முகில்களின் ஒளி

வெண்முகில் நகரம் வெண்முரசு நாவல்  நிரையில் பிரயாகை எனும் பெருநாவலின் தொடர்ச்சி. அதில் கொற்றவையின் துளியெனத்தோன்றி ஐவரை மணந்து ஆலயம் அமர்ந்த ஐம்புரி அன்னையாகிய திரௌபதி இதில் பேருருக்கொண்டெழுகிறாள். அவளுடைய கனவு நகர் இந்திரப்ரஸ்தம். விண்முகில்களை ஆளும் வேந்தனின் நகரம். அவள் விழைந்தது அஸ்தினபுரியை அல்ல. அஸ்தினபுரியில் அவள் விழைந்த ஒன்றின் பேருருவே அந்நகர்.இளமையில் eங்கோ அக்கனவு அவளுக்குள் இருந்தது. அக்கனவின் பருவடிவென அவள் அதை அமைத்தாள்.

மகாபாரதம் முழுக்க திரும்பத் திரும்ப வரும் ஒன்றுண்டு. அசுரர்கள் அமைக்கும் பெருநகரங்கள் அனைத்துமே அழிந்து தடமின்றி எஞ்சுகின்றன. அஸ்தினபுரியும் அவ்வாறே மறைந்தது. ஆனால் அதற்குமுன் இந்திரபிரஸ்தமும் மறைந்தது. இந்திரப்ரஸ்தம் ஒரு பயன்பாட்டின் பொருட்டு உருவாக்கப்பட்டதல்ல, ஒரு ஆணவத்தின் பொருட்டு உருவாக்கப்பட்டதெனலாம். ஒரு கனவிற்காகவே உருவாக்கப்பட்டதெனலாம். ஆணவம் எளிதில் அழிவது. கனவு விழித்ததுமே மறைவது. அவ்வண்ணமே இல்லாமலாயிற்று அது. துவாரகையும் அவ்வாறே.

சூரபதுமனின் நரகாசுரனின் ஹிரண்யனின் நகர்களைப்போல இம்மண்ணில் உருவாக்கப்படும் எக்கனவும் மண்ணால் இழுத்து சரிக்கப்படுமென்று மகாபாரதம் சொல்கிறதா என்ன?

இந்நாவல் இந்திரபிரஸ்தம் தோன்றியதை, அதை முன்னிட்டே உருவாக்கப்பட்ட பகைமைகளை, அதிலிருந்து எழுந்த வஞ்சங்களை , அவை பேரழிவை நோக்கி ஒவ்வொருவரையும் செலுத்துவதை சித்தரிக்கிறது. இக்கோணத்தில் எண்ணிப்பார்த்தால் மகாபாரதப்போரை தோற்றுவித்த முதன்மைக்காரணம் என்பது இந்திரப்பிரஸ்தம் உருவாக்கப்பட்டதுதான். இந்திரப்பிரஸ்தத்துக்கு எதிராக எழுந்த முதல் குரல் சிசுபாலனுடையது .பின்னர் துரியோதனன் அவ்வஞ்சத்தை தான் எடுத்துக்கொண்டான். அவனுடன் ஷத்ரியர் அனைவரும் இணைந்துகொண்டதே இந்திரபிரஸ்தத்தின் ஓங்கிய தோற்றம் உருவாக்கிய அச்சத்தாலும் பொறாமையாலும்தான்.

இந்திரப்பிரஸ்தம் என்னும் ஒரு புள்ளியைச்சுற்றி வெண்முரசு நாவல் தொடரையே வேறொருவகையில் கட்டமைத்துக்கொள்ள இயலும். நகர்களின் போரென மகாபாரதத்தை விரித்துக்கொள்ள முடியும். அஸ்தினபுரியும் இந்திரபிரஸ்தமும் துவாரகையும் செய்த சமரன்றி வேறென்ன அது?. அந்நகரின் பேருருவத்தை இந்நாவலில் உருவாக்கிக்கொண்டேன் என்பதே இதை எழுதும்போது எனக்கு திகைப்பையும் இனம்புரியாத அச்சத்தையும் உருவாக்குவதாக இருந்தது. அதை எழுதும்போதே அதன் வீழ்ச்சியையும் கண்டுகொண்டிருந்தேன். நுரையாலான  பெருநகர் என்றூ துவாரகையை எழுதினேன். முகிலாலான பெருநகர் இந்திரபிரஸ்தம். இரண்டுமே விழிமயக்குகள். அவை தங்கள் கணநேரக் காட்சித்தன்மையாலேயே பேரெழில் கொண்டவை ஆகிய மாயநகர்கள்.

இந்நாவல் தொடரில் பிற்பாடு உருவான அனைத்து பகைமைகளையும் வஞ்சங்களையும் தன்னில் தோற்றுவிக்கக்கூடியது இந்திரப்பிரஸ்தத்தின் ராஜசூயவேள்விக் காட்சி. துரியோதனன் இந்திரபிரஸ்ததத்தின் ஆடி அறையில் கண்ட மாயத்தோற்றங்களில் இந்நாவலின் அனைத்து காட்சிகளும் அடங்கியுள்ளன.  இந்நாவலில் உள்ளடங்கியுள்ள தரிசனங்கள் கூட அதில் வெளிப்படுகின்றன. அது தெய்வங்கள் காட்டிய ஒரு காலத்துளி. ஒரு துளிக்குள் சுருண்டு சுருண்டு அமைந்த காலம் அதை உணர அவனால் இயலவில்லை. வேறெவ்வகையிலோ அது திரௌபதிக்கும் யுதிஷ்டிரனும் அர்ஜுனனுக்கும் பீமனுக்கும் கூட காட்டப்பட்டிருக்கலாம்.

காலம் தன்னை முன்னுணர்த்திக்கொண்டே தான் இருக்கிறது. காலத்தை முன்னுணர மானுடர் விரும்புவதில்லை என்பதனாலேயே அவர்களால் அதை அறிந்துகொள்ளவும் இயலவில்லை. காண்டவ வனத்தின் அழிவு, அதன்மேலெழுந்த பெருநகர். எல்லாப் பெருநகரங்களும் காட்டை அழித்து உருவாக்கப்படுகின்றன. இன்றும் கூட கேரளத்தில் இல்லங்கள் அமைக்கப்படும்போது காடேத்து என்னும் ஒரு சடங்கு நடக்கும். காட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்களைப்பயன்படுத்தி வீடுகள் கட்டப்படுவதனால் அக்காடுகளில் மரங்களில் குடியிருந்த தெய்வங்கள் வீட்டுக்குள் வந்திருக்கும் என்று எண்ணி, அந்த தெய்வங்களுக்கு குருதி பலி கொடுத்து ,அவற்றை திருப்பி அனுப்பும் சடங்கு அது. தச்சுக்கழிப்பு என்று அச்சடங்கை சொல்வார்கள். பெருந்தச்சனால் அப்பலிச்சடங்கு நிகழ்த்தப்படும். அதர்வ மந்திரங்கள் அதற்கு ஓதப்படும். அதற்குரிய அதர்வ வேதப்பகுதிகள் தச்சர்களால் தலைமுறை தலைமுறையாக பயிலப்பட்டு வந்திருக்கும்.

காண்டவ வனத்தில்  அழிக்கப்பட்ட அனைத்து தெய்வங்களும் இந்திரபிரஸ்தத்தில் குடியேறின. இந்திரப்ரஸ்தத்தில் அவை என்றும் சுரங்கப்பாதையில் விழித்திருந்தன. வஞ்சங்களுடன், வெறியுடன். இந்திரப்ரஸ்தத்தை அழித்தவை அவை தான் போலும். இந்நாவலிலிருந்து மொத்த மகாபாரதத்திற்கே விரித்தெடுக்ககூடிய கோடுகள் இவ்வண்ணம் பல உள்ளன. இது வெளிவந்ததிலிருந்து இதுவரை பல வாசகர்களால் பல பார்வைகளால் அது விரிவு கொண்டிருக்கிறது மேலும் விரிவு கொள்ளும் என நம்புகிறேன்

இந்நாவலின் முதற்பதிப்பை மெய்ப்பு பார்த்து செம்மை செய்து உதவிய சுதா-ஸ்ரீனிவாசன் இணையருக்கும், பிழைதிருத்தி உதவிய ஹரன் பிரசன்னா ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் ஆகியோருக்கும், வெளியிட்ட பத்ரி சேஷாத்ரிக்கும் நன்றிகள். இப்பதிப்பை செம்மை நோக்கி வெளியிடும் மீனாம்பிகை செந்தில்குமார் இருவருக்கும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி.

ஜெ

வெண்முகில் நகரம்: முன்னுரை

முந்தைய கட்டுரைவெள்ளைவாரணர்
அடுத்த கட்டுரைபுத்தகக் கண்காட்சியில்….கடிதம்