நாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை?

மதிப்புக்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

மணிவண்ணன் அன்புடன் எழுதியது உங்களுடைய உழைப்பில் (www.jeyamohan.in) பயனடைந்து கொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன். முதல் முறையாக உங்களுக்கு  எழுதுகிறேன். பல வருடங்களுக்கு பிறகு தமிழில் எழுத முயற்சித்திருக்கிறேன். தவறுகளை மன்னியுங்கள்.

தற்போது  பாரிஸிலிருந்து இதை எழுதுகிறேன். நீண்ட கேள்விகளுக்கு மன்னிக்கவும், ஆனால் இப்பயணம் ஏற்படுத்திய தாக்கத்தால்  இந்த தேடலை ஒத்திப் போட இயலவில்லை . மேலும், PS-1 மற்றும் PS-2 திரைப்படங்களின்  வெற்றியில் நாம் அனைவரும் திளைத்திருக்கும் வேளையில், இக்கேள்விகளை நீங்கள் தான்  தெளிவு படுத்துவீர்கள் என்று உணர்கிறேன்..

சமீபத்தில் பிரான்ஸ்  நாட்டின் நார்மண்டி (Normandie) பகுதிக்கு பயணிக்கும் வாய்ப்பு  கிடைத்தது, பிரான்ஸ் /இங்கிலாந்து மற்றும் தமிழ்நாட்டில் நடந்த வரலாற்று நிகழ்வுகளின் காலகட்டத்தை தொடர்புபடுத்த முயற்சித்த போது எழுந்த சில கேள்விகள்/அவதானிப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தெளிவுக்காக  சில புகைப்படங்களையும்  சேர்த்துள்ளேன். இதைப் பற்றி உங்கள் கருத்துக்களை பெற முடிந்தால்  நன்றியுடன் மகிழ்வேன்.

1) Bayeux (பை-யு என்று பிரெஞ்சு மொழியில் உச்சரிக்கின்றனர் ) அருங்காட்சியகத்தில், வெற்றியாளர் வில்லியம் (William the Conqueror) ஆங்கிலேய அரியணை ஏறிய கதையை சித்தரிக்கும் திரைச்சீலை/சித்திரத்துணி (Tapestry) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது  . வில்லியம் என்கிற  நார்மன் (தற்போதைய பிரான்ஸ் நாட்டிலிருந்து கடல் படையுடன் சென்று ) ஹெரால்ட் என்கிற  இங்கிலாந்து அரசனை வென்ற அந்த ஹேஸ்டிங்ஸ் போர் ( Battle of Hastings) நடந்த ஆண்டு பொ.யு.1066. அந்தச்  சீலை உருவாக்கப்பட்டு ஏறத்தாழ 950+ ஆண்டுகளுக்கு   பிறகும்  அதன் பொலிவு மாறாமல் அசல்  வண்ணங்களுடன் இன்றும் காட்சியளிக்கிறது . சணல்நார் துணியில் (linen) கம்பளி நூலால் எம்பிராய்டரி மூலம் 70 மீ நீளத்தில் முழுப்  போர் விவரங்களுடன் உள்ளது.

இந்த போர் நடந்த  போது தமிழகத்தை ஆண்டது ராஜேந்திர சோழனின் மகன் வீரராஜேந்திரன் . ராஜேந்திர சோழன் மறைந்து இருபதே ஆண்டுகள் ஆயிருந்தன . நம்முடைய சோழ வரலாறு பெரும்பாலும் ராஜ ராஜ சோழன் மற்றும்  இராஜேந்திர சோழன் கால  கல்வெட்டுக்களையே  அடித்தளமாகக் கொண்டு இருப்பதாக நான் புரிந்துகொள்கிறேன். ஆவணப்படுத்தல் தான் நோக்கம் என்றால் துணி சார்ந்த பொருளை ஏன் ஊடகமாக தேர்வு செய்யவில்லை என்பது என் கேள்வி. கல்லைக் கையாளுவதை விட இது மிகவும் எளிதாக இருந்திருக்கும். காலத்தை கடந்து நிற்கும் சீலைகள் மூலம் கூடுதல் தகவல்களைப் பெற்றிருக்கலாம். பத்திர படுத்துவதற்கு பல பிரதிகளை உருவாக்குவதும்  எளிது.

Bayeux  அருங்காட்சியகத்தில் அந்த நாடாத் துணியை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நெசவுத் தொழிலுக்கு பெயர் போன தமிழகத்தில் இந்த முயற்சி நடைபெறாமல் இருக்க வாய்ப்பு குறைவு . ஆனால், கல்வெட்டுகள், கோவில் தரவுகளில்  கல் , செப்பு முதலிய பொருள்களைத் தவிர  துணி, சீலைகள் பயன்பட்டதா என்று அறிய முடியவில்லை. P.S -க்கான  உங்களுடைய  ஆய்விலிருந்து கூடுதல் விவரம் ஏதேனும் உள்ளதா ?

2) என்னுடைய இரண்டாவது கேள்வி அதே போருடன் தொடர்புடையது. இராஜேந்திர சோழன் காலத்தில், தென்கிழக்கு ஆசிய நாடுகளை கைப்பற்ற அல்லது வணிகத்திற்காக கடற்படை பயணம் மேற்கொண்டதாக படித்திருக்கிருக்கிறோம். அது வீர ராஜேந்திரன் காலத்திலும் தொடர்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஆயினும்கூட, நம் அருங்காட்சியகங்களில் பெரிய பதிவுகள் இல்லை அல்லது கப்பல்  தொழில்நுட்பத்தைப் பற்றி சமகால ஆவணங்களில்/ இலக்கியங்களில் விளக்கங்கள்/தகவல்கள்  இல்லை என்று வரலாற்று ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

ஆனால், வில்லியத்தின் கடற் போரில்  பயன்படுத்தப்பட்ட கப்பல்களின் விவரங்களையும்   அருங்காட்சியகத்தில் இன்று காண முடிகிறது. கப்பல் கட்ட பயன்படுத்தப்படும் பொருட்கள், பயன்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் வரைபடங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. இத்தனைக்கும் பிரான்சு -இங்கிலாந்து நாடுகளுக்கிடையே உள்ள தொலைவை  விட சோழனின் பயணம் பத்து மடங்கானது.  சமகாலத்தில், இருநாடுகளின்  அணுகுமுறையில் இந்த வேறுபாட்டை எவ்வாறு விளங்கிக் கொள்வது ?

3) மூன்றாவது கேள்வியும் அதே காலகட்டத்துடன் தொடர்புடையது. . அந்த காலத்தில் மக்கள் அதிகம் படிக்காதவர்கள் என்பதாலும், வரலாற்றுப்  பதிவுகளுக்காக இதை உருவாக்கியவர்கள் சாமானியர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதாலும் இந்தப் போர்,  எழுத்து வடிவு அல்லாமல் சித்திர வடிவில் ஆவணப்படுத்தப்பட்டது என்று அருங்காட்சியகத்தில் விளக்கம் அளிக்கின்றனர் .

அந்த சமயத்தில் ,  தமிழ்நாட்டில் ராமானுஜர் உயிருடன் இருந்தார்.  அப்போது அவருக்கு  வயது 50+ . அவர் விசிஷ்டாத்வைதம் தொடர்பான நூல்களை   சமஸ்கிருதம் மற்றும்  தமிழ் மொழிகளில் எழுதி முடித்திருப்பார்.. அந்தக் காலகட்டத்தின் தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் குறித்த  தரவுகள் நம்மிடம் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் அவரை பின்பற்றுபவர்களும்  எதிர்ப்பாளர்கள் பலரும்  அவருடைய நூல்களை படித்திருப்பார்கள் என்று  கருத இடமுள்ளது. மேலும், அவர் தத்துவத்தின் உயர் மட்டங்களில் கவனம் செலுத்தியது , அந்த கால தமிழ்ச்  சமூகத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது.

ஆயினும்கூட,  தமிழ் சமூகம் இங்கிலாந்து/பிரான்ஸ்  அளவிற்கு தொழில்நுட்ப அறிவின் சக்தியை பிற்கால தலைமுறையினருக்கு ஏன் ஆவணப்படுத்த வில்லை அல்லது முடியவில்லை  ? இல்லையென்றால், பின்னர் அவை அழிக்கப்பட்டதா ?

இங்கிலாந்து/பிரான்ஸ்  மக்களின் வரலாற்று நுண்ணறிவுக்கு இன்னொரு சான்றையும்  இந்த பயணத்திலேயே காணமுடிந்தது .இரண்டாம் உலகப் போரின் போது (1939-45) , ஜெர்மனியிடம் இருந்து பிரான்ஸை  விடுவிக்க ஆங்கிலேயர்களும் நேச நாடுகளும் கடல் வழி வந்திறங்கிய புகழ்பெற்ற நார்மண்டி கடற்கரைகளுக்கு சென்றபோது, Bayeux தான், முதலில் விடுவிக்கப்பட்ட நகரம் என்ற தகவலை அறிய முடிந்தது. இந்த போரில் இறந்த தங்கள் நாட்டு வீரர்களுக்காக பிரிட்டிஷ் Bayeux -வில் உருவாக்கிய கல்லறையில் கவித்துவமான குறிப்பு ஒன்று உள்ளது. இலத்தீன் மொழியில் உள்ள வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு : “ஒரு காலத்தில் வில்லியத்தால்  கைப்பற்றப்பட்ட  நாங்கள், இப்போது அவரின் பிறந்த நாட்டை   விடுவித்துள்ளோம்.”

அன்புடன் ,

J.K.மணிவண்ணன்

(என்னுடைய சொந்த ஊர் கடலூர் . அண்ணா பல்கலைக் கழகத்திலும்  IIM-Bangalore-லும்  கல்வி பயின்று, கடந்த 15 ஆண்டுகளாக DESICREW என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறேன். வரலாறு மற்றும் தமிழ்  இலக்கியத்தில் மிக்க ஆர்வமும் ஒரு துளி அறிமுகமும்  உண்டு- ஏகலைவனுக்கு தூரத்து சொந்தம்)

https://www.desicrew.in/ http://thebrokentuskchronicles.blogspot.com/2009/07/kallanai-for-unesco-heritage.html

அன்புள்ள மணிவண்ணன்,

நான் எப்போதும் ஒருவகை இருநிலைகளில் அறியப்படுபவன். என் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவர்கள், மற்றும் பொதுவாகக் கொஞ்சம் அறிவியக்க முறைமைகளை அறிந்தவர்களாலேயே என்னைப் புரிந்துகொள்ள முடியும். எஞ்சியோர் ஏதேனும் ஒரு நிலைபாடு எடுத்து வசைபாடுவார்கள். அல்லது பச்சோந்தி என்பார்கள்.

நான் இந்திய ஞானமரபின் ஆன்மிக- பண்பாட்டு வெற்றிகளை மானுடச்சொத்து என நினைப்பவன். அவை பயிலப்படவும் பேணப்படவும் வேண்டும் என விரும்புபவன். ஆனால் இந்திய மரபு பற்றிய போலிப்பெருமிதங்கள், அவற்றின் அரசியல் பயன்பாடுகளை கடுமையாக எதிர்ப்பவன். ஆகவே இந்துத்துவன் என்றும் இந்துவிரோதி என்றும் வசைபாடப்படுபவன்.

அதேபோல, தமிழ் வரலாற்றின் சாதனைகளில் ஆர்வம்கொண்டு தொடர்ந்து பயில்பவன். ஆனால் அதுசார்ந்த போலிப்பெருமிதங்களை எதிர்ப்பவன். அந்த போலிப்பெருமிதம் என்பது மெய்யான பெருமைகளை மறைப்பது என்றும், அறிவுச்செயல்பாட்டுக்கு எதிரானது என்றும் கருதுபவன். ஆகவே தமிழர் விரோதி என்றும் மரபுவாதி என்றும் ஒரேசமயம் சொல்லப்படுகிறேன்.

இந்திய – தமிழ் வரலாற்றை அறிந்துகொள்ளுந்தோறும் இந்த இரட்டைநிலை உங்களுக்கும் வரும். ஒரு பக்கம் மாபெரும் பண்பாட்டுச்சாதனைகள், பிரம்மாண்டமான வரலாற்றுப் பின்புலம். மறுபக்கம் அவற்றைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் அழியவிடும் சமகால மக்கள். அவர்களே அப்பண்பாட்டில் இருந்து ஏதேனும் ஒரு பொய்ச்செய்தியை உருவாக்கிக்கொண்டு அதைக் கொண்டாடுவதையும் காணலாம். மரபின் பெருமையை அறிய முயற்சியே எடுக்காதவர்கள் மரபின்மேல் பொய்யான பெருமிதங்களையும் உருவாக்கி வைத்திருப்பார்கள்.

இங்கே, இருவகை பண்பாட்டு – வரலாற்று ஆய்வுகள் சாத்தியம். பொதுமக்களின் அந்த போலிப்பெருமிதத்தை தூண்டிவிடும்படி எதையாவது எழுதினால் கொண்டாடப்படுவீர்கள், ஆனால் போலியானவர்களாக ஆகிவிடுவீர்கள். உண்மையைச் சொல்லும் வரலாற்றாய்வாளரும் பண்பாட்டாய்வாளரும் இங்கே பொதுமக்களால் பழிக்கப்படுவார்கள். அவர்கள் தலைமறைவாகச் செயல்பட்டாகவேண்டும்.

இந்தச் சூழலில் நின்று உங்கள் கேள்விகளை எதிர்கொள்கிறேன்.

*

இந்திய வரலாற்றுக்கு ஒரு முகவுரை என டி.டி.கோஸாம்பி ஒரு நூல் எழுதியிருக்கிறார்.  (An Introduction to the Study of Indian History) அந்நூல் தொடங்குவதே இந்திய வரலாற்றை எழுதுவதற்கான நேரடிச் சான்றுகள் எவ்வளவு குறைவாக இருக்கின்றன என்பதை விளக்குவதுதான். சொல்லப்போனால் கோஸாம்பியின் திகைப்புதான் அதில் வெளிப்படுகிறது. இவ்வளவு நீண்ட, இவ்வளவு விரிந்த வரலாறும் பண்பாடும் கொண்ட இந்நிலத்தில் முறையான, நேரடியான வரலாற்றுப்பதிவே இல்லை. வரலாற்றுணர்வு என்பது கிட்டத்தட்ட இல்லை என்ற அளவிலேயே இருந்திருக்கிறது.

முகலாயர் ஆட்சிக்காலம் வரை இங்கே வரலாற்றுச் செய்திகளை பதிவு செய்து வைக்கும் வழக்கம் அனேகமாக இல்லை. பேரரசர்கள் இருந்திருக்கிறார்கள். பேரறிஞர்களும் ஞானிகளும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை எவரும் உடனிருந்து முறையாகப் பதிவு செய்யவில்லை. வடஇந்திய வரலாற்றில் மௌரியர் காலம் முதல்தான் ஓரளவு தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன. அதற்கு முந்தைய வரலாறெல்லாம் புராணங்களும் ஊகங்களும்தான். ஒட்டுமொத்தமாகக் கிடைக்கும் கல்வெட்டுச்சான்றுகள் மிகக்குறைவு. அசோகர் சாசனங்கள், காரவேலர் கல்வெட்டுகள் போன்ற மிகச்சில சான்றுகளே பொருட்படுத்தத் தக்கவை. இந்தியாவின் பெரும் நிலப்பகுதியை பல நூற்றாண்டுகள் ஆட்சி செய்த சாதவாகனர் பற்றி கிடைக்கும் கல்வெட்டுகள் நாலைந்துதான்.

ஓர் உரையில் சுவாமி விவேகானந்தர் சொல்கிறார், இந்திய வரலாற்றில் முறையாக வாழ்க்கையும் போதனையும் பதிவுசெய்யப்பட்ட முதல் ஞானி ராமகிருஷ்ண பரமஹம்ஸர்தான் என. எம் (மகேந்திரநாத குப்தா) அவற்றை ராமகிருஷ்ணரின் உடனிருந்து பதிவுசெய்யும்போது அவை முக்கியமானவை என்ற எண்ணம் அவருக்கில்லை. அவற்றை வெளியிட அவர் எண்ணவுமில்லை. வெளியிடும்போது அது ஓர் அத்துமீறல் என்னும் நினைப்புடன் எம் என்னும் முதலெழுத்தையே பெயராகக்கொண்டு வெளியிட்டார்

மத்வர், ராமானுஜர், சங்கரர் முதல் வியாசர் வரை எவருக்கும் வாழ்க்கை வரலாறு கிடையாது. புராணங்கள் போன்ற கதைகளே உள்ளன. அக்கதைகளில் இருந்து நாம் வரலாற்றை அகழ்வு செய்கிறோம். உதாரணமாக ராமானுஜரை கொடுமைப்படுத்திய சோழன் கிருமிகண்டசோழன் என அழைக்கப்படுகிறான், வேறு தகவல்கள் இல்லை. ராமானுஜர் வாழ்ந்த காலகட்டத்தை வேறு பல தரவுகளுடன் இணைத்துக்கொண்டு ஊகித்து, அக்காலத்தில் சோழநாட்டு அரசன் யார் என பார்த்து இன்னார் என்கிறார்கள். ஆனால் அதற்கு ஆதாரமென ஏதுமில்லை.

ஒரே ஒரு ஆதாரமே கிருமிகண்ட சோழன் பற்றி உள்ளது- ஸ்ரீரங்கம் கோயிலொழுகு பதிவுகளில் கிருமிகண்டசோழன் என்பவன் தன் நாட்டில் இருந்த அனைத்து வைணவ ஆலயங்களையும் இடித்து வந்தான் என்றும், வைணவர்கள் பெருமாளிடம் முறையிட அவர் அவனுடைய தொண்டையில் குத்தி நோய் வரச்செய்தார் என்றும் அது சொல்கிறது. அதாவது வெறும் புராணக்கதை. ராமானுஜரின் வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வுக்கே இவ்வளவுதான் ஆதாரம். இவ்வளவுக்கும் அவருடன் இருந்தவர்கள் அனைவருமே இருமொழி அறிஞர்கள். அவர்கள் தொல்நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதியவர்கள். மேலும் அவர்கள் நிலையான கல்வியமைப்புகளை நிறுவி அவற்றில் வாழ்ந்தவர்கள்.

இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பெரும்பகுதி தமிழகம் சார்ந்தவை. ஆனால் சங்ககாலம் பற்றி மிகமிகக்குறைவான கல்வெட்டாதாரங்களே உள்ளன. 1970கள் வரை சங்ககாலம் பற்றிய தொல்லியல் சான்றுகளே இல்லை என்று ஆய்வாளர் சொல்லிவந்தனர். பின்னர் சில கல்வெட்டுகள் கண்டடையப்பட்டன. அவற்றில் பெரும்பாலான கல்வெட்டுகள் ஒற்றைவரிகள். அவற்றிலும் பெயர்கள் தெளிவாக இல்லை. சேரர் வரலாறு பற்றி அனேகமாக ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

நமக்குக் கிடைப்பவற்றில் சோழர்கால கல்வெட்டுகளே மிகுதி. அவற்றில் அரசரின் வெற்றியை குறிப்பிடும் மெய்கீர்த்தி என்னும் கல்வெட்டுகள் மிகச்சில. பெரும்பாலானவை கோயில்களுக்கும் தனியாருக்கும் நிலக்கொடை அளிப்பதுபற்றிய அறிவிப்புகள். அவற்றிலுள்ள அரசர் பெயர்கள் பலசமயம் அடைமொழிகள் மட்டுமே. ஆண்டுகள் மிக அரிதானவை, இன்னாரின் இத்தனையாம் ஆட்சியாண்டில் என சிலசமயம் குறிப்பு இருக்கும். அதைக்கொண்டு காலம் ஊகிக்கப்படுகிறது. அந்த கல்வெட்டுகளை ஒன்றுடனொன்று ஒப்பிட்டு ஊகித்து எழுதப்பட்டவையே சோழர் வரலாற்றுக்குறிப்புகள்.

நமக்கு வரலாறு என்னும் கருத்துருவகம் இருந்ததே இல்லை. நிகழ்ந்தவற்றை புறவயமான தரவுகளுடன், கால ஒழுங்குடன், பதிவுசெய்து புறப்பார்வைக்கு வைத்தலே வரலாறு எனப்படும். நமக்கு அந்த மரபே இல்லை.  நமது மாமன்னர்கள் எவரும் வரலாற்றாசிரியர்களை வைத்து தங்கள் ஆட்சியின் வரலாற்றை பதிவுசெய்யவில்லை. ஆனால் அவர்கள் மாபெரும் அறிஞர்சபைகளை பேணியவர்கள். உதாரணமாக அஷ்டதிக்கஜங்கள் என்னும் எட்டு புலவர்கள் கொண்ட அறிஞரவையை பேணிய கிருஷ்ணதேவராயருக்கு ஒரு வரலாற்றுப்பதிவே இல்லை. அவர் வரலாற்றில் மறைந்தே போய்விட்டார். அவரை மீட்டெடுத்தவர் ராபர்ட் சிவெல் ( A Forgotten Empire Robert Sewell )

நம்மிடமிருந்தது புராண மனநிலை. வரலாற்றில் இருந்து சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றை நமக்குரிய கருத்து மற்றும் விழுமியங்களை ஏற்றி, அதற்கேற்ப மிகைப்படுத்தியும் திரித்தும் புனைந்தும், உணர்ச்சிகரமாகவும் குறியீட்டுத்தன்மையுடனும் பதிவுசெய்வது புராணம். நம்மிடமுள்ள வரலாறென்பது புராணமாக மாற்றப்பட்ட செய்திகள்தான். இது இந்து, சமணம், பௌத்தம் அனைத்துக்கும் பொருந்தும். இங்குள்ள எந்த ஆலயத்துக்கும் வரலாறு எழுதப்படவில்லை. ஆனால் எல்லா ஆலயங்களுக்கும் ஏராளமான புராணங்கள் உள்ளன. ஸ்தலபுராணங்கள் என அவை அழைக்கப்படுகின்றன. அவை இன்றும்கூட உருவாகிக் கொண்டே இருக்கின்றன. சென்ற இருபதாண்டுகளில் அவ்வாறு உருவாகி நிலைகொண்ட புராணங்களே ஏராளமாக உண்டு. புராணங்களுக்கு அவற்றின் தத்துவ உள்ளடக்கத்தை முன்வைக்கும் குறியீட்டுத்தன்மையே முக்கியம், அவற்றின் வரலாற்றுத்தன்மை அல்ல.

நமக்கு வரலாற்றெழுத்தில் நான்கு வகை முன்பதிவுகள் உள்ளன.

அ. இந்தியாவைப் பற்றி மெகஸ்தனிஸ், யுவான்சுவாங் போன்ற பயணிகள் எழுதிய குறிப்புகள்

ஆ. கல்கணரின் ராஜதரங்கிணி, இலங்கையின் மகாவம்சம் போன்று இங்குள்ள சில அரிய வரலாற்றுப் பதிவுகள்

இ. முகலாயர் காலகட்டத்தின் அமீர் குஸ்ரு போன்ற வரலாற்றுக்குறிப்பாளர்களின் பதிவுகள் .

ஈ. பிற்காலத்தில் அரசுகள் உருவாக்கிய சில நிர்வாக ஆவணங்கள். தஞ்சை மோடி ஆவணங்கள், திருவிதாங்கூர் மதிலகம் ஓலைகள் போன்றவை

ஆனால் இவை மிகக்குறைவான சான்றுகள். இந்திய வரலாறு என்னும் பிரம்மாண்டத்தை எழுத இவை போதுமானவை அல்ல.

நாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை?-2

முந்தைய கட்டுரைக்ருஷாங்கினி
அடுத்த கட்டுரைநூற்பு- உதவி