அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். காண்டீபம் வெண்முரசில் எனக்கு மிக முக்கியமான நாவல். அதை பற்றி நான் எழுதியது.
நிர்மல்
காண்டீபம் மின்னூல் வாங்க
காண்டீபம் வாங்க
காண்டீபம்
நான் அர்ஜுனனின் மிகப் பெரிய விசிறி. சிறுவயதில் இருந்தே அர்ஜுனன் மீது அன்பு உண்டு. அதனால் காண்டீபம் எனக்கு முக்கியமான நாவலாக இருந்தது.
இந்திய மரபில் உள்ள வாழ்வின் அர்த்தம் குறித்த தேடலுடைய உயிர் என்பதற்கு அர்ஜுனன் மிக துல்லியமான உதாரணம்.
காண்டீபம் 6 பகுதிகளை கொண்டது. கனவுத்திரை, அலையுலகு, முதல் நடம், ஐந்து முகத்தழல், தேரோட்டி, மாநகர்.
அஸ்தினபுரத்து கௌவுரவ இளவரசர் சுபாகுவின் மகன் சுஜயன் என்னும் சிறுவன் காணும் கனவுத்திரையில் இருந்து காண்டீபம் துவங்குகின்றது. மனதளவில் பயத்துடனும், பெரும் பகல்கனவுகளுடனும், ஷாத்திர இயல்புகளான வீரம் , தைரியம் குறித்த கனவுகளுடனும் சுஜயன் இருக்கின்றான். கனவை அள்ளி அள்ளி அணைத்துக் கொள்வதாக அரண்மனை சேடி பெண்களால் அடையாளப்படுத்தப்படுகின்றான்.
மருத்துவரும் நாடி பார்த்து சுஜயனிடத்து நாடி முற்றிலும் நிகர் நிலையில் உண்டு, உள்ளம் கொள்ளா எண்ணங்களால், நொய்மையான உடம்பில் நிரம்பி தவிப்பதாக சொல்வார். நிமித்திகரும் அதையே சொல்வார். காட்டூயிர்களை அன்றாடம் காணட்டும், வெயிலும், காற்றும் சுஜயனின் உடலில் படட்டும் என சொல்லுவார். அறைக்குள் அடைபடுதல் அரண்மனை ஆகினும் உள்ளத்தினை சிறையாக பிடிக்ககூடியது.
நிமித்திகர் அப்பொழுது தன் எண்ணத்தில் தானே வலையில் சிக்கிய மீனாக தவிக்கும் சுஜயனுக்கு மாவீரர்களின் கதைகளை சொல்ல சொல்கினறார். பிரதாபங்களை மட்டுமல்ல, இடர்களை, தோல்வியை சொல்ல சொல்கின்றார். மாவீரனுக்கு அனைத்தும் இலட்சணமே. அவை நொய்ந்த உடலுக்கு, கட்டங்காத உள்ளத்துக்கு மாற்றாக உடலுக்கு,மனதுக்கு உரமாக இருக்கும் என்பது நிமித்திகர் கூற்று. அப்பொழுதான் மாலினிதேவியின் கங்கைகரை காட்டில் கூட்டி சென்று அர்ஜுனன் கதை சொல்ல அரண்மையில் முடிவு எடுக்கின்றார்கள்.
நவீன காலத்தில் நாமும், நம் பிள்ளைகளும் பல மாவீரர் கதைகளை கேட்கின்றோம். முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், அணுகுண்டு யுத்தங்கள், வல்லரசு நாடுகள், சூப்பர் ஹீரோக்கள் என பல கதைகளை கேட்கின்றோம். சாகசங்களை பற்றி அறிகின்றோம். மாவீரத்தின் கதை இல்லாத காலம் சுஜயன் காலத்தில் நம் காலம் வரை இல்லாமல் இருந்தது இல்லை. கதைகள் சொல்லப்படாத, கேட்கப்படாத காலம் என எதுவும் வரப்போவதில்லை.
“வரலாற்றை ஆக்கும் மாவீரர்களின் இயக்க நெறி ஒன்றே. அவர்கள் ஒன்றிலிருந்து பல்லாயிரமாக பெருக்கிக் கொள்ள வேண்டும். ஒரே தருணத்தில் பல்லாயிரம் இடங்களில் பல்லாயிரம் வாழ்வுகளை வாழ வேண்டும். ஒரு மனிதர் ஒரு படையாக, சமூகமாக, நாடாக ஆவது அப்படித்தான்” என மாலினி தேவி அர்ஜுனன் பற்றி சொல்வார். இந்த வரிகள் உங்களுக்கு யாரையாவது நினைவுப் படுத்துகின்றதா?
சுஜயனுக்கு மாலினி தேவி அர்ஜுனன் கதைகளை சொல்கின்றாள். முதலில் சித்ரதன் என்னும் கந்தர்வனிடன் அர்ஜுனன் சாக்ஷுஷி மந்திரம் பெற்ற கதை வருகின்றது. அதன் பின்னர் அர்ஜுனன் நாகர் உலகம் சென்று உலுபியை மணந்த கதை.அன்னை துர்க்கையின் நிலமான மணிப்பூரகம் சென்று சித்ராங்கதையை மணந்த கதை. துவாரகை சென்று சுபத்திரையை மணந்த கதை. முடிவில் இந்திரபிரஸ்தத்தில் சுஜயன் அர்ஜுனனை சந்திப்பதில் முடிகின்றது.
இதில் சொல்லப்படும் கதைகளை நாம் வாசிக்கின்றோம், சுஜயன் கேட்கின்றான். கேட்கையில் கதைக்கு சொல்பவர் கொடுக்கும் உணர்வு அமைகின்றது. சொல்கையில் கதை சொல்லியின் குரல் உயர்கின்றது, குரல் தாழ்கின்றது, குரல் பதைபதைக்கின்றது, குரல் கோபப்படுகின்றது. கதை சொல்லி உணர்வினை ரசமாக்கி அளிக்க இயலும். வாசிக்கையில் மனசுக்குள் ஒரு கதை சொல்லியை உருவாக்கி உட்கார வைத்துக் கொள்வது அவசியம். இல்லையேல் சுஜயன் மாலியினிடம் கேட்ட உணர்வினை நாம் பெறுவோமா?
அமெரிக்க மருத்துவர் லூயிஸ் மத்ரோனோ எழுதிய கயோட்டி விஸ்டம் : பவர் ஆப் ஸ்டோரி இன் ஈலிங் என்ற புத்தகத்தில் வரும் ஒரு வரிகள் இவை.
“Stories contain our answers. They impose order onto the chaos of our experience. They help us organize our experience in time. They provide beginning, middle and ending. They locate our experience in cultural contexts and geographies. They tell us who we are, Where we are and what we are.”
இது மிகவும் தாக்கத்தினை உடைய வரிகள். அன்னையரால் அர்ஜுனன் கதை சுஜயனுக்கு சொல்லப்படுவதை இதன் வழியே யோசிக்கலாம். சுஜயன் தன்னை யாரென்று, எங்குள்ளவன் என்று, என்னவென்று அறிவானா?
முதல் நடம் பகுதி துவங்கையில் கதைகளை பற்றி நம்மிடம் பேசுகின்றது. கவிதையென ஓலிக்கின்றது. ஆழ்ந்து ஒலிக்கின்றது. கதைகளுக்கு தெய்வம் புராணிகை என சொல்கின்றது.
புராணிகை செவி மட்டுமே ஆனவள், மொழியற்றவள், ஓலியற்றவள். கதைகளுக்கு முன்னும் மட்டுமே அவளை நாம் உணர முடியும். முதல் நடம் அவளை இவ்வாறு சொல்கின்றது.
“முதற்சொல் எழுகையிலேயே அவள் கதைகளுக்குள் புகுந்து கொள்கிறாள். கதைகளின் ஒவ்வொரு வரிகளுக்கிடையிலும் ஒவ்வொரு சொல்லுக்கு இடையிலும் அவள் இருக்கிறாள். நீள்மூச்சுகளாக விழிநீர்த் துளிகளாக பிறர் அறியா உவகைகளாக பொருள் கொள்ளா சொற்களாக எவரும் அறியா விழைவுகளாக. கதை முடிந்ததும் தன் ஆயிரம் கைகளை விரித்து பேருருவம் கொண்டு அவள் எழுகிறாள்” என்றாள் மாலினி.
முப்பத்தி முக்கோடி தெய்வங்களால் ஆளப்படும் புடவியில் கதைகளுக்கான தெய்வம் புராணிகை. தெய்வம் அமராத இடம் எதுவும் இல்லை.
“இவ்வுலகில் சிம்மங்களால் உண்ணப்பட்டவர்களைவிட, நோயால் உண்ணப்பட்டவர்களைவிட, போர்களால் உண்ணப்பட்டவர்களை விட, ஊழால் உண்ணப்பட்டவர்களை விட கதைகளால் உண்ணப்பட்டவர்களே மிகுதி”
என முதல் நடம் சொல்லுகின்றது. கதையால் உண்ணப்பட்டது சுஜயன், சுபகை, மாலினி மட்டுமல்ல நாமும்.