மாட்டையும் மரத்தையும் இந்துமதம் வழிபடுகிறதா?

மாடனும் காடனும் இந்து தெய்வங்களா?(முந்தைய கட்டுரை)

நம் சூழலில் வழக்கமான ஒரு பேச்சு உண்டு, ’தெய்வம் ஒன்றுதான். அதை பல தெய்வங்களாக வழிபடுவது தவறு’. இன்னும் கொஞ்சம் கீழே இறங்கி ‘இந்துக்கள் மாட்டையும் மரத்தையும் வழிபடுபவர்கள்’ என்பார்கள். மாற்றுமதத்தவரும் நாத்திகர்களும் இதைச் சொல்லிச் சொல்லி பலசமயம் இந்துக்களே கொஞ்சம் சமாளிப்பாக எதையாவது சொல்லும் வழக்கம் வந்துவிட்டது.

இந்த பார்வையின் தொடக்கம் எது? வழக்கம்போல ஐரோப்பியச் சிந்தனையாளர்கள்தான். ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் மட்டும்தான் இருந்தது. அதற்கு முன்பிருந்த கிரேக்கமதம், ரோமானிய மதம், கெல்டிக் மதம் போன்றவை பல தெய்வங்களை வழிபட்டன. அவற்றை கிறிஸ்தவ மதம் பிழையான மதங்கள் என்றும் பின்தங்கிய மதங்கள் என்றும் கருதியது. அந்தச் சிந்தனை பதினேழாம் நூற்றாண்டுக்கு முந்தைய நவீனச் சிந்தனையாளர்களிடமும் தொடர்ந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் பலதெய்வங்களை வழிபடும் பண்டைய மதங்கள் ஆழமற்றவை என்றும் ஆகவே அவை ஒருதெய்வ வழிபாடு கொண்ட கிறிஸ்தவ மதத்தால் தோற்கடிக்கப்பட்டன என்றும் நினைத்தார்கள். ஒருதெய்வ வழிபாடு (Monotheism ) பலதெய்வ வழிபாடு (Polytheism) என்னும் கருத்துக்கள் அவர்களால் உருவாக்கப்பட்டன..

இந்தியாவுக்கு வந்த தொடக்ககால ஐரோப்பியர் இந்தப் பார்வை கொண்டிருந்தனர். ஆகவே இந்து மதத்தை அவர்கள் பலதெய்வ வழிபாடு கொண்ட மதம் என்று அடையாளப்படுத்தினர். அதை பாடநூல்களில் கற்பித்தனர்.

ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே அந்தப் பார்வை ஐரோப்பாவில் மாறத் தொடங்கிவிட்டிருந்தது. குறிப்பாக ஜெர்மனியில் அந்தப் பார்வை முழுமையாகவே மறுக்கப்பட்டது. ஜெர்மானிய தத்துவ ஞானி ஷோப்பனோவர் (Arthur Schopenhauer) போன்றவர்கள் பண்டைய இயற்கை மதங்களில் இருந்த ஆன்மிகமும் தத்துவமும் எவ்வளவு உயர்வானவை என்று சுட்டிக்காட்டியிருந்தார்கள். அவை ஆழமான தத்துவத் தெளிவால்தான் பலதெய்வங்களை வழிபடுகின்றன என்று விளக்கியிருந்தனர்.

இயற்கை மதங்கள் தெய்வங்களை புதியதாக உருவாக்குவதில்லை. பழங்குடிகளிடம் வெளிப்பட்ட தெய்வங்கள்தான் மெல்ல மெல்ல இயற்கைமதங்களின் தெய்வங்கள் ஆகின்றன. அதாவது தெய்வம் என்பது எவரோ ஒருவருக்கு மட்டும் தெரிவது அல்ல. கற்றவரும் அறிந்தவரும் கண்டுகொள்வது அல்ல. ஏதோ ஒரு வெளிப்பாடு மட்டும் தெய்வம் அல்ல. எல்லா வெளிப்பாடுகளும் தெய்வமே என இயற்கை மதங்கள் சொல்கின்றன.

உதாரணமாக இடிமின்னலில் ஒரு தெய்வசக்தியை ஆதிமனிதன் பார்த்தான். அது ஒரு தெய்வ வெளிப்பாடு என்று நினைத்தான். வேதங்களில் அந்த சக்தி இந்திரன் எனப்பட்டது. கெல்டிக் மதத்தில் அதுதான் தோர் எனப்பட்டது. உலகில் எல்லா பகுதிகளிலும் இயற்கைமதங்களில் இடியின் தெய்வம் உள்ளது. விக்கிப்பீடியாவில் உலகம் முழுக்க உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட இடிமின்னலின் தெய்வங்களின் பட்டியல் உள்ளது.

அது இயல்புதானே? ஒன்றும் ஒன்றும் இரண்டு என்றால் அது எல்லா மனிதர்களுக்கும்தானே? ஓரு விஷயம் உண்மை என்றால் எல்லாருமே அதை எவ்வகையிலோ உணர்ந்திருப்பார்கள்தானே?

அப்படி ஒரே உண்மையை இரண்டு சமூகங்கள் உணர்கின்றன. அந்த இரண்டு சமூகங்களும் நாகரீக வளர்ச்சியில் ஒன்றாக இணைகின்றன. அப்போது அந்த இரண்டு தெய்வங்களும் ஒன்றாக ஆகிவிடுகின்றன. இதுவே இயற்கை மதங்களில் தெய்வங்கள் உருவாகும் விதம்.

இந்த தெய்வங்கள் கற்பனையா? அப்படிச் சொல்லும் நாத்திகர்கள் சொல்லிக்கொள்ளலாம். ஆத்திகர்களின் பதில் இதுவாகவே இருக்கும். இந்த தெய்வங்கள் மனிதனின் உள்ளத்தில் உதித்தவையாக இருக்கலாம். ஆனால் அந்நிகழ்வை இரண்டு வகையில் பார்க்கலாம். அவை மனிதனின் மனத்தில் உதித்ததற்கு மனிதனின் கற்பனை காரணமாக இருக்கலாம். அல்லது மனித உள்ளத்தில் அவ்வாறு அவை உதிக்க அந்த உருவங்களின் மூலகாரணமாக இருப்பது எதுவோ அது நினைத்திருக்கலாம் அல்லவா? அது தன்னை இப்படி வெளிப்படுத்தியிருக்கலாம் அல்லவா?

தொன்மையான இயற்கை மதங்கள் எவையுமே உண்மையில் பலதெய்வ வழிபாடு கொண்டவை அல்ல. அதை பதினெட்டாம்நூற்றாண்டுக்கு முந்தைய ஐரோப்பிய அறிஞர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவை உண்மையில் ஒரே தெய்வத்தைத்தான் தத்துவார்த்தமாக உருவகம் செய்கின்றன. அந்த ஒரே தெய்வம் பலவகையில் வெளிப்படுவதாக அடுத்தபடியாக உருவகிக்கின்றன. அந்த ஒன்றுதான் இதெல்லாம் என்று சொல்கின்றன.

உதாரணமாக, கிரேக்க மதம் பலதெய்வங்களை வழிபட்டது. ஆனால் அந்த மதத்தின் மூலஞானிகளில் ஒருவரான தேல்ஸ் (Thales of Miletus) ஒற்றைத்தெய்வத்தைத்தான் சொல்கிறார். அப்படி பல கிரேக்க ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள்.

வேதங்களில் பல தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. ஆனால் ரிக்வேதத்தின் மையம் என்று சொல்லப்படும் சிருஷ்டிகீதம் என்னும் பாடல் ‘ஆகாயவடிவான அது’ என்று தெய்வத்தைச் சொல்கிறது. அதற்கு பிரம்மம் என்று பெயர். ‘எங்கும் எரியும் சூரியன் ஒன்றே. அந்த ஒன்றே இங்குள்ள அனைத்தும்’ என்றுதான் வேதம் சொல்கிறது. ‘ஒன்றேயான அது’ என்ற வரி வேதங்களில் வந்துகொண்டே உள்ளது. ஆனால் வேதங்கள் ஏராளமான தெய்வங்களுக்கு அவி கொடுத்து வழிபடுகின்றன.

இந்த இரட்டைநிலைப் புரிதல்தான் நமக்கு ஞானத்துக்கான பாதையை அளிக்கிறது. ஒருவன் தன் சொந்த அனுபவத்தில் அறியும் தெய்வம் பொய் அல்ல. அது தெய்வம் வெளிப்படும் ஒரு தருணம்தான்.வானம் முழுக்க நிறைந்திருக்கும் மின்சக்தி நமக்கு ஒரு கணத்தில் மின்னலாக தெரிவதுபோல.தெய்வமென நாம் உணர்வதும் தெய்வம்தான். நம் அனைத்து அறிதல்களுக்கும் அப்பால் நிலைகொள்ளும் முடிவின்மையும் தெய்வம்தான். அதுதான் இது. இது அதுதான்.

நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் தர்மபுரியில் ஒரு காட்சி கண்டேன். ஒரு குட்டிப்பன்றியை நாய் தூக்கிச் சென்றது. தாய்ப்பன்றி குட்டியை காப்பாற்றுவதற்காக முடியெல்லாம் சிலிர்த்து பயங்கரமாக கனைத்தபடி சென்று அந்த நாயை அப்படியே நசுக்கி கொன்றது. அந்த தாயின் முகத்தின் முடியெல்லாம் ரத்தம். அது எனக்கு காளியை நேரில் சந்தித்ததுபோல இருந்தது. மயிர்க்கூச்செறிந்தேன். தெய்வம் வெளிப்படும் எல்லாமே தெய்வம்தான். மாடு, மரம், நாய் எல்லாமே.

எந்த தெய்வமும் தெய்வம்தான் என்று இந்துமதம் சொல்கிறது. அந்த தெய்வங்கள் எல்லாம் நாமறியமுடியாத ஒன்று அப்படி அவ்வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதுதான் என்கிறது. தெய்வம் என ஒன்று உண்டு, அது எல்லையற்றது, அதை நாம் அறியவே முடியாது. ஆகவே நாம் நம் சிற்றறிவால் எதை தெய்வமென உணர்கிறோமோ அது அந்த முழுமுதல்தெய்வத்தின் வடிவமே.இதுதான் இயற்கைமதங்கள் சொல்லும் தெய்வ உருவகம்.

இந்து மத தெய்வங்களைப் பற்றி ஏராளமான நவீன ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. மேலைநாட்டு அறிஞர்களும் டி.டி.கோசாம்பி, சுவீரா ஜெயஸ்வால் போன்ற மார்க்ஸியப்பார்வை கொண்ட இந்திய அறிஞர்களும் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்கள் எப்படி வெவ்வேறு தெய்வங்கள் இந்துமதத்திற்குள் வந்தன, எப்படி ஒன்றாக இணைந்தன என்று விளக்கியிருக்கிறார்கள்.

வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் நூலில் சுவீரா ஜெயஸ்வால் விஷ்ணு, நாராயணன், திருமால் ஆகியவை வேறுவேறு தெய்வங்களாக இருந்து பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒன்றாக ஆயின என்கிறார். பலராமன், அனிருத்தன், சங்கர்ஷணன் என்னும் தனித் தனி தெய்வங்கள் எல்லாம் வைணவத்தில் இணைந்தன. கருடன், ஆதிசேஷன் எல்லாம்கூட அப்படி ஒன்றுசேர்க்கப்பட்ட தனித்தனி தெய்வங்களாக இருக்கலாம். ராமன், கிருஷ்ணன் வழிபாடுகள் எல்லாம் அதன்பின் வைணவத்தில் சேர்ந்தன.

இந்த தெய்வங்கள் எல்லாம் மனிதனின் வெவ்வேறு வகை அறிதல்கள். அவையனைத்தும் சேர்ந்தாலும் வகுத்துவிடமுடியாதது வைணவம் சொல்லும் முழுமுதல் தெய்வம் . அந்த முழுமுதல் தெய்வம் இவ்வாறு தன்னை வெளிப்படுத்துகிறது. வைணவத்தில் இன்னும்கூட தெய்வங்கள் சேரலாம். ஆப்ரிக்காவிலுள்ள நீரின் தெய்வத்தையும் புல்வெளியின் தெய்வத்தையும் நாம் விஷ்ணுவாக உணரலாம், வைணவத்துள் சேர்த்துக்கொள்ளவும் செய்யலாம். எவ்வளவு எதைச் சேர்த்தாலும் முழுமையாக பரம்பொருளை சுட்டுவதாக ஆகாது என்றும் இந்து உணர்வான்.

இதேபோல நம் சமகாலத்திலேயே புதிய வழிபாடுகள் வந்து சேர்கின்றன. உதாரணம் ஷிர்டி சாய்பாபா வழிபாடு. ஒரு ஐம்பதாண்டுகளுக்குள் அது இந்துமரபுக்குள் சேர்க்கப்பட்டது. இந்துக்களால் ஏற்கப்பட்டது. யாரும் வலுக்கட்டாயமாக சேர்க்கவில்லை. எவரும் ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்துக்கள் இஸ்லாமிய ஞானியான ஷிர்டி பாபாவை வழிபட்டனர். அவர் இந்து தெய்வமாக ஆனார், அவ்வளவுதான்.

இப்படி தெய்வங்கள் வந்து இணைந்து இணைந்து இந்துமரபு வளர்கிறது. ஆகவேதான் அதை மதம் (ரிலிஜன்) என்று சொல்வது பிழையாக ஆகிறது. ’இதுதான் உண்மை, இதுதான் தெய்வம், மற்றதெல்லாம் பிழை’ என இந்துமரபு சொல்வதில்லை. ஆகவே மதம் என்ற கட்டமைப்பு அதற்கு இல்லை. இது ஒரு ஆறு என்று சொன்னேன். எல்லா ஓடைகளையும் இது தனக்குள் இணைத்துக் கொள்கிறது. கடல்நோக்கிச் செல்கிறது.

இந்துமதம் – தொகுப்பு

முந்தைய கட்டுரைது. ராமமூர்த்தி
அடுத்த கட்டுரைமேடையுரைப் பயிற்சி தேவையா? -ஜெயராம்