மார்க்ஸியமும் ரஸ்ஸலும்

அறிவியல் விடுதலை அளிக்குமா?

அன்புள்ள ஜெ,

பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் நூல்கள் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நேரடியாக தமிழில் மொழியாக்கம் செய்து கிடைத்தன என்பது ஆச்சரியமளிக்கிறது.  இன்றுகூட அவ்வாறு நவீனச் சிந்தனைகள் உடனுக்குடன் தமிழாக்கம் செய்யப்படுவதில்லை. ரஸ்ஸலின் இந்நூல் ஏன் பெரும்பாலானவர்களால் வாசிக்கப்படவில்லை? ஏன் பேசப்படவில்லை? அதுதான் ஆச்சரியமாக உள்ளது. ரஸ்ஸல் அறிவியலை முன்வைப்பவர். இங்குள்ள மார்க்ஸியர்கள்தான் அறிவியலின் பிரச்சாரகர்கள். மார்க்ஸியமென்பது ஓர் அறிவியல்கொள்கை என்றுதான் அவர்கள் சொன்னார்கள். அவர்கள் ஏன் ரஸ்ஸலை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை?

கே.எம்.சரவணன்

அன்புள்ள சரவணன்,

இந்தியா முழுக்கவே இரு சிந்தனைமறுமலர்ச்சிக் காலகட்டங்கள் உள்ளன. 1880 வாக்கில் அச்சுமுறை அறிமுகமாகி, நூல்கள் கிடைக்க தொடங்கியபோது ஒரு சிந்தனை மறுமலர்ச்சி உருவானது.  பழைய நூல்கள் அச்சேறின, அவற்றுக்கு உரைகள் எழுதப்பட்டன. ஜனநாயகம், தனிமனித உரிமை, பகுத்தறிவு, நவீன அறிவியல்கொள்கைகள் ஆகியவை அறிமுகமாயின.அதன்பின் இந்திய சுதந்திரப்போராட்டம் உச்சமடைந்தபோது, 1923 முதல் ஒரு மறுமலர்ச்சி உருவானது. இரண்டாம் காலகட்டத்தில்தான் புகழ்பெற்ற இதழ்கள் வெளியாயின. இந்திய இலக்கியம் உருவானது.

இந்த இரண்டாம் காலகட்டத்தில்தான் அரசியல்சிந்தனைகள் அறிமுகமாயின. மார்க்ஸியம், சோஷலிசம், தாராளஜனநாயகவாதம், அரசுசார்ந்த சர்வாதிகாரம் என பல சிந்தனைகள் சார்ந்த நூல்கள் எழுதப்பட்டன. தமிழில் அதிகமாக அரசியல் நூல்கள் வெளியானது இக்காலகட்டத்திலேயே. பெ.நா.அப்புஸ்வாமி, வெ.சாமிநாத சர்மா போன்றவர்கள் அரசியல் கொள்கைகள் சார்ந்து ஏராளமாக எழுதினர். மொழியாக்கம் செய்தனர். கிரேக்க அரசியல்தத்துவ நூல்களான பிளேட்டோவின் குடியரசு முதலிய நூல்கள் வெளியாகி பல பதிப்புகள் கண்டுள்ளன. ஹிட்லரின் ‘எனது போராட்டம்’ (மெயின் காம்ஃப்) ப.ராமஸ்வாமி மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது – ஹிட்லர் எழுந்து வந்துகொண்டிருந்தபோதே அந்நூல் மலேயாவில் அச்சாகி இங்கே விற்பனையாகிக்கொண்டிருந்தது.

டி.எஸ்.சொக்கலிங்கம், க.சந்தானம் போன்றவர்கள் ஜனநாயக அரசியல் பற்றியும்  எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் மார்க்ஸியம் பற்றியும் எழுதினர். புதுமைப்பித்தனேகூட அரசியல் நூல்கள் எழுதினார். ஹிட்லரைப் பற்றிய கப்சிப் தர்பார், ரஷ்யா பற்றிய ஸ்டாலினுக்குத் தெரியும், முஸோலினி பற்றிய ஃபாசிஸ்ட் ஜடாமுனி ஆகியவை உதாரணம். மக்களிடையே உருவான இந்த ஆர்வத்துக்கு உலகப்போர் ஒரு காரணம். அப்போர் வழியாக உலகநாடுகளும் அங்குள்ள அரசியலும் செய்திகளில் அடிபட்டு மக்களை வந்தடைந்தன. போருக்குப்பிந்தைய உலக மாற்றமும் மக்களிடையே ஆர்வத்தை உருவாக்கியது.

அந்த அலை 1960 வரைக்கும்கூட நீடித்தது. அதன்பின் மெல்லமெல்ல இந்திய உள்ளம் அரசியல் மாற்றங்களில் நம்பிக்கை இழந்தது. இந்தியாவில் ஓர் அரசியல் மாற்றம் நிகழுமென்ற வாய்ப்பே இல்லாமலிருந்தது. அந்த நம்பிக்கை கொஞ்சமேனும் கொண்டிருந்தவர்கள் மார்க்ஸியர்கள். அவர்கள் ஒரு கருத்துத்தரப்பாக 1992 வரைக்கும்கூட நீடித்தனர். சோவியத் ருஷ்யாவின் உடைவுடன் அவர்களும் சொல்லிழந்தனர். ஆகவே 1950 களுக்குப்பின் மார்க்ஸிய அரசியல்- தத்துவ நூல்கள் மட்டுமே சற்றேனும் கவனிக்கப்பட்னா. மற்றநூல்கள் வெளிவரவில்லை, வந்தாலும் வாசிக்கப்படவில்லை.

ரஸ்ஸலின் இரு நூல்கள் அக்காலத்தில் தமிழில் வெளிவந்துள்ளன- இரண்டுமே கவனிக்கப்படவில்லை. ஒன்று ரா.ஶ்ரீ.தேசிகன் மொழியாக்கம் செய்த இன்பத்தின் வெற்றி. இன்னொன்று, அ.நடராசன் மொழியாக்கம் செய்த விஞ்ஞானமும் சமுதாயமும். இன்பத்தின் வெற்றி தமிழ்ச்சூழலுக்கு முக்கியமான நூல். அது மனிதன் இங்கே இவ்வாழ்க்கையில் இன்பமாக இருப்பதும் அதற்காக முயல்வதும் எவ்வளவு முக்கியமானது என்று சொல்கிறது. இன்று நாம் நன்கறிந்துள்ள அந்த சென்றகாலங்களில் அடிப்படையே மதங்களால் முழுமையாக மறுக்கப்பட்டு, இவ்வுலக வாழ்க்கை என்பது முக்தி அல்லது விண்ணுலகும் போன்ற  வேறொன்றின்பொருட்டு துயரங்களை அனுபவிப்பது மட்டுமே என்று எப்படி நிறுவப்பட்டிருந்தது என்றும் விவரிக்கும் நூல்.

இன்றைய மார்க்ஸியக் கொள்கைநூல்களைப் போலன்றி தகுதியானவர்களால் தெளிவனா நடையில் மொழியாக்கம் செய்யப்பட்டவை இந்நூல்கள். இவை ஏன் வாசிக்கப்படவில்லை என்பதற்கான காரணம் ஒன்றே. இங்குள்ள இடதுசாரிகள் அவ்வாசிரியர்களை விரும்பவில்லை. குறிப்பாக ரஸ்ஸல் ஏகாதிபத்திய ஆதரவாளராக கருதப்பட்டார். இத்தனைக்கும் ரஸ்ஸல் இடதுசாரி இயக்கங்களை ஆதரித்தவர், உலகப்போரில் ஈடுபட மறுத்து சிறைசென்றவர், அமெரிக்காவின் வியட்நாம் போரை எதிர்த்து இயக்கத்தை நடத்தியவர்

இடதுசாரிகளின் எதிர்ப்புக்கான காரணம் விஞ்ஞானமும் சமுதாயமும் நூலில் உள்ளது. ரஸ்ஸல் அதில் ஸ்டாலினை அறிவியலின் விளைவாக உருவான ஆற்றல்மிக்க அரசுகளை கட்டுப்படுத்தி ஆளும் கொடுங்கோல் சர்வாதிகாரியாகவே காண்கிறார். நவீனத் தொழில்நுட்பமே சுரண்டல்கருவியாக மாறி கோடிக்கணக்கான மக்களை உழைப்படிமைகளாக ஆக்குவதற்கான உதாரணமாக ஸ்டாலினின் ருஷ்யாவைச் சுட்டிக்காட்டுகிறார்

மார்க்ஸியம் ஓர் அறிவியல்கொள்கை என மார்க்ஸியரன்றி அறிவியலாளர் எவரும் சொல்வதில்லை. இன்று எல்லா மதங்களும், எல்லா மூடநம்பிக்கையாளரும் தங்கள் தரப்பு அறிவியல் ஆதாரம் கொண்டது என்றுதான் சொல்லிக்கொள்கிறார்கள். போலி அறிவியல் என ஒரு துறையே உருவாகியுள்ளது. கிறிஸ்தவ மதத்தின் உலகசிருஷ்டிக் கொள்கையை ஆதரிக்கும்பொருட்டே சிருஷ்டிவாதம் (Creationism) என்னும் போலி அறிவியல்கொள்கையே ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டு பலகோடி ரூபாய் செலவில் போலி பல்கலைக்கழகங்கள் வழியாக நிலைநிறுத்தப்படுகிறது.

உண்மையில் இந்த மனநிலைக்கு  முன்னோடி நவீன அரசியல்மதமாகிய மார்க்ஸியம் தன்னை ஓர் அறிவியல் என திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டதேயாகும். எந்த அறிவியல்முறைகளின் படி அது புறவயமாக நிறுவப்பட்டது, எந்த நிரூபிக்கப்பட்ட அறிவியல் கொள்கையைச் அது சார்ந்துள்ளது என்பதற்குப் பதிலேதும் சொல்லப்பட்டதில்லை. அதை மறுபரிசீலனை செய்ய முயல்பவர்கள் அனைவரும் அதன் எதிரிகள் என முத்திரைகுத்தப்பட்டனர்,  அவர்களின் மறுபரிசீலனைகள் எல்லாமே உள்நோக்கம் கொண்ட அவதூறுகளாக சித்தரிக்கப்பட்டன, எத்தனை அப்பட்டமான தோல்விகளை அடைந்தாலும் மார்க்ஸியம் மகாஞானியாகியும் தீர்க்கதரிசியுமாகியய மார்க்ஸால் முன்வைக்கப்பட்டமையாலேயே  அது மறுக்கமுடியாத உண்மை என அவர்கள் நம்புகின்றனர். இது மதத்தின் அதே மனநிலைதான்.

கார்ல் மார்க்ஸ் தன் கொள்கையை டார்வினின் பரிணாமக்கொள்கைக்கு நீட்சி என நம்பினார். டார்வினின் பரிணாமக்கொள்கையை சமூகவியலில் விரிவாக்கியதே மார்க்ஸியம் என நினைத்தார். மூலதனம் நூலுக்கு டார்வினின் முன்னுரையை நாடினார், டார்வின் அதற்கு மறுத்துவிட்டார். அறிவியல்மோகம் மார்க்சியத்திற்கு உண்டு. ஆனால் அது மார்க்ஸியத்தை ஏற்கும் அறிவியலாக இருக்கவேண்டும். ஸ்டாலின் அதை தெளிவாகவே சொல்லியிருக்கிறார். ஸ்டாலினின் ருஷ்யா ஐன்ஸ்டீனின் சார்புக்கொள்கை உட்பட நிரூபிக்கப்பட்ட ஏராளமான அறிவியல்கொள்கைகளை அவை மார்க்சியத்துக்கு எதிரானவை என்பதனால் அறிவியல் அல்ல என்றே சொல்லிவந்தது.

இந்த மனநிலையால்தான் இங்கே ரஸ்ஸல் மார்க்ஸியர்களால் நிராகரிக்கப்பட்டார்.  ரஸ்ஸலின் நூல்களில் இதுவரை மொழியாக்கம் செய்யப்பட்டவையாவது தமிழில் மீண்டும் வெளிவந்தாகவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைகரந்தை குந்துநாதர் ஆலயம்
அடுத்த கட்டுரைஉடன்பிறந்தார் சந்திப்பு -கடிதம்