தனித்திருத்தல் – கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு ,

வணக்கம் .

சிறுவனாக 1996 பொதுத் தேர்தல் முதல் சில  தேர்தல்களுக்கு தேர்தல்  முடிந்து வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கும் நிகழ்வை ‘அதிலும் இன்னார் என்னும் நான் ..என அவர்கள் ஆரம்பிக்கும் பதவிப் பிரமாணத்தை கண் சிமிட்டாமல் ஏதோ ஒரு ஆர்வத்தில் பார்த்தவன் நான் .

ஆனால் அவை அளிக்காத மன எழுச்சியை நேர்மறை உத்வேகத்தை தங்களின் ‘ கூட்டத்துடன் தனித்து இருத்தல் ‘ உரையைக் கேட்டு அடைந்தேன்

அதிலும் குறிப்பாக ‘இது ஒரு நூலில் இருந்து படித்ததாகவோ வேதாந்த உரைகளில் இருந்து கற்றுக்கொண்டதாகவோ நான் சொல்லவரவில்லை ..இது ஜெயமோகன் என்னும் மனிதன் முப்பது ஆண்டுகள் வாழ்ந்து அவனே அடைந்த விஸ்டம்’..இதற்காகவே மறுபடி மறுபடி கேட்டேன்.

ஐந்து வகையான ஆனந்த நிலைகள் மற்றும்  தேவதேவன், தாயுமானவர் உள்ளிட்டவர்களின் புடை சூழ வந்து இலக்கிய வாசகரே ஆயினும் பழுதுபட்ட மனங்களை  துகிலுரித்து..பண்படுத்த வந்த தங்களின் முன்னத்தி ஏர் பவனிக்கு நன்றிகள் .

அன்புடன்

விக்னேஸ்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

கூட்டத்துடன் தனித்திருத்தல் ஓர் அரிய உரை. ஒரு பக்கம் தத்துவம் இன்னொரு பக்கம் அதன்மேல் படரும் தன்னனுபவக் களம். மையமான விஷயங்கள் எல்லாமே அழகான உவமைகள் மற்றும் படிமங்களாகவே சொல்லப்பட்டன. உவமைமாலை என்றே சொல்லிவிடலாம். நன்றி

ராஜசேகர் இரா

முந்தைய கட்டுரைகாட்சன் உரை
அடுத்த கட்டுரைசி.கனகன்