தன்னுடைய அன்றாட வாழ்வில் சிறுகதைக்குரிய வடிவமைப்பு கொண்ட அனுபவங்களின் தொகுப்பு தான் இந்த நூல். வாழ்க்கையின் ஒரு துளி அதிலிருந்து விரியும் கவித்துவம் என்பது இக்கட்டுரைகளின் இயல்பாக இருக்கிறது. இந்தத் தொகுப்பில் 29 அனுபவக் கதைகள் இருக்கின்றன. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் அன்றாட வாழ்வியல், குடும்பம் அவர்களுக்கு இடையே உள்ள பிணைப்பு, இலக்கியம், இலக்கியம் சார்ந்த நபர்கள், பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள உறவு என்று பல்வேறு தளங்களில் இந்தத் தொகுப்பு நம்முடன் பேசுகிறது.
இதில் என் உள்ளம் கவர்ந்தவற்றுள் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.
‘ வாழ்க்கை என்பது அப்பாவாக ஆகிக் கொண்டே இருப்பது’ என்ற ஒரு வரியை கண்டடைந்து அதன்படி தன்னுடைய நினைவு பயணத்தில அப்பாவுக்கும் அவருக்குமான உறவை எண்ணி பார்க்கிறார்.
சிறுவயதில் தன் அப்பாவின் குணாதிசயங்களை கொண்டிருக்காமல் இருக்க அவரால் ஆன அளவு முயன்றிருக்கிறார். அப்பா என்ற மனிதரில் இருந்து குதிகால் தெறிக்க விலகி ஓடி, 50 ஆண்டு கால பயணத்திற்குப் பின்பு திரும்பி பார்க்கும் பொழுது, மெல்ல மெல்ல தன்னை அறியாமல் தான் அப்பாவின் சாயலில் தான் உருவாகிக் கொண்டிருப்பதை உணர்கிறார்.
இது வெகு உண்மை என்பதை இதை வாசிக்கும் நாமும் உணர்வோம். சிறுவயதில் நம் பெற்றோரிடம் எதையெல்லாம் பிடிக்காது என்று நான் எண்ணி இருக்கிறோமோ, அந்த அத்தனை பிடிக்காதவைகளின் தொகுப்பாக நாம் மெல்ல மெல்ல உருமாறிக் கொண்டிருப்பதை வயது ஏற ஏற நம்மால் உணர முடியும்..
ஒரு கட்டிடத்தை வீடாக மாற்றும் மனைவியின் அருமையை காற்று என்னும் கட்டுரை பேசுகிறது..
வாழ்நாள் முழுவதும் குடும்ப பொறுப்பில் இருந்து ஒரு விடுமுறை என்ற ஒன்று, பெரும்பாலான பெண்களுக்கு வாய்க்கப் பெற்று இருக்கிறதா? தன்னை முழுவதும் தன் நட்புகளுடன் ஒப்பு கொடுத்துவிட்டு வீடு, குடும்பம், குழந்தை எல்லாவற்றையும் மறந்து, சில நாட்கள் கல்லூரி பெண்ணாக வாழ்ந்து விட்டு வரக்கூடிய அனுபவம் அனைவருக்கும் கிடைத்து விடுகிறதா? பெரும்பாலான பெண்களின் பதில் (நான் உட்பட) இல்லை……என்று ஒரு பெருமூச்சோடு தான் வரும். அப்படி ஒரு அனுபவம் பெண்களுக்கு கிடைக்கும் பொழுது மனதிற்கு ஒரு புது குளியல் நிகழ்ந்து அந்தப் பெண்ணிற்கு புத்துணர்வு அளிக்கும் என்பதை பல்வேறு இடங்களில் வலியுறுத்தி இருக்கிறார் ஆசிரியர்.
நாம்சாம்ஸ்க்கி சொல்லி இருப்பதைப் போல குழந்தைகள் தான் மொழியை புது இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர். கவிஞர்கள் கூட குழந்தைகளிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தன் மகன் அஜிதன் வாயிலாக குதிரைவால் மரம் கட்டுரையில் சுவைபட கூறி இருப்பார்.
தன் மகன் அஜிதன் பறவை பார்த்ததில் தனக்கு எப்படி ஒரு குருவாயிருக்கிறான் என்பதை காட்டும் குருகு கட்டுரை.. இந்தக் கட்டுரையில் முழுமையாக என்னையும் ,என் குழந்தைகளையும் பொருத்திப் பார்க்க முடிந்தது. அவர்கள் தானே பறவை பார்த்ததலின் சுகத்தை எனக்கு கற்றுத் தருகிறார்கள்.
குருகு பறவைக்கு சங்கப்பாடல்களில் இருந்தெல்லாம் விளக்கங்களை எடுத்துரைக்கும் இந்த கட்டுரை வாசிக்க வாசிக்க அத்துணை அருமை.
சுந்தர ராமசாமி அவர்களைப் பற்றிய ஒரு கட்டுரை… நயத்தக்கோர்..
‘பெயக் கண்டும் நஞ்சுண்டு அமைவர்
நயதக்க நாகரீகம் வேண்டுபவர் ‘
சுந்தர ராமசாமி அவர்கள் ஐயர் என்ற தகவல் அனைத்து வாசகர்களுக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு எளிய வாசகனுக்காக, அவருடைய வீட்டிற்கு விருந்துண்ண சென்றபோது, அவர் வீட்டில் அன்று சோறும் மீன் கறியும் தான்.
அரைக்கனம் கூட முகத்தில் மாறுபாடு காட்டாமல், அந்த வாசகனின் வீட்டில் அவர் உணவு உண்ட தருணம் பற்றி வாசிக்கும் போது, கண்டிப்பாக நாம் மனம் நெகிழ்ந்து போய் விடுவோம்.
இப்படி ஒவ்வொரு கட்டுரையும், வாசிக்க வாசிக்க ஏதோ ஒரு நுண்ணுணர்வை நம்மிடமிருந்து வெளிக்கொண்டு வந்துவிடும். எத்தனையோ நினைவலைகளுக்குள் நம்மை ஆட்படுத்தி விடும். நினைவுகளின் தொகுப்பு தானே இந்த வாழ்க்கை.
பூங்கொடி பாலமுருகன்
(வாசிப்பை நேசிப்போம் குழுமம்)