குமரித்துறைவி நூல் வாங்க
குமரித்துறைவி மின்னூல் வாங்க
ஆசிரியருக்கு வணக்கங்கள்,
ஊடகங்களில் சமூக வலைத்தளங்களில் எங்கும் மீனாட்சி திருக்கல்யாணம் குறித்த பதிவுகள் பரவி வருகின்றன. சென்னையில் இருந்தபடி மதுரையின் கொண்டாட்ட மன நிலையில் இருக்கிறேன். சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு எல்லா ஊர்களிலும் சிறப்பு வழிபாடுகள் திருவிழாக்கள் என எங்கும் கொண்டாட்டங்கள்.
என் இறை நம்பிக்கை எப்போதும் ஒரு ஊசலாட்டம். எல்லா கோணத்திலும் நம்பிக்கைகளை ஆதரித்தும் எதிர்த்தும் பேசி பார்த்து குழம்பி தெளியும். அது தேவை தான்.
இப்போது நிகழும் மீனாட்சி திருக்கல்யாணம் என் கற்பனைகளை விரித்து செல்கின்றது. என்னை அறியாமல் நான் மணப்பெண் வீட்டார் என்ற பிம்மம் என்னுள் எழுந்துவிட்டது. குமரித்துறைவியின் தாக்கமாக இருக்கலாம். அல்லது நான் பெண் என்பதால் இருக்கலாம். பெண் வீட்டார் மாப்பிள்ளையை குறை சொல்லாமல் எப்படி செல்வது. கிளி போன்றவள் எங்கள் பெண். புலி தோல் அணிந்த காட்டு வாசிக்கு கரம் பிடித்து தருகிறோம். எங்கள் அம்மை கொஞ்சம் பிடிவாதம் பிடிப்பாள், கொஞ்சம் முன்கோபி, செல்லமாக வளர்ந்தவள், மணமகன் அனுசரித்து செல்வானா. இவன் மிகவும் சீண்டல் பிடித்தவன் போல் தெரிகிறதே. இவனை போய் ஏன் இவளுக்கு பிடித்துவிட்டது. இப்படியே பெரிசுகளின் பேச்சு போல் எண்ணங்கள் வளர்ந்த வண்ணம் செல்கிறன.
கடந்த நவம்பர் மாதம், பட்டீஸ்வரம் அருகில் உள்ள திருசக்திமுற்றம் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கே அம்மை தவமிருந்து சிவனை அடைந்து சிவலிங்கத்தை கட்டியனைத்தவாரு இருக்கிறாள். அமைதியான அந்த கோவிலில் அன்னை பேரானந்தம் கொண்டிருக்கிறாள். அந்த கோவிலிலேயே நான் மேலே குறிப்பிட்ட எண்ணங்கள் உண்டாகின. அம்மை உலகியலின் குறியீடாகவும் சிவ லிங்கம் யோகத்தின், உலகியலில் இருந்து தள்ளி இருக்கும் ஒன்றின் குறியீடாகவும் மனதில் பட்டது. உலகியியலில் இருந்து விலகி நிற்கும் ஒருவனை கரம் பிடிக்க ஏன் தவம் இருக்கிறாள். போனால் போகட்டுமே. எது அவளை உந்துகிறது? சிவன் மனம் எந்த புள்ளியில் இறங்கியது?
சரியான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளேனா என்று தெரியவில்லை. ஒருவாறு தொகுத்து எழுதிவிட்டேன்.
உண்மையில் இங்கே நான் புரிந்து கொள்ள முயல்வது இதன் பின் இருக்கும் தத்துவத்தை, உளவியலை, பெண்ணின் இயற்கை தேர்வை. வெவ்வேறு கோணங்களில் தொட்டு பார்க்கிறேன். ஒரு புள்ளியில் எல்லாம் இணையும் என்று தோன்றிகிறது. அப்போது என்னுள் ஆயிரம் ஆயிரம் மலர்கள் மலரும்.
நன்றி,
சரண்யா