நாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை? 1( முந்தைய தொடர்ச்சி)
நமக்கு வரலாறு என்னும் கருத்துருவம் பிரிட்டிஷாரால் அளிக்கப்பட்டது. இங்கே ஆட்சிசெய்ய வந்த பிரிடிஷ் அதிகாரிகள் தங்களை தொடர்ந்து வருபவர்களுக்காக எழுதிய குறிப்புகள் (மானுவல்கள்) தான் நமது முதல் வரலாற்று வரைவுகள். அவர்கள் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் கல்லூரிகளில் முறையாக வரலாற்றுப்பதிவுகளை எழுத பயின்றவர்கள்.மேலும் தகவல்களை முறையாக, புறவயமாகப் பதிவுசெய்வதன் தேவையை நன்கறிந்தவர்கள். பிரிட்டிஷாரின் முதன்மை ஆற்றலே முறையான தரவுப்பதிவுகள்தான்.
நமக்கு மூன்றுவகை வரலாற்றெழுத்துக்கள் இன்று உள்ளன. இந்தியா முழுக்க ஒரே வகையாகவே இது நிகழ்ந்துள்ளது.
அ. தமிழக வரலாற்றின் சிறப்பான ஆரம்பகட்ட பதிவு ஜே.எச்.நெல்சனின் மதுரா கண்ட்ரி மானுவல்தான். கேம்பிரிட்ஜ் வரலாற்றெழுத்து முறை நம் வரலாற்றை எழுதுவதில் முன்னோடியான கல்வித்துறைசார்ந்த பிரிட்டிஷ் அணுகுமுறை.
ஆ. அந்த காலனியாதிக்க வரலாற்றுக்கு எதிராக தேசியநோக்கில் வரலாறுகள் எழுதப்பட்டன. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப்பண்டாரத்தார் போன்றவர்கள் அம்மரபைச் சேர்ந்தவர்கள். அவர்களே நமது மைய வரலாற்றுச் சித்தரிப்பை எழுதியவர்கள்.
இ. பின்னர் பலவகை மாற்றுவரலாறுகள் எழுதப்பட்டன. மார்க்ஸிய அடிப்படையிலும், வெவ்வேறு சமூகவியல் மானுடவியல் பார்வையிலும் அவ்வரலாறுகள் எழுந்தன. இன்று நுண்வரலாறு எனப்படும் வட்டார வரலாறுகள், இனக்குழு வரலாறுகள் எழுத்ப்படுகின்றன.
இந்த வரலாற்றெழுத்துமுறைகள் ஒன்றின் குறைபாட்டை இன்னொன்று நிறைவுசெய்து உருவாகி எழுந்தவை. இவ்வாறாக நம் வரலாறு சென்ற இருநூறாண்டுகளாக சிறிது சிறிதாக எழுதப்படுகிறது. நம்மிடம் முதன்மையான வரலாற்றாசிரியர்கள் உள்ளனர். ஆயினும் இன்றும் இந்த வரலாற்றெழுத்தில் ஐரோப்பியரின் பங்களிப்பே மிகுதி. எல்லா வகைமையிலும். உதாரணமாக, சோழர் வரலாற்றை எழுதியவர்களில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி முதல் குடவாயில் பாலசுப்ரமணியம் வரை பலர் உண்டு. ஆனால் பர்ட்டன் ஸ்டெயின் போன்றவர்களின் இடம் மிக முக்கியமானது. இன்றைய நாட்டார் நுண்வரலாற்றில் அ.கா.பெருமாள் போன்ற பலர் இருந்தாலும் சி.ஜெ.ஃபுல்லர் போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது.
ஆகவே, நீங்கள் ஐரோப்பிய வரலாற்றெழுத்துடன் இந்திய, தமிழக வரலாற்றெழுத்தை ஒப்பிடவே கூடாது.முறையாக வரலாற்றை எழுதுவது என்பது ஐரோப்பாவில் மூவாயிரமாண்டுகளுக்கு முன் கிரேக்கர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. மிகத்தொன்மையான காலகட்டத்திலேயே வரலாற்றுப்பதிவு (Logography) என்னும் அறிவியக்கம் அங்கிருந்தது. அது வாய்மொழி வரலாறுகளைச் சரிபார்த்து தரவுகளாகப் பதிவுசெய்யும் முறை. அது ஒருவகை வம்சவரலாறு. ஹிகாடியஸ் (Hecataeus of Miletus) அதன் முதன்மை ஆளுமை. அதன் பின் அத்தகவல்களை கால ஒழுங்குடன் சீரான மொழிபாகச் (Narration) சொல்லும் முறை உருவானது. அதுவே வரலாறு என்பது. ஹிரோடடஸ் வரலாற்றெழுத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
ரோமாபுரி வரலாறு விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மார்க்கஸ் போர்ஸியஸ் கேட்டோ (Marcus Porcius Cato) போன்ற மகத்தான வரலாற்றாசிரியர்கள் உருவாகிவிட்டனர். அத்துடன் தொல்லியல் சார்ந்த ஆவணப்படுத்தலிலும் ரோமர்களுக்கு மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. இரண்டாயிரத்தைநூறு ஆண்டுகளுக்கு முந்தைய ரோம மன்னர்களின் முகங்களை பளிங்குச்சிலைகளாக, நேருக்குநேர் பார்ப்பதுபோல அருங்காட்சியகங்களில் பார்க்கமுடிகிறது.
பின்னர் கிறிஸ்தவத் திருச்சபை வரலாறுகள் மிகநுட்பமான தரவுகளுடனும் காலப்பதிவுடனும் எழுதப்பட்டன. யூசிபியஸ் (Eusebius ) எழுதிய திருச்சபை வளர்ச்சி வரலாறு ஒரு பெரும் செவ்வியல் ஆக்கம். இந்த மரபில் வந்த சிற்றரசர்கள்கூட வரலாறுகளை எழுதிக்கொண்டார்கள். நீங்கள் கூறும் வில்லியம் என்கிற நார்மன் அரசரின் வரலாறெல்லாம் மேலும் ஆயிரத்தைநூறாண்டுகளுக்கு பிந்தையவை. அப்போது ஐரோப்பிய வரலாற்றெழுத்து முறை மிகச் சிறப்பாக வேரூன்றியிருந்தது.
அந்த முந்தைய வரலாற்றெழுத்துமுறையில் வரலாற்றாசிரியர் வரலாற்றின் மொழிபாளர் (Narrator ) மட்டுமே, ஆசிரியர் அல்ல. வரலாற்றாசிரியரின் பார்வையும், அதனடிப்படையில் அவர் தரவுகளை அடுக்கும் முறைமையும் மேலோங்கிய வரலாற்றெழுத்துமுறையே நவீன வரலாற்றெழுத்து எனப்படுகிறது. வால்டேர் (Voltaire) டேவிட் ஹ்யூம் (David Hume ) எட்வர்ட் கிப்பன் (Edward Gibbon ) ஆகியோர் அந்த நவீன வரலாற்றெழுத்தின் முன்னோடி ஆளுமைகள்.
ஐரோப்பியர்களும் சரி, மத்திய ஆசியர்களும் சரி, பிற நிலப்பகுதிகளின் தொடர்ச்சியான தொடர்பில் இருந்தனர். ஐரோப்பாவில் மத்திய ஆசியா, சீனா, ஆப்ரிக்கா என பல நிலப்பகுதிகளின் பண்பாட்டு ஊடுருவல் இரண்டாயிரமாண்டுக் காலம் நடைபெற்றது. அவர்களின் உலகத்தொடர்புகள் வணிகத்தின் பொருட்டு அவர்கள் நிகழ்த்திய மிக விரிவான உலகப்பயணங்களால் அமைந்தவை. இந்த உலக உறவாடல் அவர்களுக்கு பிற நிலங்களின் அறிவியக்கங்களை அறிந்துகொள்ளவும், அதனடிப்படையில் வளர்ச்சியடையவும் உதவியது.
ஆனால் இந்தியாவில் அவ்வப்போது நிகழும் படையெடுப்புகள் அன்றி அயலவர் தொடர்பு குறைவு. கடல்வணிகம் இருந்தது, ஆனால் அந்த இங்கே வணிகத்தின் பொருட்டு வந்தவர்கள். அவர்கள் இங்குள்ள பண்பாடுகளுடன் உரையாடவே இல்லை. உதாரணமாக, சங்ககாலம் முதல் இங்கே ஐரோப்பியரும் அராபியரும் சீனரும் வந்துள்ளனர். அவர்கள் கடலோரம் தனி குடியிருப்புகளாகவே வாழ்ந்தனர் (பூம்புகாரில் மருவூர்ப்பாக்கம் என அப்பகுதி அழைக்கப்பட்டது) நம் மொழியில் ஐரோப்பிய, அராபியச், சீனச் சொற்கள் மிகக்குறைவு. கருத்துச்செல்வாக்கு அனேகமாக ஏதுமில்லை.
இந்த தனிமையால் நமக்கு வேறுவேறு பண்பாடுகளின் பொருட்களும் கருவிகளும் மிகக்குறைவாகவே அறிமுகமாயின. உதாரணமாக பட்டுத்துணி பற்றி கேட்டீர்கள். நம்மிடம் வணிகம் செய்த அராபியரும் ஐரோப்பியரும் தோலிலும் பாப்பிரஸிலும் எழுதியவர்கள். சீனர்கள் துணியில் எழுதியவர்கள். ஆனால் பாப்பிரஸ், துணி, அல்லது தோலில் எழுதுவது இங்கே இருந்தமைக்கான தடையமே இல்லை. நாம் ஓலைகளிலேயே எழுதினோம். நாம் பாப்பிரஸ் சுவடிகளை பார்த்திருந்தால் சுவடிகளை பக்கவாட்டில் ஒட்டி புத்தகங்களை உருவாக்கக் கற்றிருப்போம். அவற்றில் மையால் எழுதவும் தொடங்கியிருப்போம். அழியாத மையை கடுக்காயால் செய்யும் வழக்கமும் நம்மிடையே இருந்தது. ஆனால் அது நிகழவே இல்லை.
இப்படி ஏராளமாகச் சொல்லலாம். புறநாநூறிலேயே யவனரின் மதுக்குடுவை பற்றிய குறிப்பு உள்ளது. ஆடிப்பாவைகள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. ஆடுவதனால் உருவான காரணப்பெயரான ஆடி உள்ளது. ஆனால் நம்மிடம் கண்ணாடி செய்யும் கலையே உருவாகவில்லை. உலோகத்தாலான கண்ணாடிகள்தான் இங்கே இருந்தன. அல்லது இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடிகள். இங்கே கண்ணாடி செய்யும் கலைஞர்கள் இருந்திருந்தால் அவர்களின் குலமரபு உருவாகியிருக்கும்.
இங்கே ஒவ்வொரு தொழிலுக்கும் குலமரபு உண்டு. தங்கம், செம்பு, இரும்பு மூன்றுக்கும் வேறுவேறு ஆசாரிகள். முறையே தட்டான், மூசாரி, கொல்லன். கண்ணாடி செய்வதற்கான தொழில்நுட்பமோ அல்லது ஆலைகளோ இங்கே இல்லை. (இன்றும் கேரளத்தில் ஆறன்முளை எனும் ஊரில் உலோகக் கண்ணாடிகள் செய்யப்படுகின்றன. பூஜைக்குரியவை அவையே). நமக்கு உலோக உருக்குத்துறை சார்ந்த நூல்களும் அதற்கான தொழிற்குலங்களும் உள்ளன. நம் நூல்களில் உவமைகளாக, செய்திகளாக அச்செய்திகள் மலிந்துள்ளன
இந்த கோணத்திலேயே நாம் முழு தமிழ் வரலாற்றையும் பார்க்கலாம். தமிழகத்தில் மாமல்லபுரம் முதல் கொற்கை வரை துறைமுகங்கள் இருந்துள்ளன. கடல்வணிகம் இருந்துள்ளது.ஆனால் கப்பல் கட்டும் கலை இங்கே ஓங்கியிருந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் அனேகமாக ஏதுமில்லை. இப்படி சொன்னதுமே கப்பல்கள் பற்றி அங்குமிங்குள்ள ஓரிரு சொற்கள், சில சிறு சிற்பங்கள் என எடுத்துவந்து உலகுக்கே கப்பல்கலையை கற்பித்தவன் தமிழன் என ஆரம்பிப்பதுதான் இங்குள்ள வழக்கம். நான் பேசுவது வரலாறு, தொல்லியல் என்றால் என்ன என்று கொஞ்சமேனும் தெரிந்தவர்களை நோக்கி மட்டும்.
ஐரோப்பாவில் கப்பல்கட்டும் கலை உச்சத்தில் இருந்தது. அதற்குரிய நூல்கள் நூற்றுக்கணக்கில் கிடைக்கின்றன. கட்டுமான வரைபடங்கள் கொண்ட சுவடிகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கருவிகள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. கப்பல் பயணத்திற்குரிய திசைகாட்டிக்கருவிகள் செய்யும் தொழில்நுட்பம், கப்பல் பயணத்திற்குரிய தகவல்களைச் சீராகத் தொகுத்து எழுதப்பட்ட நூல்கள், கப்பல்பயண அனுபவக்குறிப்புகள் ஏராளமாக உள்ளன. ஸ்வீடனின் வாசா கப்பல் போல முழுக்கப்பல்களே கடலில் இருந்து மீட்டு எடுக்கப்பட்டுள்ளன. பூமி வரைபடக்கலை ஐரோப்பாவில் உருவாகி அதன் உச்சத்தை தொட்டது.
நமக்கு ஆலயக் கட்டுமானக்கலை உள்ளது. கோட்டைகட்டும் கலை உள்ளது. அதையொட்டி எத்தனை நூல்கள் உள்ளன என்று பாருங்கள். நூற்றுக்கணக்கில். அதற்கென்றே தொழிற்குலங்கள் இன்றுமுள்ளன. கல்கட்டுமானம் செய்பவர் ஒரு குலம், சுண்ணாம்புக் கட்டுமானம் செய்பவர் இன்னொரு குலம், மரவேலை செய்பவர் வேறொரு குலம், களிமண் வேலை செய்பவர் இன்னொரு குலம். வாஸ்துசாஸ்திரம் போன்ற தனி அறிவுத்துறையே உள்ளது. ஆலயவரைபடக்கலை தனியாகவே வளர்ந்திருந்தது. அப்படி ஏதாவது கப்பல்கட்டும் கலை பற்றி உள்ளதா? கப்பல்கட்டும் கலை நம்மிடமிருந்திருந்தால் அப்படி எவ்வளவு குலங்கள், எவ்வளவு நூல்கள் இருந்திருக்கும்.
நம்மிடம் நிலவரைபடக் கலையென்பதே இல்லை. நாம் ஐரோப்பியரின் நிலவரைபடத்தை பார்த்து, அதிலிருந்து நமக்குரிய நிலவரைபடத்தை நாம் உருவாக்கிக் கொண்டோம் என்பதற்குக் கூட சான்றுகள் இல்லை.நாம் நிலவரைபடங்களை பார்த்திருந்தோம் என்பதற்கேகூட பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய இலக்கியச் சான்றுகள் ஏதுமில்லை. நம்மிடம் கடற்பயண வழிகாட்டிக் குறிப்புகள் ஏதுமில்லை.நமக்கிருக்கும் கடற்பயணச் செய்திகள் மணிமேகலை போன்ற இலக்கிய நூல்களிலுள்ள புராணக்கற்பனைகள் மட்டுமே.
ஆச்சரியமென்னவென்றால் இந்திய இலக்கியத்திலேயே கப்பல்கள் பற்றி குறைவாகவே உள்ளது. கப்பல் கட்டும் கலை பற்றி நம் இலக்கியங்களில் அனேகமாக செய்திகளே இல்லை. மகாபாரதம் முதல் கப்பல்களை பற்றிய செய்திகளுக்காக தேடியிருக்கிறேன். (வெண்முரசு எழுதுவதற்காக) மிக மிகக் குறைவு. பெரும்பாலும் இலக்கியத்தில் பதிவான தெளிவற்ற செவிவழிச் செய்திக்குறிப்புகள் மட்டுமே. இந்தியாவில் பழங்காலக் கப்பல்களின் மாதிரிகளே இல்லை. உடைந்த துண்டுகள் கூட கிடைப்பதில்லை. கப்பல்கட்டுவதற்காக உருவாக்கப்பட்டு, நம்மிடம் இன்றும் நீடிக்கும் தச்சுக் கருவிகள்கூட இல்லை. கப்பல்களின் உறுப்புகள் மற்றும் கப்பல்களின் பயணநிகழ்வுகள் பற்றிய தனியான கலைச்சொற்களே இல்லை. ஒப்பிடும்போது யானை பழக்கும் கலை பற்றி எவ்வளவு நுணுக்கமான, விரிவான செய்திகள் உள்ளன என்று பாருங்கள்.
இந்தியாவில் கப்பல்கட்டும் கலை பெரிதாக உருவாகவில்லை என்றே ஆய்வாளர் கொள்கிறார்கள். சீன, ஐரோப்பியக் கப்பல்களை நாம் வாங்கியிருக்கலாம். அல்லது அவர்களுடன் இணைந்து கப்பல்கள் அமைத்திருக்கலாம். ஆய்வாளர்கள் அப்படி அல்ல , இங்கே கப்பல்கட்டும் கலை இருந்தது என ஆதாரங்களுடன் நிரூபிக்கும்வரை இங்குள்ள ’பற்றாளர்கள்’ காத்திருக்கலாம். ஆனால் செய்வதில்லை. எல்லா கலைகளும் இங்கிருந்தன என வாதிடுவார்கள், இல்லாத ஆதாரங்களை புனைவார்கள், மறுப்பவர்களை செவி உடைய வசைபாடுவார்கள். அதைக் கடந்து, நாம் கொஞ்சமேனும் சிந்திக்கலாம். நல்லூழாக ஓர் ஐரோப்பிய நகரில், வரலாற்றுப்பதிவென்றால் என்ன என்று பார்க்கும் வாய்ப்புடன், வாழ உங்களுக்கு வாய்த்துள்ளது.
இந்தியாவில் கல்வெட்டுகள் பெரும்பாலும் மிகவும் பிழைகளுடனேயே பொறிக்கப்பட்டுள்ளன. பல கல்வெட்டுகள் கோணலாகவும், தெளிவற்ற செய்திகளுடனும் உள்ளன. நேரில் அக்கல்வெட்டுகளைக் கண்டால் நான் சொல்வது புரியும். அவை அவற்றை பொறித்த கல்தச்சர்களின் கல்வியறிவின்மையையே காட்டுகின்றன. பெரும்பாலும் ஆவணப்படுத்தலுக்காக பொறிக்கப்பட்டவை அவை.
அப்படியென்றால் அடுத்த வினா. நாம் ‘பின்தங்கிய’ கலாச்சாரம் கொண்டவர்களா? அறிவுத்தகுதியில் பின்தங்கியவர்களா? ஆம் என்று கார்ல் மார்க்ஸ் முதல் பர்ட்டன் ஸ்டெயின் வரையிலான ஐரோப்பியர்கள் சொன்னார்கள். நம்முடையது ’ஆசிய உற்பத்தி முறை’ என மார்க்ஸ் சொன்னார். அதையே இன்னொரு கோணத்தில் பிறரும் சொல்வார்கள். அதாவது மிகப்பெரும்பாலான இந்திய மக்கள் அரைப்பழங்குடி வாழ்க்கையில், கல்வியோ உயர்தொழில்நுட்பமோ இல்லாமல் வாழ்ந்தார்கள். அவர்களை சுரண்டி செல்வம் சேர்த்துக்கொண்டு நகரங்களை மையமாக்கிய அரசுகள் இருந்தன. இந்தியாவின் உயர்கலாச்சாரம் என்பது முழுக்க முழுக்க அந்நகரங்கள் சார்ந்தது மட்டுமே என்பது அவர்களின் தரப்பு.
ஆனால் அது உண்மை அல்ல. இந்தியக் கிராமங்கள் கல்வி, பண்பாட்டு வளர்ச்சி, தொழில்வளர்ச்சி ஆகியவற்றில் முன்னேறிய சிறந்த வாழ்விடங்களாகவே இருந்தன. நகரங்களில் இருந்த அதே நிர்வாக அமைப்பு அப்படியே கிராமங்களில் நீடித்தது. கிராமங்கள் தன்னுரிமைகொண்ட பொருளியல் அலகுகளாக, வளமானவையாகவே இருந்தன. இதெல்லாம் இன்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.
இந்தியாவின் அறிவுத்தள வெற்றிகள் வேறுசில தளங்களில் இருந்தன. உதாரணமாக, இந்தியாவின் மருத்துவம் அன்று உலகில் இருந்த வேறெந்த மருத்துவமுறையையும் விட மிகமிக முன்னேறியது. உலோக உருக்குக் கலையும் மிக முன்னேறியது. அவ்வாறு பல துறைகளைச் சொல்லலாம். தத்துவம், கலைகள் ஆகியவற்றில் மிகப்பெரிய பாய்ச்சல் இருந்தது.
இதை எப்படிப் புரிந்துகொள்வது? பல விளக்கங்கள் அளிக்கலாம். இந்தியா புறவுலகை தேடிச்செல்லத் தேவை இல்லாதபடி வளமான நிலமாக இருந்தது. கடுமையான தட்பவெப்பநிலைகள் இல்லை. மக்கள்தொகை தொடர்ந்து வளர்ந்துவந்தது. ஆகவே புதிய மக்களோ நிலங்களோ தேவையாகவில்லை.அதன் போர்கள் எல்லாமே தனக்குள்ளேயே நிகழ்ந்தன என்பதும் நாம் காண்பதே. விளைவாக, தன்னுள்தானே விரிவடையும் ஒரு பண்பாடு இங்கிருந்தது. அது புதுமைகளை நாடவில்லை, மாற்றங்களை பெரியதாக அடையவுமில்லை. மாறாக அடைந்தவற்றை மேலும் நுட்பமாக்கிக்கொண்டே சென்றது.
இது இன்று நாம் அளிக்கும் விளக்கம். மற்றபடி ‘அவ்வாறு நிகழவில்லை, அவ்வளவுதான் வரலாற்றைப் பற்றிச் சொல்லமுடியும்’ என்பதே சாத்தியமான பதில்.
ஜெ