கல்பற்றா நாராயணன் – தமிழ் விக்கி
சில அரிய அனுபவங்களை நாம் தற்செயலாகவே அடைகிறோம். பலருக்கு அப்போதுகூட அவ்வனுபவத்தின் மதிப்பு புரிவதில்லை. என் இளமையிலேயே நான் அரிய அனுபவங்களின் மதிப்பை அறிய முடிந்தது என் நல்லூழ். அதன்பின் அவ்வனுபவங்களை நானே தேடிச்செல்லத் தொடங்கினேன். எந்தக் காரணத்தாலும் தவறவிடுவதில்லை என முடிவுசெய்தேன். இன்றுவரை அதுவே என் வழி.
அரிய அனுபவங்கள் என நான் நினைப்பவை முதன்மையாக ஆளுமைகளுடனான சந்திப்புகள், உரையாடல்கள். இரண்டாவதாக, பயணம். வரலாற்றிடங்களில் வாழ்வது. வெவ்வேறு நிலப்பகுதிகளில் திகழ்வது. மூன்றாவதாக, கலைநிகழ்வுகள். இவற்றை இந்த நாற்பதாண்டுகளில் ஒவ்வொரு மாதமும் தேடிச்சென்று அடைந்துகொண்டிருக்கிறேன்.
ஆளுமைகளைச் சந்திப்பதில் எனக்கிருந்த தயக்கங்களை என் 20 வயதிலேயே போக்கிக்கொண்டேன். அதற்குக் காரணம், நான் அடைந்த சில தெளிவுகள். ஆளுமைகளைச் சந்திப்பதில் தயக்கம் கொள்பவர்கள் பெரும்பாலும் தன்முனைப்பு கொண்டவர்கள். அந்த ஆளுமை தன்னை எப்படி வரவேற்கிறது, தன்னை எப்படி மதிப்பிடுகிறது என்று மட்டுமே கவலைப்படுபவர்கள். அந்தச் சந்திப்பு ஒரு பயன்மிக்க, வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்வாக ஆகவேண்டுமென அவர்கள் நினைப்பது அதனால்தான்.
உண்மையில் மிகுந்த தன்னடக்கத்துடன் ‘எதையாவது சாதிச்சுட்டு போய் சந்திக்கணும் சார்” என்பவர்களின் உள்ளிருப்பதும் அந்த ஆணவ மனநிலைதான்- உள்வெளிப்பக்கமாக போடப்பட்ட சட்டை அது. சாதிப்பதற்குத்தான் சாதனையாளர்களைச் சந்திக்கிறோம். சாதித்தபின் சந்திக்காமலிருந்தாலும் ஒன்றுமில்லை. நாம் நம் ஆணவத்தை ரத்துசெய்துவிட்டால், அரிய அனுபவத்தை அடைபவர்கள் நாம் என உணர்ந்துவிட்டால், சந்திப்புகள் நமக்கு மிக உதவியானவை.
பொதுவாக எழுத்தாளர்களைச் சந்திப்பதை எழுத்தாளர்கள் விரும்புவதில்லை. அவர்களின் நேரத்தை நாம் எடுத்துக்கொள்கிறோம் – முதிராநிலையில் நாம் பெரும்பாலும் அந்த பொழுதை வீணடிக்கவே செய்வோம். நம் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்திக்கொண்டே இருப்போம். ஆகவே அவர்களே நேரம் ஒதுக்கி தங்களைச் சந்திக்க அனுமதிக்கும் பொழுதுகளே முக்கியமானவை.
சந்திப்புகள் இயல்பாக நிகழலாம். நிகழும்போது அவை சாதாரணமாகக்கூட இருக்கலாம். ஆனால் நம் ஆழ்மனம் ஆளுமைகளைக் கவனித்துக்கொண்டே இருக்கிறது. அவர்கள் காட்சிப்படிமங்களாக நம்முள் குடியேறுகிறார்கள். அந்த அகப்பதிவே முக்கியம். பேசப்பட்ட கருத்துக்களோ நிகழ்ந்தவையோ அல்ல. அந்த ஆழ்பதிவு நம்முள் வளர்கிறது. நான் இரண்டே இரண்டுமுறை வைக்கம் முகமது பஷீரைச் சந்தித்தேன். பெரிதாக ஒன்றும் நிகழாத சந்திப்பு. ஆனால் இன்று அவை அரிய சித்திரங்களாக என்னுள் உள்ளன, நாளும் வளர்கின்றன.
கல்பற்றா நாராயணன் வருவதை ஒட்டி ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தேன். வழக்கமான நண்பர் சிலர் மட்டுமே வந்திருந்தனர். வாசகர்கள் என எதிர்பார்த்த எவரும் வரவில்லை. அந்த ஆர்வமின்மையை நான் ஓரளவு எதிர்பார்த்துமிருந்தேன். ஆனால் மிக அரிய ஒரு சந்திப்பாக இருந்தது. வந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் அதை மிகுந்த உளக்கிளர்ச்சியுடன் சொல்லிக்கொண்டார்கள்.
கல்பற்றா நாராயணன் போன்ற ஓர் ஆளுமையுடன் அருகமர்வது என்பது எனக்கு முப்பதாண்டுகளாகவே இனிய அனுபவமாக இருந்துள்ளது. மிக மென்மையானவர், மென்மையான குரலில் நிதானமாக பேசுபவர். வெற்றுப்பேச்சு அனேகமாக இருக்காது. சொல்விளையாட்டுகளும் அங்கதமும் கொண்ட உரையாடல் சட்டென்று கவிதையாகவும் தத்துவமாகவும் உருமாறும்.
கல்பற்றா நாராயணன் ஒருபோதும் வழக்கமான கருத்துக்களை, கோட்பாடுகளை, கொள்கைகளைச் சொல்வதில்லை. அவர் அவற்றை கல்லூரியில் பல ஆண்டுக்காலம் கற்பித்த மொழியியல் பேராசிரியர். அவர் தன் மொழியில், தன் அவதானிப்புகளையும் அவற்றைக் கடந்துசெல்லும் உள்ளுணர்வையுமே வெளிப்படுத்துவார். மலையாளமேயானாலும் அவருடைய மொழி நிதானமானது, உச்சரிப்புக்கூர்மை கொண்டது என்பதனால் மலையாளம் கொஞ்சம் தெரிந்தவர்களும் உடன் செல்லமுடியும்
அவர் பேசுவது புரியாதவர்களுக்குக் கூட ஒரு பெருங்கவிஞனுடன் இருப்பதென்பது ஓர் தியானம் போன்ற அனுபவம். அவருடைய சிரிப்பு, அவ்வப்போது அவரிடம் கூடும் தனிமை, அவருடைய கனிந்த பார்வை. அதனுள் ஓடும் கசப்புகள். அவருடன் இருந்த எந்த நாட்களையும்போலவே இவையும் என்னுள் பல ஆழ்நிலை கனவுகளை உருவாக்கியவை. இவ்வண்ணம் என்னை நான் நிறைத்துக்கொண்டே இருப்பதனால் என்னுள் இருந்து தீராமல் எடுக்கவும் இயல்கிறது.
கல்பற்றா நாராயணனின் கவிதைகள் அடங்கிய தொடுதிரை என்னும் தொகுப்பை இந்நிகழ்வில் வெளியிட்டோம். கல்பற்றா நாராயணனின் மலையாள மொழி அவருக்கான தனித்தன்மை கொண்டது. நேரடியான உரைநடை அல்ல அது. நுணுக்கமான இடைவெளிகளுடன் தாவிச்செல்வது. எவர் எவரிடம் சொல்வது, முந்தைய வரியுடனான தொடர்பென்ன என்னும் திகைப்பை உருவாக்கிக்கொண்டே செல்வது. அந்த இடைவெளிகளை நம் மொழியால் நிரப்பி, நமது சராசரியான மொழிநடையில் அவர் கவிதைகளை மொழியாக்கம் செய்யலாகாது என நினைத்தேன்.
என் மொழியாக்க வடிவிலும் அந்த மர்மம் உள்ளது. அந்த மர்மம் விடுபட்டதுமே வரிகள் பொருள் கொள்ளத்தொடங்குகின்றன. உதாரணமாக,
பொறாமைக்குடுக்கைகளான
இந்த சகபாடிகளை எனக்குப்பிடிக்கும்
ஒன்று முழுதினிமை
இன்னொன்று எண்ணத்தனிமை
படிஏறுவதிலும்
பெருமூச்சுவிடுவதிலும்
மேற்படிப்பு முடித்திருக்கிறார்கள்
சிலசமயம்
வாசலில்காத்திருக்கும் இரு பதற்றங்கள்
சிலசமயம்
முற்றத்தில் இறங்கிநிற்கும்
இரு நிலைகொள்ளாமைகள்
உள்ளே புயலடிக்கும்
இரு தேனீர்க்கிண்ணங்கள்
வெளியே சொல்லமுடியாத
இரு திணறல்கள்
இந்த வரிகள் முலைகளைப் பற்றியவை. இவை தொடர்ச்சியான ஒரு கூற்று அல்ல. தனித்தனி அவதானிப்புகளும் தனித்தனி மொழிவிளையாட்டுகளும் கொண்ட கவிதைத்துளிகள். இந்த உடைவுதான் இவற்றை கவிதையாக்குகிறது
கல்பற்றா கவிதைகள் மிக எளியவை எனும் பாவனை கொண்டவை. செயற்கைச் சிடுக்குகள் அற்றவை. அனைத்துக்கும் மேலாக நம் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புகொண்டு பேசுபவை. ஆனால் இந்த மொழிப்பாய்ச்சலும் அவற்றிலுள்ளது. அவற்றுக்கான வாசகர்களை அவை கண்டடையுமென நினைக்கிறேன்