கல்வி,விடுதலை -கடிதம்
வணக்கம் ஜெ,
ஜெயந்தி கடிதத்தின் (கல்வி,விடுதலை -கடிதம்). இன்னொரு விஷயத்தைப் பற்றியும் நீங்கள் கருத்து கூற வேண்டும் என்று விரும்புகிறேன்.
தொலைதூர கல்வி என்பது அறிவு விருத்திக்கும் வேலை வாய்ப்புக்கும் உதவவில்லை. பின் எதற்காக இந்த பல்கலைக்கழகங்கள்.
என் அலுவலகத்தில் இளையவன் ஒருவன் தன் 18 வயதில் வந்து சேர்ந்தான். டாஸ்மாக்கின் வருமானத்திற்காக உழைக்கும் அப்பாவினால் சோறு போடவோ கல்வி கொடுக்கவோ இயலவில்லை. அதனால் உழைத்து, பொருளீட்டிக் கொண்டே படிக்கலாம் என்று 18 வயதிலேயே வேலைக்கு வந்து விட்டான். தொலைதூர கல்வியில் படித்து பட்டம் பெற்ற பின் எங்கள் அலுவலகத்திலேயே நிரந்தர பணி கிடைத்தது. பத்து வருடங்களுக்குப் பிறகு உள் அரசியல் காரணமாக அவன் வெளியே போகும் நிலைக்கு வந்த போது தான் தொலைதூரக் கல்விக்கு அரசும், தனியார் நிறுவனங்களும் கொடுக்கும் மதிப்பு என்னவென்று தெரிந்தது. மிகப்பெரிய நிறுவனங்கள் கூட இவன் தகுதியை ஆராய்ந்து வேலை கொடுக்க முன் வந்த பிறகு சான்றிதழ் சரிபார்க்கும் போது நிராகரித்தது. அவன் முயற்சி செய்த நல்ல மூன்று நான்கு நிறுவனங்களும் இதை காரணம் காட்டி நிராகரித்தன. மிகவும் சோர்ந்து போனான். அவன் அம்மா, இது முன்பே தெரிந்திருந்தால் கையேந்தியாவது படிக்க வைத்திருப்பேன் என்று அழுதார்கள். அரசு மற்றும் வங்கிப் பணிகளுக்கு கூட விண்ணப்பிக்க முடியாத நிலை. பின் எதற்காக இந்த தொலைதூர அஞ்சல் வழி கல்வி. இதன் மூலமாக அரசு வருவாய் ஈட்டுகிறதா?
நன்றி ஜெ.
வைஜயந்தி. சென்னை
அன்புள்ள வைஜயந்தி
அரசு அங்கீகரித்த தொலைதூரக் கல்விக்கு அரசுத்துறைகளிலேயே நடைமுறையில் எந்த மதிப்பும் இல்லை. ஏன் அந்தப் பட்டத்தை அளித்த அதே பல்கலைகழகமே அந்தப்பட்டத்தை ஒரு பட்டமாக மதிப்பதில்லை.
தொலைதூரக்கல்வி என்பது ஒரு கல்வி மோசடி. பல்கலைக் கழகங்கள் பணம் பண்ணுவதற்கான ஒரு வழி மட்டும்தான் அது. அதில் சேர்பவர்கள் ஒரு வரிகூட படிக்காவிட்டாலும் பட்டம் அளிப்பார்கள். அப்படி அளித்தாலொழிய அதற்கு மக்கள் வந்து சேரமாட்டார்கள். மக்கள் வந்து சேர்ந்தால் மட்டுமே பல்கலைக்கு பணம் வரும். சேர்பவர்கலில் பாதிப்பேட் முதல்பணம் கட்டியதுடன் நின்றுவிடுவார்கள். எஞ்சியோர் எதையாவது எழுதி பட்டம் பெற்றுவிடுவார்கள். இப்படி பல்லாயிரம்பேர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். அவை வெற்றுத்தாள்கள் மட்டுமே. அவற்றை பெற்ற பெரும்பாலானவர்கள் எதிலுமே எதையுமே படித்தவர்கள் அல்ல.
இதனால் இப்பட்டத்தை சரியாகப் படித்துப் பெற்ற சிலர் அதே கூட்டத்துடன் சேர்க்கப்படுகிறார்கள். அவர்களின் பட்டங்களுக்கும் மதிப்பில்லை. இன்று இது ஓரளவு தெளிவாகிவிட்டது. அந்தப்பட்டங்கள் திருமண அழைப்பிதழில் போடுவதற்கு மட்டுமே உதவுவன
ஜெ