மகாபாரத இதிகாசத்தின் அடிப்படையில் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு நாவல் வரிசையில் கண்ணனின் கதையை ராதையின் கண்கள் வழியாக கூறும் தனித்த நாவல் இது.
பாரத காவியத்தில் ராதையின் கதை இல்லை, பக்தி இயக்கம் உருவான காலகட்டத்தில் பக்திக்கு இலக்கணமாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரம்தான் ராதை.
கம்சனிடமிருந்து குழந்தைக் கண்ணனை காக்க வேண்டி மதுராவிலிருந்து கோகுலத்திற்கு வசுதேவர் அவனை சுமந்துச் செல்கிறார், ராதை வாழ்ந்த ஊர் வழியாக யமுனையில் படகில் செல்லும் போது கண்ணனின் பாதங்களை ராதையின் கண்கள் காண்கின்றன, அந்த நொடியிலேயே கண்ணனின் மீது இனம்புரியா மையல் கொள்கிறாள் ராதை.
காதல், நட்பு, தாய்மை, தோழமை போன்ற சராசரி மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட பக்தி கொண்டவளாக வாழ்கிறாள். இவளின் உன்னதமான கிருஷ்ண உபாசனை ராதாமாதவம் என்று தனி யோகமரபாகவே இன்றும் விளங்குகிறது .
ஒரு கட்டத்தில் வாழும் சூழலை மறந்து கண்ணன் ஒருவன் மட்டுமே மனமெங்கும் உறைந்த நிறைத்தனிமை கொண்ட பித்துத் தன்மை அடைகிறாள் ராதை.
அவளது அன்னை, உறவுகள், தோழியர் எவருமே அவளை புரிந்துக்கொள்வதில்லை, யசோதையும் ரோகிணியும் மட்டுமே அவள் நிலை உணர்கிறார்கள்.
பொன் வெளியே, பொற்கதிரே, வானம் விளைந்த மணிவயலே, விண்ணறிந்த பறவைகளே எச்சொல்லால் என்னை நான் முன்வைப்பேன் என்று தன்னிலை கூற இயலாது தவிக்கும் அவளது ஆழ்மன உணர்வுகளை துல்லியமாகக் கூற கவித்துவமான ஒரு மொழி நடையை புத்தகம் முழுவதும் கையாள்கிறார் ஜெயமோகன். ஒரு வாக்கியத்தில், நீலச்சிறுதழல் என்று குழந்தை கண்ணனை வர்ணிக்கிறார்,
இது போன்ற புதிய சொற்றொடர்கள் வாசிப்பை இனிமையாக்குகின்றன.
இந்த மொழி வீச்சும், நூலின் உள்ளடக்கமும் ஆன்மீக நாட்டமில்லாத வாசகர்களுக்கு சற்று மிகையாகத் தோன்றலாம். ஆயினும் மிகையான நம்பிக்கைதான் பக்தியாகிறது, மிகைப்படுத்தப்பட்ட மனிதம்தான் கடவுள் எனப் போற்றப்படுகிறது, அதன் மிகையில்தான் தன் இன்மையை, இயலாமையை, துயரத்தை மறக்க கற்றது மனிதகுலம். பூதகி, சகடாசுரன், காளிங்க வதங்கள், கோவர்த்தன மலையை தூக்கியது போன்ற கண்ணனின் பராக்கிரமங்களும் இடை அத்தியாயங்களில் சூதர்கள் பாடல்களின் வழியாக கூறப்படுகிறது.
குருட்சேத்திர போரில் எண்ணற்ற உயிர்கள் பலியான நேரத்திலும், கருணையுள்ள அறம் என ஒன்றில்லை என்று கீதை உபதேசித்த கண்ணன், ராதை என்ற ஒற்றை உயிரின் மறைவைக் கேட்டு மனங்கலங்கி குழல் வாசித்து நிற்பதோடு நாவல் நிறைவடைகிறது .
வாசகரின் பொறுமையை கோரும் நாவல், வாசித்தால் அற்புதமான வாசிப்பனுபவம் கிட்டும்.
ராஜன் யயாதி (வாசிப்பை நேசிப்போம் குழுமம்)