எம்.டி.வாசுதேவன் நாயரின் 90 ஆவது பிறந்தநாளை ஒட்டி திரூர் அருகே துஞ்சன் பறம்பில் ஐந்துநாள் விழா. சாதரம் (மரியாதையுடன்) என்று விழாவின் பெயர். 16 அன்று விழாவை கேரள முதல்வர் பிணராய் விஜயன் தொடங்கி வைத்தார். மம்மூட்டி சிறப்பு விருந்தினர். கலாச்சார அமைச்சர் உட்பட மூன்று அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பின் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் நிகழ்வுகள். மாலையில் கலைநிகழ்ச்சிகள். வந்துசேரும் அனைவருக்கும் மூன்றுவேளை உணவு. எம்.டி. பற்றிய ஓவியக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி. நூல் விற்பனை மையம். மொத்தத்தில் ஒரு திருவிழா. அதில் சம்பந்தமே இல்லாதவராக இருந்தவர் எம்.டிதான். ஆர்வமில்லாத முகம், உடல்நலமின்மையின் சலிப்பு.
அதற்கப்பால் ஒன்றுண்டு, எம்.டி சிரிப்பதில்லை. ஏனென்றால் பழைய நாயர் தறவாட்டு ‘காரணவர்கள்’ சிரிப்பது இல்லை. முகத்தில் சிரிப்பதற்கான ஒரு உத்தேசம் மட்டுமே வெளிப்படும் என்பது சொலவடை. எவரானாலும் ஓரிரு சொற்கள்தான். அரசியல்வாதிகள், அதிகாரிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் எவராயினும் ஒரே முகபாவனை. அது சற்று கனியவேண்டும் என்றால் எழுத்தாளர்களைப் பார்க்கவேண்டும். எவரையும் அவர் கவனிக்காததுபோல் இருக்கும். ஆனால் எந்த சிறிய, இளம் எழுத்தாளனும் கவனிக்கப்படாமல் விடப்படலாகாது என்று சிரத்தை எடுத்துக் கொள்வார். 90 வயதிலும் எம்.டி ஒருநாளில் ஆறு மணிநேரம் வாசிக்கிறார். மலையாள இலக்கியவாதிகளில் உலக இலக்கியம் கூர்ந்து வாசித்தவர் அவரே. மலையாளத்தில் எழுதும் எவரையும் ஓரிரு படைப்புகளையேனும் வாசித்து தெரிந்து வைத்திருப்பார். அதன் வழியாகவே அவர் எழுத்தாளர்களை அணுகுவார்.
துஞ்சன் பறம்பு கேரள ‘பாஷாபிதா’ என அழைக்கப்படும் துஞ்சத்து எழுத்தச்சனின் இடம். அவர் அங்கிருந்த ஓர் இல்லத்தில் பிறந்தார் என்பது தொன்மம். எம்.டி. அவருடைய சொந்த முயற்சியால் அங்கே ஒரு கலாச்சார மையத்தை உருவாக்கினார். அழகான சிவந்த வெட்டுகல்லால் கட்டப்பட்ட தோரணவாயில், அதே கல்லால் ஆன குடில்கள், நிர்வாக அலுவலகங்கள், உள்ளரங்குகள், சமையலறை. தொடர்ச்சியாக அங்கே இலக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் ஆயுதபூஜைக்கு நிகழும் எழுத்தறிவித்தல் சடங்கு மிகப்புகழ்பெற்ற ஒன்று. நான் 16 ஆம் தேதி மாலையே திருர் சென்றுவிட்டேன். 17 காலைதான் துஞ்சன் பறம்புக்குச் சென்றேன். எம்டியின் அணுக்கரும், பாலக்காடு தமிழருமான வெங்கிடாசலம் விழாவின் ஒருங்கிணைப்பாளர். எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவத்தை அண்மையில் மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். மிகச்சிறந்த நடை. வெங்கிடாச்சலம் என்னை வரவேற்றார்.
எம்.டியின் மகள் அஸ்வதி நாயர் மோகினியாட்டக் கலைஞர். அவர் கணவர் ஶ்ரீகாந்த் தமிழர், தஞ்சையில் மெலட்டூர் பாகவதமேளா நடத்தும் நடராஜன் குழுவில் ஒருவர். நடிகர், நடனக்கலைஞர். பத்மா சுப்ரமணியத்தின் மாணவரும்கூட. அவர்களின் மகன் மாதவ் என்னை ஆர்வத்துடன் வந்து சந்தித்தார். எட்டாம் வகுப்பு படிக்கிறார். பொன்னியின் செல்வன் நாவல் படித்து, படமும் பார்த்திருந்தார். தஞ்சை வரலாறு, சோழர்களின் வரலாறு, ஆலயக்கலை பற்றிய தீவிரமான ஆர்வத்துடன் இருந்தார். அவருடன் பேசியபடி எம்.டியின் புனைவுலகு பற்றிய புகைப்படங்களை பார்த்தேன். எம்.டி அங்கே இருந்தார். அவரிடம் ஓரிரு சொற்கள் பேசினேன். நான் அவரை 1991ல் கதா விருது பெற்றபோது முதன்முதலாகப் பார்த்தேன். நான் சொல்வதற்குள் அதை அவர் சொன்னார்.
17 அன்று நான் பேசினேன். மறுநாள் எம்.டியின் இதழியல் பற்றி கே.சி.நாராயணன் பேசினார். பெரிய திறந்த பந்தலில் நிகழ்வுகள். இம்முறை கோடையில் தமிழகத்தில் மழை. ஆகவே கேரளத்தில் கொலைவெறி வெயில். நான் சுண்டிப்போய்விட்டேன். மாலையில் சென்று எம்.டி.யை அவர் அறையில் சந்தித்து சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். எம்.டி அசுரவித்து நாவலின் கதைநாயகனாகிய கோவிந்தன்குட்டியைப் பற்றிச் சொன்னார். அவர் எம்.டியின் சொந்த தாய்மாமன், பொன்னானிக்குச் சென்று மதம் மாறி முஸ்லீம் ஆனவர். இன்னும் சில கதைகள் எழுதுவதற்கு இருப்பதாகச் சொன்னார். ஆனால் சொல்லி எழுதவைக்க அவரால் முடியவில்லை. கை ஒத்துழைக்கவுமில்லை என்றார்.
மாலை நான் கே.சி.நாராயணனுடன் அவருடைய இல்லத்திற்குச் சென்றேன். மாத்ருபூமி, பாஷாபோஷிணி இதழ்களின் ஆசிரியராக இருந்த கே.சி.நாராயணன் கேரளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயருக்குப்பின் புகழ்பெற்ற இலக்கிய இதழாசிரியர். எம்.டியுடன் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். என்னுடைய 30 ஆண்டுக்கால நண்பர். நான் மலையாளத்தில் கே.சி.நாராயணன் கோரியதனால்தான் எழுத ஆரம்பித்தேன். கே.சி. இதழாசிரியராக இருந்த இதழ்களிலேயே பெரும்பாலும் எழுதியிருக்கிறேன். கே.சி. மலையாள மனோரமா இதழ்களின் ஆசிரியப்பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்றார். கே.சியின் துணைவி ஷீலா மறைந்தபின் கோழிக்கோட்டில் இருந்த இல்லத்தை விட்டுவிட்டு பாலக்காடு அருகே ஶ்ரீகிருஷ்ணபுரத்தில் இருந்த அவருடைய பாரம்பரிய இல்லத்தில் தனியாகத் தங்கியிருக்கிறார். அவருடன் மூன்றுநாட்கள் தங்குவது என் திட்டம்.
ஶ்ரீகிருஷ்ணபுரத்தில் கே.சியின் இல்லத்தின் பெயர் கிழியேடத்து மனை. (கிழியேடத்து மனைக்கல் செறிய நாராயணன்) கேரளத்தில் மிக அதிகமாக நம்பூதிரி இல்லங்கள் இருப்பது பாலக்காட்டில்தான். கிழியேடத்து மனை கட்டிடம் 1881ல் கட்டப்பட்டது. சுதைபூசப்பட்ட வெட்டுகல்லால் ஆன கனமான சுவர்கள் கொண்ட மூன்றடுக்கு கட்டிடம். பூமுகம், அதன்பின்னால் குளப்புரையும் குளமும். இல்லத்தில் கேசி நான்கு அறைகளை மட்டும் தூய்மை செய்து பயன்படுத்துகிறார். எஞ்சிய பகுதிகள் பூட்டப்பட்டு தூசிபடிந்துள்ளன. சாவியை பக்கத்துவீட்டில் கொடுத்துவிட்டு வந்திருந்தார். நாங்கள் செல்லும்போது அவர்கள் பூட்டிவிட்டு எங்கோ சென்றுவிட்டிருந்தனர். போனில் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆகவே அருகில் இருந்த கேரள சுற்றுலாத்துறை விடுதியில் அன்றிரவு தங்கினோம். சிறிய ஊர்களில்கூட சுற்றுலாத்துறை நன்றாகப் பேணப்படும் விடுதிகளை நடத்துகிறது.
ஶ்ரீகிருஷ்ணபுரம் கே.சி.நாராயணனின் நினைவில் மிகச்சிறிய கிராமம். எண்பதுகளில்கூட அங்கே ஒரு மளிகைக்கடை, ஒரு டீக்கடை, ஒரு கிளைநூலகம் கொண்ட சாலைச்சந்திப்பு மட்டுமே இருந்தது. கே.சி.நாராயணனின் கிழியேடத்து மனை என்னும் நம்பூதிரி நிலப்பிரபுக் குடும்பத்தை சார்ந்துதான் அக்கிராமமே இயங்கி வந்தது. ஆனால் சென்ற நாற்பதாண்டுகளில் அங்குள்ள வளர்ச்சி திகைக்கச்செய்வது. கேரளத்தில் எல்லா சிற்றூர்களிலும் சீராக இந்த வளர்ச்சியைக் காணலாம். எல்லா ஊர்களிலும் பெரிய கடைகள், உணவகங்கள், ஆடம்பரமான விடுதிகள் உள்ளன. ஒரு சிறுநகரத்திற்கு உள்ள எல்லா வசதிகளும் நடைத்தொலைவில் சிற்றூர்களில் இருக்கும். காரில் ஊரைச்சுற்றி வந்தால் பெரும்பாலும் எல்லா வீடுகளுமே மிக விரிவான மாளிகைகள்தான். ஆனால் எதிர்ப்பக்கம் ஒன்றுண்டு. இந்த வீடுகளில் அரசூழியர், சில வணிகர்கள் வாழும் வீடுகள் தவிர பெரும்பாலானவற்றில் கிழவர்களும் கிழவிகளும்தான் வாழ்கிறார்கள். கேரளத்தின் செல்வம் வெளிநாடுகளில் வாழ்பவர்களால் கொண்டுவரப்பட்டது. அவர்களில் புதிய தலைமுறை கேரளத்திற்கு வெளியே உருவானது, அவர்கள் திரும்ப வரப்போவதில்லை.
கிழியேடத்து மனையின் பூமுகத்தில் அமர்ந்து நூறாண்டுகள் பழைய வாழ்க்கையை கற்பனையில் நிகழ்த்தியபடி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். முற்றிலும் சும்மா இருப்பதற்காகவே வந்தேன். ஆனால் எப்படியோ பேசிய நேரம் முழுக்க வாசித்துக்கொண்டிருந்தேன். துஞ்சன் பறம்பில் சந்திக்கநேர்ந்த இளம்கவிஞர்கள், எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை அளித்திருந்தனர். அவ்வாறு தரப்படும் நூல்களை கொஞ்சமேனும் வாசித்துவிடுவது என் வழக்கம். 12 கவிதை தொகுதிகள் 2 சிறு நாவல்கள் 3 சிறுகதை தொகுதிகள் வாசித்தேன். ஒரு படைப்புகூட அடிப்படை தகுதி கொண்டதாக இல்லை. எங்குமே தொடக்கநிலை எழுத்தில் பெரும்பகுதி பயனற்றதாகவே இருக்கும், அவர்களில் பெரும்பாலானவர்கள் படிப்படியாக இலக்கியத்தை விட்டுவிடுவதும் நடக்கும்.
ஆனால் கேரள இலக்கியத்தில் மிகப்பெரிய தேக்கம் அடித்தளத்தில் உள்ளது. முதன்மைக்காரணம், அழகியல் சார்ந்த விமர்சனமே அனேகமாக இல்லை. இலக்கியத்தின் வடிவம், மொழி, வாழ்க்கையுடன் அதன் உறவு, அதன் உச்சங்கள் நிகழும் விதம் பற்றி எவருமே எங்குமே பேசுவதில்லை. பேச்சு முழுக்க அன்றாட அரசியல் மட்டுமே. அதை எழுதுபவர்களே ஆளுமைகள். இதழாளர்களும் குட்டி அரசியல்வாதிகளுமே இலக்கியமென்ன என்று முடிவெடுக்கிறார்கள். ஆகவே மிகமோசமான முன்னுதாரணமே புதிய படைப்பாளிகளுக்கு உள்ளது. விளைவாக மிகமிகமிகமிகச் சாதாரணமான படைப்புகள். ஒரு சராசரி தமிழ் தொடக்கநிலைப் படைப்பாளி அவற்றை எழுதலாமெனெ எண்ணக்கூட மாட்டான். மிகுந்த ஏமாற்றம். அதைப்போக்கியவை மூன்று நூல்கள். எம்.என்.காரசேரி பஷீர் பற்றி எழுதிய ஒரு நூல், அவரே இலக்கியவாதிகளின் ஆளுமைபற்றி எழுதிய இன்னொரு நூல். கே.சி.நாராயணன் எழுதிய மகாத்மாகாந்தியும் மாதவிக்குட்டியும் என்னும் நூல். அவை இனிய வாசிப்பனுபவங்கள். கே.சி.நாராயணன் ‘மகாபாரதம் ஒரு சுதந்திர சாஃப்ட்வேர்’ என்னும் நூலை எழுதியிருக்கிறார். மகாபாரதத்தை தொகுத்துரைத்து ஆராய்ந்து விமர்சிக்கும் நூல் அது.
ஈரோட்டில் இருந்து அழகிய மணவாளனை வரச்சொல்லியிருந்தேன். மணவாளன் மலையாள இலக்கியப்பிரியர். பி.கே.பாலகிருஷ்ணனின் நாவல் சித்தியும் சாதனையும் என்னும் அவர் மொழியாக்கம் செய்த நூல் வெளியாகவுள்ளது. கதகளிப்பிரியர். கதகளி பற்றி அவர் அண்மையில் அகழ் இதழில் எழுதிய கட்டுரை, அவருடைய முதல் படைப்பு, தமிழில் எழுதப்பட்ட நல்ல கட்டுரைகளில் ஒன்று. அண்மையில் குரு நித்யா காவியமுகாமில் அவர் கதகளியை அறிமுகம் செய்து மிகச்சிறப்பாகப் பேசினார். கே.சி.நாராயணன் அழகியமணவாளனை சந்தித்ததும் அவரிடம் பேசிப்பேசிப் பூரித்துவிட்டார். ஶ்ரீகிருஷ்ணபுரம் ஆலயத்தில் 20 ஆம் தேதி ஒரு கதகளி இருந்தது. பெண்கள் மட்டுமே பங்குபெறும் கதகளி. அனைவருமே கலாமண்டலம் மாணவிகள். நாங்கள் ஆலயத்துக்கு சென்று அங்கே இட்லியும் பாயசமும் சாப்பிட்டுவிட்டு கதகளி பார்த்தோம்.
பெண்கள் கதகளி ஆடும் உடல் ஆற்றல் அற்றவர்கள் என்னும் எண்ணம் உண்டு. ஆனால் இன்றைய கதகளி அதிகபட்சம் 3 மணி நேரம்தான். ஆகவே பிரச்சினை இல்லை. அது ஒரு சராசரி கதகளிதான் என அவர்கள் இருவரும் சொன்னாலும் எனக்குப் பிடித்திருந்தது. கல்யாண சௌகந்திகம். பீமன் திரௌபதிக்காக மலர்தேடி கந்தமாதன மலை கடந்து சென்று அனுமானைச் சந்தித்து மீளும் கதை. பராக்ரமியான பீமன் பேருருவனாகிய அண்ணன் முன் அசட்டுச்சிறுவனாக உருமாறும் அழகை கண்டு சிரித்துக்கொண்டே இருந்தேன். கடைசியில் விடைபெற்றுக்கிளம்பும்போது “அண்ணா உங்கள் வாலில் சிக்கியிருக்கும் கதையை மட்டும் எடுத்துக்கொள்கிறேனே’ என்று பீமன் கேட்க ‘கதையா, என் வாலிலா? இருந்தால் எடுத்துக்கொள்’ என அண்ணன் வியப்புடன் சொல்லும் இடம் வெடித்துச் சிரிக்கவைத்தது– வசனங்கள் இல்லை. முழுக்கவே சைகைகளும் மெய்ப்பாடுகளும்தான். அண்ணன் தன் வாலைத் தூக்க, தம்பி கதையை எடுக்கிறான். அண்ணன் கண்மூடி தியானத்தில் இருப்பதை கண்டதும், கதையை சுழற்றி கெத்து காட்டுகிறான். அண்ணன் அரைக்கண் திறந்து அதை பார்த்துவிட்ட ஒரு சம்மலான புன்னகையுடன் ‘அப்ப நான் கெளம்புறேனே’ என பாவனை காட்டுகிறார்.
மறுநாள், மே 21 ஆம் தேதி ஶ்ரீகிருஷ்ணபுரம் அரசு ஆரம்ப்பள்ளியில் ஒரு நிகழ்ச்சி. ஶ்ரீகிருஷ்ணபுரத்திலுள்ள ஒரு கதகளி பயிலகத்து மாணவர்கள், மாணவிகள் நடத்தும் 12 மணி நேர கதகளி. வெவ்வேறு ராமாயண கதகளிக் காட்சிகளை தொடுத்து உருவாக்கப்பட்ட முழு ராமாயணம். பத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் தொடர்ச்சியாக நடிப்பது. மூத்த கதகளி நடிகர்களை கௌரவித்து நிகழ்ச்சியை உள்ளூர் எம்.எ.ஏ தொடங்கிவைத்தார். திடீர் விருந்தாளியாக நான் நாலைந்து வார்த்தை பேச நேரிட்டது. கே.சி.நாராயணன் அழகிய மணவாளனை பெருமிதத்துடன் அரங்கினருக்கு அறிமுகம் செய்து பேசினார். அரசுப்பள்ளி குளிர்சாதன அறைகளுடன், உயர்தர வடிவமைப்புடன் இருந்தது. இப்பகுதிகளில் கல்வி முழுக்க முழுக்க அரசுப்பள்ளி சார்ந்ததுதான். தனியார்ப்பள்ளிகள் அனேகமாக இல்லை. மருத்துவமும் அரசு மருத்துவமனைகளில்தான் சிறப்பாக கிடைக்கிறது.
அன்று மதியம் உள்ளூர் கே.டி.சி (கேரளா சுற்றுலாத்துறை) உணவகத்தில் விந்தையான ஓர் உணவை சாப்பிட்டேன். கப்ப– பீஃப் பிரியாணி. மரவள்ளிக்கிழங்கும் மாட்டுக்கறியும் போட்டு சமைக்கப்பட்டது. சுவையாக இருந்தது. இன்னொரு உணவு இருந்தது– சட்டிச்சோறு. அதாவது ஒரு மண்சட்டியில் சோறு, மீன்கறி, மீன் வறுவல், சிக்கன் வறுவல், அவியல் போல பலவற்றை ஒன்றாகப்போட்டு தருவார்கள். கிட்டத்தட்ட நாய்க்கு கொடுக்கும் உணவு— பட்டிச்சோறு என பேரிட்டிருக்கவேண்டும். ஆனால் பலர் விரும்பி உண்பதை கண்டேன். அக்காலத்தில் பழையசோறு, மோர், மாங்காய் ஊறுகாய், மிஞ்சிய அவியல், மரவள்ளிக்கிழங்குக் களி, கீரைக்கூட்டு அனைத்தையும் ஒன்றாக ஒரு சட்டியில் போட்டு கலந்து உண்ணும் ஒரு வழக்கம் இருந்தது. ‘கொழச்சடி’ என உள்ளூரில் அறியப்பட்டது. (குழப்பியடி). அதேபோல விஷயங்களை பேச்சில் முன்வைப்பவர்களும் உண்டு. அது காலையுணவுக்கும் மதிய உணவுக்கும் நடுவே, 11 மணி வாக்கில் உண்ணப்படவேண்டியது. ஆனால் அதற்கு முன்னும் பின்னும் மண்வெட்டி பிடித்து வயல்வேலை செய்திருக்கவேண்டும்.
22 ஆம் தேதி காலையில் கே.சி.நாராயணனிடம் விடைபெற்றேன். மீண்டும் மீண்டும் விடைபெற்றுக்கொண்டே இருந்தேன். இனி 28 முதல் மூன்று நாள் கல்பற்றா நாராயணனுடன். ஆற்றூர் ரவிவர்மாவின் மாணவர்கள் இருவரும். இரண்டுவகையில் கேரள இலக்கிய வரலாற்று ஆளுமைகள். கே.சி.நாராயணன் இதழாளர், இலக்கியவிமர்சகர், கலைவிமர்சகர். கல்பற்றா நாராயணன் பேச்சாளர், கவிஞர், இலக்கிய அழகியல் எழுத்தாளர். ஒருவகையில் அவர்கள் என் சகபாடிகள்.