வில்லின் கதை
உலூபி காண்டீபத்தில் அர்ஜுனனை காதல் கொண்டு கவர்ந்து சென்றாள். வெண்முரசு முழுவதும் அரசியலுக்காக, காதலுக்காக பெண்களிடம் முரண்டும், கடிந்தும், விழைந்தும், பணிந்தும், விலகியும் செல்லும் பாத்திரங்களை காணலாம். காண்டீபத்தின் அலையுலகு அத்தியாயம் உலூபி, அர்ஜுனன் காதலை பேசுகின்றது.
கதையில் உலூபி அதல, விதல, சுதல, ரசாதல, மகாதல, தராதல, பாதாளமென்னும் ஏழு ஆழுலகங்களுக்கும் மேலாக மண்ணுலகுக்கு அடியில் அமைந்துள்ள உலகின் இளவரசி. நாகர்கள் உடல்களோ நீரலைகள் போல் நெளிவுகொண்டவை, அந்த அலையுலக பயணமே பேசப்படுகின்றது.
காதலால் ஆணை கையை காலை கட்டி கவர்ந்து சென்ற பெண், அதுவும் வீரமும், புத்தி சாதூர்யமும் உடைய கள்ளுண்டு ,வில்லாண்டு, மெய்தேர்ந்து என மூன்று முகம் சென்றுகொண்டிருந்த விஜயனை வென்றவள் உலூபி.
அலையுலகின் உலூபியின் நகரம் கதைப்படி மூன்று முகம் கொண்ட த்ரிசிரவசின் ஐராவதீக காட்டுக்குள் உள்ளது. அதன் எல்லைகளை அவள் தாண்ட விழையவில்லை, ஆனால் அவள் மனம் அந்த வனத்தின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள அர்ஜுனனிடம் இருந்தது. உடல் தொடா எல்லைகளை மனம் கடக்கும். எல்லையென சொன்னால், அங்கே போய் முட்டுவதும், காதலால் உள்ளத்தில் கடப்பதும் கதையில் வருகின்றது.
உலூபி தன் அன்பால் அர்ஜுனனுக்கு வேண்டுவன அளிக்கும் பலம் கொண்டவள். பொதுவாக கவர்ந்து செல்லும் பெண்களிடம் வீரர்கள் சொல்லும் சொல்லாக வருவது, இங்கு கவர்ந்து சென்ற பெண், ஆணுக்கு அளிப்பதாக வருகின்றது. கதையில் இந்த வரிகளை பாருங்கள்.
“ “இங்கு நீங்கள் விழைபவை என்ன என்று எண்ணுங்கள். அவை தேடி வரும். மண்ணுலகின் எளிய வாழ்க்கையை ஏன் நாட வேண்டும்?” என்றாள்.”
அர்ஜுனன் விழைவுகளால் மட்டும் இயக்கப்பட்டு வாழ்பவன் அல்ல, விழைவுகளை தாண்டிய கடமைகளை தன் தெளிவான எண்ணமாக, நோக்கமாக, இலக்காக கொண்டவன். வெற்று விழைவுகள் குழப்பும் இயல்புடையவை, நீர்க் குமிழ்களாக கொப்பளிக்கக் கூடியவை, வரும் வேகத்தில் செல்லக் கூடியவை, செல்லும் வேகத்தில் வந்து நிரம்பக் கூடியவை. கற்பக விருட்சமோ, காமதேனுவோக் கூட மானுட விழைவுகளை முழுக்க கொடுக்கவல்லவை அல்ல. விழைவுகளின் வேகத்தினை தொடுவது ஒளியின் வேகத்தினை நினைப்பதை விட கடினம்.
கதையில் அர்ஜுனன் இதை தெளிவாக சொல்கின்றான்.
““விழைவுகளால் இயக்கப்படும் ஆண்கள் இழிமகன்கள். கடமைகளால் ஆனவர்களையே தெய்வங்கள் விரும்புகின்றன” என்றான் அர்ஜுனன்”
கடமையை செய்வதாக சொல்லவில்லை, கடமைகளால் ஆவதாக சொல்கின்றான்.
கடமை என்பது 21ம் நூற்றாண்டின் சொல் அகராதியில் விரும்பி செய்வதாகவோ, விரும்பாமல் கட்டாயத்தால் செய்வதாகவோ அறியப்படுத்துவது. இங்கு அர்ஜுனன் சொல்வது அந்த அர்த்தத்தில் அல்ல. கடமை தெய்வங்களால் அறியப்படுவதாகவும், விரும்பப்படுவதாகவும் சொல்கின்றான்.
முப்பத்தி முக்கோடி தெய்வங்களால் ஆன புடவியை காண விழி பெற்ற அர்ஜுனன் கடமையால் ஆவதாக சொல்கின்றான். தம்பி என்னும் கடமையை, அண்ணன் என்னும் கடமையை, மைந்தன் என்னும் கடமையை, கணவன் என்னும் கடமையை, வீரன் என்னும் கடமையை,இந்திரபிரஸ்தத்தின் காவலன் என்னும் கடமையை, குருவின் அடி பணியும் மாணவன் என்னும் கடமையை என்பது போல பல அடுக்குகளில் ஒரே நேரத்தில் வெளிப்படுகின்றான். அதில் எது உண்மையில் அர்ஜுனன் என கேட்டால் எல்லாவற்றிலும் உண்மையாக வெளிப்படுவது அர்ஜுனன் என சொல்லலாம்.
நாகங்களால் ஆன உலகில் அர்ஜுனன் நுழைந்ததும் கால்கள் அற்ற நாக உடல் கொள்கின்றான், நாகங்கள் தங்கள் மொழியில் அர்ஜுனனை காண்கின்றன. அர்ஜுனன் கைகளை அவைகள் நாகங்களாக புரிதலில் பேசுகின்றன. நாக உலகின் நாகங்கள் அர்ஜுனனை அச்சப்படுத்த விழைகின்றன , அச்சுறுத்துகின்றன. அச்சத்தினை நினைவுப்படுத்துகின்றன.
“நீ அஞ்சியிருக்கவேண்டும். ஒருகணம் உன்னில் அச்சம் நிகழ்ந்திருந்தால் மானுட எல்லையை கடந்திருக்கமாட்டாய்” என்றது கரியபெருநாகம்.
அர்ஜுனன் “அறிய வேண்டுமென்னும் வேட்கையால் இதை சூடியிருக்கிறேன்” என பதிலுரைக்கின்றான். இது நாகங்களுக்கு சவாலாகின்றது.
நாகங்கள் இதை அதல, விதல, சுதல, ரசாதல, மகாதல, தராதல, பாதாளமென்னும் ஏழு ஆழுலகங்களுக்கும் செலுத்துகின்றன. அர்ஜுனன் அச்சம் கொள்ளுவானா? அச்சத்தில் எல்லை அறிந்து வழி மீளூவானா? இல்லை அறிதலில் மீளூவானா?
கதையில் கீழேழு உலகங்களில் ஏழாம் உலகம் குரோதத்தாலும், ஆறாம் உலகம் காமத்தாலும், ஐந்தாம் உலகம் பேராசையாலும், நான்காம் உலகம் தமோ குணத்தாலும், மூன்றாம் உலகம் அன்பெனும் பொன்னொளி கொண்டும், இரண்டாம் உலகம் ஞானம் கொண்டும், இதை தாங்கும் முதல் உலகம் ஊழ்கம் கொண்டும் அமைந்துள்ளதாக சொல்லப்படுகின்றது.
இப்பயணத்தில் அர்ஜுனன் மெய்மை ஞானம் என்றும் ஞானம் உணர்வு என்றும் உணர்வு விழைவு என்றும் விழைவு செயல் என்றும் செயல் ஆணவம் என்றும் ஆகி உதிர்ந்து கொண்டிருப்பதை கண்டான். முடிவில் ஊழ்கத்தினையும் கடந்து செல்வதாகவும், மீண்டும் பிறந்ததாகவும் கதை சொல்கின்றது. மீள் பிறப்பில் அர்ஜுனன் ஐராவதீக காட்டில் நாகருலகில் இடைக்கு கீழே அரவ வடிவின்றி இன்றி மீண்டும் கால்கள் கொண்டு அமைகின்றான்.
ஆணவம்->செயல்->விழைவு->உணர்வு->ஞானம்->மெய்மை என ஒரு சங்கிலி தெரிகின்றதா?
நம் சமகால சம்சார வாழ்வின் பேச்சு வழக்கில் செயல், ஆணவம், விழைவு, எண்ணம், ஞானம் போன்ற வார்த்தைகள் உதிர்ந்து கொண்டிருப்பதாக கூட எனக்கு சமயத்தில் தோன்றுகின்றது. உலகத்தினையே வெறும் நுகரும் உரிமையாக பார்க்க பழகி கொண்டு இருக்கின்றோமோ? நுகர உரிமை கோருதல், நுகரும் அனுபவம் , நுகர்ந்ததை கொண்டு சமூக அந்தஸ்து அடைதல் போல மிக சுருக்கமாக உலகை மாற்றிக் கொள்கின்றோமோ? அர்ஜுனன் பயணம் கொள்ளும் காண்டீபம் போன்ற நாவல்கள் என்னிடம் இந்த பார்வையை மாற்றி நாம் உலகத்தினை புரிந்து கொள்ள முயற்சி எடுக்க மேலும் வார்த்தைகள் தேவை, வெறும் உரிமையும், நுகர்வும் என்ற வார்த்தைகள் மட்டும் போதாது என சொல்கின்றது. ஒரு வழிகாட்டியாக தனிப்பட்ட முறையில் உதவுகின்றது. இந்த நாவலில் உலூபி தங்கள் புற்றில் ஒரு இடத்தில் ஒளியை வைத்தால் மொத்த புற்று வீடும் ஓளி கொள்ளும் என சொல்லுவாள். காண்டீபம் அப்படி ஒரு ஓளியைதான் வைக்கின்றது.
அர்ஜுனன் பயணத்தில் முக்கியமானது அர்ஜுனன் தன்னை விக்டிமாக்கி புலம்புவதில்லை, எது தேவையோ அதை வீரம், புத்தியின் வழியே பெற்றுக் கொள்கின்றான். அச்சமின்மை, எந்த துயரத்திலும் கற்றுக் கொள்ளுதல் போன்ற இயல்புகளை கொண்டு விடாமல் முன்னகருகின்றான். (பின் குறிப்பு: விஷாத யோகம் என அர்ஜுனன் புலம்புவதையே யோகமாக்கியவன் என யாரும் சொல்லி இந்த நேரத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சியை உருவாக்கிக் கொள்ளவும் இடம் உள்ளது.)
அசட்டுத்தனம், கையறு நிலை, வன்மம், வஞ்சம் எதுவுமில்லை. உலூபி காதலிக்க என சொல்லி ஏமாற்றி ஏழுழகின் கீழே தள்ளிக் கொல்கின்றாளே என புலம்புவான், பஞ்சம் பாடுவான் என எதிர்பார்த்தால் அக்காட்சிகள் நிகழ்வதில்லை. காதலியால் கீழேழு உலகையும் சந்தித்து மீள்கின்றான்.
உலூபியின் காதலை முதலில் ஏற்க மறுத்து அகலும் காண்டீபன் , அதே காதலில் விட்டில் பூச்சி நெருப்பினை கண்டது போல விழுகின்றான்.
“பெண்களால் சிறைபிடிக்கப்படுவதை நான் விரும்புவதில்லை” என்று சொல்லி விலகி சென்ற அர்ஜுனன் பிறிதொன்றிலாமை என்னும் முள்முனையில் நின்றவளின் காதலினை தேடி சென்று சரணடைகின்றான்.
இக்கதையில் உலூபியிடம் அர்ஜுனன் தான் அவளிடம் கண்டதை சொல்கின்றான்.
“பிறிதொன்றில்லாத முழுமை ஒன்றுக்காக என் அகம் தேடிக்கொண்டிருந்தது. நிகர்வைக்கப்படாத ஓரிடம். நான் மட்டுமே அமரும் ஒரு பீடம்” என்றான் அர்ஜுனன்.”
ஐவரில் ஒன்றாக இருந்தவன், உலூபியிடன் கண்டது இதைத்தான்.அவள் பொருட்டு குலமூத்தாரிடம் பேசுகையில் நாகர் குல மூத்தார் அவனிடன் எச்சரிக்கை விடுத்தனர். காதலின் பொருட்டு உயிர் துறக்கவும் சரி என அர்ஜுனன் தயராக இருந்தான்.
நாகர்களின் மூதன்னைகளிடம் உத்தரவு வாங்கிய பின்னர் உலூபி, அர்ஜுனன் திருமணம் நடந்தது. நாகர்கள் மூதன்னையரிடம் உத்தரவு வாங்கும் சடங்கு, திருமண சடங்கு, திருமணத்துக்கு பின்னர் பலி கொடுக்கும் சடங்கு ஆகியவை விரிவாக பேசப்படுகின்றது. வெண்முரசின் சடங்குகள் என தனி ஆய்வே கொள்ளத்தக்க அளவில் மிக நுண்ணிய விவரணைகள், உணர்வுகளுடன் சொல்லப்படுகின்றது.
இக்கதையை கேட்டு ஏழுலகங்களினை அறிந்த கவுரவ இளரவரசன் சுபாகுவின் மைந்தன் சுஜயன் பாம்புகள், பலி சடங்குகள் ஆகியவற்றை பற்றி பேசி மாலினி அன்னையின் மடியில் அமர்ந்து மெல்ல உறங்குகின்றான். அன்னை பின்னர் மண்ணில் இட்டு உறங்க செய்கின்றாள். மஞ்சத்தில் உறங்கும் வழக்கமுடைய இளவரசன் அன்று மண் தரையிலும் உறங்க பழகிக் கொள்கின்றான்
காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை