காஞ்சி பெரியவர் சொன்னாரா?

ஜெ,

நேருவிடம் அதிகார மாற்றத்திற்கான அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டது என்பதை முதலில் நினைவுக்கூர்ந்தவர் காஞ்சி பெரியவர் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இது முழுக்கவே பொய்யின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை. ஆர்வமூட்டுவதாக இருப்பதால் உங்களுடன் பகிர்கிறேன்.

இந்த நிகழ்வை காஞ்சி பெரியவர் 1978ல் நினைவு கூர்ந்தார் என கூறுகிறார்கள். ஆனால் அதை எவரும் 40 வருடமாக எங்கும் பதிவு செய்யவில்லை. தேவார டாக்டர் ரா சுப்பிரமணியம் என்பவர் 2019ல் வெளியான பொன்னார்மேனியனுடன் பொன்னான நாட்கள் என்ற நூலின் 3வது பாகத்தில் தான் இதை முதன்முறை குறிப்பிடுகிறார். இந்த நூலில் காஞ்சிப் பெரியவர் பேசுவத்தை போலவே அவரின் சொற்களில் இந்த நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன.

2017ல் சிறிய குறிப்பாக தொடங்கி 2019ல் விரிவான கட்டுரையாக வலம் வந்துக்கொண்டிருந்த இந்த வாட்ஸாப் செய்தியின் அதே சொற்களை 1978ல் காஞ்சி பெரியவர் சொன்னதாக இந்த நூல் சொல்கிறது. 2019 டிசம்பரில் வெளிவந்த இந்த நூலை பற்றி மே 2021ல் குருமூர்த்தி துக்ளகில் எழுதுகிறார். குருமூர்த்தி சொல்வது.. இந்த செய்தியை நேரடியாக காஞ்சிப் பெரியவர் சொல்லி கேட்டது மேட்டூர் சுவாமிகள். ஆனால் அவர் எங்கும் இதை பதிவு செய்யவில்லை. வேறு எவரேனும் பதிவு செய்துள்ளார்களா என தேடி வந்தேன். 2019ல் இந்த புத்தகத்தில் பதிவாகி விட்டது என கூறுகிறார்.

காஞ்சி பெரியவரின் உரைகள் 7 தொகுதிகளாக தெய்வத்தின் குரல் என வெளிவந்துள்ளது. அது அல்லாது அவரது வாழ்க்கை வரலாறு, அவருடனான அனுபவங்கள் என விரிவாக பதிவு செய்யப்பட்டது அவரது வாழ்க்கை. 40 ஆண்டுகளாக அவர்கள் எவராலும் பதிவுசெய்யப்படாத ஒரு நிகழ்வு வாட்ஸாபில் இந்த செய்தி வலம் வரதொடங்கியப்பின் பதிவு செய்யப்படுகிறது என்றால் அதன் நம்பகத்தன்மை தான் என்ன?

சந்தோஷ் சரவணன்

முந்தைய கட்டுரைகனடாவில் பாவண்ணனும் சாம்ராஜும்
அடுத்த கட்டுரைக.சச்சிதானந்தன்