குருதிப்புனல் வாசிப்பு

இந்திரா பார்த்தசாரதி

குருதிப்புனல் வாங்க

அன்புள்ள ஜெ,

வரலாற்றில் கொடூரங்களுக்கு பஞ்சம் எதுவும் இல்லை. தர்மம் என்றும் அறம் என்றும் மானுடம் தனக்கு விதித்துக் கொண்ட உயர் லட்சியங்களுக்கும் அதன் பேராசை மற்றும் சுயநலத்திற்கும் இடையே நிகழும் நிரந்தர போராட்டத்தின் வழியே வரலாறு செல்கிறது. ஒவ்வொரு நிலையிலும் நியாயமும் தர்மமும் வெல்கிறது என்றாலும் அந்த வெற்றிக்கு ஈடாக அது அளிக்கும் விலை அதிகம்.

சுதந்திர இந்தியாவில் அடித்தட்டு மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஒவ்வொன்றும் குலை நடுங்க வைப்பவை. 1968ல் தஞ்சாவூரில் கீழ்வெண்மணி கிராமத்தில் பெண்களும் குழந்தைகளுமாக 44 பேர் நிலவுடைமையாளர்களால் குடிசைக்குள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். விவசாய கூலிகளான தலித்துகள் கம்யூனிஸ்ட்கள் ஆதரவுடன் தங்களது கூலியை உயர்த்திக் கேட்டதே இந்த கொடூரத்திற்கான முகாந்திரம். அன்றைய நெல் உற்பத்தியாளர்கள் சங்க தலைவரான கோபாலகிருஷ்ண நாயுடு முதன்மை குற்றவாளி.இந்த நிகழ்விற்கு மிகச் சில நாட்கள் முன்பு நாயுடுவின் ஆட்களில் ஒருவர் தொழிலாளிகளுடனான கைக்கலப்பில் கொல்லப்பட்டார். இந்த இரு கொலை வழக்குகளும் இணையாக நடத்தப்பட்டு 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட முதல் வழக்கில் போதிய சாட்சிகள் இல்லாமல் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். மாறாக ஒருவர் இறந்த அந்த இன்னொரு வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது . மற்றவர்களுக்கு சிறு சிறு தண்டனைகள் அளிக்கப்பட்டன.

இந்த பெரும் தீய நிகழ்வை மையப்படுத்தி இந்திரா பார்த்தசாரதி அவர்களால் எழுதப்பட்ட நாவல் குருதிப்புனல். இரு கல்வி கற்ற இளைஞர்களின் பார்வையில் இந்த நிகழ்வு சொல்லப்படுகிறது.  

டெல்லியில் கல்வி கற்ற சிவா தன் சக மாணவனும் தோழனுமான கோபாலை தேடி அவன் வசிக்கும் கிராமத்திற்கு வருகிறான். அங்கு ஆசிரியரும் கம்யூனிஸ்டுமான ராமையாவின் வீட்டில் தங்கியிருக்கும் கோபாலுடனே சேர்ந்து தங்குகிறான். ஏற்கனவே கூலி உயர்வு சம்பந்தமாக விவசாய கூலிகளான தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பண்ணையார்களுக்கும் இடையே பிரச்சினை கனன்று கொண்டிருக்கிறது. கோபால் தினமும் உணவருந்தும் வடிவேலுடைய சிறிய கடையை காலி செய்ய சொல்லி மிரட்டும் நிலவுடைமையாளர்களின் தலைவரான கண்ணையா நாயுடுவை ,அதுகுறித்து பேசுவதற்காக ராமையாவின் எச்சரிக்கையையும் மீறி நாயுடுவின் வீட்டிற்கு செல்லும் கோபால், திரும்பி வரவில்லை. ராமையாவும் சிவாவும் தமது சகாக்களுடன் நாயுடுவின் வீட்டிற்கு சென்று விசாரிக்கையில் நாயுடு ஊரிலேயே இல்லை என்றும் கோபால் அப்போதே திரும்பி சென்று விட்டதாகவும் அவரது வேலையாட்கள் சொல்கிறார்கள். ஆனால் கோபால் தலையில் பலமாக அடிபட்டு பாப்பாத்தி என்னும் இளம் விதவையின் வீட்டருகே கிடப்பதை பிறகு கண்டுபிடிக்கிறார்கள். அது போக பாப்பாத்தியும் வடிவேலுவும் காணாமல் போகிறார்கள். அவர்களை தேடும் கோபாலும் சிவாவும் ராமையாவும் எடுக்கும் முயற்சிகளும் அதற்கு நாயுடுவின் எதிர்வினையும் என அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இறுதியாக அந்த படுகொலைகளில் வந்து முடிகிறது.

கோபால், சிவா இருவரும் கல்வி கற்ற லட்சியவாதிகள். கோபால் சமூகவியலிலும் சிவா அறிவியலிலும் பட்டம் பெற்று டில்லியில் ஆசிரியராக பணிபுரிகின்றனர். கோபாலின் தந்தை நாயுடு , அருகிலிருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்தவர். ஒரே பிராமண பெண்னை காதலித்து அவளுடன் டெல்லிக்கு சென்றுவிடுகிறார். கோபால் திடீரென்று தனது வேலையை விட்டு விட்டு இந்த கிராமத்தில் வந்து தங்கியிருக்கிறான். இரண்டு வருடங்களாக அவனது கடிதங்களுக்காக காத்திருந்த சிவா தோன்றியபடி கிளம்பி வந்துவிடுகிறான்.

நாவல் முழுவதும் இருவரது நுட்பமான மனவோட்டங்களும் உரையாடல்களும் விரவிக் கிடக்கின்றன. மனித அகம் சமூக மதிப்புகளின் பாதிப்பினால் ஏற்படும் ஒன்று என்பது கோபாலின் கொள்கை. மனித மனம் அவ்வாறு இயந்திரத்தனமாக இயங்கக்கூடியது அல்ல என்பது சிவாவின் கொள்கை. அது நிகழ்வின் முன்னோட்டத்தை ஒட்டி எவ்வாறு மறுபரிசீலனை செய்கிறார்கள் என்பதும் நாவலில் சொல்லப்பட்டது. உண்மையில் இருவருமே வெளி உலகம் அறியாத அப்பாவி சாய்வு நாற்காலி அறிவுஜீவிகள். சோவியத் ரஷ்யாவின் புரட்சி என்னும் கருத்தாக்கம் இருவரையுமே கவர்ந்திருக்கிறது. கோபாலைத் தேடி பண்ணையார் நாயுடு வீட்டிற்கு கூட்டமாக செல்லும் போதும், பிறகு வேலைநிறுத்ததில் வெளியூர் விவசாய கூலிகளை இணைத்துக் கொள்வதற்காக செல்லும் போதும், இருவருக்குமே இந்த நிகழ்வுகளை ரஷ்யப் புரட்சியுடன் ஒப்பிட்டுக் கொள்ளவே தோன்றுகிறது. மற்றபடித்தகதாபாத்திரங்களான டாக்டர் கனகசபையும் வழக்கறிஞர் சுந்தரவதனமும் சற்றேனும்தரையில் கால் பாவியமனிதாபிமானிகளாக இருக்கிறார்கள். மற்றபடி ராமையா, விவசாய கூலிகளான பழனி போன்றோர் கொந்தளிப்பான ஆளுமை கொண்டவர்கள். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் சிவாவும் குடிசையில் எரியும் உயிர்களை காப்பாற்ற முடியாமல் பார்க்கும் கோபாலும் உணர்வது சுதந்திரம் பெற்று 20 ஆண்டுகளாகியும் எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக காவல்துறையோ அரசோ இல்லை என்னும் உண்மை.

நாவலின் இன்னொரு மைய ஓட்டம் கதை மாந்தரின் காமமும் அதன் மீதான ஃபிராய்டிய அனுகுமுறையும்.

எதிர்நாயகனான கண்ணையா நாயுடுவின் ஆண்மையின்மை, அதை குத்திக் காட்டும் கோபாலால் சீண்டப்பட்டு வடிவேலுவையும் பாப்பாத்தியையும் நாயுடு பாலியல் சித்திரவதை செய்வது, இந்த இருவரையும் தேடும் கோபால், நாயுடுவின் ஆசை நாயகியான பங்கஜம் வீட்டிற்கு சென்று உறவு கொண்டாடி உளவு பார்த்து காப்பாற்றுவது , அங்கு நடக்கும் மோதலில் நாயுடுவின் ஆள் கொல்லப்படுவது என ஒரு தனி பாதை செல்கிறது. காமம் சார்ந்த இந்த ஆய்வுகள் நாவலின் இலக்கிய பெறுமதியை வெகுவாக குறைந்துவிடுகிறது

.பா பெரும்பாலும் உரையாடல் மூலமே நாவலை முன்னகர்த்துகிறார். பல வசனங்கள் மிக கூர்மையானவை. ஆனாலும் இன்றைய பார்வையில் நாவலில் கலையமைதியும் கவித்துவமும் கைகூடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  

மிகச் சமீபத்தில் ஊர்க்கிணறு புணரமைப்பு இயக்கத்தின் மதுமஞ்சரி  தான் கண்டுணர்ந்த சாதி ஏற்றத்தாழ்வு குறித்து பதிவிட்டிருந்தார். அதனையும் வேங்கைவயல் நிகழ்வையும் நினைத்துக் கொண்டேன்.

இ.ஆர்.சங்கரன் 

முந்தைய கட்டுரைகோவை சொல்முகம் – தேவிபாரதி
அடுத்த கட்டுரைஅருட்செல்வப்பேரரசன்