அன்புள்ள ஆசிரியருக்கு
வணக்கம். நான் தங்களுடைய தளத்தின் தொடர் வாசகன். நான் நிறைய நாட்கள் தங்களுக்கு கடிதம் எழுதனும் என்று நினைத்து தயக்கத்தால் எழுதாமல் இருந்தேன். இந்த கட்டுரையை படித்ததும் எழுதாமல் இருப்பது சரியில்லை என்று நினைக்கிறேன்.
நான் கரூரில் home textile export company வைத்திருக்கிறேன். மோலும், கரூர் மற்றும் தஞ்சாவூரில் bajaj two wheeler dealership நடத்துகிறேன். எங்களது நிறுவத்தில் மொத்தமாக 500 பேர் வேலை செய்கிறார்கள். 30 வருடமாக தோழில் நடத்துகிறேன். நீங்கள் கட்டுரையில் சொன்ன ஒவ்வொரு விசயமும் சத்தியமாக உண்மை. மேலடுக்கில் இருப்பவர்களுக்கு பஞ்சாயத்து செய்வதுதான் முக்கியமான வேலையாக இருக்கிறது. இதை நாங்கள் வேடிக்கையாக “சொம்பு பிடித்தல்” என்று சொல்லுவோம். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, அவர்களுடைய பங்களிப்பை இது தடுக்கிறது. இதனால் எதிர்பார்த்த வளர்ச்சி வருவதில்லை. மற்ற ஆசிய நாடுகளில் இந்த அளவிற்கு பிரச்சனைகள் இருப்பதாக தெரியவில்லை. இதற்கான காரணம் நம் கலாச்சாரத்திலேயே உள்ளதா? என்பதுதான் எனது கேள்வியாக இருக்கிறது. இதுபற்றி மேலதிகமான தங்களது சிந்தனையை அறிய ஆவல்.
நன்றி
இப்படிக்கு
பாலு, கரூர்
அன்புள்ள ஜெ,
சமீபத்தில் 12 மணி நேர வேலை பற்றி நீங்கள் பேசிய காணொளியை பார்த்தேன். ஒரு எழுத்தாளர் அன்றி வேறு எவராலும் காண முடியாததைக் கண்டு சொல்லியிருக்கிறீர்கள்.
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இத்தகைய 12 மணி நேர வேலையில் இருந்து கொண்டிருக்கும், அதில் உழன்று கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் தகுதியில் ஒன்றை உறுதியாக என்னால் சொல்ல இயலும்.
நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனையும் மிக மிகச் சரியானது.
உண்மையில் 12 மணி நேரம் என்பது வெறும் 12 மணி நேரம் அல்ல. வேலைக்குக் கிளம்புதல், பயணம் என்று கிட்டத்தட்ட ஒரே நாளில் பதினைந்து மணி நேரம். அதுபோலவே இந்த சட்டம் வாரத்தில் 48 மணிநேர வேலையை தீர்மானிப்பதற்கானது மட்டுமல்ல, அந்த 48 மணி நேரத்திற்கு மேலான நேரத்தை நிறுவனம் எடுத்துக் கொள்வதை முறைப்படுத்திக் கொடுப்பதற்குமானது.
என்னுடைய அனுபவமாக மேலும் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன்.
- விடுமுறையன்று வேலை செய்தால் கிடைக்கும் ஓவர்டைம் இரண்டு மடங்கு கிடையாது. பொதுவாக ஒன்று அல்லது 1.25 மட்டுமே. நான்கு நாள் வேலை, மூன்று நாள் விடுமுறை என்பதுவும் உண்மை கிடையாது. வேலை தவிர்த்த மூன்று நாட்கள் On call என்று சொல்லப்படும் “வரத் தயாராக” இருக்க வேண்டிய நாட்கள் அவை. இரவு, பகல் எந்த நேரமும் நிறுவனத்தால் அழைக்கப்படலாம்.
- பணி செய்வதே கடன், பணம் சம்பாதிப்பதே வாழ்க்கை என்றே பிறந்ததிலிருந்து சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவே வேறு வகையில் நான்கு நாட்கள் வேலை, மீதி மூன்று நாட்கள் விடுமுறை, வேலைக்குச் சென்றால் ஓவர்டைம் என்று சொல்லப்படும். உண்மையில் இதுவே இதில் சுழல்பவர்களின் முன்வைக்கப்படும் கேரட். மறுபடி மறுபடி வேறு வேறு வார்த்தைகளில் இவை கடைசி காலம் வரை சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும். மூன்று நாட்கள் விடுமுறை எப்போதோ ஒரு நாள் மட்டும் அவனுக்கு கிடைக்கும். ஒரு காலத்திற்கு பிறகு அந்த விடுமுறை நாட்களையும் என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியாது.
- இந்த வகையான 12 மணி நேர உழைப்பில் சுழலும் மனிதனின் சமூகத் தொடர்பு சிறிது சிறிதாக குறைந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுவிடும். அதிலும் இரவு பகல் என்று மாறி மாறி பணியிலிருப்பவர்கள் மிகக் குறுகிய காலத்தில் தங்கள் உடல் திறனையும் மன பலத்தையும் இழப்பார்கள்.
- பயண நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டு செயல்படுத்தப்படும் (வசதி மிகுந்த!) நிறுவன குடியிருப்புகள் இத்தகைய சமூக தொடர்பை வெகு நிச்சயமாக வெகு விரைவில் வெட்டிவிடும்.
- முதலில் இந்த 12 மணிநேர உழைப்பில் இருப்பவர்கள் நிறுவனத்திற்கு அத்தியாவசியமானவர்கள், அவர்களை நிறுவனம் எல்லா வசதிகளும் கொடுத்துப் பாதுகாக்கிறது என்று சொல்லியே அவர்களுக்கான வலைகள் பின்னப்படும். இந்த மயக்கத்திலிருந்து வெளிவரும் காலத்துக்குள் அவன் அந்த வலையில் வெளிவர முடியாத வகையில் சிக்கியிருப்பான்.
- இவர்களின் பணியை மேலாண்மை செய்வதற்கும், முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கும் தங்கள் அறிவையெல்லாம் சிந்தித்துச் செயல்படுத்த ஒரு அமைப்பும் அதன் உறுப்பினர்களும் வசதியான நேரத்தில் வசதியாக வாழ்ந்து இதனை இயக்கி கொண்டிருப்பார்கள். தப்புவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல, எந்த மீனைப் பிடிக்க எதனை, எங்கு வீசவேண்டும் என்று கப்பல் காரர்களுக்கு நன்றாகத் தெரியும்.
- விளைவாக இத்தகைய 12 மணி நேர உழைப்பு நல்ல “திறமைமிகு” “மனிதப் பண்ணைகளை” உருவாக்கி அதை நிறுவனங்களுக்கு அளிக்கும்.
நன்றாக படிக்கக்கூடிய, திறமையும் தகுதியும் நிறைந்த ஆனால் வசதி குறைந்த கீழ் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் போட்டியில் முந்திச்சென்று அதை அடைந்து, தங்களை அதில் சுருக்கிக் கொள்வதற்கான வாய்ப்பே அதிகம் இருக்கிறது.
அன்புடன்,
சி. பழனிவேல் ராஜா.