அன்புமிக்க ஜெயமோகன் ,
சமயக்கலை, ஆலயக்கலை வகுப்பு குறித்து நீங்கள் தளத்தில் எழுதிய கடித்ததில் இருந்த ஒரு வரி துணுக்குறச் செய்தது. “பார்வையற்றவர்களைப் போலத் தான் கோயிலுக்கு போய் வருகிறார்கள்” என்ற வரி தொந்தரவாய் இருந்தது.
நான் கடவுள் நம்பிக்கையும் மத நம்பிக்கையும் அற்றவன் என்றாலும் இலக்கியத்தின் வழி எனக்குக் கிடைத்த அழகியல் கோயில்களை நோக்கியும், சிற்பங்களை நோக்கியும் எப்பொழுதும் உந்தித் தள்ளுவதாகவே இருந்தது. எப்பொழுதும் எங்கோ ஒரு கோயில் பிரஹாரத்தில் நிற்க விரும்புகின்றவனாகவே இருக்கிறேன். கனவில் சீரான இடைவெளியில் கோட்டயம் திருனக்காரா அம்பலம் வந்துகொண்டே இருக்கும். ஹம்பி நான் எப்பொழுதும் போக விரும்புகின்ற / போய்க்கொண்டிருக்கிற நிலப்பரப்பு. இதற்கு எனக்கு கூட்டாளிகள் மிகச் சொற்பம். பெரும்பாலும் தனித்த பயணம்.
மழைக்காலத்தில் ஹம்பியை பார்க்கும் ஆன்மீக அனுபவத்தை எப்படிச் சொல்ல, விஷ்ணுபுரத்தை வாசிக்க அதைவிடச் சிறந்த இடம் கிடையாது. LIVE LOCATION எனும் தேய்ந்த, தேய்ந்துகொண்டிருக்கும் சொல்லை மிக தயக்கத்தோடு பயன்படுத்துகிறேன்.
இந்த இரண்டரை நாள் ஜே.கே-வின் வகுப்பு அவர் வார்த்தைகளிலேயே சொன்னால் “சிற்பிகள் தெய்வத்தின் சிலையில் கண்களைத் திறக்கும் பொழுது பின்னிருந்து தங்க ஊசிகளால் அதன் கண்களைத் திறப்பார்கள்” என்றார். அதையே தான் ஜே.கே வகுப்பில் நேர்முகமாகச் செய்தார்.
இந்த இரண்டரை நாளும் நான் அனாதிக் காலத்தில்தான் இருந்தேன். சிற்பங்கள், கோயில்கள், பழந்தமிழ் பாடல்கள், பாசுரங்கள், தொன்மங்கள், புராணங்கள் என ஜே.கே எங்களை ஆழ்த்திவைத்தார்.
இரண்டாம் நாள் மாலை மின்சாரம் இல்லாமல் இருட்டில் அமர்ந்து பாடம் கேட்டோம். ஒரு தீப்பந்தம் மாத்திரம் இருந்திருந்தால் சுலபமாக இரண்டாம் நூற்றாண்டிற்கு போயிருக்கலாம்.
ஜே.கே அணுக்கமான ஆசிரியர். யாவரின் சந்தேகத்தையும் மதிப்புடன் அணுகினார்.
பழந்தமிழ் பாடல்கள், சிற்பம், தொன்மம், வரலாறு என எல்லாவற்றையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்தார் ஜே.கே.
வகுப்பில் கலந்துகொண்ட தேர் தச்சர் முருகேசன், அவர் பங்கிற்கு வளப்படுத்தினார். மிக அணுக்கமான நண்பர்கள். வகுப்புகள் மிகுந்த ஒத்திசைவோடு நடந்தது.
அபாரமான நினைவாற்றல், பொருத்தமான பாடல்கள், புராணிகம், புத்தகங்கள், சமகால சம்பவங்கள் என இரண்டரை நாளும் ஜே.கே வகுப்பை தரையிறங்க அனுமதிக்கவேயில்லை.
குடவாயில் பாலசுப்ரமணியன், கணபதி ஸ்தபதி, சிற்பி நாகசுவாமி, சா.பாலுச்சாமி, ஆதீனங்கள், சி.மீனாட்சி, ரொமிலா தாபர், ஜெயமோகன் என கடந்தகால, நிகழ்கால ஆசிரியர்கள் வகுப்பிற்குள் குறுக்கும் நெடுக்குமாக வந்துபோய்க்கொண்டிருந்தார்கள்.
”அர்னால்டின் ஓவியங்களுக்குப் பிறகு ஐரோப்பிய மலைகள் மேலும் அழகாகத் திகழ்ந்தன” என்றொரு வாக்கியமுண்டு. ஜே.கே-வின் இந்த வகுப்பிற்கும் அது பொருந்தும். இனி கோயில்களோ சிற்பங்களோ பழையது போல் இல்லை. வேறொன்றாக, புதிதாக, அலம்பிவிட்டது போல இருக்கிறது மனது.
ஜே.கே வகுப்பு நடத்த நடத்த சிலவற்றை நான் என் சொந்த கற்பனையில் விரித்துக் கொண்டேன். மதுரைப்பக்கம் இருக்கும் பாறைகள் செதுக்குவதற்கு தோதான தன்மைகொண்டவை அல்ல, கடினமானது என்ற புவியியல் சார்ந்த தரவை, நான் அதை மதுரையின் வன்முறையோடு சேர்த்து வாசிக்கும் பொழுது வேறொன்று துலங்குகிறது.
கொற்றவைக்கு பலிகொடுக்கும் தொன்மம் பற்றி அவர் பேசும் பொழுது “வெட்டப்படுகின்றவர்களின் தலை முடியின் நுனி மூங்கிலில் கட்டப்பட, தலை வெட்டப்பட்டவுடன் மூங்கிலோடு தலை மேலே போக, சுற்றி நிற்பவர்களின் மீது இரத்தம் பீறிடுகிறது” என்று அவர் முடிக்கையில் நான் துயரத்தோடு கடல் கடந்து நின்றேன்.
“TEMPLE IS MELODIC EXPRESSION OF RHYTHM” அறிஞர் நாகசுவாமியின் வரி உள்ளுக்குள் சுழன்றுகொண்டிருக்கிறது.
நனவுக்கும் கனவுக்கும் இடையே நடப்பது போன்ற சிந்தனைகள். இருப்பியல் கேள்விகள், சாஸ்வதம், நிலையாமை, மரணம், மகத்தானவைகள் என எங்கெங்கோ அலைந்து திரிந்த இரண்டரை நாட்கள்.
இதை சாத்தியப்படுத்திய உங்களுக்கும், அருகிருந்து பிரியத்துடன் கற்றுத்தந்த ஆசிரியர் ஜே.கே-விற்கும் நன்றி.
நிறைய தூரம் போகவேண்டும் கொற்றவை துணையிருப்பாள் என்றே நம்புகிறேன்.
அன்புடன்
சாம்ராஜ்.