சந்திப்புகள், பயிற்சிகள் -கடிதம்

அன்பு ஜெமோ அவர்களுக்கு,

கடந்த இரண்டு மாதத்தில் உங்களை இரண்டு முகாம்களின் வழியாக சந்தித்தது என் வாழ்வின் மிக முக்கியமான தருணமாக உணர்கிறேன். முதல் சந்திப்பு புதிய வாசகர் வட்ட சந்திப்பு வழியாக நிறைவேறியது. தங்களை முதல் முறை நேராக சந்திக்க உள்ளேன் என்ற ஆவல் என்னை வெகுகாலம் சூழ்ந்திருந்தது. உங்களை நேரில் முதல் முறை கண்ட காட்சியும் இன்றும் என்றும் என் நினைவில் பதிந்து இருக்கும்.

நான் உங்களை அறிந்தது யூடியூபில்  காந்தி தொடர்பான காணொளி வாயிலாக. அதன் பின் உங்கள் இணையதளத்தை வாசிக்க தொடங்கி உங்கள் அபுனைவு மற்றும் அரசியல் கட்டுரைகள் வழியாக நெருக்கமாக கண்டடைந்தேன்.

இதனாலேயே புனைவுக்குள் செல்லும் தயக்கம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது. மேலும் இலக்கிய அறிமுகம் இல்லாததும், காணொளி வாயிலாக அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும் என்ற தீவிர முன் முடிவால் புனைவு என்பது எனக்கு ஒவ்வாத ஒன்றாக இருந்தது.

புதிய வாசகர் சந்திப்பு வழியாக நீங்கள் அளித்த சிறுகதை பற்றிய வரலாற்று பார்வை, வாசிப்பு பயிற்சி என்னை வெறும் அரசியல் சர்ச்சைகள் மட்டும் உள்வாங்க தெரிந்த இடத்தில் இருந்து வெகு தூரம் கொண்டு சென்றது. மேலும் இந்த நேரடி பயிற்சி என்னுடைய வாசிப்பை கூராக்கியது என்று சொல்ல முடியும்.

அடுத்த சந்திப்பு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மேடை உரை பயிற்சி முகாம். உங்களை இரண்டாவது முறை சந்திக்க இருக்கும் ஆர்வமும், மூன்று நாட்கள் உங்கள் சொற்களின் அருவியில் குளிக்கும் எண்ணமும் நிறைந்து இருந்தன. பயிற்சியில் நீங்கள் எங்களுக்கு அளித்த கல்வி திறப்பை நான் இதுவரை வேறு  எங்குமே அடைந்தது இல்லை. மூன்று நாட்கள் இடையறாத வகுப்புகள் ஒரு கணமும் சலிக்கவில்லை.

வெறும் தகவல்களாலும், மேலோட்ட கருத்து புரிதல்களிலும் உழன்று கொண்டு இருந்த எங்களை எவ்வாறு சிந்தனை செய்ய வேண்டும் என்ற பயிற்சி அளித்து, அதை நாங்களே செய்து பார்க்கும் செயல் வடிவம் தயாரிக்க வைத்து, அதை செயல் படுத்தியதும்  என்னை பிரமிக்க வைத்தன.

வீடு திரும்பிய போது அடுத்த பயிற்சி எப்பொழுது என்றே எண்ணம் தோன்றியது. காரணம் இது போன்ற பயிற்சி வகுப்புகளுக்கு இங்கு ஆர்வம் இல்லை என்றும், இதுவே கடைசி வகுப்பாக இருக்க கூடும் என்று நீங்கள் தெரிவித்தது சற்று வருத்தத்தை உண்டாக்கியது.

இந்த இரண்டு சந்திப்பும் பெரும் பயனுள்ளதாக என்றும் நீடித்து நிற்கும் காட்சியாக பதிய வைத்த ஆசிரியருக்கு ஆயிரம் நன்றிகள்.

சசிகுமார்,
திண்டுக்கல்.

***

அன்புள்ள சசிகுமார்

இந்தச் சந்திப்புகளின் நோக்கமே நேர்ச்சந்திப்பு என்பதுதான். அது உருவாக்கும் தீவிரமான கல்வியனுபவத்தை வேறெவ்வகையிலும் அடைய முடியாது. அண்மையில் நிகழ்ந்த குருநித்யா காவியமுகாமில் நிகழ்வு நடத்துநர்களாக வந்த பலர் சில ஆண்டுகளுக்கு முன் உங்களைப்போல் புதிய வாசகர்களாக வந்தவர்கள்

சந்திப்போம்

ஜெ

முந்தைய கட்டுரைநடராஜகுரு நூல்கள், இணையத்தில்
அடுத்த கட்டுரைகதையும் வாழ்வும் -கடிதம்