொடர்பு உண்டு. நகுலனுக்கு அதே அகத்தொடர்பு க.நா.சுவிடம் இருந்தது. நான் சந்திக்கும்போதெல்லாம் அவர் மயன் கவிதைகள் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். மயனுக்கு? ஆச்சரியம், க.நா.சு திரும்பத் திரும்ப நேர்ப்பேச்சில் குறிப்பிடும் கவிஞர் காளமேகம். தனிப்பாடல்தான் உண்மையான கவிதை என க.நா.சு.நம்பினார். ஒரு கவிதை அதற்கான ஒரு தருணத்தில் தன்னிச்சையாக உருவாகி அப்போதே முழுமைகொண்டு விடும் என்றும் மறுகணம் எஞ்சுவது அதன்மேல் கவிஞன் கொள்ளும் அறிவோட்டம்தான் என்றும் சொன்னார்.

அந்த உரையாடல் சுந்தர ராமசாமிக்கும் அவருக்குமிடையே நடைபெற்றபோது சுந்தர ராமசாமி அதை ஆமோதித்ததாகவே தோன்றியது. எனக்கு அது ஏற்புடையதாக இருக்கவில்லை. ஆனால் அதைச் சொல்லும் வயது அன்று எனக்கில்லை. அப்படிப்பார்த்தால் காளமேகம் முதல் லக்ஷ்மி மணிவண்ணன் வரை ஒரு கோடிழுக்க முடியும் என்பது விந்தைதான்.

சதீஷ்குமார் சீனிவாசன் மனுஷ்யபுத்திரனின் கவிதையுலகுக்கு மிகமிக அணுக்கமானவராக தன்னை உணர்பவர். அவருடைய பேட்டியில் மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒரு கவிதையாக அன்றி, தன் வாழ்க்கையை திருப்பியமைத்து தன்னை கவிஞனாக ஆக்கிய அறைகூவலாகவோ அழைப்பாகவோ வந்த தருணத்தைப் பற்றிச் சொல்கிறார். 10 -ஜூன் 2023ல் சென்னையில் நிகழும் விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருதுவிழாவில் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு விருதை கே.சி.நாராயணனும் மனுஷ்யபுத்திரனும் அளிக்கிறார்கள்.

”மறுக்க சாத்தியமே இல்லாததுதான் கவிதை” – சதீஷ்குமார் சீனிவாசன் நேர்காணல்

முந்தைய கட்டுரைசெங்கோல், கடிதம்
அடுத்த கட்டுரைக்ருஷாங்கினி