கண்டடைதல் எனும் வார்த்தையின் அர்த்தம் மிகப் பெரியது ஆசானே. நம்மை வந்தடையும் கண்டடைதல் என்பது நம் நல்லூழே.
இன்று தமிழ் விக்கியில் வந்த அருட்செல்வப்பேரரசன் பற்றிய பதிவினை படித்து விட்டு கீழே குறிப்பிட்டிருந்த வலைதளங்களை தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். அவரின் வலைதளம் சென்று மீண்டும் உங்களின் வலைத்தளத்திற்கே வந்து சேர்ந்தேன். “ஜெயஶ்ரீயின் வீடு” கட்டுரையில் பேக்கர்பாணிக் கட்டிட வரைவாளர் பிஜு பாஸ்கரன் என்ற பெயரைத் தொடர்ந்து சென்று நான் நின்றது www.thannal.com எனும் தளம்.
இந்த தளம் பிஜு பாஸ்கரன் அவர்கள் நடத்தும் “சிறு துளியும் சிமெண்ட் இல்லாமல் அனைவருக்குமான இயற்கை கட்டுமானம்” என்பதே கொள்கையாக திருவண்ணாமலையில் இயங்கும் ஓர் அமைப்பினுடையது. இயற்கை கட்டுமான பொருட்களைக் கொண்டு, பாரம்பரிய முறையிலான கட்டிடங்களை கட்டுவது, அதற்கான இடுபொருட்கள் தயாரிப்பு, உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வீடு கட்டுவது, இவை தொடர்பான நேரடி வகுப்புகள், ஆன்லைன் வகுப்புகள், கட்டுரைகள், காணொளிகள் என முழுக்கவும் நிறைந்து வழிகிறது.
லாரி பேக்கர் பாணியிலான கட்டிடங்கள் இந்த நவீன உலகின் அத்தனை வசதிகளுடன் இருக்கின்றன. நான் கட்டுமானம் தொடர்பான படிப்பு படிக்கவில்லை என ஏக்கமாகப் போயிற்று. ஆனாலும் கூட பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள பதிவு செய்துவிட்டேன் .
இந்த பயிற்சி வகுப்புகளில் ஒன்று அவரவர் வீட்டை அவர்களே கட்டுவது. சிறந்த தொழில் நிபுணர்களின் உதவியுடன் நாமே வீடு கட்டும் பணி முழுவதையும் செய்யலாம். மிகுந்த மன நிறைவை தருவது அல்லவா. வரும் காலத்தில் நிச்சயம் லாரி பேக்கர் பாணியிலான வீட்டை எனக்காக நானே வடிமைத்து கட்டிக் கொள்வேன் ஆசானே. பயிற்சிகள் அனைத்தும் பாடநூல் போல வடிவமைக்கப்பட்டுள்ளன. காணொளிகள் கூட உள்ளன. சேமித்து வைத்து எப்போது வேண்டுமானாலும் கைபேசியில் படித்துக் கொள்ளலாம். உண்மையில் இது ஒரு கனவு போலவே உள்ளது.
வீட்டின் கட்டமைப்பை பற்றி நான் மீண்டும் மீண்டும் தேடிக் கொண்டே இருந்தேன். இரு ஆஸ்திரேலிய அமைப்பு வீடுகளின் வரைபடங்கள் சேமித்து வைத்திருந்தேன். வீட்டின் எந்த இடத்தையும் வீணாக்காமல் காற்றும் வெளிச்சமும் உள்ளே வரும்படி இருக்கும் வரைபடங்கள் எதையும் இணையத்தில் நான் காணவில்லை. நான் கேட்ட எந்த கட்டிட பொறியாளரும் அப்படி சொல்லவுமில்லை. ஆனாலும் தேடிக் கொண்டே இருந்தேன்.
தமிழ் விக்கியின் மூலம் மட்டுமே இது சாத்தியமானது. உங்களுக்கும் விக்கிக்கும் மனம் நிறை அன்புகளும், நன்றிகளும்.
சரண்யா