கவிதையும், ரசனை மதிப்பீட்டின் எல்லையும்

இனிய ஜெயம்

மற்றும் ஒரு இனிமை நிறைந்த காவிய முகாம். மூன்று நாட்கள் இரவு பகல் முழுக்க உரையாடல்கள். முகங்களின் பெருக்கின் ஊடே மனம் வழக்கமாக வரும் ஆனால் இம்முறை வர இயலாமல் போன நண்பர்களின் முகங்களைத் தேடியது.

முகாமில் எனக்கு அளிக்கப்பட்ட நவீன கவிதைகள் மீதான அமர்வை நான் சரியாகவே கையாண்டேன் என பின்னர் அஜிதனின் மதிப்பீட்டின் வழியே அறிந்து கொண்டேன்

அமர்வில் முதல் பகுதியாக என் கவிதை வாசிப்பு பரிணாம பாதையின் 8 அலகுகளை குறிப்பிட்டேன்.

1. எவை இரண்டாம் நிலை கவிதைகள். எந்த அம்சம் அவற்றை இரண்டாம் நிலை கவிதை என்று ஆக்குகிறது.

2. கவித் தன்னிலை என்பதன் இயல்பு.

3. ஏன் கவிதைகள் வாசிக்கப்படுகிறது. கவிதையின் செயற்களம் என்ன.

4. போலி கவிதைகள் எவை. அது எவ்விதம் இயங்குகிறது.

5. அசல் கவிதையின் ஊற்று முகம் எது.

6. நவீன கவிதை கைகொள்ளும் மொழி.

7. அந்த மொழி வழியே அது உருவாக்கும் காட்சியும் படிமங்களும் உலகும்.

8. அசல் கவிதைக்கும் அதன் வாசகனுக்கு இடையே நிகழ்வது என்ன? இத்தகு வரையறைகளுக்கு வந்து சேர கோட்பாட்டு மதிப்பீடு கடந்த ரசனை மதிப்பீட்டின் இன்றி அமையாத தேவை என்ன? கோட்பாடு, ரசனை இந்த இரண்டு மதிப்பீடுகளுக்கு இடையிலான பண்பு பேதம் என்ன?.

இரண்டாம் பகுதியில் ச. துரை, போகன், ஆனந்த் குமார், சதீஷ்குமார் சீனிவாசன் இவர்கள் எழுதிய 4 கவிதைகளை முன் வைத்து அந்த கவிதைகள் மீதான என் ரசனை பார்வையை முன் வைத்தேன். சிறப்பான கலந்துரையாடல் நிகழ்ந்தது.

இந்த உரையாடலில் நான் விவாத முகத்தை திறக்க சில அலகுகள் இருப்பினும் நேரம் கருதியும், அந்த விவாதம் நான் முதல் பகுதியில் பேசியவற்றை வாசகர்கள் பின்னர் தங்களுக்குள் தொகுத்துக் கொள்வதில் ஏதேனும் இடரை உருவாக்கலாம் என்று உத்தேசித்தும் அவற்றை தவிர்த்து விட்டேன். அவற்றில் இரண்டை அதில் எனது தரப்பை இங்கே குறிப்பிட விழைகிறேன்.

முகம்

_______

உறங்கும்போது மட்டும் பழுப்பு நிறமாக மாறியிருந்த எனது முகத்தை அன்று பார்த்தேன் 

உண்மையிலே நித்திரையில்

எனது முகம் எவ்வளவு சாந்தம் 

யாரையும் எதிர்பார்க்காத எதன் மீதும் பொறுப்பற்ற

அந்த மயானத்தனமான அமைதி முகத்தை நினைத்தால் இப்போதும் குளிர்ச்சி பரவுகிறது 

உதிரவோ அழுகவோ போகாத அந்தக் கனி முகத்தை அப்படியே 

உடல் மரமாகத் தாங்கி வைத்திருந்தால்

எத்தனை அழகான காலமோட்சம்

ஆனால் துரதிர்ஷ்டம் பாருங்களேன் 

அந்தத் திவ்ய சொரூப முகத்தை பார்த்து மயங்கியிருக்கையில், எல்லாம் பறிக்கப்படுவது போல, எல்லாம் பின்னோக்குவது போல,

ஒரு பெரும் மின்னல் நீண்ட நேரம் வானில் தொங்குவது போல

பழுத்த முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த என்னை

உறக்கம் கலைந்த நானே பார்த்துவிட்டேன்

பின்பு அந்தப் பழுத்தக் கனி

உதிர்ந்தேவிட்டது.

.துரை

சங்காயம்.

முதலாவதாக

மேற்கண்ட  கவிதையை சில உதாரணங்கள் விவரணைக்குப் பிறகு அதை மரண அனுபவம் மீதான கவிதை என்று வரையறை செய்தேன். மரணம் எனில் மீண்டும் மீள நிகழ வாய்ப்பே இல்லாத ஒன்று முற்ற முடிவாக விட்டுப் போய் விடுவது. அந்த வகையில் இக் கவிதையை நேரடி மரணம் என்பதை விட ஆத்மீகமான ஒன்றின் மரணம் என்று வாசிக்க மேலதிக கற்பனை சாத்தியங்களை உள்ளடக்கிய கவிதை இது என்று சொன்னேன்

இக்கவிதை குறித்த எனது பார்வையை அதுகடலூர் சீனுஎன்ற வாசகனாகிய உங்களின் தனிப்பட்ட பார்வை. இதுதான் இந்த கவிதை பேசுகிறது என்ற பொது வாசிப்பு வரையறையை அதன் மேல் சுமத்த வேண்டாம் என்று சொன்னீர்கள்

நான் முன்வைத்ததுஎனதுவாசிப்பு மட்டுமே அல்ல. அந்த கவிதை வழியே எவரும் சென்று சேர வாய்ப்பு உள்ளஅடிப்படைவாசிப்பு. உங்களுக்கும் எனக்கும் அது பொதுவாகவே இருக்கும்உதாரணமாக நான் உதாரணம் சொன்ன சு ரா வின் இயற்கையின் சுயம் கவிதையை  நான் சொன்ன இருத்தலியல் அழகியல் வரையரையையே அதன் அடிப்படை வாசிப்பாக எவரும் அளிப்பார்கள். அதன் படி எழுவதே அக் கவிதை மீதான அடுத்தடுத்தமேலதிககற்பனை சாத்திய வாசிப்புகள். இந்தஅடிப்படைவாசிப்பின் பிறகே அவை எழ முடியும்அந்த வகையில் இந்த முகம் கவிதை, பழுப்பு முகம், மயானத் தனமான முகம், உடல் மரத்திலிருந்து உதிரும் கனி முகம், (மரம் விதைக்கு திரும்ப முயல்வது போல) எல்லாமே பின்னோக்கி திரும்புவது, நிரந்தரமாக நின்றுவிட்ட மின்னல் போன்ற (gloomy) இருண்ட சித்திரங்கள் வழியே, (gothik) அமானுஷ்ய உணர்வு ஒன்றில் நிலைக்கும் கவிதை. எனது அடிப்படை வாசிப்பு இதன் மேல் அமைத்ததே. இந்த அடிப்படை வாசிப்பு எவருக்கும் பொதுவானதே. இந்த பதிலை நான் சொல்லவேண்டும் என்பதன் பொருட்டே நீங்கள் விவாத முகத்தை துவங்கி இருக்கலாம், அதன் படி அங்கே நேரமின்மை காரணமாக எனது இந்த பதிலை இங்கே தெரிவிக்கிறேன்.

இரண்டாவதாக 

நான் முன்வைத்த ச துரை கவிதை உள்ளிட்டு சில கவிதைகளில் அதன் வார்த்தைகளை நீங்கள் மாற்றி அக் கவிதை குறி வைத்த இலக்கை நோக்கி அதை எய்தீர்கள். நன்றாகவே இருந்தது. இருப்பினும்  அது உங்கள் வழிமுறையே அன்றி அதை பொது வழிமுறையாக கொள்ள இயலாது. நீங்கள் கம்பனை நிகர்த்தவர் நீங்கள் அவ்விதம் செய்யலாம் அதை பொதுவிலும் சொல்லலாம். அதை பொது கவிதை வாசகன் தனது வழிமுறையாக கொள்ள இயலாது. காரணம், அப்  படைபாளியால் பின்னர் எப்போதேனும் சீர் செய்து மீண்டும் வெளியாகும் சிறுகதை நாவல் போலன்றி, கவிதை எப்போதும் முற்ற முடிவான முழுமை வடிவம் என்றே இதுவரை கவியால் வாசகனுக்கு அளிக்கப்படுகிறது. இன்று கவிதைக்குள் நுழையும் புதிய வாசகன் இது முழுமையான ஆக்கம்தானா எனும்சந்தேகத்தோடுதான் கவிதை வாசிப்பை துவங்க வேண்டும் எனில் விளைவுகள் பார தூரமாகவே அமையும்.

இதில் கவிதை வாசகனுக்கு வெளியே, ரசனை மதிப்பீட்டு விமர்சகர் என்றாலும் கூட அவரது கூற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. அதிக பட்சம் இது முழுமை கூடாத கவிதை என்று சொல்லி, அதன் காரணத்தை கவிதையின் பலவீன சொல் இணைவில், படிம சீர் குலைவில், வைத்து சுட்டிக்காட்ட மட்டுமே முடியும். ரசனை விமர்சகனின் பணி அவனுக்கு அளிக்கப்பட்ட கவிதை வடிவத்துக்குள் நிற்கும் குண விசேஷங்கள் பண்பு நிலைகள் தனிதன்மைகள் இவற்றின் விரிவும் ஆழமும் நோக்கி செல்வதாக மட்டுமே இருக்கும். அவனுக்கு அளிக்கப்பட்ட கவிதைகளின் வரிகளை நீக்கவோ, மாற்றவோ செய்து, கவிஞர் உத்தேசித்த கவிதையைவெளியேகொண்டு வருவதல்ல அவனது பணி. ஞானியின் கவிதையில் அந்த ஞானத்தின் சாரம் சேர்ந்திருப்பது போல, (அவன் ஞானி அல்ல என்றாலும்நவீன கவிஞனின் கவிதையிலும் அதே ஞானத்தின் ஒரு துளி இடம்பெறவே செய்யும். அந்த வகையில் ஒரு ரசனை மதிப்பீட்டு விமர்சகர்  கவிதைகளின் வார்த்தைகளை மாற்றுவது அதை மறு உருவாக்கம் செய்வது என்பது, அந்த கவி கவிதை வழியே அக்கணத்தில் ப்ரக்ஞயால் தொட்டெடுத்த மெய்ம்மை மீதுதனதுரசனையால் வன்முறையை செலுத்துகிறான் என்பதே அதன் பொருள். நன்றி.

நட்புடன்.

 கடலூர் சீனு.

(குரு நித்யா காவியமுகாம் 2023ல் பேசிய உரை)

முந்தைய கட்டுரைபீத்தோவன் இசை அறிமுகம்
அடுத்த கட்டுரைஆலயக்கலை- கடிதம்