நலம் என்று நினைக்கிறேன் . இரண்டு வருடங்களாக போட்டி தேர்வுக்காக தயாராகி கொண்டு இருந்ததால் இலக்கியமும் ,பயணமும் இந்த தேர்வுகள் முடியும் வரை வேண்டாம் என்று இருந்தேன். தேர்வில் ஓர் அளவு நல்ல மதிப்பெண்கள் பெற்றும் விட்டேன்.மீண்டும் இலக்கியம் பக்கம் திரும்பி வர எண்ணிய போது தான் தங்கள் காவிய முகாம் பற்றிய செய்தி வலைதளத்தில் வந்து இருந்தது. எனக்கு இலக்கியம் பக்கம் மீண்டும் வர இது நல்வாய்ப்பாக அமைந்தது.நித்தியவனத்தில் இருந்து வந்ததில் இருந்து நான் இரண்டு வருடங்களாக படிக்காமல் வைத்து இருந்த நூல்களை எல்லாம் படிக்க தொடங்கி இருக்கிறேன்.மீண்டும் பயணங்கள் செல்ல தொடங்கியுள்ளேன்.
என்னை மீண்டும் திரட்டிக் கொள்ள காவிய முகாமும் உங்களுடன் பேசிய நேரங்களும் ஒரு தெளிவை எனக்கு கொடுத்தது .இனி நான் செல்ல வேண்டி பாதையை எப்படி அமைப்பது என்பது பற்றி ஒரு புரிதல் கிட்டியது.அதற்கு நன்றி ஜெ.
என் நண்பர்கள் பலர் அந்த தேர்வுகளில் வென்றும் ஒரு நிறைவின்னையுடன் இருப்பதை பார்க்கிறேன்.பலர் மன உளைச்சல்களில் சிக்கி இருப்பதை பார்க்கும் போது எனக்கு அதில் சிக்காமல் இருக்க உங்கள் எழுத்து மூலம் ஒரு பற்றுதல் இருக்கிறது என்ற ஒரு ஆறுதல்.
மீண்டும் மலை ஏற்றம் , புத்தகங்கள் என்று வாழ்க்கையை மாற்றிக்கொண்டு இருக்கிறேன்.சென்ற வாரம் ஒரு மலைப்பயணம் நாகமலை , கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு அருகில் மூன்று மலைகள் நடந்து மேலே செல்ல வேண்டும் மூன்று மணி நேர மலை ஏற்றம் வழி நெடுக மலை கிராமங்கள் வழியாக மேலே செல்ல வேண்டும்.
அங்கு கண்ட சில காட்சிகள் மனதை மிகவும் தொந்தரவு செய்தது ஜெ, நீங்கள் முன் ஒரு கட்டுரையில் அந்தமான் பழங்குடி மக்கள் எப்படி அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் தங்களை ஒரு காட்சி பொருளாக ஆக்கி அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு அவலமான காட்சியை பற்றி எழுதி இருந்தீர்கள்.அதே போன்று ஒரு காட்சி தான் நாகமலையை சுற்றி வாழும் அந்த பழங்குடி மக்களின் குழந்தைகள் அங்கு வரும் பக்தர்களிடன் பிச்சை எடுக்கும் காட்சி மனதை மிகவும் பாதித்தது.அந்த கிராமங்கள் மிகவும் பசுமையாக இருந்தது.அங்கு செல்லும் பக்தர்களுக்கு செல்லும் வழியில் தேவையான உணவு, தண்ணீர், பழங்கள் போன்ற வற்றை விற்று வாழ்கிறார்கள் , விவசாயம் , கால்நடைகளும் அங்கு செழிப்பாகவே இருந்தது.இருந்தும் அங்கு வாழும் குழந்தைகள் அவர்கள் பெற்றோர் முன்னிலையிலேயே பிச்சை எடுக்கிறார்கள்.அவர்களும் அதை அனுமதிக்கிறார்கள்.
அந்த சமயத்தில் இந்த வரிகள் நியாபகத்திற்கு வந்தது.
” காடு முழுக்க பழங்கள் இருந்தும்
மனிதனிடம் கையேந்துகின்றன நெடுஞ்சாலை குரங்குகள்.”
அந்த மலையின் பிள்ளைகளை இப்படி கையேந்த பழக்கிவிட்டோமோ என்ற ஒரு குற்ற உணர்வும் தோன்றியது. உடன் வந்த நண்பர்களை இது பெரிதாக பாதிக்கவில்லை ஆனால் எனக்கு இந்த காட்சி மனதை வருடிக்கொண்டே இருந்தது.
இதே போன்ற வேறு ஒரு நிகழ்வு நான் பயிற்சி மருத்துவராக இருந்த போது இருளர் சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தின் ஆண் அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்தார்.டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தோம்.ஆனால் அந்த ஊர் தலைவர் வந்து எங்களிடம் அது எல்லாம் வேண்டாம் என்றார். நாங்கள் அவர் பணம் பற்றி கவலை படுவதாக நினைத்து அரசு மருத்துவனையில் இலவசம் தான் என்று சொல்லியும் இல்லை அவரின் குடும்பத்தில் ஒரு ஆண் ஆவது வேலைக்கு சென்றால் தான் குடும்பம் நடக்கும் அதனால் அவர் மகன் அவருடன் இருந்தால் அவர்கள் வீட்டில் அனைவரும் பட்டினி கிடக்க வேண்டும் என்றார். நான் அந்த பையனை பார்த்தேன் ஒரு 16 வயது இருக்கும் அவன் தான் தன் தந்தை
உடன் இருந்து அவரை மூன்று நாட்களாக பார்த்துக்கொண்டு இருக்கிறான். நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொன்னோம்.அவரை மருந்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு செல்லும் வழியில் கூட அவர் இறந்து போகலாம் என்றோம் இருந்தும் விடாபிடியாக அவர்கள் மருந்துகள் மட்டும் வாங்கி கொண்டு அவரை அழைத்துக்கொண்டு சென்று விட்டார்கள்.என் சீனியர் மருத்துவர் கொஞ்சம் பணம் கொடுத்து வழிச்செலவுக்கு வைத்துக்கொள்ள கொடுத்தார் அவர் பல முறை மறுத்தார் இறுதியாக வாங்கி கொண்டார். அவர்கள் செல்லும் போது நான் தான் சென்று அவருக்கு வழி எடுக்காமல் இருக்க ஊசி செலுத்தி அனுப்பி வைத்தேன். அவர்கள் கண்களில் கண்ட நன்றி உணர்வு இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது.நம் பழங்குடி மக்களுக்கு நாம் போதிய உதவிகள், அவர்கள் வாழ்வாதாரங்களை நாம் மேம்படுத்த நாம் போதிய செயல்களை செய்யவில்லையோ என்ற எண்ணம் தோன்றியது.
அந்த நாகமலை கிராமங்களில் ஒரு ஆரம்பப்பள்ளி மட்டுமே இருந்தது , மருந்துவ வசதி போதிய அளவு இல்லை என்றே பட்டது . அரசு மருத்துவமனையும் கீழே அடிவாரத்தில் தான் இருக்கிறது.நாம் நம் பழங்குடிகளுக்கு போதிய மரியாதையும் , அவர்களை மேம்படுத்த ஏதும் செய்வது இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
சுகதேவ்
மேட்டூர்.