பறக்கும் நாட்கள்

சென்ற ஏப்ரல் 28 பொன்னியின் செல்வன் வெளிவந்தது. அப்போது நான் நாகர்கோயிலில் இருந்தேன், இங்கேயே ஏதாவது அரங்கில் படத்தை பார்க்கலாமென எண்ணியிருந்தேன். ஆனால் மிக அவசரமாக இன்னொரு சினிமாப்பணிக்காக சென்னை செல்லவேண்டியிருந்தது. 28 மாலை திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்றேன்.

சென்னையில் இரு சந்திப்புகள். அதன்பின் நான்கு காணொளிப் பேட்டிகள். இந்த காணொளிப்பேட்டிகளை முழுமையாக நிறுத்திக்கொள்ளும் எண்ணத்துடன் இருக்கிறேன். சினிமா தொடர்பான நிகழ்வுகள், விளம்பரங்களில் பொதுவாக நான் கலந்துகொள்வதில்லை. இப்போது அது ஓர் அவசியமாக ஆகிவிட்டிருக்கிறது. அத்துடன் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் தெரிந்தவர்கள். அவர்கள் கேட்டால் மறுக்க முடியாது. ஒருவருக்கு பேட்டி கொடுத்து இன்னொருவரை தவிர்ப்பது வருத்தங்களை உண்டுபண்ணும். ஆகவே இனி எந்த ஊடகத்திற்கும் காணொளி உரையாடலுக்கு ஒப்புதல் இல்லை.

29 ஆம் தேதி சென்னையில் நண்பர்கள் ராஜகோபாலன், செந்தில், அன்பு ஹனீபா , சண்முகம் ஆகியோருடன் ஃபாரம் மாலில் உள்ள ஐமாக்ஸ் திரையில் பொன்னியின் செல்வன் பார்த்தேன். மறுநாள் காலையில் விமானத்தில் கோவை வந்தேன். சைதன்யா ஓர் இமையமலைப் பயணத்துக்காக கோவையில் இருந்து கிளம்பிக்கொண்டிருந்தாள். ஆலயக்கலைப் பயிற்சிக்குச் சென்றிருந்த அருண்மொழியும், அங்கே ஏற்கனவே இருந்த அஜிதனும் கோவை வந்தனர். ஒரே ஒருநாள் அவர்களுடன்.

அன்றே மும்பைக்கு இன்னொரு சினிமா வேலைக்காகச் செல்லவேண்டியிருந்தது.  மும்பையில் விமானநிலையத்தை ஒட்டிய ஓரு பகுதி நான் சென்று தங்கியிருந்தது. முன்பு ஒரு செம்படவ கிராமமாக இருந்து பின்னர் பிரிட்டிஷ் குடியிருப்புப் பகுதியாக ஆனது. இன்றும் அந்த பிரிட்டிஷ் தன்மை கலையாமல் இருக்கிறது. குறுகிய, கல்பாவப்பட்ட தெருக்கள். தாழ்வான ஓட்டு வீடுகள். மும்பை என்றே சொல்லமுடியாதபடி அமைதி. எல்லா இல்லங்களிலும் பூச்செடிகள்.

மீண்டும் கோவைக்கு வந்தேன். நான்காம் தேதி கிளம்பி மலைத்தங்குமிடம் சென்றேன். ஒரு வாரம் உலகத்தொடர்பே இல்லை. எழுதவேண்டியவற்றை எழுதினேன். அருகே இன்னொரு அறையில் அஜிதன் அவனுடைய சிறிய நாவலை எழுதி முடித்தான். அப்பால் இன்னொரு அறையில் ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் அவருடைய நின்றுபோன நாவலை மிகுந்த விசையுடன் தொடங்கி நாளுக்கொரு அத்தியாயம் என எழுதிக்கொண்டிருந்தார். மலையில் இணையம் இல்லை என்பதனால் வேறு திசைமயக்கங்கள் இல்லை. அங்கே எழுதுவதுபோல் எங்கும் எழுத்துப்பணி நிகழ்வதில்லை.

மலைவாசம் என்பது முற்றிலும் அரியதோர் அனுபவம். மலைப்பகுதி முதலில் ஒரு அழுத்தத்தை உருவாக்குகிறது- அங்கே காலம் மிக மெதுவானது. ஆனால் அது அரைநாள்தான். அதன்பின் நம்மை அது சூழ்ந்துகொள்கிறது. காடு, பறவைகள், விலங்குகள், பூச்சிகள். 7,8,9 தேதிகளில் மழை. 9 ஆம் தேதி சூறைக்காற்றும் இடிமின்னலுமாக மழை. வழக்கமாக நின்றிருக்கும் பாறைமேட்டில் மயில் மழையில் அசையாமல் நின்றிருந்தது. அதை பார்த்தபடி அருகே அமர்ந்திருந்தேன். மயிலுக்கு இடியோசை மிகவும் பிடிக்கும் என்பது வெறும் காவிய உருவகம் அல்ல.

குரு நித்யாவின் 99 ஆவது ஆண்டு இது. அடுத்த ஆண்டு அவருடைய நூற்றாண்டு (நவம்பர் 2). மே மாதம் 14 ஆம் தேதி அவருடைய சமாதிநாள். நான் பொதுவாக நினைவுநாட்களை கொண்டாடுவதில்லை. ஆசிரியர்கள் என்றும் எப்போதும் நினைவென உடனிருக்கவேண்டும் என்பது என் எண்ணம். அவர்களுக்கான தனிநாட்கள் தேவையில்லை. ஆனால் இம்முறை தற்செயலாக குரு நித்யா காவிய முகாம் அவருடைய நினைவுநாளிலேயே அமைந்தது.

மே 12 முதல் மே 14 வரை மூன்றுநாட்கள் நடந்த காவியமுகாமில் 105 பேர் கலந்துகொண்டார்கள். மூத்த எழுத்தாளர்களும் இளம்படைப்பாளிகளும் வாசகர்களும் கலந்துகொண்டார்கள். தேவதேவன், க.மோகனரங்கன், நிர்மால்யா, ஆனந்த் குமார், அகரமுதல்வன் என பல எழுத்தாளர்கள் பங்குகொண்ட அரங்கு. வழக்கம்போல நட்பார்ந்த, மிக உற்சாகமான ஒரு கூடுகையாக நிகழ்ந்தது. இத்தகைய கூடுகைகளில் அரங்குகள் அளவுக்கே அரங்குக்கு வெளியே நிகழ்வனவும் முக்கியமானவை.உரையாடல்கள், பகடிகள்.

நான் 14 ஆம் தேதியே சோ.தர்மன், போகன் சங்கர் ஆகியோருடன் கிளம்பி ஈரோடு வந்து ரயிலில் நாகர்கோயில் வந்தேன். ரயிலில் படுத்து கண்களை மூடிக்கொண்ட நினைவு.விழித்தால் நாகர்கோயிலில் ரயில் நின்றுகொண்டிருந்தது.

இன்று (16 மே) கிளம்பி கேரளத்தில் திரூருக்குச் செல்கிறேன். திரூரில் துஞ்சன்பறம்பு என்னும் கலாச்சார மையம் உள்ளது. மலையாளமொழியின் தந்தை என அழைக்கப்படும் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அந்த அமைப்பு சார்பில் எம்.டி.வாசுதேவன் நாயருக்கு 90 அகவை நிறைவை கொண்டாடுகிறார்கள். அதில் 17 மே மாதம் நான் பேசுகிறேன்.

18 அன்று கிளம்பி நண்பரும் மாத்ருபூமி, பாஷாபோஷிணி இதழ்களின் ஆசிரியராக இருந்தவருமான கே.ஸி.நாராயணனின் சொந்த ஊரான ஸ்ரீகிருஷ்ணபுரம் செல்கிறேன். அது பாலக்காடு அருகே உள்ள சிற்றூர். அவருடன் அவருடைய பாரம்பரிய இல்லத்தில் 3 நாள் தங்குகிறேன். அங்கிருந்து 22 ஆம் தேதி கோவை வழியாக நாகர்கோயில்.

திரும்பிப்பார்க்கையில் ஒரு மாதம் எங்கே என்ன நிகழ்ந்தது என்று எண்ணி எண்ணி தொகுத்துக்கொள்ளும்படியான விரைவுடன் பறந்துகொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு முழுக்கவே இப்படித்தான் இருந்தது.

குரு நித்யா காவிய முகாம் நிகழ்ச்சி நிரல்

1 வைணவக் கவிதை : ராஜகோபாலன் (காலை 10- 1130)

2 நவீனக்கவிதை கடலூர் சீனு (மதியம் 12-1 மணி)

ஓய்வு

முதல்நாள் இரண்டாம் அரங்கு

சிறுகதை அரங்கு 1 (மாலை 4-430) பாரி

4 சிறுகதை அரங்கு (மாலை 430 -5) சுகதேவ் பாலன்

5 சிறுகதை அரங்கு (மாலை 5-530 தாமரைக்கண்ணன் பாண்டிச்சேரி

6 சிறுகதை அரங்கு (மாலை 530-6) பார்கவி

மாலைநடை

முதல்நாள் மூன்றாம் அரங்கு

7 இலக்கியம் பெண்ணியம்- ரம்யா (அந்தி 7-8)

8. விவிலியத்தில் கவிதை – – சிறில் ( அந்தி 8- 9)

இரண்டாம் நாள் முதல் அரங்கு

9 நவீன ஓவியக்கலை- ஜெயராம் (காலை930-1030)

10 செவ்வியல் கலைரசனை- அழகிய மணவாளன் (காலை 1030-1130)

தேநீர்

இரண்டாம் நாள் இரண்டாம் அரங்கு

11 எம் கோபாலகிருஷ்ணன் இன்றைய சிறுகதைகள் (12 – 1 மணி)

மதிய உணவு

இரண்டாம் நாள் மூன்றாம் அரங்கு

12 கவிதை அரங்கு-  ஜிஎஸ்எஸ்வி நவீன்  . ( மாலை 400- 430)

13 கவிதை அரங்கு  -அருள்    (மாலை 430-5)

14 கவிதை அரங்கு  ( மாலை5-530) விக்னேஷ் ஹரிஹரன்

15 கவிதை அரங்கு (மாலை530-06) வேலாயுதம் பெரியசாமி

இரண்டாம்நாள் மூன்றாம் அரங்கு

போகன் சங்கர் (கவிதையில் இன்று என்ன நிகழ்கிறது?) 7-8

சு.வேணுகோபால் (இன்றைய நாவல்) 8-9

மூன்றாம்நாள் முதல் அரங்கு

சுனில்கிருஷ்ணன்- இலக்கியம்- காந்தியம் (930-1030)

சோ.தர்மன் -சமூகவியலும் நாவலும் (1030-1130)

மூன்றாம்நாள் இரண்டாம் அரங்கு

நிறைவுரை உரையாடல் 12- 1

முந்தைய கட்டுரைகாரைச்சித்தர்
அடுத்த கட்டுரைகுரு நித்யா காவிய முகாம் – கடிதம்