ஒவ்வொரு குருகு இதழுக்கும் அதிகரித்து வரும் வாசிப்பு, விமர்சனங்கள், பாராட்டுக்களுக்கும் நன்றி. சென்ற மாதம் வந்த குருகு மூன்றாவது இதழில் பௌத்த தத்துவ அறிஞர் ஓ.ரா.நா. கிருஷ்ணன் நேர்காணல் மற்றும் இளம் முருகனின் நடனத்தை பேசும் ‘ஆடல்’ கட்டுரைத் தொடரும் நல்ல வாசக வரவேற்பை பெற்றது. ஓவியர் ஜெயராமின் மலம் என்னும் ஊடகம் கட்டுரைக்கு நிறைய எதிர்வினைகளை காணமுடிந்தது, அக்கட்டுரை ஒரு உரையாடலுக்கான துவக்கமாக அமையக்கூடும். கட்டுரையை தன் தளத்தில் குறிப்பிட்டு வெளியிட்ட எழுத்தாளர் ஜெயமோகனுக்கும், சென்ற இதழில் பங்களித்த கட்டுரையாளர்களுக்கு எங்கள் அன்பும் நன்றியும்.
குருகு நான்காவது இதழில் சி.வை தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர் என்ற தமிழறிஞர் வரிசையின் வழிவந்த ப.சரவணன் அவர்களது நேர்காணல் வெளியாகிறது. ஆய்வு புலத்தில் கண்ணகிக்கும் கொடுங்கல்லூர் பகவதிக்கும் உள்ள தொடர்புகளை நீண்ட நாட்களாக பேசிக்கொண்டிருந்தாலும் அது சம்மந்தமான ஆய்வுகள் மிக குறைந்த அளவிலேயே வெளிவந்திருக்கின்றன. இந்த நிலையில் கொடுங்கல்லூர் பகவதி- கண்ணகி தொடர்பான தரவுகள் கூடிய ஆய்வு நூலை அ. கா. பெருமாள் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அந்நூலிலிருந்து ஒரு கட்டுரை பகுதி இந்த இதழில் வெளிவருகிறது. இந்திய தத்துவம், கலை ஆகியவற்றை அழகியல் ரசனையுடன் இந்நூற்றாண்டுக்கு கொண்டுவந்து சேர்த்து பெரும் பங்காற்றியவர் ஆனந்த குமாரசாமி. அவர் எழுதிய ராஜஸ்தான், ஜம்மு ஓவியங்கள் குறித்தான கட்டுரை தொடர் தாமரைகண்ணனால் (அவிநாசி) , மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் அறிவியல் தத்துவம், தெய்வ தசகம் தொடர்கள் வெளிவந்துள்ளன.
Www.Kurugu.in
அன்புடன்
குருகு