குலதெய்வத்திற்கு ஒரு கோயில் – அனந்தமுருகன்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

நெடு நாள் கனவொன்று நிறைவேறியதின் நிறைவில் இக்கடிதம் எழுதுகிறேன்.கனவு நனவாகி 2 மாதங்களுக்கு பிறகுதான் இக்கடிதம் எழுதும் மன நிலை அமைகிறது. கோயில் ஒன்று நிர்மாணிக்கும் வேலை கடந்த ஏப்ரலில் தொடங்கினேன்.

எங்களது முன்னோர்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சிறிய குல தெய்வ கோயில் அமைக்கும் எண்ணத்தில், சில கற்களை எங்கள் ஊரான ஆறுமுகனேரியில் (திருச்செந்தூர் அருகில்) கொண்டு வந்து வைத்திருந்தனர். அதற்கு பிறகு அவர்கள் பெரிய வேலைப்பாடுடன் கூடிய 2 வீடுகளை கட்டி இருந்தனர். ஆனாலும் அக்கோயில் குடிசையாகவே இருந்தது

எனது அம்மா அதனை அவர்களால் இயன்ற அளவு பாதுகாத்து வந்தார். பாதகரை சாமி,பாதாள வடிவு அம்மன்,மும்மூர்த்தி ,பேச்சி அம்மன், சுடலை மாடன் ஆகியவை அங்குள்ள தெய்வங்கள்.அக்குல தெய்வ கோயிலை  முன்னோர்களின் கற்களை கொண்டும், மேலும்  கற்கள் வாங்கியும்  கட்டினால்  சிறப்பாக அமையும் என்ற  எண்ணம்  மனதில் இருந்ததால், அதற்காக  யோசிக்கவோ நடை முறை படுத்தவோ பெரும் தயக்கமாகவே இருந்தது.

தங்களது கீழ்கண்ட  வார்த்தைகள்  கொடுத்த  பலத்தில் தொடங்கி விட்டேன்.

” அது வானைநோக்கி நாம் செய்யும் ஓர் இறைஞ்சுதல் மட்டும்தான்வானிலிருந்து கொடை வந்துவிழலாம்ஆனால் நம்முடைய கையில் இருக்கும் கலம் பழுதற்றதாக இருக்கவேண்டும்அதை அவ்வாறு அமைக்கவேண்டியது நம் கடன்“.

மேலும் ,ஒவ்வொரு முறை அந்த வளாகத்தில் நுழையும்போதும் தங்களது கீழ்கண்ட வாசகங்களை உள்ளுக்குள் உச்சரித்து கொண்டே இருந்தேன்.

ஆலயம் முற்றிலும் நேர்நிலையில் நின்று கட்டப்படுவதுஅது மானுடகுலத்தை முழுக்கத் தழுவி எழும் ஒரு பெருநிலையில்தான் உருவகிக்கப்படுகிறதுஅதற்கு எதிரிகள் இல்லைமாற்றார் இல்லைஅது வானைநோக்கி மானுடன் செய்யும் ஒரு மாபெரும் தவம்ஒரு கனிந்த நிலைஆலயத்தை அமைப்பவர்களும் அதே மனநிலையில் இருந்தால்தான் அது ஆலயம்.”

நீங்கள் எழுதியது போல் கோயில் கட்ட ஆரம்பித்த வுடன் பல விதமான  மன நிலை கொண்ட குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் , ஊரில் உள்ளவர்களும் முற்றிலும் நேர் நிலையில் நின்று அதனை உருவாக்கினர். மிக சாதாரண வேலை ஆட்கள்கூட மிக அற்புதமான திறமையை வெளிப் படுத்தினர்.சிறிய கோயிலாக இருந்தாலும் பணிகள் மிக நிறைவாக முடிந்தது. கும்பாபிகேஷகமும் சிறப்பாக நடந்தது.

கோயில் பணிகள் நிறைவுற்று கோயிலை நிமிர்ந்து பார்த்தபோது ,கோயில் என்பது மனிதர்கள் தங்களுக்குள்  உறைந்த  உன்னதங்களை  மொத்தமாக உருவேற்றி  தங்கள்  முன்னாலேயே அதற்கு   ஒரு உருவம் கொடுத்து , அதனை ஒவ்வொரு முறை வழிபடும்போதும் தங்கள் அன்றாட  எளிய  மன நிலையில் இருந்து அந்த உன்னத நிலையை  நோக்கி தவம் செய்யும் இடம் என்றே தோன்றியது.

கோயில் அருகில் ஒரு திறந்த வெளி அரங்கம் அமைத்து கலை. இலக்கிய, இசை, நடன நிகழ்வுகள் நடத்தவும் எதிர்கால திட்டம் உள்ளது.

கோயில் அமைக்கும்போது அங்குள்ள பழைய தூண்களையும்  அருகில் உள்ளமரத்தையும்    பார்க்கும்போது தங்கள் கல்தூணும் கனி மரமும் தான் நினைவிற்கு வந்தது. அக்கோயிலை சுற்றியுள்ள எளிய மனிதர்களுக்கு அது இரண்டுமாக அமைந்து  ஒரு துளி ஆன்மீக அனுபவமாவது கொடுக்க வேண்டும் என்பது என் அவா.

தங்களுக்கு வணக்கங்கள் . தாங்கள் ஒரு முறை நண்பர்களுடன் வருகை தந்தால் மனம் நிறைவுறும்.

மிக்க நன்றி.

த .அனந்த முருகன்

அன்புள்ள அனந்தமுருகன்,

குலதெய்வங்கள் நம் முன்னோரின் தொடர்ச்சியை நமக்களிக்கின்றன. நம்மை வெறும் குடிமகனும் நுகர்வோரும் அல்லாமல் அகவரலாறும் புறவரலாறும் கொண்டவர்களாக ஆக்குகின்றன. நிறைவான செயல்

வாழ்த்துக்கள். வருகிறோம்.

ஜெ

முந்தைய கட்டுரைஇந்து மதம் என ஒன்று உண்டா?
அடுத்த கட்டுரைரஸ்ஸல் – கடிதங்கள்