(கே.சி.நாராயணன் 2023 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது விழாவில் 10-6-2023 அன்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்)
கே.சி.நாராயணன் ஒரு மகத்தான விமர்சகராகவும், இலக்கிய அழகியல் கோட்பாட்டாளராகவும் உருவாகிவருவார் என அவருடைய ஆசிரியரான ஆற்றூர் ரவிவர்மா நினைத்தார். மலையாளம் முதுகலை படிப்புக்கு ஆற்றூரின் மாணவராக இருந்த கே.சி.நாராயணன் எழுதியவை எல்லாமே முக்கியமான கட்டுரைகளாக இருந்தன. கே.சி. நாராயணன் இலக்கியப்படைப்பை அழகியல் சார்ந்தே அணுகினார். முழுக்க முழுக்க படைப்புக்குள் சென்றே பேசினார். கேரளத்தில் ஓங்கியிருந்த வழக்கமான மார்க்ஸிய சமூகவியலையோ, அரசியலையோ தேடவில்லை. இலக்கியக் கோட்பாடுகளுக்குள் செல்லவுமில்லை. அனைவரும் அறிந்த இலக்கியப்படைப்புகளில் இருந்து எவரும் வாசிக்காத இலக்கியப்பிரதிகளை எடுத்துக் காட்டினார்.
ஆனால் கே.சி.நாராயணன் முதுகலைப் படிப்புக்குப்பின் ஆய்வுநிறைவுக்கோ முனைவர் பட்டத்திற்கோ முயலவில்லை. முனைவர் பட்டத்திற்கு அவர் எடுத்துக் கொண்ட தலைப்பு கேரளப் பண்பாட்டில் அது வரை எவரும் தொடாதது— கேரளத்தின் தோல்வாத்தியக் கருவிகளும் இலக்கியப்பிரதிகளும். மிகுந்த சாத்தியங்கள் கொண்ட ஒரு தலைப்பு அது. ஏனென்றால் இந்தியாவில் மிக அதிகமான தோல்வாத்தியக் கருவிகள் இருப்பது கேரளத்தில்தான்.
உண்மையில் அவை தமிழகம் முழுக்கவே இருந்தன. கேரளவாத்தியங்கள் பலவற்றை நான் திருவாரூர் ஆலயத்தின் உடைசல்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த அறையொன்றில் ஒருமுறை கண்டிருக்கிறேன். பெரும்பாலானவை சோழர் காலத்தில் புகழ் பெற்றிருந்தவை. தமிழகம் அவற்றை கைவிட்டது. இங்குள்ள ஆலய வழிபாட்டுமுறை மாற்றமடைந்தது. கேரள ஆலயங்கள் சடங்குகளை சற்றும் மாற்றலாகாது என்னும் உறுதிகொண்டவையாதலால் அவ்வாத்தியங்கள் அவ்வாறே நீடித்தன
ஆனால் கே.சி.நாராயணன் ஆய்வை கைவிட்டார். ஏன் என நான் பின்னர் ஒருமுறை கேட்டபோது ‘கல்வித்துறைக்குள் செல்லவேண்டாம் என முடிவெடுத்தேன். அங்கே படைப்பூக்கம் கொண்ட செயல்பாடுகளுக்கு இடமில்லை. அது இலக்கியத்தை செத்த உடல்களாகவே அணுகுகிறது’ என்றார். கே.சி.நாராயணன் மாத்ருபூமி இதழில், எம்.டி.வாசுதேவன் நாயரின் கீழ் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். எம்.டியிடம் இதழியல் பயின்றார்.
கேரளம் கண்ட மகத்தான இலக்கிய இதழியலாளர்கள் என கருதப்படுபவர்கள் மூவர். கே.பாலகிருஷ்ணன் எனும் கௌமுதி பாலகிருஷ்ணன், என்.வி.கிருஷ்ணவாரியர், எம்.டி.வாசுதேவன் நாயர். இவர்களில் என்.வி.கிருஷ்ணவாரியர் , எம்.டி.வாசுதேவன் நாயர் இருவரின் கீழும் பணியாற்றிய கே.சி.நாராயணன் அவர்களுக்குப்பின் கேரளத்தின் மிகச்சிறந்த இலக்கிய இதழாளராக, நாலாவது ஆளுமையாகக் கருதப்படுகிறார்.
கே.சி.நாராயணன் மாத்ருபூமி வாரஇதழின் ஆசிரியராக இருந்தபோதுதான் ஜே.ஜே.சில குறிப்புகள் அதில் தொடராக வெளிவந்தது. புகழ்பெற்ற வங்காளப்படைப்புகள் வெளியாயின. ஏராளமான புதிய தலைமுறை எழுத்தாளர்களும், கவிஞர்களும் அறிமுகமானார்கள். பின்னர் அவர் மாத்ருபூமி ஞாயிறுமலர் ஆசிரியராக பணியாற்றியபோது என்னை எழுதவைத்தார். நான் மலையாளத்திலும் எழுதும் எழுத்தாளனாக ஆனேன்.
அதன்பின் கே.சி.நாராயணன் மலையாள மனோரமா குழுமத்தின் பாஷாபோஷிணி இலக்கிய இதழ் உட்பட வார இதழ்களின் ஆசிரியராக பணியாற்றினார். 2000 முதல் இருபதாண்டுகள் அவர் அதில் பணியாற்றிய காலகட்டம் இலக்கிய இதழின் பொற்காலம். நான் பாஷாபோஷிணியில்தான் பெரும்பாலும் எழுதியிருக்கிறேன். இலக்கியம், இசை, கதகளி, ஓவியம் உட்பட அனைத்துப் பண்பாட்டுக்களங்களிலும் திறமையான புதிய எழுத்தாளர்களைக் கண்டடைந்ததும், முந்தையை தலைமுறை எழுத்தாளர்களை தொடர்ச்சியாக முன்வைத்ததும் பாஷாபோஷிணியின் சாதனைகள்.
ஆனால் ஆற்றூர் ரவிவர்மா கே.சி.நாராயணன் பற்றி ஏமாற்றமே கொண்டிருந்தார். கே.சி.நாராயணன் எழுதவேண்டியவர், எழுதவைக்கவேண்டியவர் அல்ல என்று எண்ணினார். நடுநடுவே கே.சி.நாராயணன் எழுதிய தனித்தனிக் கட்டுரைகளில் இருந்த புதிய பார்வையும், குன்றாத சுவாரசியமும் அந்த எண்ணத்தை மேலும் வலுப்படுத்தின. பாஷாபோஷிணியில் இருந்து ஓய்வுபெற்ற பின் கே.சி.நாராயணன் இலக்கிய விமர்சனங்கள் எழுதலானார்.
கே.சி.நாராயணனின் இலக்கியவிமர்சனம் அமெரிக்கப் புதுத்திறனாய்வாளர்களின் ‘பிரதிசார் நுண்ணாய்வு’ தன்மை கொண்டது. இலக்கியப்படைப்பை தன்னை நோக்கி இழுக்காமல் ஒரு மிகச்சிறந்த வாசகனாக நுணுக்கமாக வாசிப்பதுதான் அவ்விமர்சனம். உதாரணமாக எம்.டி.வாசுதேவன் நாயரின் புகழ்பெற்ற நாவலான நாலுகெட்டு என்பதைப் கே.சி.நாராயணன் வாசிக்கும் விதத்தைச் சுட்டலாம். அந்நாவலின் தலைப்பினாலேயே அதை பழைய நாயர் தறவாட்டின் வீழ்ச்சியின் சித்திரம் என்றே அது வரை அனைவரும் வாசித்தனர். அது சரியும்கூட . எம்.டி.வாசுதேவன் நாயரே அப்படித்தான் சொன்னார்.
ஆனால் கே.சி.நாராயணன் அதை அக்கதாபாத்திரத்தின் அகப்பயணங்கள் வழியாக வாசிக்கிறார். சமூகச்சூழல் போன்றவற்றை அதற்கு பின்புலமாக மட்டுமே எடுத்துக் கொள்கிறார். மையக்கதாபாத்திரமான அப்புண்ணியின் அகம் தேடுவது எதை? ஒரு தந்தையை. அந்த தந்தையுருவை அளிக்க தாய்மாமனால் இயலவில்லை. அவன் மறைந்த தன் தன் தந்தையான கோந்துண்ணி நாயரை கற்பனையில் வளர்த்து விரிவாக்கிக் கொள்கிறான். அந்த தந்தைக்கு இருந்ததாக அவன் எண்ணும் கனவை நிறைவேற்ற தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறான். அதை நிறைவேற்றியதை தன் வாழ்க்கையின் வெற்றியாகக் கொள்கிறான். மொத்த நாவலும் ‘தந்தையை உருவாக்கிக்கொள்ளுதல்’ என்னும் மையத்தைச் சார்ந்தது என கே.சி.நாராயணன் வாசிக்கிறார்.
அந்தக் கோணத்தில் அப்புண்ணியின் வாழ்க்கை என்பது சரிந்துகொண்டிருக்கும் ஓர் அமைப்பில் இருந்து தப்பிப்பிழைத்தவன் என அடையாளம் காணப்படுவதில்லை. மாறாக அடுத்த காலகட்டத்திற்குரிய ஒன்றை புனைந்து உருவாக்கிக்கொண்டவன் என உருமாறுகிறது. கே.சி.நாராயணன் நாவல் நிகழும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலகட்டத்தில் மருமக்கள் வழி சொத்துரிமை முறை வீழ்ச்சியடைந்து மகன்வழி சொத்துரிமை முறை உருவாகி வரும்போது தந்தை – மகன் என்னும் உறவு எப்படி கேரளச் சமூகத்தில் உருவாகி வேர்கொண்டது என விரிவாக விளக்கிக் காட்டுகிறார்.
கே.சி.நாராயணனின் எல்லா கட்டுரைகளுமே புனைவுகளுக்கு நிகரான வாசிப்பார்வத்தை அளிப்பவை. உண்ணாயி வாரியரின் புகழ்பெற்ற கதகளி ஆட்டக்கதையும் காவியமுமான நளசரிதத்தை அவர் நாடுகடத்தப்பட்டு, திருவனந்தபுரத்தில் அடைக்கலமாகி, அங்கே வாழ்ந்து பின்னர் திரும்பி வந்ததன் பின்னணியில் ஆய்வுசெய்யும் கே.சி.நாராயணன் அதிலுள்ள நாடுநீங்குதல் என்னும் அம்சத்தின் நுண்விவரணைகளை தொட்டு எடுத்து அடுக்கி ஒரு புதிய வாசிப்பை உருவாக்குகிறார். மலையாளிகளின் இரவுகள் என்னும் தலைப்பில் அவர் எழுதிய கதகளி குறித்த கட்டுரையில் கதகளிக்கு இரவு எப்படி ஓர் அரிய பின்னணியை அளிக்கிறது என்று ஓர் ஓவியனின் பார்வையை முன்வைக்கிறார்.
அண்மையில் கே.சி.நாராயணன் மாத்ருபூமியில் எழுதி நூலாக வெளிவந்த ‘மகாபாரதம் ஒரு சுதந்திர சாஃப்ட்வேர்’ மகாபாரதக் கதையை வெவ்வேறு கோணங்களில் சுருக்கிக்கொண்டு ஆராயும் ஒரு நூல். உதாரணமாக மகாபாரத முனிவர்களை ஆராயும் கே.சி.நாராயணன் அவர்கள் புனிதர்கள், ஞானிகள், முக்காலமும் அறிந்தவர்கள் என்று சொல்லப்பட்டாலும் அவர்களின் நடத்தைகளில் அக்குணங்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார். காமம், மோகம், குரோதம் ஆகியவை நிறைந்தவர்களாகவே அவர்கள் வருகிறார்கள். அவர்களின் தனிப்பட்ட சீற்றங்கள், ஆசைகள் ஆகியவற்றால் நிகழும் சாபங்கள் மற்றும் ஆசிகளால்தான் கதையே முன்னகர்கிறது.
கே.சி.நாராயணன் பைபிளின் தெய்வ உருவகம் நான்கு கட்டங்களாக வளர்ச்சியடைவதை விவரிக்கும் நூல் ஒன்றை எழுதும் ஆய்வுகளில் இருக்கிறார். தொடர்ச்சியாக பயணம்செய்துகொண்டும் இருக்கிறார்.
ஶ்ரீகிருஷ்ணபுரத்தில் மூன்றுநாள்
கேரள இலக்கியவிழா உரையாடல்
இரண்டு நாட்கள்
இனியவை திரும்பல்