இந்தியாவில் தேசியக் கல்வி இயக்கம் 1920களில் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து தேசிய இயக்கம் வலுப்பெற்றது. தொடர்ந்து இடதுசாரி அரசியல் இங்கே தொடங்கியது. விளைவாக இந்தியமக்களிடையே உலக சிந்தனைகளையும், அயல்நாடுகளையும் அறியும் ஆர்வம் உருவாகியது. இரண்டு உலகப்போர்களும் பொது அறிவுநாட்டத்தை வலுப்படுத்தின. இந்தியாவெங்கும் ஓர் அறிவியக்கம் உருவாகியது.
தமிழில் அந்த அறிவியக்கத்தை முன்னெடுத்த அறிஞர்களில் முதன்மையானவர் வெ.சாமிநாத சர்மா. ஐரோப்பிய சிந்தனைகளையும் ஆளுமைகளையும், தேசியத்தலைவர்களையும் தமிழில் அறிமுகம் செய்யும் அவருடைய நூல்கள் தமிழில் ஓர் அலையை உருவாக்கியவை.