பாண்டிபஜாரில் நீயும் நானும் நடந்துகொண்டிருந்தபோது சந்திராவின் முதல் அழைப்புவந்தது. எடுத்துப் பார்த்துவிட்டு அப்படியே வைத்துவிட்டேன். உனக்கு பாண்டிபஜாரின் பரபரப்பும் நெரிசலும் மிக உற்சாகமாக இருந்தது. ”நெஜமாவே ரொம்ப நல்லாருக்கு அருண்… ஐ ஜஸ்ட் லவ் திஸ் பிளேஸ்” என்றாய். சந்திரா கொடுத்த சுடிதார் அணிந்திருந்தாய்.
”மெட்ராஸிலே பாதித்தெரு இதுமாதிரித்தான் இருக்கு… ஒரே நெரிசல்…”
”ஏன், நெரிசலா இருந்தா நல்லாத்தானே இருக்கு… எவ்ளவு ஜனங்கள்… விதவிதமா… எவ்ளவு உற்சாகமா இருக்கு”
”ஜனங்கள் நெரிஞ்சு பிதுங்கறதா?”
”ஏன், இங்கெல்லாம் நெறைய மரங்களா இருந்தா உனக்குப் பிடிக்கும்ல?”
”ஆமா. ஆனா–”
”மனுஷங்கன்னாதான் பிடிக்காது இல்ல? எனக்கு மனுஷங்கன்னாலும் பிடிக்கும்…”
”அப்ப உன்னை திநகருக்கு கூட்டிட்டுப்போறேன். அது இதவிட கூட்டமா இருக்கும்”
”அருண், எனக்கு நெறைய சுடிதார் வாங்கணும்… யூ நோ ஒன் திங்? இப்ப துப்பட்டாவால மறைச்சாக்கூட ஆண்கள்லாம் என்னோட பிரெஸ்டைப் பாக்கிறாங்க”
”சும்மா வா”
”நெஜம்மா அருண். இந்த துப்பட்டா நழுவுதுல்ல உடனே கை அதை சரிபண்ணுது. அந்த மோவ்மெண்டைப்பாத்ததுமே ஆண்களோட கண்ணு இங்க வந்திருது…”
”நீ எதுக்கு இதையே நெனைச்சிட்டிருக்கே”
”ஏன்னா எல்லாரும் என்னைப் பாக்கிறது எனக்கு பிடிச்சிருக்கே…. ”
”கிறுக்குமாதிரி பேசாதே”
என் பின்னல் ஓடிவந்தபடி ”நான் இந்த ஊர்ல ரொம்ப அழகுதானே? சந்திரா ஆன்டி சொன்னாங்க. லண்டன்ல என்னை இவ்ளவு கூர்ந்தெல்லாம் பாக்க மாட்டாங்க. பிளாக் பசங்கதான் சும்மா விசில் அடிப்பாங்க. பட் ஐ ஹேட் தெம். மொரட்டுப்பசங்க. இங்க பாத்தியா க்யூட்டான பசங்கள்லாம்கூட என்னை பாத்துடே போறாங்க”
”உனக்கு பைத்தியம்தான் புடிக்கப்போகுது” உண்மையில் எனக்கு பைத்தியம் பிடிக்கப்போவதுபோல இருந்தது.
”நோ.ஐ யம் ஹேப்பி அருண்… ஐ யம் ரியலி ஹேப்பி… ஹாய்” என்றாய், ஒரு பையனிடம். அவன் பதறி நான்குபக்கமும் பார்த்தபின் வேகமாக சென்றான். எங்காவது தடுக்கி விழுந்துவிடுவான் போலிருந்தது.
”அய்யோ” என்று பதறினேன் ”இங்கபாரு.. இங்கெல்லாம் அப்டிச் சொல்லக்கூடாது…”
”ஏன்? ஹாய் சொன்னா என்ன? அவன் தானே என்னை பாத்தான்?”
”இங்க அப்டிச் சொன்னா அவனே உன்னை இம்மாரல் கேர்ல்னு தப்பா நெனைப்பான்”
”ஏன்?”
”ஏன்னா அது இங்க உள்ள கல்ச்சர்..”
”எதுக்காக அப்டி?”
‘’அப்டீன்னா அப்டித்தான். சும்மா வருவியா மாட்டியா?” என்றேன் கோபத்துடன்
”ஐ யம் ஸாரி” என்று என் பின்னால் ஓடிவந்தாய். ”ஐ யம் ஸாரி அருண்… ஏன் கோவிச்சுக்கறே?”
”பின்ன, உளறிட்டே இருந்தா?”
”நான் என்ன உளறினேன்? நீதான் சும்மா கோவிச்சுக்கறே… உனக்கு பொறாமை… அந்தப்பையனுக்கு நான் ஹாய் சொன்னது உனக்கு புடிக்கல்லை”
”சரி அப்ப அவன் கூடவே போ… போடி…” என்று கோபத்துடன் உன் தோளைப்பிடித்து தள்ளினேன்.
”அருண்…டோன்ட் பி ஸில்லி…” என்று நீ திமிறினாய்
நான் வேகமாக நடக்க நீ பின்னால் வந்தாய். ”ஐயம் ஸாரி அருண்… ஐயம் ஸாரி”
நான் ”பேசாம வா” என்றேன்
”நீ கோவிச்சுக்கறது எனக்கு பிடிச்சிருக்கு” என்று சிரித்தாய். ”உனக்கு ஜெலஸி தோணுதுல்ல”
”ஒரு மண்ணும் இல்ல..”
”ஜெலஸ்தான்… ஜெலஸ்தான்… இப்ப இந்த பையனைப் பாத்து ஹாய் சொல்லப்போறேன்”
”ஓங்கி அறைஞ்சிருவேன்..” என்றேன்
”யூ ஆர் ஜெலஸ் யூ ஆர் ஜெலஸ்” என்று சிரித்து கைகொட்டி துள்ளினாய். தெருவே திரும்பிப் பார்த்தது. நான் சிரித்துவிட்டேன்.
”சரி ஜெலஸ்தான்… வா பேசாம”
நீ என் கையுடன் கைகோர்த்துக் கொண்டு ”சென்னை இஸ் எ நைஸ் பிளேஸ் அருண்… எங்கபாத்தாலும் ஜனங்க ஸ்மைல் பண்ணிட்டே இருக்காங்க” என்றாய்
”அது உன்னைப்பாத்து ஸ்மைல் பண்றது…”
”ஏன்?”
”பைத்தியம் மாதிரி இருக்கேல்ல?”
”யூ…” என்று அடித்தாய். போர்டைப்பார்த்து ”அருண் ஐஸ்கிரீம்ஸ்! வாவ், உன் பேரிலேயே ஐஸ்கிரீம். அருண் ஐ வாண்ட் திஸ் ஐஸ்கிரீம்” என்று கைநீட்டி துள்ளினாய்.
ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சந்திராவின் இரண்டாவது அழைப்பு வந்தது. நான் அதையும் தவிர்த்தேன்.
”யூ ஹெவ் அ கால்” என்றாய்.
”ஒரு ·ப்ரெண்ட்” என்றேன்.
”ஐஸ்கிரீம் சாப்பிடறதுக்குன்னே இருக்கிற நாடு இது… இந்த வெயில், புழுக்கம் எல்லாமே இதுக்காகத்தான்… ஏன் அருண் இங்கயுள்ள ஜனங்கள்லாம் நெறைய ஐஸ்கிரீம் சாப்பிடுவாங்கள்ல? அப்றம் ஏன் ஐஸ்கிரீம் பார்லர்லாம் அதிகமாக் கண்ணுலயே படுறதில்ல?”
”ஆ? அவங்கள்லாம் வீட்டுலயே செஞ்சு சாப்பிடுவாங்க”
”நெஜம்மாவா? மை குட்நெஸ்… எப்டி?”
”கேழ்வரகு இருக்குல்ல… கேப்பை?”
”தெரியுமாவா? நாங்க லண்டன்ல…”
”ஸ்பெஷாலிட்டி ஓட்டல் நடத்துறீங்க, தெரியும்…. அந்த கேப்பையை எடுத்து நைஸா மாவு மாதிரி அரைச்சு கொதிக்கிற தண்ணியில போட்டு நல்லா காய்ச்சிடுவாங்க”
”ஓ.. நைஸ்”
”அப்றம் அதை அப்டியே மண்பானையில ஊத்தி மூடி வச்சிருவாங்க… ஒருநாள் அப்டியே இருக்கும். மறுநாளைக்கு எடுத்து உப்பு போட்டு கலக்கி குடிப்பாங்க…. கேப்பை ஐஸ்கிரீம்”
”உப்பு போட்டா? அய்யோ நல்லாருக்குமே” என்றாய் ”எப்டி ·ப்ரீஸ் பண்றாங்க?”
”மண்பானை ஒரு ·ப்ரீஸர்தானே? வெயில் ஏறினாலே அது ஜில்லுன்னு ஆயிடும்”
”லவ்லி… அந்த ஐஸ்கிரீம் இங்க கெடைக்குமா?”
”அதை நான் அப்றம் வாங்கித் தரேன்”
”நைஸ்!”
சுசி, நீ ஒரு துள்ளல். கனறுக்குட்டியைத் துள்ளச்செய்வது எது? அதன் புத்தம் புதிதான தன்மை. அது புதியது என்பதனால் பிரபஞ்சமே புதிதாக இருக்கிரது…. ஆச்சரியம்தான். அது பார்ப்பது என்ன? பாலிதீன் உறைகழற்றி ·பேக்டரி பெயிண்ட் வாசனையுடன் வெளியே எடுத்து வைக்கபப்ட்ட புத்தம்புதிய உலகத்தை…. சுசி, உனக்குப் பிடிக்காத எதுவுமே உலகில் இல்லை என்பதை அறிந்தேன். ஏனென்றால் உன்னை உனக்குப் பிடித்திருக்கிறது.
உன்னை பக்கவாட்டில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். உன் சிவந்த பருப்புள்ளிகள் கொண்ட கன்னங்களின், செம்பருத்தி போன்ற உதடுகளின், வெங்காயத்தோல் போன்ற கண்ணிமைகளின், பாளைபோல வரியோடிய கழுத்தின் அதி தூய மென்மை… அழியாத ஏதோ ஒன்று மலருக்குள் இருக்கிறது. அதன் அழியாமையைச் சொல்லவே அதை நாளும் மலர்ந்து மாலையில் உதிர்வதாக அதைப்படைத்தான்.
அப்படிப்பட்ட ஒரு வயது எனக்கும் இருந்தது. கிரிக்கெட் ஆட்டங்கள், பாப் ஆல்பங்கள், ரொம்பவும் துணிந்துவிட்டால் நண்பர்களுடன் பப்பில் நுழைந்து ஒரு பீர். அதன் பின் ஒரு சிகரெட்… சாலையில் செல்லும் பெண்கள்… அவர்களை பின்னால் தொடர்ந்து சென்று தாளமுடியாத உவகையுடன் தாண்டிச்செல்லும் கணங்கள். சில்லறைப் பொறுக்கித்தனங்கள்… அங்கிருந்து வெகுவாக விலகிவந்துவிட்டேன்.
ஒரு மர்மமான புள்ளி இருக்கிறது. இது அதுவாக ஆகும் புள்ளி. நிகழ்ந்து முடிந்தபின்னர் மட்டுமே மாற்றத்தை உணரமுடியுமளவுக்கு நுட்பமானது. ஆனால் அத்தகைய புள்ளிகளை வைத்து வரையபப்ட்ட கோடுதானா வாழ்க்கை? சுசி, நான் பலசமயம் சிந்தனைக்குள் புலம்ப ஆரம்பித்துவிடுகிறேன். உன்னைப்போல் சிந்தனையிலும் சிரிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
திநகரில் நீ சுடிதாரில் மூழ்கிப்போனாய். கண்ணாடியில் திரும்பித் திரும்பி அழகுபார்ப்பதும் இன்னொன்றை எடுக்க திரும்பி ஓடுவதுமாக புற நினைவே இல்லை. அடிக்கடி என்னிடம் திரும்பி ”ஈஸ் இட் நைஸ்?” என்றாய். விழி விரிய இன்னொரு சுடிதாரை சுட்டிக்காட்டினாய். உன் பரவசத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
”ஏன் சிரிக்கிறே?”
”இல்ல…. உன்னோட பரவசத்தைப் பாத்தேன்”
”எஸ், ஐ யம் ஹேப்பி”
”இந்தமாதிரி நான் பரவசப்படணும்னா எனக்கு ஒரு பெரிய வைரச்சுரங்கம் தேவைப்படும்”
”நீ எப்பவுமே மேன்லியா இருக்கிறமாதிரி காட்டிக்கிடறே”
”யூ நோ… ஐ யம் மேன்லி” என்றேன்
”பூ” என்று உதட்டைச் சுழித்தபடி சுடிதார்மலை நோக்கி திரும்பினாய். கடையில் அனைத்துக் கண்ணாடிகளிலும் பலவிதமான கோணங்களில் நீ தெரிந்து கொண்டிருந்தாய். நான் எப்படி திரும்பினாலும் நீயே தெரிந்தாய். நீ மட்டுமே கொண்ட ஒரு பொதுக்கூட்டம். ஓர் ஊர்வலம்…
சந்திராவின் செல் அழைப்பு. நான் எடுத்தேன். என் விரல்கள் நடுங்கி செல் விழுந்துவிடும் போலிருந்தது
”எங்க இருக்கே?” என்று கறாரான குரல் கேட்டது.
”தி நகர்ல…ஒரு வேலையா…அர்ஜெண்டா”
”சுசி கூட, இல்ல?”
நான் மௌனமாக இருந்தேன்.
”நான் உன்னை இங்க வரச்சொன்னேன்”
”அம்மா–”
”அம்மா பேச்சை கேட்டுட்டு இருக்கிற புள்ளை இல்ல நீ… வர்ரியா இல்லியா?”
”இவளை கொண்டு விட்டுட்டு வந்திடறேன்”
”சீக்கிரம் வா… நான் வெயிட் பண்றேன்…”
நீ சுடிதார் எடுத்து முடிக்க மதியம் ஆகிவிட்டது. சாலைக்கு வந்தோம். எதிரே ஒரு பைக்கின் பின்னால் இருந்து ஜோ கையைத்தூக்கி ”டேய் , டேய் அருண்…” என்று கூவினான். நான் அவனைப் பார்த்ததும் ஒருகணம் தயங்கினேன். அவனை அப்போது சந்திக்க விரும்பாதவனைப்போல.
ஜோ இறங்கிவந்து பைக் நண்பனிடம் ”ஸீ யூ” சொல்லிவிட்டு ”இங்க என்னடா?” என்றபின் உன்னைப் பார்த்தான். ”இவதானா? ஹாய் சுசி.. ஐயம் ஜோ… இவனோட எதிரி” என்றான்
நீ சிரித்து ”ரியலி?” என்றாய்
”நான் இவன் செய்றது எதையுமே செய்ய மாட்டேன். இவன் படிக்கிற எதையுமே படிக்க மாட்டேன். வேற மாதிரியான ஆளு… இன்னைக்குதான் வந்தியா?”
”யா” என்றாய்
நான் ”இவன் ஒருமாதிரி ஒரு நட் கிராக். ·பிலாச·பி, பாப் சங்கீதம்…”’ என்றான்.
”… கிறுக்கா இருக்கிறதில உள்ள சந்தோஷங்களே வேற…” என்றபின் ”சரிடா வரேன். இங்க மேலே ஒரு மியூசிக் ஷாப் இருக்கு. ஒருத்தனை நான் அங்க சந்திக்கணும்….” என்றபின் ”பாத்து சுசி, இவன் இப்பவே ஒருமாதிரி ரொமாண்டிக் லவ்ல விழுந்தாச்சுன்னு நெனைக்கிறேன். ஊட்டி கொடைக்கானல்னு லவ் டூயட் பாட கூப்பிட்டிருவான்.. டேக் கேர்”
அவன் கூட்டத்திற்குள் புகுந்து செல்வதைப் பார்த்தபின் ”நைஸ் கை” என்றாய்.
நான் ”வேற மாதிரி சிந்திப்பான். யாருமா சிந்திக்காத மாதிரி ஏதாவது சொல்வான்.”
அம்மா ·போனில் அழைத்து ”ஏண்டா சாப்பிட வர்ரியா?” என்றாள்
”’இல்லம்மா இனிமே லேட்டாகும்… சரவணபவன்லே சாப்பிடட்டுமா?” என்றேன்.
”சரிடா… வெயிலிலே சுத்தாதீங்க”
சாப்பிட்டபின் நீ ஒரு சினிமா பார்த்தாகவேண்டுமென அடம்பிடித்தாய். பெரிய பெண் முகம் குங்குமப்பொட்டுடன் கண்ணீர் வழிய ஆவேசமாக பார்த்த போஸ்டர் நடப்பட்டிருந்த கமலா தியேட்டர் முன்னாலிருந்து வரமாட்டேன் என்றாய். எரிச்சலுடன் நான் கையைப்பிடித்து இழுக்க நீ கம்பியைப்பிடித்துக் கொண்டாய்.
”இது ஒருமாதிரி தாலிசெண்டிமெண்ட் கதை… உக்காந்தா பத்துபேர் சுத்தி நின்னு மாறிமாறி கிள்ற மாதிரி இருக்கும்…” என்றேன்.
”எனக்கு இந்தமாதிரி படம்தான் பிடிக்கும்…”
”இது சீப்பான படம் சுசி”
”ஒண்ணுமில்லை. இட் இஸ் அ கல்ச்சுரல் டிராமா… ஐ நோ”
”கல்சுரல்… மண்ணாங்கட்டி… வர்ரியா இல்லியா?”
”நோ”
ஒருகணம் உன்னை முறைத்துப் பார்த்தேன். உன் பிடிவாதமான சிறிய உதடுகளைப் பார்த்ததும் என்னைமீறி சிரிப்பு வந்துவிட்டது. தலையில் அடித்தபடி ”சரி வா… ” என்று உள்ளே அழைத்துச் சென்றேன்.
ஒரு சாதாரணமான கிராமத்துக்காதல் கதை. காதலி மிட்டாய்நிற கண்டாங்கிச்சேலை அணிந்து கம்மாய்கரையோரம் துள்ளி ஆடினாள். கையில் கோலுடன் கச்சைவேட்டி கட்டிய வெற்றுடம்பு காதலன் கட்டைக்குரலில் உச்ச ஸ்தாயியில் பாடினான். மாட்டுவண்டிவரிசைகள், அரிவாள்கள், சட்டைபோடாத அப்பத்தாக்கள், சவால்கள், பஞ்சாயத்துக்கள்… கடைசியில் காதலர்கள் தப்பி ஓட ஊரே துரத்த… நான் சாய்ந்து அமர்ந்து என் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தேன். எட்டு எஸ்எம்எஸ் வந்திருந்தது சந்திராவிடம் இருந்து.
ஒரே அழுகை ஆரவாரத்துடன் படம் முடிந்தபோது கைக்குட்டையால் சிவந்து கலங்கிய கண்களை துடைத்து மூக்கைச் சிந்தியபடி நீ எழுந்தாய். ”வா போலாம்” என்றேன். மெல்ல விசும்பியபடியே வந்தாய். வெளியே வந்து காரை எடுத்தேன். நீ உள்ளே ஏறிக்கொண்டாய்.
மூக்கு உறிஞ்சும் ஒலி கேட்டு நான் திரும்பிப்பார்த்து ”ஸ்டுப்பிட்…என்ன இது?” என்றேன்.
”ரொம்ப பாவம் இல்லை அவ?”
”எவ?”
”சிவனுத்தாயி?”
”யாரவ?”
”வெளயாடாதே அருண்.. அவளைத்தானே கொன்னுட்டாங்க”
”அந்தக் குண்டச்சியா? திங்கு திங்குன்னு குதிச்சு கும்மியடிச்சாளே… ஜாக்கெட் போடாம?”
”நீ வேணும்னே பெரிய இவனாட்டம் பேசுறே… பெரிய மேச்சோ மேன்னு காட்டிக்கறே” என்றாய் கோபத்துடன் ”ஐ ஹேட் யூ.. ஐ ஹேட் யூ”
”ஆமாண்டீ… இந்த பஞ்சாயத்துப் படத்தைப்பாத்து நான் கண்ணீருவிட்டு கதறணும்… அப்பதான் உன்னைமாதிரி என்னையும் பைத்தியமுன்னு ஊரு நெனைக்கும்”
”படத்தப்பாக்காம நீ செல்போனை நோண்டிகிட்டிருந்தே… இந்தியாவிலே எல்லாருமே என்னமோ பொதையல் மாதிரி செல்போனை கொஞ்சிட்டே இருக்காங்க… நான்சென்ஸ்”
நான் காரை நிறுத்தினேன் ”ஆமாடீ நாங்கள்லாம் நான்சென்ஸ்தான்… நீங்கதான் நாகரீகமானவங்க… அப்றம் எதுக்கு இங்க வந்தே?”
”தெரியாம வந்திட்டேன்… உன்னைமாதிரி கொரங்குக் கொரில்லாக்கிட்ட மாட்டிக்குவேன்னு தெரியாம வந்திட்டேன் போருமா”
”சீ எறங்குடி… என் வண்டிய விட்டு எறங்கு. இப்ப எறங்கப் போறியா இல்லியா?”
நீ கதவைத்திறந்து இறங்கி நேராக நடந்தாய். நான் காரைக் கிளப்பி வேகமாகச்சென்றேன். சில நூறடிகள்தான். என்ன இது அசட்டுத்தனம் என்று தோன்றியது. உன்னைவிட நான் அசடாக இருக்கிறேனா? சுசி, பின்னர் உணர்ந்தேன், என் வயது அப்போது மிகமிக குறைந்துவிட்டிருந்தது என்று.
திரும்பிவந்தேன். கதவை திறந்து ”ஏறு” என்றேன்
”வேணாம்..”
”ஏறுன்னு சொல்றேன்ல?”
”எங்கிட்ட பணம் இருக்கு. நான் டாக்ஸியிலே வந்துக்கிடறேன்”
”இங்கபாரு, உன்ன விட்டுட்டு நான் எப்டி போறது? அம்மா என்ன சொல்வாங்க?”
”அம்மா சொல்றதுதானா உனக்கு முக்கியம்? அப்ப போயிடு”
நான் சிரித்தேன் ”இல்ல நீதான் முக்கியம். நீ மட்டும்தான் முக்கியம். நீ ஒரு பேரழகி… உன் மனசு சொக்கத்தங்கம். நீ போட்டிருக்கிற சுடிதார் ரொம்ப அழகு… நீ பாத்த படம் ஒரு காவியம்…போருமா? ஏறிக்கறியா?”
நீ சிரித்தாய். நானும் சிரித்தேன். கதவைத்திறந்து ஏறி அமந்தபின் ”நெஜம்மாவே அது நல்ல படம் அருண்… மெட்டிஒலி சீரியல் மாதிரியே இருந்திச்சு”
”அப்டியா?நீ அதையெல்லாம் பாப்பியா?”
”பின்ன?”
”நீ லண்டன்ல வேற புரோக்ராம்ஸ் பாப்பேன்னு நெனைச்சேன்”
”அங்கயும் இதேமாதிரி ஸோப்ஸ்தானே வருது? அதைப்பாக்கிறதுக்கு இதைப்பாத்தா நம்ம ஊரையாவது பாக்கலாமே”
”எனக்கு தமிழ்ப்படமே பிடிக்காது…”
”பின்ன?”
”ஹாலிவுட் படம்தான்”
”சட்டைபோடாத ஹீரோ கைமுண்டாவைக் காட்டிக்கிட்டு தன்னந்தனியா போயி உலகத்த காப்பாத்துவாரு… நிலாவில போயி அங்கேருந்து ஒரு ராக்கெட்டை விட்டு ஒரு பிளானெட்டையே ஒத்தை ஆளா உடைச்சு தள்ளிடுவார்… அந்தமாதிரி படம் இல்ல?”
”வெளயாடாதே… வேற படம் இல்லியா என்ன?”
”அப்ப கிரா·பிக்ஸ் மிருகங்க? ஏலியன்ஸ்…”
”ஏய்..”
”இல்லேன்னா சைக்கோ கதைகள். பொம்பிளைங்களை கண்டம்துண்டமா வெட்டி டப்பாவில போட்டு ஊறவச்சு உப்பு பச்சமிளகா போட்டு திங்கிறது மாதிரியான கதைகள்…”
”டாமிட்.. நீ என்னை என்ன நெனைச்சே?” எனக்கு உண்மையிலேயே கோபம் வந்தது
”மேச்சோ மேன்…. ஏகே ஃபாட்டிஸெவென் வச்சு டப்டப்டப்னு சுட்டுட்டே போவீங்க”
நான் காரை பிரேக் பிடித்து கிரீச்சிட நிறுத்து ”நான் பாத்துட்டே வரேன் நீ என்னை சீண்டிட்டே இருக்கே”
”நீதான் என்னை சீண்டறே”
”நான் இப்ப என்ன சொன்னேன்?”
”நீதான் எப்பவும் என்னை திட்டறே”
”அப்ப எங்கிட்ட பேசாதே”
”நீ மொதல்ல எங்கிட்ட பேசாதே”
”வாய மூடு”
”நீ வாய மூடு…”
நான் கோபமாக காரைக் கிளப்பினேன். சற்றுநேரம் கழித்து புன்னகைசெய்து ”எதுக்கு நாம சண்டை போட்டுக்கணும்? நான் உன்னை சந்திச்சு ஒருநாள்கூட ஆகலை” என்றேன்.
”ஒருவேளை நாம ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டோமோ?”
”சண்டைபோட்டா லவ்வா?”
”ஆமா… லவ்வர்ஸ்தான் எப்பவும் சண்டைபோட்டுட்டே இருப்பாங்க…”
”கல்யாணம் பண்ணிட்டு வாழரதுக்கு ரிகர்சல் பாக்கிறாங்களோ”
நீ பதில் சொல்லவில்லை. நான் ஓரக்கண்ணால் பார்த்தேன். சிறிய உதடுகள் அழுந்தியிருந்தன. முகம் கவிழ்ந்திருந்தது.
”என்ன?”என்றேன்
”ம்ம்ஹும்”
”என்ன ஒருமாதிரி இருக்கே?”
நீ நிமிர்ந்தபோது இமைப்பீலிகளில் கண்ணீர் சிதறல்கள். ”டேட் எப்பவுமே அம்மாகிட்ட சண்டைதான்… ரொம்ப அடிப்பார். ஒருவாட்டி சேரைத்தூக்கி மண்டையில அடிச்சு ஒரே ரத்தம்…”
”அப்டியா?”
”கல்யாணம் பண்ணிகிட்டா சண்டைபோடாமல் இருக்கமுடியாதா?”
”ஏன், எவ்ளவோ பேரு சந்தோஷமா இருக்காங்களே”
”அருண், எனக்கு ஒரு சந்தோஷமான குடும்பம்தான் வேணும்…..” என்றாய். பின்னர் ”இந்தியாவிலேகூட சண்டைபோட்டுக்குவாங்களா?”
”எல்லா இடத்திலயும் மனுஷங்க ஒண்ணுதானே… ஆனா இங்க ரொம்ப அளவுக்கு பொறுத்துட்டு போவாங்க…”
”அதான் நான் இந்தியாவுக்கே வந்தேன் அருண்… அங்கெல்லாம் எதுக்கெடுத்தாலும் டிவோர்ஸ்… எனக்கு அதை நெனைச்சாலே பயம்… டிவோர்ஸ் பண்றவங்க அவங்க பிள்ளைங்களைப்பத்தி நெனைக்கிறதேயில்லை…”
கைக்குட்டையால் முகத்தை அழுத்தி துடைத்தாய். பின்பு மெல்ல சமநிலைக்கு வந்தாய். ”அதான் எனக்கு சந்திரா ஆன்டியை ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்க ஹஸ்பெண்ட் செத்துப்போய் ஒன்பது வருஷமாச்சு. ஆனா அவங்க திரும்ப கல்யாணமே பண்ணிக்கல்லை. அதான் மொராலிட்டி..”
கார் திடுக்கிட்டு திரும்ப நான் ஒடித்து சீர்ப்படுத்தினேன் ”ஏன் என்ன ஆச்சு?” என்றாய்
”ரோட்ல என்னமோ பள்ளம்” என்றேன்
அதன்பின் நான் பேசவில்லை. சாலையில் இருந்து கண்களை எடுக்காமல் ஓட்டிக்கொண்டிருந்தேன்.