கல்வி, விடுதலை- ஒரு பாதை
இனிய ஜெ,
லோகமாதேவியின் கல்வி, விடுதலை ஒரு பாதை படித்ததும் என்னவோ துக்கம் பீரிட்டு அழுகை வந்தது. கல்விக்கான போராட்டக் கதைகள்தான் எத்தனை விதம். சரியாக பத்தாம் வகுப்பு பரிட்சை முடிவு வந்தவுடன் திருமணம் முப்பது வயது தாய்மாமாவுடன். பள்ளியில் முதல்தர வரிசையில் இருந்த எனக்காக தலைமை ஆசிரியை என் அப்பாவிடம் வந்து ‘நல்லா படிக்கற பொண்ணு ஒரு பிளஸ் டூ வரையாவது படிக்கட்டுமே என எனக்காக கெஞ்சினார். அப்பா சொன்ன பதில் நாலு பொண்ணுகளையும் கரையேத்தினாதான் நிம்மதியா சாகமுடியும் (அப்பா இன்னும் உயிரோடு இருக்கிறார்) என தீவிரமாக கூறி மறுத்துவிட்டார்.
பதினாறு வயதில் மகன் கைகளில் மனதிற்குள் படிப்பு வெறியாகியது. மாமாவிடம் கெஞ்சினேன் கையெழுத்து மட்டுமே போடத்தெரிந்த ஒரு மனிதனிடம் என்னால் அதை புரியவைக்க முடியவில்லை. இல்வாழ்க்கை ஆறு வருடங்களோடு முடிந்தது. மட்டை பந்தென மறுபடி தாய்வீடு கைக்குழந்தைகளுடன்.
மீண்டும் படிப்புக்கானபோராட்டம் அம்மா பெரிய மனதாக தபாலில் படி என ஒப்புதல் அளித்தார். எதை படிக்க? எப்படி படிக்க? என்று எதுவுமே புரியாமல் பி.காம் படித்தால் வேலை கிடைக்கும் பிள்ளைகளை காப்பாற்றிவிடலாம் என தீர்மானித்து எப்படியோ தபாலில் விண்ணப்பம் பெற்றுவிட்டேன்.
ஒரு வருடம் உயர்த்திக் கொடுத்து பள்ளியில் சேர்த்திருந்ததினால் இருபத்தோரு வயது முடிந்திருந்தது திறந்தநிலை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். விண்ணப்பத்திற்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க அப்பா ஸ்டூடியோ ஆளை வீட்டுக்கே கூட்டிவந்தார். பொட்டில்லாமல் வெள்ளை, கருப்பு, நீல புடவை மட்டுமே அனுமதித்திருந்த நிலையில் பக்கியென ஒரு நிழல்படம் ஒட்டி சேர்ந்தேன். பின் வேலை பிள்ளைகள் படிப்பு திருமணம் என முடிக்கும் நேரத்தில் உங்கள் எழுத்து 2012ல் அறிமுகம் ஆனது ஜெ… ஓரளவு கடமைகள் முடிந்ததும் மீண்டும் படிப்பு ஆர்வம் தலைதூக்கியது அதற்குள் நான்கு பட்டம் பெற்றிருந்தேன். பி எச் டி செய்யலாமென எண்ணி உங்கள் அனுமதி பெற்றபின் ஒவ்வொரு பல்கலைக்கழகமாக தட்டினேன். ஒரு கல்லூரி +2 வேண்டும் என கூற 2018ல் +2 எழுதி முடித்து மீண்டும் விண்ணப்பித்தேன். ஒரே நேராக 10+2+3+2 என நீங்க படிக்கலை என மூன்று கல்லூரிகள் நிராகரித்தன. ஒரு கல்லூரி நுழைவுத் தேர்வை எழுதச்சொல்ல எழுதி நல்ல மதிப்பொண் எடுத்தும் நிராகரித்தது அதற்கான காரணம் 26000 பக்கம் கொண்ட வெண்முரசை படிக்குமளவு தமிழ் பேராசிரியர்கள் விரும்பாமை. மேலும் ஒரு கல்லூரியில் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு கட்டணமும் பெற்று பின் இயலாது என எனது திறந்த நிலை பல்கலைகழக முதுநிலை பட்டத்தை காட்டி நிராகரித்தனர் இதோடு படிப்பின் ஆசையை நிறுத்திக்கொண்டேன் ஜெ. பெண் என்பவள் படிப்பிற்கு போராடும் கொடுமை இன்றில்லை என்பது கொஞ்சம் நிம்மதியளிக்கிறது.
ஜெயந்தி
அன்புள்ள ஜெ
லோகமாதேவியின் வெற்றிக்கதை ஒரு பெரிய நிறைவை அளிக்கிறது. நீங்கள் எழுதிய சிறகு கதையும் சரி துணை கதையும் சரி அதையே இன்னொரு வகையில் கலையழுத்தத்துடன் முன்வைப்பவை. தேவி என்ற அந்த தொகுப்பைப் போல பெண்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும் ஒரு புத்தகம் வேறில்லை. என்னைக்கேட்டால் அறம் தொகுப்பைவிட நூறுமடங்கு முக்கியமானது.
சோகம், கசப்பு, வெறுப்பு ஆகியவற்றை எதிர்ப்பு புரட்சி என்ற பெயரில் முன்வைக்கும் எழுத்துக்களே இணையத்தில் கிடைக்கின்றன. மனச்சோர்வுடன் மட்டுமே இணைய வாசிப்பில் இருந்து திரும்பிச்செல்ல முடியும். இந்தகுறிப்பு மிகுந்த தன்னம்பிக்கையை அளிக்கிறது
சோபி