கல்மலர், கலிங்கம்- எம்.டியின் உலகம்

எம்.டி.வாசுதேவன் நாயர் தமிழ் விக்கி

அனைவருக்கும் வணக்கம்,

எங்கள் சிற்றூரில் ஒரு வழக்கம் முன்பிருந்தது. பையன்கள் முதன்முதலில் பீடி பிடிப்பது சொந்த தாய்மாமனின் முன்னால்தான். தாய்மாமன் பார்க்கவேண்டும் என்பதற்காகவே நாள் முழுக்க இருமி அவஸ்தைப்படவைக்கும் அந்தப் பொருளை பற்றவைத்து இழுப்பார்கள். “ஊரில் தாய்மாமா இல்லை, அதனால் இன்றைய பீடிச்செலவு மிச்சம்” என்று ஒரு சொலவடையே உண்டு. அதொரு திமிறல், ஒரு மீறல், ஒரு தன்வழிச் சேறல்.

நான் 1986ல் எம்.டி.வாசுதேவன் நாயர் பற்றி ஒரு கட்டுரையை எழுதினேன். அதன்பின் தமிழில் எம்.டி.பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன். எம்.டிக்கு 90 அகவை நிறையும் இந்த ஆண்டு அவற்றை ஒரு நூலாக ஆக்கலாம் என்று எண்ணி சேகரித்தபோது அக்கட்டுரையை பார்த்தேன். அது ஒரு ‘மருமகன் பீடி’ என தெரிந்தது. சிரித்துக்கொண்டேன்.

நான் எழுதிய அந்த முதல் கட்டுரையில் எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவல்கள் பற்றி இரண்டு போதாமைகளை கொஞ்சம் வலுவாகவே சுட்டிக்காட்டியிருந்தேன். வலு ஏனென்றால் அது சின்னப்பையன்களின் இயல்பு. ஐந்தாறு வயதான பையன்கள் இயல்பாகப் பேச மாட்டார்கள். அவர்களால் முடிந்தவரை குரலெழுப்பி, உச்ச ஸ்தாயியில்தான் பேசுவார்கள். அவர்கள் முடிந்தவரை தீவிரமாக இருக்க, அந்த இருப்பை தீவிரமாக பிறருக்கு உணர்த்த விரும்புகிறார்கள்.

அந்த இரண்டு போதாமைகள் இவை. ஒன்று, எம்.டியின் கதைகளில் விரிவான வரலாற்றுப் பின்புலம், விரிவான சமூகப் பின்புலம், விரிவான தொன்மப்பின்புலம் இல்லை. அவற்றை அவர் பொருட்படுத்தவே இல்லை. அவருடைய நாவலில் நாயர் தறவாடுகளின் வீழ்ச்சியின் சித்திரம் உள்ளது. ஆனால் அவற்றின் வரலாற்றுப் பரிணாமம், அவற்றின் வீழ்ச்சியின் சமூகவியல் இல்லை. ராபின் ஜெஃப்ரி விரிவாகவே அவற்றை எழுதியிருக்கிறார். பல தன்வரலாறுகளில் அதெல்லாம் பதிவாகியிருக்கிறது. எம்.டி அவரே நேரில் அறிந்திருக்கலாம். அவற்றை நாவலில் அவர்  எழுதியிருக்கலாமே?

நாயர் தறவாடுகளுடன் இணைந்தவை நாகத்தான், யட்சி போன்ற தெய்வங்கள். நாயர்களுக்குரிய பல்வேறு தொன்மங்களுண்டு. அவை அளிக்கும் வரலாற்று- உளவியல் ஆழம் எம்.டியின் படைப்புகளில் இல்லை. இதனால் எம்.டியின் உலகம் ஒரு வகையில் சுய அனுபவ வட்டத்திற்குள்ளாகவே நின்றுவிட்டது என நான் மனக்குறைப்பட்டிருந்தேன்.

இரண்டாவது போதாமை என நான் குறிப்பிட்டது, எம்.டியின் கதாபாத்திரங்களை. மிக வலுவான கதாபாத்திரங்களும், அவர்களின் உணர்வுநிலைகளும், அவற்றின் மோதல்களின் வழியாக அமையும் நாடகீயத் தருணங்களும்தான் அவருடைய புனைவுலகை உருவாக்குகின்றன. சமூகத்தின் உளவியல் உருவாவதில்லை. ஒட்டுமொத்தமான உணர்வுநிலைகள் உருவாவதில்லை.

இன்று பார்க்கையில் அந்த ‘பீடி இழுப்பு’ சுவாரசியமானதாகவே படுகிறது. ஆனால் நானே ஏறத்தாழ ஒரு லட்சம் பக்கங்கள் வரை எழுதி வந்து சேர்ந்த இடம் வேறொருவகையில் பார்க்கச் செய்கிறது. எதற்காக அந்த வரலாறும், அரசியலும், சமூகவியலும்? அவை இருக்கலாம், இல்லாமலிருக்கலாம்- ஆனால் அவையல்ல கலை. கலை என்பது உணர்வுநிலைகள் மட்டுமே. அவை அமைந்திருக்கும் பீடம் மட்டுமே பிற அனைத்தும்.

கலையில் வரலாறு, அரசியல், சமூகவியல் ஆகியவற்றை பார்ப்பதென்பது ரசனையில் தொற்றியிருக்கும் ஒரு நோய் என நான் நினைக்கிறேன். தென்னையைத் தாக்கும் மண்டரி போல. தலைசூம்பிய தென்னைகளை அது உருவாக்குகிறது. சென்ற நூறாண்டுகளில் உருவான வாசிப்பு இது. இதற்கு நம்மைப் பழக்கியவர்கள் அரசியல்வாதிகள். இ.எம்.எஸ் போன்ற மகத்தான அரசியல்வாதிகள்தான், ஆனாலும் அவர்களுக்கு அரசியலே முக்கியம், கலை அல்ல என்பதை நாம் மறக்கக்கூடாது.

நாம் நேற்றைய செவ்விலக்கியங்களை எப்படி படித்தோம்? எழுத்தச்சனையும் கம்பனையும் எப்படி வாசித்தோம்? அவற்றை வைத்து சமூகவியல் ஆய்வா செய்தோம்? அவற்றில் அரசியலையா தோண்டி எடுத்தோம்? நாம் அவற்றில் கண்டடைந்தது அழியாத மானுட உணர்வுகளை அல்லவா?

என் அம்மா ஒரு பண்டிதை. அம்மா ஆண்டுதோறும் ஆடிமாதம் ராமாயணம் வாசிப்பார். எழுத்தச்சனின் ராமாயணம் அல்லது கம்ப ராமாயணம். உள்ளூர் பெண்கள் வந்து கேட்பார்கள். ஒருமுறை அம்மா சீதையைப் பற்றிய ஒரு பகுதியை வாசித்துவிட்டு உணர்வெழுச்சி தாளாமல் நிறுத்தினார். நான் பார்த்தபோது அங்கிருந்த அத்தனை பெண்களும் கண்ணீர்விட்டு அழுதுகொண்டிருந்தார்கள். இன்றும் அச்சித்திரம் அழியாப்படமாக நினைவில் நிற்கிறது. அது அல்லவா வாசிப்பு?

எம்.டி.வாசுதேவன்நாயர்

ஒரு மகத்தான படைப்பு நமக்களிப்பது கதைமாந்தரையும் அவர்களின் உணர்வுநிலைகளையும்தான். அந்த உணர்வுநிலைகள் ஆழமானவை என்றால், மானுடப்பொதுவானவை என்றால், காலத்தால் குறையாதவை என்றால் அந்த படைப்பு ஒரு செவ்வியல் ஆக்கம். அந்த கதைமாந்தர்கள் காலம்போகப்போக ஒருவகை இறவாமை அடைகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தொன்மங்களாக ஆகிவிடுகிறார்கள்.

இந்தப் பூமியில் பலகோடி மனிதர்கள் பிறந்து மறைகிறார்கள். எவரும் நினைக்கப்படுவதில்லை. ஆனால் கதாபாத்திரங்கள் அழிவதே இல்லை. ராமனும் கிருஷ்ணனும் அழிவதில்லை. நெஃல்யுடோவும், ஜீன்வல்ஜீனும் அழிவதில்லை. மலையாளத்தில் எம்.டி உருவாக்கிய கதைமாந்தர் அளவுக்கு வலுவான ஆளுமை கொண்ட உண்மையான மானுடர் மிகமிக குறைவு.

கதாபாத்திரங்களை தொன்மங்களாக்குவதும் அவர்களின் உணர்வுகளை காலந்தோறும் புதிதாக நிகழ்வனவாக்குவதுமே பெரும்படைப்பாளிகளின் பணி. அவர்களே ‘மாஸ்டர்’கள். எம்.டி. ஒரு மாஸ்டர். காலத்தை கடப்பவை உணர்வுநிலைகளே. ரஸ்கால்நிகாஃபின் உணர்வுநிலை. ஜீவன் மஷாயின் உணர்வுநிலை. சேதுவின் உணர்வுநிலை (காலம்). கோவிந்தன்குட்டியின் உணர்வுநிலை. (அசுரவித்து)

அண்மையில் நார்வேயில் வாழும் ஒரு ஈழ நண்பர் அசுரவித்து படித்துவிட்டு அது தன் கதை என்று என்னிடம் சொன்னார். கோவிந்தன்குட்டி அன்னியன், ஒதுக்கப்பட்டவன், தனியன். அந்த ஒதுக்குதலை எதிர்க்க அவன் தன்னை மேலும் மேலும் வலுவாக்கிக்கொள்கிறான். நார்வேயில் அகதியாகச் சென்ற கருப்புநிற இலங்கை இளைஞன் அடைவது வேறொருவகை ஒதுக்குதல் அதன் விளைவான தனிமை. ஆனால் ஏன், எதற்காக அந்த ஒதுக்குதல் என்ற சமூகவியல் அல்ல கலைக்குரியது. அந்த ஒதுக்குதலின் தனிமையின் உக்கிரமும் நுட்பமும்தான். அதுதான் அந்த ஈழத்து இளைஞருக்கு அசுரவித்து அவருடைய கதையாக ஆகச்செய்தது.

அசுரவித்து நாவலின் இரண்டு இடங்களை நினைவுகூர்கிறேன். அன்னியனான, சீற்றமும் கசப்பும் கொண்டவனான கோவிந்தன்குட்டி ஊர்முழுக்க காலரா பரவும்போது  கைவிடப்பட்டவர்களை காக்கிறான். அனாதைப் பிணங்களை அடக்கம் செய்கிறான். அது சேவை என்றால் சேவை. பழிவாங்கல் என்றால் அதுவும்தான். கோவிந்தன்குட்டிக்கு அச்சமூகத்திற்குள் நுழைவதற்கான விழைவு உள்ளே இருக்கிறது. அவன் அந்த தருணத்தை அதற்காக பயன்படுத்திக்கொள்கிறான். அல்லது கைவிடப்பட்ட பிணங்களுடன் தன்னை அடையாளம் கண்டுகொள்கிறான்.

என் ஈழநண்பர் கோவிட் காலகட்டத்தில் நோயாளிகளுக்கான பொதுச்சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அதே உளவியல்தான். பிணங்கள் ஒவ்வொன்றும் அவருக்கும் மிகமிக அணுக்கமானவையாகத் தெரிந்தன. அவர் நார்வேயின் நுணுக்கமான இனவாதத்தை எதிர்கொள்ளவும் முடிந்தது.

இன்னொரு காட்சி, கோவிந்தன்குட்டி சிலரால் தாக்கப்படும்போது அவன் கீழே விழாமல் நின்று பொருதுவது. கீழே விழக்கூடாது, இவர்களின் அடிகளை வாங்கலாம் ஆனால் உதைகளை வாங்கக்கூடாது என்று அவன் உறுதிகொண்டிருந்தான். ஆகவே நின்று போரிட்டான். பார்த்திருந்த ஒரு முஸ்லீம் பெரியவர் ‘நீதாண்டா ஆண்பிள்ளை’ என்கிறார்.

அது ஆண்மைதான். ஆனால் அது ஒரு கசப்பின் விளைவு. எதிர்க்காற்றை நேரிடும்பொருட்டு உருவாக்கிக்கொண்ட நிமிர்வு அது. எம்.டியின் பல கதைமாந்தர் ‘விழுந்துவிடக்கூடாது’ என்னும் வீம்பினாலேயே வலிமைகொண்டவர்களாக ஆகிறார்கள். மிகமிக வலுவான ஈகோ கொண்டவர்கள் எம்.டியின் கதைநாயகர்கள். ஏனென்றால் அவர்களெல்லாருமே தனியர்கள். ஈகோதான் அவர்களின் இருத்தலே.

கோவிந்தன்குட்டி அவனுக்கு மணமுடிக்கப்பட்ட பெண்ணை ஏற்றுக்கொண்டிருக்கலாமே? அவளும் ஒருவகையில் கைவிடப்பட்டவள்தானே? அவனுக்கு அவள்மேல் பரிவு இருந்தது, ஆனால் ஏற்கமுடியாது. காரணம், அந்த ஈகோதான். அவனால் பிச்சையிடப்பட்ட உணவை உண்ண முடியாது. எவருக்கும் இரண்டாமனாக திகழமுடியாது.

அந்த உணர்வுநிலைகளையே ரண்டாமூழம் (இரண்டாமிடம்) பீமனிலும் காண்கிறோம். மகாபாரதத்திலும் கதகளியிலும் பீமன் மகத்தான காதலன். ஆனால் இந்நாவலில் அவன் ஆங்காங்கே ஆண்மையற்றவனாக தன்னை உணர்கிறான். பிறர் காட்டும் கருணையின் முன் அவன் ஆண்மையிழந்தவன் ஆகிறான். இரண்டாமனாக உணர்கையில் ஆற்றலை இழக்கிறான். அகங்காரமே தன் ஆளுமையாகக் கொண்டவனே அவனும்.

எம்.டி வாசுதேவன் நாயரின் கதாபாத்திரங்கள் வழியாக ஒரு பெரிய வலை போல உணர்வுநிலைகளை பின்னிக்கொண்டே செல்லலாம். வலுவான ஆளுமைகொண்ட பெண்கள், ஓடையில் ஒழுகிச்செல்லும் இலை போல விதிவழிச் செல்லும் பெண்கள், எங்கோ ஒட்டி நின்றுவிட்ட பெரியவர்கள்… இந்த உணர்வுநிலைகளை ஒரு நாவலில் இருந்து எடுத்து இன்னொன்று வழியாக இணைப்பதுதான் வாசகனின் முதன்மைச்சவால். அதற்கு அரசியலோ, சமூகவியலோ, வரலாறோ தேவையில்லை. அந்த மனிதர்களும் உணர்வுகளுமே போதுமானவை.

ஈரோடு அந்தியூர் அருகே ஒரு மலைத்தங்குமிடம் உள்ளது. அங்கே ஓர் அரிய நிகழ்வு உண்டு. ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன் பல்லாயிரம் வண்ணத்துப்பூச்சிகள் மேற்குதொடர்ச்சி மலையிறங்கி அவ்வழியாக சத்தியமங்கலம் காட்டுக்குச் செல்கின்றன. பின்னர் அவை ஆகஸ்டில் திரும்பவும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குச் செல்கின்றன.  நாநூறு கிலோமீட்டர் வரை அவை காற்றில் பயணம் செய்கின்றன. சில வண்ணத்துப்பூச்சிகள் கடல்கடந்து இலங்கைக்குக்கூட செல்கின்றன என்கிறார்கள்.

நாம் கேரளம், தமிழ்நாடு, இந்தியா, இலங்கை என பிரிக்கிறோம். வண்ணத்துப்பூச்சிகளுக்கு அவை ஒரே காடு. காடு என்றால் மலைகள், பாறைகள், மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள் எல்லாம்தான். ஆனால் காட்டின் மிகநுண்ணிய வடிவம் மலர்கள். அம்மலர்களில் வாழும் வண்ணத்துப்பூச்சிகள் காட்டுயிர்களின் மிகமிக நுண்ணிய வடிவம். வண்ணத்துப்பூச்சிகளால் இணைக்கப்படுகிறது காடு. அந்த வண்ணத்துப்பூச்சிகள் காட்டை நெய்துகொண்டிருக்கின்றன.

எம்.டி உருவாக்கும் உலகம் நுண்வடிவ காடு போன்றது. மலர்களும் வண்ணத்துப்பூச்சிகளும் மட்டுமே கொண்டது. மரங்களையும் விலங்குகளையும் நீங்கள் கற்பனை செய்யலாம். ஆனால் நம் சவால் அந்த வண்ணத்துப்பூச்சிகளின் வழிகளை, பாதைகளின் பெரும்பின்னலை தொட்டறிவது மட்டுமே.

மிக நுண்ணியவை உணர்வுநிலைகள். கலிங்கத்துப் பரணி என்னும் தமிழ்நூலில் கலிங்கப்பட்டு பற்றிய வர்ணனை வருகிறது. ஒரு மோதிரவளையத்திற்குள் ஒரு புடவையை இழுத்து எடுத்துவிடமுடியும் என்று. அதைப்போன்றவை உணர்வுகள். அத்தனை நுண்ணிய நெசவு. கனவுபோல. உலகமே அவற்றில் உள்ளது, ஆனால் பருப்பொருள் என ஏதுமில்லை. உலகம் நுண்வடிவில் மட்டுமே இலங்கும் ஒரு களம்.

உணர்வுகள் மிகமிக தற்காலிகமானவை. உணர்வுகள் தீவிரமடையும்தோறும் அவற்றின் ஆயுள் குறைகிறது. மேகம்போல, அலைபோல தோன்றும்போதே மறைந்துகொண்டிருப்பவை. அவற்றை அழியாமல் நிலைகொள்ளச் செய்கிறது இலக்கியக் கலை. ராமனின் துயர் இங்கே பல ஆயிரமாண்டுகளாக அப்படியே நின்றுள்ளது.திரௌபதியின் சீற்றம் அப்படியே நீடிக்கிறது. எம்.டியின் அசுரவித்து வெளிவந்த ஆண்டுதான் நான் பிறந்தேன். இன்றும் அந்நாவல் அப்படியே நிலைகொள்கிறது. இப்போது என்னுடன் நிகழ்வதாக.

மலர்கள் மாலையில் மறைபவை. ஆனால் சிற்பி அந்த மலரை கல்லில் வடித்துவிட்டால் அனைத்து அழகுடனும் அது காலமின்மை கொள்கிறது. அதுவே இலக்கியத்தின் கலை. மானுடனில் மலர்ந்து கலைஞனில் அழிவின்மை கொண்ட உணர்வுகள் எம்.டியின் நாவல்களில் திகழ்கின்றன

நன்றி

(திரூர் துஞ்சன்பறம்பில் 17 மே 2023 அன்று எம்.டி.வாசுதேவன் நாயரின் 90 ஆவது அகவை நிறைவு விழாவில் ஆற்றிய உரை)

அசுரவித்து திரைப்படமாக

முந்தைய கட்டுரைஐராவதம்
அடுத்த கட்டுரைநடராஜகுரு நூல்கள், இணையத்தில்