மலர்த்துளி வாங்க
மலர்த்துளி மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
சூரியகாந்தி போன்றவை பொதுவாக மலர் என அழைக்கப்பட்டாலும் அவை உண்மையில் மஞ்சரிகள். பல நுண் மலர்கள் தட்டுப்போல ஒன்றிணைந்து மத்தியில் அமைந்திருக்கும். அச்சிறு மலர்களை மகரந்த சேர்க்கை செய்யவேண்டிய பூச்சிகள் அவற்றை கவனிக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காக விளிம்புகளில் பூச்சிகளை கவரும் பொருட்டு வண்ண மயமான ஓரிதழைக் கொண்ட சற்றே பெரிய மலர்கள் அமைந்திருக்கும். இத்தொகுப்பை மலர்த்தலை மஞ்சரிகள் என்போம் தாவரவியலில்.
இப்படி பல (florets) நுண்மலர்கள் கூட்டாக இணைந்திருக்கும் மலர்த்தலை மஞ்சரிகளை (head inflorescence) இனி கற்பிக்கையில் மலர்த்துளிகள் இணைந்த என்று சொல்ல இன்னும் பொருத்தமாக அழகாக கவித்துவமாக இருக்கும் என்று இந்த தலைப்பை உங்களின் பிறந்த நாளன்று தளத்தில் பார்த்துமே தோன்றியது. ’’அதென்ன மலர்த்துளி’’ என்னும் ஒரு கேள்விக்கும் நீங்கள் பதிலளித்திருந்தீர்கள்.
மலர்த்துளியின் 12 நுண் மலர்களும் அப்படித்தான் மலரமுதின் இனிமை நிறைந்தவை, இயற்கையின் பேரழகு கொண்ட காதல்களை சொல்பவை. எருக்கம்பூக்களையும், தரையில் விழுந்த ரோஜாக்களையும் குளத்து தாமரைகளையும் நேசிக்கும் வண்ணதாசன் அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்திருந்தும் அப்படித்தான் கூடுதல் அழகாக்கிவிட்டிருந்தது கதைகளை
முன்னுரையில் சொல்லியிருப்பது போலவே மலர்களைபோலவே அழகாக, இயற்கையான, வெளிப்படையாக, அப்பட்டமான காதல்கள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன. கதைகளின் எளிமையே அவற்றை மிக உயர்ந்த தளத்திற்கு இட்டுச்சென்று விடுகிறது.
ஒவ்வொரு கதையும் மிக வேறுபட்ட கதைக்களங்களில் நிகழ்வதால் புதிய புதிய இடங்களுக்கு பயணிக்கும் உணர்வில் மிக சுவரஸ்யமான வாசிப்பு இருந்தது. ரயில் பயணங்களில் சட் சட்டென்று மாறி கூடவே வரும் நிலக்காட்சிகளை போல.
ஒரு அரண்மனை வளாகம் அதில் கொலைக்கைதிகள் சித்ரவதை செய்யப்படும் கூடம், டப்பிங் தியேட்டர், அசைவற்றிருந்த வானின் கீழேயிருக்கும் வேளி மலையடிவார ஏரி, நூற்றுக்கணக்கான ஆட்கள் புழங்கும் ஒரு அலுவலகமும் அதில் ஒரு ஸ்டோரும், தச்சுப்பட்டறை திண்ணையொன்று, ஆசானால் ஒதுக்கித்தரப்பட சின்னஞ்சிறிய அறையும் பலாமரத்தடியும், நவீன அலுவலகம், தன்னந்தனியே ஒருவன் வசிக்கும் மிகப்பெரிய ஒரு பழைய வீடு , மணல்மூட்டைகள் ஓட்டை உடைசல்கள் நிறைந்த மொட்டை மாடி, பாரம்பரிய சிகிச்சையளிக்கப்படும் ஓரிடம்,அம்மி கொத்தும் வேலை நடக்கும் வீட்டு முற்றம், அடையாளம் மறைத்துக்கொண்டு உலவும் ஒரு புனைவுவெளி,ஒரு கடைத்தெரு, ஆஸ்பத்திரி போலீஸ் ஸ்டேஷன் குடிசை வீடு என கதை எங்கெல்லாமோ அழைத்துச்செல்கிறது
கிணுகிணுக்கியும் கிணுக்காம்பெட்டியுமான அம்முக்குட்டியின்’’சாப்பிடுங்க நானில்ல சொல்லுதேனில்’’
கருவாலியின் ‘வீட்டில உங்க பேரு செல்லாக்குட்டிதானே’’கேள்வியில் ஆட்டோவிலிருந்து தெரிந்த பாதிமுகத்தின் புன்னகையில்
வலிய வீட்டு அம்மணியின் ‘காலமாடன்’என்னும் விளியில்
கல்யாணியிடம் சொல்லப்படும்’’எடுத்து சாப்பிடுடி பேசாம’ என்னும் அதட்டலில்
நல்லபெருமாளின் ‘’நீ எதுக்குடி இவ்வளவு பெரிய மண் பானை சுமந்து அலையுதே’’என்னும் கரிசனத்தில்
என்ன பரிசு செய்திருப்பான் என்று அலையும் தயிர்க்காரியின் கண்களின் தவிப்பில்
சந்திரி கொடுக்கும் மயக்கிய மரவள்ளிக்கிழங்கில் மீன் துண்டங்களில்,
அவளுக்கான உடைந்தால் மறுபடி வாங்கிக்கொடுக்க வசதியான கண்ணாடி வளையலில் அதன் நீல நிறத்தில்
கிளிக்குரலென்றிருந்து பின்னர் கார்வையாக மாறிய குரலில்,
அந்த கைகளில் சுழற்றப்பட்டுக்கொண்டிருந்த பென்சிலில்
கொலுசொன்றின் இரண்டு முத்துக்கள் தொங்கும் உடைந்த சிறு பகுதியில்
பெரும் பாறைகளை உச்சிமலையில் கட்டி வச்சிருக்கும் கொலைப்பகவதியின் பூட்டில்,
பூவாக நிறைந்திருக்கும் சொப்பனங்களில்
கிழவன் கிழவிக்கென கேட்கும் கருப்பட்டியின் இனிப்பில்,
அம்மியின் மேடுபள்ளங்களில்
வெளியே வரமுடியாத மாயவெளியொன்றின் வசீகரத்தில்,
நாராயணப்பிள்ளையின் கழுத்தில் விழுந்த ஒற்றை அரிவாள் வெட்டில் என ஒவ்வொரு கதையிலும் காதல், காதலாக இல்லாமல் வேறு வேறு விதமாக எளிமையாகவும் இயல்பாகவும் சொல்லப்பட்டிருக்கிறது, காட்டப்பட்டுமிருக்கிறது
அம்முக்குட்டி அன்றிரவு அத்தனை நேரம் கழித்து வந்ததற்கு அவள் சொன்ன காரணம் ஒருவேளை உண்மையாக இல்லாவிட்டாலும் அவன்மீதான் நேசம் அவள் மனதில் கருக்கொண்டுவிட்டிருக்கும் அது என்றும் அவளுடன் இருக்கும்.
நீரில் இரு எருமைகளில் மிதந்தபடி எமலோகம் செல்லும் அந்த இருவரை குறித்த கதையை அப்படியே அந்த பயணத்தில் நிறுத்தியதில் ஒரு மர்முமம் வசீகரமும் இருந்தது. சின்னப்பிள்ளைபோல நிற்கும் சாமி இருக்கும் கோவிலும், இருட்டுமான அந்த மறுகரையில் என்ன நடக்கும் என்னும் ஆர்வம் கதையை மனதுக்குள் மேலும் மேலும் வளர்த்துக்கொண்டே போனது
எனக்கு இதில் மிக பிடித்தமானது ருசியும் பரிசும். ருசியை கல்லூரி முடிந்து திரும்பும் வழியில் வாசித்தேன் ’’எடுத்து சாப்பிடுடீ பேசாம’’ என்றதை வாசித்த பின்னர் மீதி இருந்த சில வரிகளை வாசிக்க முடியவில்லை. உணர்வெழுச்சியில் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வழியெங்கும் வரிசையாய் நின்றிருந்த புதிதாய் துளிர்த்திருக்கும் புளியமரங்களையே பொருளின்றி பார்த்துக்கொண்டு வந்தேன். நூலின் முதல் பக்க திருவிவிலிய பாடலொன்றில் சொல்லப்பட்டிருக்கிறதே
’’என்னவென்றே எனக்கு தெரியவில்லை
மகிழ்ச்சியில் மயங்கினேன்’’என்று
அதேதான்.
வீட்டுக்கு வந்தபின்னரே மீதிக்கதையை வாசிக்க முடிந்தது. இந்தக் கதையை வாசித்து முடிக்கையில் ஒவ்வொருவரின் முகமும் மலர்ந்திருக்கும்.
பரிசிலும் அப்படித்தான் ’’பிடிச்சிருக்காடி’’ என்ற கேள்வியில் எனக்கும் கண் நிறைந்துவிட்டது.
பெருங்கையில் கேசவன் செய்ததை மலர்த்துளிகளாய் மாறியிருந்த கொலுசின் இரு மணிகள் செய்கின்றன.அவற்றில் நிறைந்திருந்த காதலின் விசையால்தான் அவை அந்த வீட்டின் ஜன்னல் வழியே அவனிருக்குமிடம் செல்கின்றன.
இந்த கதைகள் உங்களின் 61ம் பிறந்த நாளின் போது எழுதபட்டவை என்பதை இனி வரும் தலைமுறையினர் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தாலும் நம்பப்போவதில்லை.
அட்டைப்படத்திலிருக்கும் மருதாணி எழுதிய அழகிய கால்களிலிருந்து கொலுசொலி கேட்டுக்கொண்டே இருக்கிறது
அன்புடன்
லோகமாதேவி