தட்டச்சு இயந்திரத்தில் பியானோ

அன்புள்ள ஆசிரியர்க்கு

இங்கே எல்லாமே அளவிடப்பட்டு தான் வழங்கபட்டுள்ளது போலும் அதுவும் மானுடனுக்கு அளந்து அளந்து கொடுக்கப்படுகிறது. ஒரே ஒருமுறை மூச்சைச் கூட நம்மால் வழங்கப்பட்ட அளவை தாண்டி விட்டுவிட முடியாது. காலவரையற்ற அளவிடமுடியாத ஒன்று அவனுக்கு வழங்கப்படவில்லை. “காலம்” என்ற சொல்லே என்னை அத்தனை ஈர்க்கிறது.

நாம் நேசிப்பதும் நம்மை ஆராதிப்பவரும் என்றும் நம்முடனே இருப்பதில்லை.  இதோ எதுவுமே பேசாமல் காரணமே இன்றி சிரித்து ததும்பி வழிந்து கொண்டிருக்கும் நாம் என்றைக்கும் இப்படியே தான் நீடிப்போம் இந்த கணங்கள் முடியவே போவதில்லை என்று எண்ணாதவர் மிகக் குறைவு. அப்படியான ஒன்று நிகழ்வதில்லை சமயங்களில் ஏன் முடிந்தது என்னவாயிற்று என்று கூட அறியமுடிவதில்லை ..யாரிடம் போய் கேட்பது? கூடவே இருந்த காலத்திடம் தான் கேட்க வேண்டும் ஆனால் யார் கேட்க முடியும்? கவிஞன் கேட்பான் அந்த துணிவும் உரிமையும் அவனிடம் உண்டு.

கவிஞர். இசையின் கேள்வி அதிகாரத்துடன் அல்ல ஆற்றாமையோடு வருகிறது சிறிது கெஞ்சலாகவும்

அந்த இளமிருள் பொழுதில்
மொத்த மலைக்குமாக
நாம் இருவர் மாத்திரமே இருந்தோம்
நமது தலைமேல் மரக்கிளையில்
தொங்கிக் கொண்டிருந்தது காலம்

நாம் வெறுமனே
மோட்டர் பைக்கில்  சுற்றித் திரிகையில்
பெட்ரோல் டேங்கில் குந்திக் கொண்டு
கூடவேதான் வந்தது காலம்.

நான் சீக்கிரமே  போய்விடுவேன்
  என்று
  ஒரு சொல் சொல்லியிருக்கக் கூடாதா?”

தருணங்களும் நிகழ்வுகளும் நிறைந்த இவ்வாழ்வில் கொப்பளிப்புகள் அடங்கிய பின் சிந்திக்கும் போது அவை அதி அற்புதமான கணங்களாகவே இருந்திருந்தாலும் ஏதோ ஒன்றை கூட்டவோ குறைக்கவோ தோன்றும் சிலதை தவிர்த்தோ தள்ளியோ போட்டு இருக்கலாம் என எண்ணுவது இயல்பு.

இங்கே அனைத்தும் ஒருங்கி ஒரு அழகியத் தருணத்தை சட்டகத்தில் உறைய வைக்க போகும் கடைசி நேரத்தில் ஒரு குட்டி பெண் சொல்கிறாள் “ஒன் மினிட் ப்ளீஸ்” படம் எடுக்க வந்தவன் எத்தனை ஒன் மினிட்களை தன் வாழ்வில் தவறவிட்டுள்ளோம் எனத் திகைக்கிறான். அவள் அந்த சட்டகத்தில் ஏதோ ஒன்றை சேர்க்க விரும்பி இருக்கலாம் அல்லது தவிர்க்க. ஒருவேளை தன் பொம்மையை நினைத்திருப்பாள் அல்லது தன் ஓட்டை பல்லை.. நான் என் வாழ்வில் தவறவிட்ட ஒன் மினிட்களை நினைத்து பார்க்கிறேன் ஆற்றாமையோடு புன்னகையும் சேர்ந்தே வருகிறது

கடற்கரையில் களித்திருந்த ஒரு குடும்பம்
போட்டோ எடுத்துத் தரக் கோரியது.

கடலையும் வானையும்
அவர்களோடு கோர்த்து
ஒரு சட்டகம் செய்தேன்.
க்ளிக் செய்யப் போன
கடைசித் தருணத்தில்
ஒன் மினிட் ப்ளீஸ்
என்றொரு
குரலுயர்ந்து தடுத்தது.

அது ஒரு குட்டிப் பாப்பா.

இந்தப் படம் எடுப்பவன்
கடைசித் தருணத்தில்
சொல்லத் தவறிய
அத்தனை ஒன் மினிட்களிலும்
மோதி ஒலித்தது
அந்த ஒன் மினிட்.

விடிந்ததும் கடமைக்காக கடனுக்காக காதலுக்காக என ஏதாவது ஒன்றுக்காக ஓடிக்கொண்டு இருக்கிறோம் எத்தனை ஆயிரம் திட்டங்கள் பலநூறு கனவுகள் காழ்ப்புகள் என்று கொப்பளித்து நுரைக்கும் நாளில் மெல்ல வந்தனையும் அந்தி. கூடனையும் பறவைகள் முதல் தொழுவத்தை வந்து சேரும் கால்நடைகள் வரை அனைத்து உயிர்களும் ஆசுவாசத்தை உணர்கின்றன இனி பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை என்பது சற்று ஆறுதலை அளிக்கின்றது. இது நிரந்தரமில்லை விடிந்ததும் தொடர போகிறது என்றாலும் ஒரு சின்ன இனிய இடைவேளை இளைப்பாறல். அந்தியின் ஒளியில் சுடர் விடுகிறது அனைத்தும். மெல்ல மெல்ல ஆழத்திற்கு திரும்புகிறது இங்குள்ளவை.

இதில் காதல் நோய் கொண்டவரை சேர்க்க இயலாது அவர்களுக்கு பெருந்துன்பமே அப்போது தான் ஆரம்பம்.  சங்கப்பாடல்கள் முழுக்க அந்தியை வெறியோடு விரட்டி உள்ளார்கள். கவிஞரே நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளார். ஒரு நூலுக்கு ” மாலையில் மலரும் நோய் ” என்று தலைப்பிட்டு வேதனையை வெளியிட்டும் உள்ளார். ஆனால் அந்தி அன்னை மடிப் போல் எல்லாவற்றையும் ஏந்திக் கொள்கிறது  சோர்வும் சலிப்பும் நிறைந்த வெற்று கைகளோடு இருக்கும் ஏதும் ஆற்றாதவனையும் பெருங்கருணையோடு “போதும்” என்கிறது இவ்வளவு போதும் என்ன குறைந்து விடபோகிறது விடு என்கிறது…

அந்தியில் மிதக்கும்
வெண் கொக்கு
மங்கலாகி விடுகிறது.
அந்தி
எல்லாவற்றையும்
மங்கலாக்க விரும்புகிறது.
நமது மூர்க்கத்திற்கெதிராய்
ஒவ்வொரு நாளும்
தெய்வீகத்தை ஏந்தி வந்து
போராடுகிறது அது.
மங்கும் வேளையில்
வானில் விசாலத்தில்
கடலின் ஆழத்தில்
வேறொன்று உதிக்கிறது
நிலவுக்கு முன்.
மங்க மாட்டாது எரிந்து கொண்டிருக்கும் ஒருவன்
மோட்டார் சைக்கிளை மேலும் முடுக்குகிறான்.
அந்தியின் வசமிருப்பது
ஒரே ஒரு சொல்தான்.
ஒன்றே ஒன்று என்பதால்
அது ஒரு மந்திரம்.
நாள் முழுக்க
ஒன்றுமே செய்யாத ஒருவனிடமும்
அது
அவ்வளவு பரிவுடன் சொல்கிறது
போதும்…! “

கவிதை என்றால் என்ன? என்பதற்கு உலகம் முழுக்க விளக்கங்கள் உள்ளன அவை எல்லாம் சரியானவையாகவும்  இருக்கலாம் ஆனால் கவிஞர். இசை கொடுக்கும் விளக்கம் அவரது கவிதையை போலவே அழகானது

கவிதை என்பது எது?

தட்டச்சு இயந்திரத்தில்
பியானோ வாசிப்பதுதான்
அது.

புனைபெயரை ஆழ்ந்த யோசனையோடு தான் வைத்திருப்பார் போல. அவரது தட்டச்சு இயந்திரத்தில் இன்னும் அற்புதமான மனதை மயக்கும் இசைக் கோர்வைகள் வர வேண்டும்.

ஜுன் ஒன்றாம் தேதி பிறந்தநாளை கொண்டாடும் கவிஞர். இசைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அனைத்து மங்கலங்களும் நிறையவும் இறையருள் கூடவும் பிராத்திக்கின்றேன். எப்போதும் மகிழ்ந்திருங்கள் இசை.

மிக்க அன்புடன்

தேவி. க

ஆவடி.

முந்தைய கட்டுரைகாண்டீபனை கைது செய்த காதலி- நிர்மல்
அடுத்த கட்டுரைஅரூ அறிவியல் சிறுகதைப்போட்டி முடிவுகள்