இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி ரமணகிரி மற்றும் தியான அனுபவங்கள் சார்ந்த எனது கடிதங்களை நீங்கள் தளத்தில் வெளியிட்டிருந்தீர்கள். பல்வேறு தரப்பிலான வாசகர்கள் தொடர்ந்து அழைத்து பேசினார்கள் இன்றளவும் அழைப்புகள் வருகிறது.
கோவையில் வசிக்கும் எண்பத்தேழு வயதான ஓய்வு பெற்ற அரசு பொறியாளர் திரு பரமேஸ்வரன் ஐயா அவர்களும் அழைத்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவருடைய இல்லம் சென்று சந்தித்து வந்தேன் இடையிடையே அலைபேசியில் பேசிக் கொள்வோம். ஒருமுறை கூட முப்பது நிமிடங்களுக்கு குறைவாக பேசியதில்லை.
கடந்த அறுபது ஆண்டுகளில் இந்தியாவில் நிகழ்ந்த தியான ஆன்மீக செயல்பாடுகள் அமைப்புகள் குருமார்கள் யோக பயிற்சிகளில் பெரும்பாலும் நேரடி அனுபவம் கொண்டவர். அகத்தேடல் சார்ந்து வெளியான நூல்களனைத்தயும் ஏறக்குறைய வாசித்தும் இருக்கிறார்.
சுவாமி சித்பவானந்தர் சின்மயானந்தர் கோயங்காஜி போன்றவர்களிடம் நேரடி பயிற்சியும். சிவானந்தரின் அமைப்பு ராமகிருஷ்ணா மிஷன் ஸ்ரீ ராமச்சந்திரா மிஷன் ஜே கிருஷ்ணமூர்த்தி மகரிஷி மகேஷ் யோகி போன்ற பெரும் ஆளுமைகளிலிருந்து தற்போது பிரபலமாக இருக்கும் பெரும்பாலான ஆசிரியர்களிடம் பயின்று இருக்கிறார்.
தாயுமானவர் சித்தர்கள் வேதாந்த நூல்கள் சார்ந்த விரிவான வாசிப்பு கொண்டவர். வனங்களின் மீது பெரும் பித்தும் சில காலம் முன்பு வரை நீண்ட பயணங்களை மேற்கொள்பவர் ஆகவும் இருந்திருக்கிறார்.
எண்ணற்ற சித்தாந்தங்களுடன் தொடர்பு இருந்தாலும் ரமணாஸ்ரமம் மற்றும் ரமணரின் நூல்கள் சார்ந்தும் புத்தர் அருளிய தம்ம பாதை சார்ந்தும் கூடுதல் ஈடுபாடு கொண்டிருக்கிறார். அவர் இல்லத்தின் பெயரே ரமண நிலையம் வீடு முழுவதும் அருள் நிறைந்த ரமணரின் படங்கள் சூழ வாழ்கிறார்.
தமிழினி வெளியிட்ட உங்களுடைய இந்திய ஞானம் நூலை 2011ஆம் ஆண்டு வாங்கி இருக்கிறார் அப்பொழுதுதான் உங்களுடைய அறிமுகம் அவருக்கு.
உங்களுடைய மற்ற நூல்களையும் வாசித்து வந்திருக்கிறார். மூன்றாண்டுகளுக்கு முன்புதான் தொடுதிரை கைபேசி பயன்படுத்த தொடங்கி இருக்கிறார். அதன் பின்பே உங்களுடைய இணையதளம் எதிர்பாராத விதமாக அறிமுகமாக இருக்கிறது.அதன் பின்பு நாள்தோறும் தவறாது பதிவுகளை வாசித்து வருகிறார்.
பொதுவாகவே அறுபது வயதை கடப்பவர்களிடம் சோர்வும் கவனக்குறைவும் நினைவாற்றலில் தடுமாற்றமும் எதிர்மறை எண்ணங்களும் சூழ்ந்து தனக்கும் மற்றவர்களுக்கும் பாரமாகி விடுகிறார்கள். நான் சந்தித்த அறுபது கடந்த பெரும்பாலானவர்கள் வாழ்வதே இல்லை மெல்ல மரணத்தை நோக்கி மூழ்குவதையே தங்களின் தினசரி என கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன்.
ஐயா அவர்களை சாதகர் என்பதைவிட சிறந்த வாசகர் என்றுதான் நான் மதிப்பிடுவேன். ஆம் இன்றும் நாள்தோறும் நான்கைந்து மணி நேரங்கள் வாசிப்பில் திளைக்கிறார். மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள குறைவில்லாத அனுபவங்களும் வாசித்துப் பெற்ற அறிவும் கொட்டிக் கிடக்கிறது. அறிவின் மீதான அவருடைய தீராத தேடல் உங்களை அவரிடம் கொண்டு சேர்த்து இருக்கிறது என்று நான் நம்புகிறேன். உங்கள் மேல் பெரும் மதிப்போடு இருக்கிறார்.
அஜிக்கும் சைத்தன்யாவிற்குமான உங்களுடைய கடமைகளை நிறைவேற்றிய பின்பு நீங்கள் நிச்சயம் மலை முடித் தனிமையின் ஏகாந்தத்தில் திளைத்து வாழ்வீர்கள் என்று யூகிக்கிறார்.
உலக புத்தக தினமான இன்று வாசிப்பே தவமென கொண்ட ஒரு மூத்த வாசகருடன் செலவழித்த நாள் மிகுந்த மன நிறைவினை தந்தது. என் பதிமூன்று வயதில் எட்டு மணி நேர வேலைக்கு ஐந்து ரூபாய் கூலி பெறும் பனியன் ஆலை தொழிலாளியாக இருந்த நாள் முதல் என் பிரதான செலவுகளில் ஒன்று நூல்கள் வாங்குவது. பனியன் கம்பெனிகளில் வாரச் சம்பளம் சனிக்கிழமை மாலை தருவார்கள். எளிய குடும்பப் பின்னணி என்பதால் ஒரு வாரத்தைய உழைப்பில் ஈட்டிய வருவாயை கொண்டு தான் வாடகை உணவு இன்ன பிற தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் சேமிப்போ வேறு எந்த வருமானமோ இல்லாத காலம் அது. ஒருவார சம்பளமொத்தத்திற்கும் புத்தகங்களை வாங்கியும் வாங்க வேண்டிய புத்தகங்களை ஆசையோடு எடுத்து புரட்டிப் பார்த்து ஏக்கத்தோடும் பலமுறை வீடு திரும்பியிருக்கிறேன்.
இன்றளவும் நூல்களை காண்பது அழகிய இளம் பெண்களை காண்பது தரும் கிளர்ச்சியை மனதில் உடலில் கிளர்த்துகிறது. நூலகங்கள் புத்தகக் கடைகள் குறிப்பாக புத்தகக் கண்காட்சிகளில் இருக்கும் பொழுது தேன் குளத்தில் மூழ்கியது போல் மூச்சடைக்கும். வாங்கிய நூல்களை படித்த பின்பே புதிய நூல்களை வாங்க வேண்டும் என்ற முடிவில் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கிறேன்.
பரமேஸ்வரன் ஐயா அவர்கள் மிக அரிய நூல் சேகரங்களை வைத்திருக்கிறார். 1964ல் ஐந்து ரூபாய்க்கு வெளியிடப்பட்ட பகவத் கீதை. ரமணாஸ்ரமம் சார்பில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பெரும்பாலான நூல்கள் இதழ்கள். புத்த தத்வ விளக்கங்கள்.பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்கள் என.
உயர்கல்வி பெற்று அமெரிக்காவில் வசிக்கும் பேத்தி மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பேரன்கள் கொள்ளுப் பேரன் என வெற்றிகரமான வாழ்வு அமைந்திருந்தாலும் தனக்குப் பின் இந்த நூல்கள் என்னாகுமோ தகுதி வாய்ந்தவர்களிடம் சென்று சேருமா என்ற பதட்டம் அவருக்கு இருக்கிறது. சென்ற வாரம் கூட அறம் ஆங்கில பதிப்பு உட்பட உங்களுடைய சில நூல்களை புதிதாக வாங்கி இருக்கிறார். அவ்வப்போது எனக்கும் சில முக்கியமான நூல்களை தருவார்.
நீ யார் என்ன செய்கிறாய் என என்னிடம் கேட்டால் வனங்களின் காதலன் ஜெயமோகன் வாசகன் புத்த ரமண பாதைகளில் நடக்க முயல்பவன் யோக சாதகம் செய்பவன் என்பேன். பரமேஸ்வரன் ஐயாவும் நூலளவு மாற்றமின்றி இதே ஆர்வங்களை கொண்டவர்.
வீடு திரும்பும் போது மனைவி உன்னுடைய என்பது வயதில் நீயும் இப்படித்தான் இருப்பாய் என்றார்.
உங்கள் பிறந்த தினத்தை அடுத்து உலக புத்தக தினம் வருவது தான் எவ்வளவு இனிய பொருத்தம்.
மு.கதிர் முருகன்
கோவை