பி.டி.ஆர், அறம்

அறம் வாங்க

அறம் மின்னூல் வாங்க

டாக்டர் பி.திருநாவுக்கரசு இப்படத்தை அனுப்பியிருந்தார். அறம் அமைச்சர் பி.டி.ஆருக்கு அளிக்கப்படுவது மகிழ்ச்சி அளித்தது. 

அண்மையில் இரு இலக்கியவிழாக்களில் பி.டி.ஆரின் பேச்சை அரங்கில் அமர்ந்து கேட்டேன். ஒன்று, பெங்களூர் இலக்கியவிழா. இன்னொன்று  திருவனந்தபுரம் மாத்ருபூமி இலக்கிய விழா. இரண்டுமே அரசியல் விழாக்கள் அல்ல. அறிவுசார்ந்த விழாக்கள். இந்தியாவின் மிகச்சிறந்த இலக்கியவாதிகள் வந்தமர்ந்த அவைகள்

இரண்டிலும் அவர் உரை ஓர் அறிவார்ந்த அவைக்கு உகந்ததாக, அங்கே கூடியிருந்த பலதரப்பட்டவர்களை நிறைவுறச் செய்வதாக இருந்தது. நான் அவருடைய உரையை அப்போதுதான் கேட்டேன். அவரைப் பற்றி தமிழ் ஊடகங்கள் போற்றியும் தூற்றியும் இரு எல்லைகளில் கருத்துக்களை முன்வைத்திருந்தன. ஒன்று, கட்சிச்சார்பு கொண்டது. இன்னொன்று, வெறும் தனிப்பட்ட காழ்ப்பு வெளிப்படுவது. நான் அவ்விரு தரப்புகளையும் பொருட்படுத்தவில்லை. பொதுவாக, நான் அரசியல்வாதிகளையே பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இரண்டுக்கும் அப்பால் சென்று அவரை அறிய அவ்வுரைகள் உதவின. 

வழக்கமாக இத்தகைய அவைகளில் அரசியல்வாதிகளை அழைப்பது குறைவு. தங்கள் அறிவுத்தகுதியை நிரூபித்த சிலரே அழைக்கப்படுவார்கள். உதாரணமாக, சசி தரூர் அல்லது ஜெயராம் ரமேஷ் போன்றவர்கள். முன்பு , கே.நட்வர்சிங், டாக்டர் கரன்சிங் போன்றவர்கள். அவர்கள் புகழ்பெற்ற நூலாசிரியர்களும்கூட. 

அரிதாகவெறும்அரசியல்வாதி அழைக்கப்பட்டால் அவர்கள்  அந்த அவைகளில் ஒருவகை  அசடுகளாக தென்படுவார்கள். சூட்டிகையான அரசியல்வாதிகள் அதைப்புரிந்துகொண்டு  அந்த அவைகளில் பங்கெடுப்பதை தவிர்ப்பார்கள். அல்லது மிகச்சில சொற்களுடன் ஒரு சடங்கென தங்கள் பங்கேற்பை முடித்துக்கொள்வார்கள். 

சமர்த்து குறைவானவர்கள், தங்களைத் தாங்களே மதிப்படவோ தங்களை அவை எப்படிப் பார்க்கிறது என அறியவோ இயலாதவர்கள். அவர்கள் தங்கள் வழக்கமான  அரசியல் பேச்சை பேசுவார்கள். அவை ஒன்று, பொத்தாம்பொதுவான தேய்வழக்குகள் கொண்ட உரைகளாக இருக்கும். பொதுவாகச் சூழலில் உலவும் எளிய கருத்துக்களை ஏதோ புதிய கண்டுபிடிப்புகளாகச் நீட்டி நீட்டிச் சொல்பவையாக இருக்கும். 

சிலர், அறிவார்ந்த அவையை கண்டால் அங்கே ஒரு பாதிப்பைச் செலுத்தவேண்டும் என்னும் மிகைவேகத்தில் ஏதேனும் ஒரு கருத்தை அதீதமாக உணர்ச்சிவசப்பட்டு, செயற்கையாக ஒற்றைப்படையாக ஆக்கி, முன்வைப்பார்கள். புரட்சியாளர்கள், கிளர்ச்சியாளர்கள், கோபத்தில் கொதிப்பவர்கள் என தங்களைக் காட்டிக்கொள்வார்கள். அது அறிவார்ந்த அவையில் வெளித்தெரியாத கேலியை உருவாக்கிவிடும். அதை அவர்கள் உணரமாட்டார்கள். அந்த நாள் முழுக்க அந்த கேலி வெவ்வேறு வகைகளில் அந்த அரங்கின் தனிப்பட்ட உரையாடல்களில் சுற்றிவரும். அப்படி ஏராளமான பகடிகளை நினைவுகூர்கிறேன்.

ஆனால் அந்தக் கேலியை நுட்பமாக மறைத்துக்கொண்டு, அதையே ஒருவகை பாராட்டாக அவரிடமே  சொல்லும் அமைதிவில்லன்களாகிய சூப்பர் அறிவுஜீவிகளை நான் பல அரங்குகளில் கண்டதுண்டு. மறைந்த யூ.ஆர்.அனந்தமூர்த்தி அதில் ஒரு மாஸ்டர்.  “உங்கள் கோபம் நியாயமானது….இந்த வகையான கோபம்தான் இன்றைக்கு தேவை. இது மிக  naive ஆனது. ஆனால் மிக வலுவானது. இதுதான் இங்கே அறிவுஜீவிகளிடம் இல்லைஎன்பார்கள். அதாவதுநாங்கள் அறிவுஜீவிகள். விஷயம் தெரியாத பாமரன் நீ. ஆகவே சும்மா சத்தம் போடுகிறாய். இந்த நாடகமெல்லாம் எங்களுக்கு தெரியும்…என்று பொருள். அப்படி கேலிப்பொருளாக ஆன சிலரை நான் தமிழகத்தில் இருந்து கண்டதுண்டு. தமிழ் எழுத்தாளனாக எனக்கு கொஞ்சம் கூச்சமாக இருக்கும்.

தமிழகத்தில் இருந்து ஓர் அரசியல்வாதி இந்திய அளவிலான ஓர் அறிஞரவையில் மிகையில்லாமல், பாவனைகள் இல்லாமல், மிதமான அறிவார்ந்த மொழியில் உரையாடுவதை பி.டி.ஆர் பேசும்போது கண்டேன். தமிழில் அவருக்கு அந்த அறிவார்ந்த மொழி கைகூடுவதில்லை என்பதையும் பின்னர் கவனித்தேன். அந்த அவை யோசிக்கத்தக்க புதிய சில கோணங்களையும் முன்வைத்தார். தேய்வழக்குகளும், பழகிய கருத்துக்களும் இல்லை. இரு உரைகளிலும் அவர் தன் மையக்கருத்தை ஒட்டிய விரிவாக்கத்தில் எதையும் திரும்பச் சொல்லவுமில்லை. புதிய தரவுகளும் புதிய சொற்றொடர்களுமே இருந்தன.

பெங்களூரிலும், திருவனந்தபுரத்திலும் அவர் சொன்னதன் மையம் ஒன்றே. அவருடைய அரசியல் தரப்பை கடந்து நான் அவற்றின் தத்துவமையமாக எடுத்துக்கொண்டது இது: 

மையத்தை வலுப்படுத்துவதன் வழியாக ஓர் அமைப்பை உறுதியாக நிலைநாட்டமுடியும் என்று நம்பிய பத்தொன்பதுஇருபதாம் நூற்றாண்டுகள் இன்றில்லை. மையம் வலுவாக இருக்கவேண்டும் என்றால் உறுப்புகள், விளிம்புகள் முடிந்தவரை சுதந்திரமாக இருக்கவேண்டும். அவற்றின் சுதந்திர இயக்கத்தின் இயல்பான சந்திப்புப் புள்ளியாக மையம் இருக்கவேண்டும். குறைவான பொறுப்பு கொண்ட மையமே வலுவான நிர்வாகம் கொண்டது.  அதுவே புதிய நிர்வாக இயல்.

இந்த 21 ஆம் நூற்றாண்டு அடிப்படைப்புரிதல் இன்றைய மைய அரசுக்கு இல்லை. அவர்கள் தேங்கிப்போன பழைய மனநிலை கொண்டவர்கள். ஆகவே எல்லா அதிகாரங்களையும் தங்களிடம் குவிக்க முயல்கிறார்கள். அதன் வழியாக அவர்கள் தங்களை பலவீனமாக ஆக்கிக் கொள்கிறார்கள். பலவீனமான உறுப்புகள் மற்றும் விளிம்புகளின் மையமும் பலவீனமாகவே இருக்க முடியும். அந்த துணைப்பகுதிகள் ஒன்றோடொன்று மோதும் என்றால் மையம் மேலும் பலவீனமாக ஆகும். 

பொருளியல் ரீதியாக தன் உறுப்புகளை தனியாகச் செயல்பட விடாத மைய அரசு பொருளியல் வளர்ச்சிக்குப் பெரிய தடையாக உள்ளது. இன்றைய அரசின் மையத்திட்டமிடல் அதன் உறுப்புகளின் தேவைக்கு உகந்ததாகவோ, யதார்த்தத்தை புரிந்துகொண்டதாகவோ இல்லை. இந்தியா சென்ற ஐம்பதாண்டுகளில் மேலும் மேலும் அதிகாரக்குவிப்பை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. விளைவாக , எந்த முடிவையும் எடுக்கமுடியாதபடி இந்திய நிர்வாகமே தேங்கியிருக்கிறது. என்ன தேவையோ அதனடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதில்லை, எவருக்கு மையத்தில் செல்வாக்குள்ளதோ அதனடிப்படையில் எடுக்கப்படுகிறது. ஆகவே இந்தியப்பொருளியல் நெருக்கடியில் உள்ளது. 

எனக்கு அவருடைய பேச்சு பிடித்திருந்தது. அவர் பேசிவிட்டு வந்தபோது சசி தரூர் அவரிடம்அபாரமான உரைஎன்று சொல்லி கைகுலுக்கினார். என்னுடன் இருந்த மலையாள, வங்க, கன்னட எழுத்தாளர்களும் சிறந்த உரை என்றனர். சிலர் அவரிடம் சென்று கைகுலுக்கிப் பாராட்டு தெரிவித்தனர். நான் விலகி நின்றுகொண்டேன். 

சி.வி.பாலகிருஷ்ணன்அவர் உங்கள் அமைச்சர் அல்லவா? நீங்கள் பாராட்டவில்லையேஎன்றார்.

“பாராட்டலாம், ஆனால் நிகரான இடத்தில் இருந்தே அப்பாராட்டைச் சொல்லமுடியும். வங்கத்திலோ மலையாளத்திலோ கன்னடத்திலோ அந்த இடம் எழுத்தாளருக்கு உண்டு. இதைப் பேசியவர் பிணராய் விஜயன் என்றால் நான் போய் பாராட்டலாம்.  தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு அந்த இடம் இல்லை. எந்த எழுத்தாளருக்கும்  எப்போதும் இருந்ததும் இல்லை. எழுத்தாளர் என்பவர் மற்றவர்களை பாராட்டி, மகிழ்விக்கவேண்டிய ஒரு கீழ்நிலையில் இருப்பவர் என நினைக்கிறார்கள். எழுத்தாளர் பேச்சில்  கொஞ்சம் விமர்சனம் இருந்தால்கூட சீற்றம் கொள்கிறார்கள். தமிழகத்தில் ஒரு சிறு பணக்காரர், ஓர் எளிய அதிகாரியின் மனநிலையே  இதுதான். சாமானிய மக்களின் மனநிலைகூட இதுதான்.” என்றேன்

இன்னொரு வங்க எழுத்தாளர் “ஆம், நான் பல மேடைகளில் கூச்சமில்லாத துதிபாடலையும் கும்பிடுகளையும் கண்டிருக்கிறேன்”  என்றார்.

நான் “தமிழகத்தில் எழுத்தாளர்கள் அனைவருமே அதிகாரத்தின் முன் பணிந்து நின்றாகவேண்டும். இல்லையேல் தமிழகத்துச் சாமானியனே அவர்களை வசைபாடுவான். ‘கேவலம், எழுத்தாளனுக்குப்போய் இவ்வளவு திமிரா?’ என்ற சொற்றொடரை நாம் தமிழக பொது ஊடகத்தில் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தமிழகம் வங்கமோ கன்னடமோ மலையாளமோ அல்ல என்ற புரிதல் தமிழக எழுத்தாளனிடம் உண்டு. தமிழகம் பொதுவாக எழுத்தாளர்களை ஏதேனும் ஒரு காரணம் சொல்லி வசைபாடிக்கொண்டே இருக்கும் ஒரு மாநிலம். ஒரே ஒரு யூடியூப் பதிவின் கீழே சென்று பின்னூட்டங்களை பாருங்கள், திகைப்பீர்கள் ” என்றேன்.

நான் “இது பழைய நிலப்பிரபுத்துவகால மனநிலை , இங்கே அதிகாரம் என்பது செல்வமும் பதவியும்தான். அறிவுக்கும் பண்பாட்டுக்கும் அந்த இடம் இல்லை.” என்றேன். “பி.டி.ஆர் நிறைய ஆங்கில எழுத்தாளர்களை தெரிந்து வைத்திருப்பார். என் பெயரைக் கூட கேள்விப்பட்டிருக்க மாட்டார். எந்த எழுத்தாளர் பெயரும் அவருக்கு தெரிந்திருக்காது. எந்த தமிழக அமைச்சருக்கும்  அவரது கட்சித்தொண்டர் அல்லாத  எழுத்தாளர் எவர் பெயரும் தெரிந்திருக்காது.  நான் என்னை அறிமுகம் செய்துகொண்டால் நான்  அவரிடம் ஏதோ சலுகையை எதிர்பார்க்கிறேன் என்றே ஒரு தமிழக அரசியல்வாதிக்குத் தோன்றும்…. இதற்கு விதிவிலக்காகச் சொல்லப்பட வேண்டிய ஒரே ஒரு அரசியல்வாதிகூட சென்ற நூறாண்டுகளில் தமிழகத்தில் பதவியில் இருந்ததில்லை. எனக்கு அரசியல் சலுகை தேவையுமில்லைஎன்றேன்

அப்படியென்றால் வாருங்கள், மலையாள எழுத்தாளர் என அறிமுகம் செய்கிறேன். மதிப்பு இருக்கும்என்றார் மலையாள நண்பர். சிரித்துக்கொண்டோம். சசி தரூரிடம் மட்டும் ஓரிரு சொற்கள் பேசினேன்.

பி.டி.ஆர் கையில் அறம் நூல் இருப்பதைப் பார்க்கையில் புன்னகைதான் வந்தது. அந்நூலை அவர் கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒன்று நிகழ்கிறது. தமிழகத்தில் ஒரு மிகச்சிறிய பகுதியில் இலக்கியம் மீதான மதிப்பு மிக வலுவாக உருவாகி திரண்டு வருகிறது. அந்த பண்பாட்டுப்பகுதி தமிழக அரசியல்வாதிகளிடம் இலக்கியத்தை வற்புறுத்தி அளித்துக்கொண்டே இருக்கிறது. வருங்காலத்திலேனும் அவர்கள் அதை கவனிக்கக்கூடும்.

முந்தைய கட்டுரைஎஸ்.வி.ராஜதுரை
அடுத்த கட்டுரைவேலை, கடிதம்