அன்புள்ள ஜெ,
வெகு நாட்களாக விஷ்ணுபுரம் நாவல் வாசிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்துகொண்டிருந்தது. வெள்ளிவிழா பதிப்பின் அட்டைப்படம் மிக நேர்த்தியாக இருந்தது விஷ்ணுபுரம் விழாவில் உங்களிடம் கையொப்பம் பெற்று வாங்கிக்கொண்டேன்.
விழாவில் சாரு நிவேதிதாவும் விஷ்ணுபுரம் நாவல் தான் ஜெயமோகனின் நாவல்களில் விருப்பமானது என்று கூறினார்.தற்செயலாக நீங்கள் எழுத தொடங்கிய டிசம்பர் 23 ஆம் தேதி தோற்றுவாய் வாசித்தேன்.
ஸ்ரீபாதம், கௌஸ்துபம் வாசித்தபோது மனம் கனமாக உணர்ந்தேன் ஆனால் மணிமுடி வாசித்தபோது இயல்பாக, மனம் இலகுவாக இருந்தது.
ஶ்ரீ பாதம்
ஶ்ரீ பாதத்தில் சங்கர்ஷனனும் , பிங்கலனும் சுயதேடல் கொண்டவர்களாக, அழைகளிக்கபடுபவர்களாக உள்ளனர்.தன் மண ஓட்டங்களை காண்கிறார்கள்
” நான் கவிஞன் அல்ல, பெறும் கர்வி” என்று சங்கர்ஷனன் கூறும் தருணங்கள் அத்தகையவை. விஷ்ணுபுரத்தின் மர்மங்களை வெளிப்படுத்தும் விதமாக பீதாம்பரம் மாமா வெளிப்படுகிரார். திருவடி ஆலய மர்மங்களை கண்டு மிரண்டு போகும் தருணத்தில் பீதாம்பரம் மாமாதான் அதன் கட்டிட அமைப்பு பற்றி கூறுகிறார்.
பின்னர் பேசும் பிள்ளையார் கோயில் காட்டில் பிரேசனன் செம்பர் குலம் பற்றியும் விஷ்ணுபுரத்தின் வரலாற்றையும் திருவடியிடம் கூறும்போதும். பின்னர் திருவடியை வைத்தியரிடம் அழைத்து செல்லும்போதும் கற்பணையில்லாத பார்வையை வெளிப்படுத்துகிறார் ஆனாலும் கோவிலில் பணிபுரிகிறார். பத்மாட்சியும், லலிதாங்கியும் , சாறுகேசியும் தேடல் கொண்டவர்களின் வாழ்வில் வெளிப்படுகின்றனர். யாரும் விஷ்ணுபுரத்தின் மாந்தர்களில் தன்னை கண்டுகொள்ள முடியும்.அதுபோல அவர்களின் ஆழ்மணங்கம் வெளிப்படுகிறது.
சூரிய தத்தருக்கும் ஸ்வேத தத்தருக்கும் இடையே நடக்கும் உரையாடல் மனித மனதை ஊடுருவிச் செல்வதாக இருந்தது.அளவில் ஶ்ரீ பாதம் பெரிய பகுதி, ஶ்ரீ பாதம் முடிந்தவுடன் மனம் விலக்கமடைந்தது.
ஒரு இடைவேளை விட்டு கௌஸ்துபம் தொடங்கினேன்.
கௌஸ்துபம்
விஷ்ணுபுரத்தின் ஞான சபை விவாதங்கள் பெரும்பாலும் புரியவில்லை. றுவாசிப்பில் புரியும் என்று நினைக்கிறேன்.ஶ்ரீ பாதத்தில் தொண்மங்களாக தோன்றிய அஜீதர் கௌஸ்துபதில் தோன்றுகிறார். காசியபன் நினைவில் எப்போதும் நிலைதிருப்பான்சித்தனின் பாடலும்
“சட்டியும் பானையும் போயாச்சு
சூலைமண் மட்டும் மிச்சமாச்சு
எட்டியும் வேம்பும் இனிப்பாச்சி
எங்கும் ஆனந்த வெளியாச்சு
நஞ்சும் அமுதமும் நிகராட்சி
நாலு திசையும் திறந்தாச்சு
பஞ்சம் நெருப்பும் தொட்டாச்சு
பற்றி எழுந்து நீறாச்சி”
உங்களின் விடுதலை உரை சில இடங்களில் உதவியது.
மணிமுடி
ஶ்ரீ பாதத்தின் முடிச்சுகள் மணிமுடியில் அவிழ்கின்றன. அதனாலோ என்னவோ, மனம் இலகுவாக இருந்தது.முதலில் தோன்றிய கதாபாத்திரங்கள் இங்கு தொன்மங்களாக மாறியுள்ளனர்.சித்திரை கொன்றை வனத்தம்மனாக ,திருவடி திருவடி ஆழ்வாராக, சங்கர்ஷனணும், பிங்கலனும் அவ்வாறே.
நீலியின் தாத்தா செம்பர் குலத்தை பற்றியும், நீலன் பெருமூப்பனை பற்றி கூறியது ஶ்ரீ பாதத்தில் பிரேசனன் திருவடியிடம் கூறியது நினைவுபடுத்தியது. முதல் பகுதியையும் இறுதி பகுதியையும் இணைக்கும் அந்த புள்ளியை கிரகிக்கும் பொது மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.
விஷ்ணுபுர பிரளய காலத்தை கூறும் பகுதி. தோற்றுவாயிலிருந்து இறுதிவரை தோன்றும் கரிய நாய் காலபைரவர் வாகனமாக விஷ்ணுபுத்தை அழிக்கிறது. சோனவில் வெள்ளப்பெருக்கில் நதி அண்ணையென அனைத்தையும் அனைத்துகொண்டாள் என்ற உவமை அழகாக இருந்தது.
இதுபோல நிறைய தருணங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் மனதில் தோன்றுபவைகளை முழுதாக எழுத முடியவில்லை. விஷ்ணுபுரம் தன்னளவில் முழுமையான நாவல்
மனிதனின் ஆழ்மனதில் உள்ள எண்ணங்களை காட்டும் நாவல்.விஷ்ணுபுரம் வாசித்து முடித்தபின்னும் அது உருவாக்கியுள்ள அந்த உலகிலிருந்து வெளிவர முடியவில்லை, அந்த நிகழ்வுகள் எதயோ சொல்ல வருவன போல நிழலாடுகிறது.
விஷ்ணுபுரம் வாசித்த பின்னர் சொல்முகம் பாலாஜி பிருதிவிராஜ் அண்ணாவுடன் பேசினேன். அவர் தளத்திலுள்ள விஷ்ணுபுரம் சார்ந்த கடிதங்களை வாசிக்கசொன்னார் அதன் மூலம் ஒரு பார்வை கிடைக்கும் என்றார்.
” இருள் தான் இருப்பதாக உணர்ந்தது, அது இருந்தது .
ஒளியாக மாற விரும்பியது,
ஒளியாயிற்று. ஒளி தன்னை விஷ்ணுவாக அறிந்தது, விஷ்ணு பிறந்தார்.
வெட்ட வெளியில் விரிந்த சதுப்பு பரப்பில் மகா நிர்மாலய மூர்த்தி என அவர் எழுந்தருளியிருந்தார்.
எங்கும் அவரைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.”
இந்த வரிகளை திரும்ப திரும்ப படித்தேன் ஒவ்வொரு முறையும் மகிழ்வு அளித்தன இந்த வரிகள்.
விஷ்ணுபுரம் வாசிக்கும் போதும் இப்போதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஶ்ரீ ரங்கத்தில் பார்த்த அந்த கரிய மல்லார்ந்த சிலையும் , முன்னுரையில் பெயர் தெரியாத பெரியவர் கூறிய ” மூன்று கருவரைகளை நிரப்பியபடி படுப்பார் என்ற வார்த்தைகளும்
மனத்திரை முன் மறையாமல் நிலைக்கிறது. அவற்றை நினைப்பதில் மனம் ஒரு சுகம் காண்கிறது.
தமிழ் குமரன்,
8-05-2023