முதல் நடம் கதையில் அர்ஜுனன் ஆணாகி, பெண்ணாகி நின்று இருக்கும் காட்சியை காணலாம். அர்ஜுனன் வாழ்வின் பெரும் பகுதியை பயணங்களில் செலவிடுகின்றான். பாரத வர்ஷமெங்கும் செல்கின்றான். அர்ஜுனன் காண்டீபத்தால், அறிவால், அன்பால், காதலால் நினைத்த இடத்தில் சாம்ராஜ்யங்களை, அரசுகளை உருவாக்கும் வல்லமை கொண்டவன். ஆனால் காண்டீபத்தால், அறிவால், அன்பால், காதலால் என அத்தனையையும் தன்னை வெல்லும் பயணத்தில் வழித்துணையாக கொள்கின்றான்.
இக்கதையில் ஆணாகி, பெண்ணாகி நின்றாடி அவை ஒன்றோ, அவை தான் தானோ என பயணிக்கும் அர்ஜுனனை காணலாம். ஆணென, பெண்ணென அடையாளங்கள் தரும் எல்லையை தன் உடலால் , உள்ளத்தால் அறிந்து கொள்ள ஒரு பயணம்.இதுதான் முதல் நடமோ?.
முதல் நடத்தின் வரிகளில் பார்ப்போம்.
“கங்கைக் கரையோரமாக எழுந்து சென்ற பாதையில் நடந்து இமயப்பனிமலை நோக்கி சென்றான். அப்பயணத்தில் தன்னை ஒரு பெண்ணென அவன் ஆக்கிக் கொண்டான். மலைப்பெண்களின் ஆடையணிந்து நீள்கூந்தல் கொண்டையிட்டு மலர் சூடி பெண்ணென்று சில நாட்கள் சென்றான். பின்பு தோலாடை அணிந்து வில்லேந்தி ஆணென்று சில காலம்”
“ஆண் என்று அவன் கண்ட உலகம் படைக்கலன் ஏந்தி அவனை அறைகூவல் விட்டு நின்ற ஒன்று. கிளைகளும் இலைகளும் மட்டுமன்றி தளிர்களும் மலர்களும்கூட கூர்கொண்டு எழுந்த வெளி அது. கொம்புகளும் பற்களும் குளம்புகளும் மட்டுமன்றி கனிந்த கரிய மூக்கும், கரு விழிகளும் நாக்கும்கூட எதிர்த்து நின்ற களம்.
பெண் என்று அவன் கண்ட உலகில் மெல்ல கை தொட்டபோது கரும்பாறை களிம்பாகியது. அடிமரம் அன்னையின் இடை என ஆயிற்று. கொம்பு குலுக்கி வரும் மதயானை கைநீட்டி வரும் குழந்தை என்று தோன்றியது.”
இருவேறு உலகங்களை அறிந்தான். ஒன்று பிறிதொன்றின் மேல் முற்றிலும் கவிழ்ந்து கடந்து சென்றது. நீர் வலையை என ஒன்று பிறிதை அறியவில்லை. நீரில் ஒளி என ஒன்று பிறிதால் ஆனதாக இருந்தது. எதிரெதிர் ஆடிகளைப்போல் ஒன்று பிறிதை நோக்கி தன்னை பெருக்கிக்கொண்டது. காற்று முகில்களை அறிதலைப்போல் ஆண் பெண்ணை அறிந்தான். மழையை மண் என பெண் ஆணை அறிந்தாள்.”
மிக அழகான கவிதையென அர்ஜுனன் கண்டு உணர்ந்ததை முதல் நடம் சொல்லுகின்றது. ஆண் என பெண் என ஒரே உலகத்தினை இரண்டாக அறிகின்றான். இரண்டும் அர்ஜுனன் என ஒன்றில் நிகழ்வதால் ஒன்றென அறிகின்றான். ஒன்றை ஒன்று நோக்கும் கணத்தில் பெருக்கி கொண்டதை அறிகின்றான்.
முதல் நடத்தில் அர்ஜுனன் மணிப்பூரகத்துக்கு செல்கின்றான். மூடப்பட்ட வாயில்களின் வழியாகச் செல்லும் காற்று என செல்லும் பயணத்தில் கதவுகளை இறுக்க சாத்தி வைத்துள்ள மணிப்பூரகத்துக்கு செல்கின்றான். வேளான் சமூகத்துக்கும், வேட்டை சமூகத்துக்கும் நடக்கும் பூசல்களால் கதவடைத்து கொள்ளும் வேளான் சமூகத்தில் வீரமென விளைவது எது என காட்டுகின்றான். ஓடி ஓளிவதால் பூசல்கள் தவிர்க்கப்படாது, வெறுமனே விதைக்கவும், அறுவடை செய்வதை அறிவதால் மட்டும் செல்வம் பெறுகாது, பூசல்களை வெல்ல தெரிந்தவனுக்கே விதைத்தன் பலன் மிஞ்சுமென சொல்கின்றது. முதலில் வேளான் பொருளாகவும், பின்பு செல்வமாகவும், பின்பு வீட்டு பெண்களாகவும் பூசலில் கவர்ந்து செல்லும் பொருள் மாறுகின்றது. காக்க தெரியாத சமூகம் மீண்டும் மீண்டும் இழக்க தயாராக எலி வலைகளை கட்டி ஓளிந்து வாழ விழைகையில் அர்ஜுனன் அதை ஊராக்குகின்றான். மானுடர் எலியாதலும், எலிகள் மானுடர் ஆதலும் நிகழ்கின்றது.
போர் புரியும் குணமுள்ள சமூகத்தினை, வெறும் பொருளை கொடுத்து நிறைவடைய செய்து சமாதானம் அடைவதோ, வெறும் பேச்சால் நிறைவடைய செய்து சமாதானம் அடைவதோ சாத்தியமல்ல என ஊர் உணர்ந்து தெளிந்தமையால் முதன் முதலாக பெயர் சூடிக் கொண்டது. அது சிவதா அர்ஜுனன் சூட்டிய பெயராக அமைகின்றது.
மணிப்பூரக இளவரசி சித்ராங்கதன் என ஆணாக வேடம் கொண்டு இருந்து ராஜ்ய பரிபாலனம் செய்யும் வீர அரசி. குடிக்காக வாளேந்தி செல்கின்றாள். படைகளை நடத்தி குடிகளை காக்க போரிடுகின்றாள். அவருடைய குடிகள் அவரை பற்றி பேசுவதை முதல் நடம் இவ்வாறு கூறுகின்றது.
“ஆனால் தீராப்பெருஞ்சினம் கொண்டவர். உறையுருவப்பட்ட கொலைவாள் போன்றவர். அவர்மேல் இங்கு அனைவருக்கும் அன்பைவிட அச்சமே உள்ளது. வெறுப்பும் பலரிடமுண்டு. ஏனென்றால் இரக்கம் என்பதே அவர் அறியாதது. அயலாரைக் கண்டதுமே தலையை வெட்டுவது அவரது வழக்கம். இன்று உன் உயிர் எஞ்சியது ஏன் என்று எனக்கே புரியவில்லை.”
வேட்டை சமூக, வேளான் சமூகத்தின் போரில் சித்ராங்கதனுக்கு, ஃபால்குனை செய்த உதவிக்கு மணிப்பூரகத்தில் தங்க அனுமதி கிடைக்கின்றது.
போர்க்களம் முடிந்து ஃபால்குனை சித்ராங்கதனுக்கு மருத்துவம் செய்கையில் கூறும் இந்த வரிகள் தனிப்பட்ட முறையில் எனக்கு உகந்தவை
“ஃபால்குனை “இப்புவியில் உள்ள அனைத்து உணவுக்குள்ளும் அறுசுவைகளும் உறைந்துள்ளன. நாம் விரும்புவதையே நாதொட்டு மேலே எடுக்கிறோம்” என்றாள். “இத்தனை கசக்கும் பொருள் எப்படி இனிதாகிறது?” என்றான். “பசியால்” என்ற ஃபால்குனை”
சித்ராங்கதனாக இருந்த சித்ராங்கதையையும் ஃபால்குனையாக அர்ஜுனனும் ஒருவர் மற்றவர் விழிக்காக உருக்கொண்டார்கள். அது காதலின் விழி என முதல் நடம் சொல்கின்றது. காதலின் விழியில் சித்ராங்கதை உணர்வுகள் மிக நுண்ணியதாக முதல் நடத்தில் வருகின்றது. அர்ஜுனன் கதைகளில் வரும் காதல் ரசம் இக்கதையில் அழகாக கோர்க்கப்பட்டுள்ளது.
“அதையெல்லாம் ஏன் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் உடனே எழுந்தது. ஆனால் அவனுடன் இருக்கையில் மிக எளியவற்றையே உரையாடவேண்டுமென அவள் அகம் விழைந்தது. அச்சிறியசெய்திகள் அவளை சிறுமியென்றாக்கின. அவனருகே தண்டோ கிளையோ எழாது என்றும் தளிரென்றே இருக்கவேண்டும் என்று தோன்றியது.”
“அவன் சிரித்தபடி அருகே வந்து அவள் ஆடையைப் பற்றி விலக்கி வெற்றுடலாக்கி தன் கைகளில் எடுத்துக்கொண்டான். அவள் உடல் எழுந்து விரிந்து அவன் உடலை சூழ்ந்தது. அவனை தன் கைகளாலும் கால்களாலும் பற்றிக்கொண்டு அவன் தோளில் முகம் புதைத்தாள். ஒன்றை ஒன்று நிரப்பும் பொருட்டே உருவான இரண்டு உடல்களென தங்களை உணர்ந்தன அவை. குளிர்ந்த ஆழத்தில் குருதி வெம்மையால் சிவந்து கனன்றது அவள் உடல். இருவர் விழிகளும் ஒன்றை ஒன்று கண்டு நகைத்துக்கொண்டன.”
காதலால் கூடும் காதலர் கதைக்கு பின்னால் மணிப்பூரகத்தின் காமித வனத்தின் கதை சொல்லப்படுகின்றது. சிவ சக்தி சங்கம் அங்கே சக்தன் சிவையாகி நிகழ்ந்து காணபத்யையும், கௌமாரியும் தோன்றிய கதையாக அது சொல்லப்படுகின்றது. காதலும், காமமும் இங்கு முற்றறிதல் வழியே முழுமை கொள்கின்றன.
முதல் நடத்தின் வரிகளில் பிரபஞ்ச பெருவெளியில் சிவ, சக்தி நடனத்தில் சக்தி சிவ ரூபமாகவும், சிவம் சக்தி ரூபமாகவும் மாறி நிகழ்வதும் ஒரு அங்கம் என்றாகின்றது. இக்கதைப்படி அனைத்து உயிராகவும் நிகழும் நடத்தில் சிவம் சக்தி ரூபம் கொள்ளுதலும், சக்தி சிவ ரூபம் கொள்ளுதலும் எஞ்சுமா என்ன?
கதையை கேட்ட கௌரவ இளவரசன் சுஜயன் அர்ஜுனன் , சித்ராங்கதை வழியாக வாழ்வில் காதலையும், காமத்தினையும் அறிந்து கொள்கின்றான்.
சுஜயனுக்கு கதை சொல்லும் மாலினி தேவி சொல்லும் வரிகள் இனியவை
சுஜயனை வருடி “ஆத்மனுக்கு அனைத்தும் தெரியும் என்பார்கள். இங்கு அது அடைவதெல்லாம் நினைவூட்டல் மட்டுமே” என்றாள் மாலினி.
நமக்கு இந்த முதல் நடம் எதை நினைவூட்டுகின்றது?